அமித் ஷா வழக்கை விசாரித்த நீதிபதி லோயா மர்ம மரணம்,,, மிக முக்கியப் பிரச்சினை என உச்ச நீதிமன்றம் கருத்து

January 12, 2018 at 6:10 pm

 

tamilthehindu :

சர்ச்சைக்குரிய சொராபுதீன் என்கவுன்டர் வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயாவின் மர்ம மரணம் பற்றிய வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இது மிகவும் முக்கியமான பிரச்னை எனக் கூறினர்.
குஜராத்தில் கடந்த 2005ம் ஆண்டு சொராபுதீன், அவருடைய மனைவி கவுசர் உள்ளிட்டோர் தீவிரவாதிகள் எனக்கூறி சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால், இவர்கள் அப்பாவிகள் எனவும், இது போலி என்கவுன்டர் என்ற குற்றம்சாட்டு எழுந்தது. இந்த போலி என்கவுன்டர் வழக்கில், அப்போதய குஜராத் உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட 23 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு, மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, நீதிபதி பி.எச்.லோயா விசாரித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு டிசம்பரில் நீதிபதி லோயா திருமண நிகழ்ச்சி ஒன்றில் மாரடைப்பால் இறந்தார். ஆனால், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி, மும்பை உயர் நீதிமன்றத்தில், மும்பை வக்கீல்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவை சேர்ந்த பத்திரிகையாளரான பி.ஆர்.லோன் என்பவர், நீதிபதி லோயாவின் மரணம் பற்றி சுதந்திரமான அமைப்பின் மூலம் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தலைமை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில் ‘‘சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மர்ம மரணம் மிகவும் முக்கியமான விவகாரம். இதில், இருதரப்பிலான விசாரணை மிக முக்கியம். மகாராஷ்டிர அரசு சார்பில் 15ம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்’’ எனக் கூறினர். இதை தொடர்ந்து வழக்கு விசாரணை ஜனவரி 15-க்கு ஒத்திவைக்கப்பட்டது