உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பேட்டி; முன்னுதாரணம் இல்லாதது, அதிர்ச்சிகரமானது: சட்டத்துறை நிபுணர்கள்

January 12, 2018 at 6:07 pm

 

tamilthehihndu :உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது, நான்கு மூத்த நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். முக்கிய வழக்குகளை குறிப்பிட்ட சில வழக்குகளை மூத்த நீதிபதிகளின் அமர்வுக்கு ஒதுக்காமல், தனக்கு வேண்டிய சில நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு ஒதுக்கீடு செய்வதாக புகார் தெரிவித்தனர், இது இந்திய வரலாற்றில் முன்னுதாரணம் அற்றது, அதிர்ச்சிகரமானது என்று வழக்கறிஞர்கள் உட்பட சட்டத்துறை நிபுணர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் சிலர் இத்தகைய திடீர் பேட்டிக்குப் பின்னால் வலுவான காரணங்கள் இருக்க வேண்டும் என்று ஒருசிலர் கருதுகின்றனர். மேலும் சிலரோ நீதி அமைப்பின் நம்பகத்தன்மையின் மீது கேள்விகளை எழுப்பும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ்.துள்சி, முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், அஷ்வினி குமார், முன்னாள் நீதிபதிகள் சோதி, முகுல் முத்கல் ஆகியோர் இந்திய வரலாற்றில் முன்னுதாரணம் அற்ற பேட்டி குறித்து கவலைகளை வெளியிட, மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் 4 நீதிபதிகள் வெளிக்கொண்டு வந்த விஷயத்தை வரவேற்றுள்ளதோடு 4 நீதிபதிகளையும் வாழ்த்தியுள்ளார்.
பாஜக தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி, நீதிபதிகள் வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேட்டி கொடுக்கிறார்கள் என்றால் அதன் மீது தவறுகள் கண்டுபிடிக்காமல் பொறுப்புடன் அணுகுவதே அவசியமானது. பிரதமர் இதனை கையில் எடுத்து தலைமை நீதிபதியிடம் பேசி தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளார்.
முன்னாள் நீதிபதி ஆர்.எஸ்.சோதி கூறும்போது, “இது எனக்கு மிகுந்த வலிகளைத் தருகிறது. செய்தியாளர்கள் சந்திப்பில் மூலம் உச்ச நீதிமன்றத்தை எப்படி நடத்த முடியும்? மக்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தி எது சரி, எது தவறு என்று முடிவெடுக்கப் போகிறீர்களா” என்று கேள்வி எழுப்பினார்.
முன்னாள் நீதிபதி முகுல் முத்கல், “இந்த 4 நீதிபதிகளும் விளம்பரப் பிரியர்கள் அல்ல, தேவையற்ற விளம்பரங்களுக்கு ஆசைப்படுபவர்களல்ல, ஆகவே பொதுவெளிக்கு வந்தாக வேண்டும் என்று அவர்கள் தீவிரமாக நம்புவதை செய்தியாளர்கள் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனர்” என்றார்.
மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், “தவறாக சென்று கொண்டிருக்கும் விஷயங்கள் சரி செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர், பேட்டி கொடுத்தது தைரியமான முடிவு” என்றார்.
மற்றொரு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், இது முன்னுதாரணமற்றது, நீதிபதிகள் மிகவும் தீவிரமாக இதனைப் பேசுகின்றனர் என்று கூறியதோடு, “இந்த 4 நீதிபதிகளும் பொறுப்பானவர்கள். இவர்களே இதனைச் செய்கின்றனர் என்றால் சூழ்நிலை கட்டுப்பாட்டை மீறிவிட்டது என்றே அர்த்தம். தலைமை நீதிபதி தன் நிர்வாக அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்துகிறார் என்று கூறியுள்ளனர்.
மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ்.துள்சி கூறும்போது, “இந்த 4 நீதிபதிகளும் இதற்கான தீர்வுகளை முயன்று தோல்வியடைந்திருப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர்கள் பேசும்போது அவர்கள் முகத்தில் வலி தெரிந்தது. இதில் இயற்கை நீதிதான் முக்கியக் கேள்வி. சாமானிய மனிதருக்கு சட்டம் எப்படியோ அது இன்னும் காரசாரமாக நீதிபதிகளுக்கும் பொருந்துவதே. ஏனெனில் எப்போதும் சந்தேகத்துக்கிடமின்றி அவர்கள் இருக்க வேண்டும்” என்றார்.
 namathu.BlogSpot.com