Breaking

  • ரஜ்னீஷ் குமார்
  • பிபிசி செய்தியாளர்

காந்தி

பட மூலாதாரம்,GEORGE RINHART / GETTY

காந்தி கொல்லப்பட்ட சம்பவத்துடன் சேர்த்து அவர் மீது மொத்தம் ஆறு கொலை முயற்சிகள் நடைபெற்றன. காவல்துறையினருக்கு போதுமான ஆதாரங்கள் கிடைத்தபோதிலும், சதித்திட்டத்தின் வேரை கண்டுபிடிக்கவில்லை.

1949 பிப்ரவரி 10இல், டெல்லியின் செங்கோட்டைப் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். செங்கோட்டைக்குள் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் காந்தி படுகொலை தொடர்பான தீர்ப்பை அறிவிக்கவிருந்தது.

சரியாக 11.20 மணியளவில், நாதுராம் கோட்சேவுடன் எட்டு குற்றவாளிகள் நீதிமன்ற அறைக்கு அழைத்து வரப்பட்டனர். சாவர்க்கரின் முகத்தில் கவலை இருந்தது, ஆனால், நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே மற்றும் விஷ்ணு கர்கரே ஆகியோர் சிரித்தபடி வந்தனர்.

கருப்பு ஆடை அணிந்த நீதிபதி ஆத்மாசரண் காலை 11.30 மணிக்கு நீதிமன்ற அறைக்கு வந்து தனது இருக்கையில் அமர்ந்தார். நாதுராம் கோட்சே என்ற பெயரை நீதிபதி அழைத்தவுடன், கோட்சே எழுந்து நின்றார். பின்னர் அனைவரின் பெயரும் ஒன்றன் பின் ஒன்றாக அழைக்கப்பட்டன.

காந்தி கொலை வழக்கில் நாதுராம் கோட்சே மற்றும் நாராயண் ஆப்தே ஆகியோருக்கு நீதிபதி ஆத்மாசரண் மரண தண்டனை விதித்தார். விஷ்ணு கர்கரே, மதன்லால் பாஹ்வா, ஷங்கர் கிஸ்ட்யா, கோபால் கோட்சே, தத்தாத்ரேயா பர்ச்சுரே ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சாவர்க்கரை நிரபராதி என்று கூறிய நீதிபதி, அவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டார்.

இந்த முடிவைக் கேட்டதும், கோட்சே உட்பட அனைவரும் ‘இந்து மதம் வாழ்க, பாகிஸ்தானை பிரிப்போம், இந்தி இந்து இந்துஸ்தான்’ என்ற முழக்கங்களை எழுப்பினர். நீதிமன்ற அறையில் முழக்கங்களை கோட்சே எழுப்பியது அது முதல் முறை அல்ல. 1948 நவம்பர் 8-ஆம் தேதி செங்கோட்டையில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சாட்சியங்கள் அனைத்தும் விசாரிக்கப்பட்ட பிறகு, நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்று நீதிபதி நாதுராம் கோட்சேவிடம் கேட்டார்.

நாதூராம் கோட்சே, நாராயடண ஆப்தே, விஷ்னு ராம கிருஷ்ணா (இடதிலிருந்து வலம்)

பட மூலாதாரம்,BETTMANN / GETTY IMAGES

படக்குறிப்பு,நீதிமன்றத்தில் நாதூராம் கோட்சே, ஆப்தே, விஷ்ணு ராம கிருஷ்ணா (இடமிருந்து வலம்)

தாம் எழுதிய 93 பக்க அறிக்கையை படிக்க விரும்புவதாக நாதுராம் பதிலளித்தார். நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்க, காலையில் சுமார் பத்தேகால் மணிக்கு தனது அறிக்கையை வாசிக்கத் தொடங்கினார். 6 பாகங்களாக அறிக்கையை வாசிப்பதாக நாதுராம் கூறினார். முதல் பகுதியில் சதி மற்றும் அதனுடன் தொடர்புடைய விஷயங்கள், இரண்டாம் பாகத்தில் காந்தியின் ஆரம்பகால அரசியல், மூன்றாம் பகுதி காந்தியின் அரசியலின் கடைசி கட்டம், நான்காவது பகுதி காந்தி மற்றும் இந்தியாவின் சுதந்திர போராட்டம், ஐந்தாவது பகுதி நாட்டின் விடுதலைக்கான கனவுகள் சிதைந்து என்று அவர் தெரிவித்தார். தனது அறிக்கையின் கடைசிப் பாகம், தேச விரோதக் கொள்கையைப் பற்றியதாக இருக்கும் என்றும் கோட்ஸே தெரிவித்தார்.

தனது அறிக்கையை எந்த குறிப்பும் இல்லாமல் அச்சிட வேண்டாம் என்று ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்த கோட்சே, தனது அறிக்கையை 45 நிமிடங்கள் படித்த பிறகு, நீதிமன்ற அறையிலேயே சரிந்து விழுந்தார். சிறிது நேரம் கழித்து, மீண்டும் எழுந்து நின்று எழுதப்பட்ட அறிக்கையை படிக்கத் தொடங்கினார், முழு அறிக்கையையும் படித்து முடிக்க ஐந்து மணி நேரம் ஆனது. அறிக்கையை வாசிக்கும்போது, அவர் அடிக்கடி தண்ணீர் குடித்தார். கோட்சே தனது அறிக்கையை ‘அகண்ட பாரதம் நீண்ட காலம் வாழ்க’, ‘வந்தே மாதரம்’ என்ற முழக்கங்களுடன் முடித்தார்.

நீதிமன்றத்தில் பேசிய கோட்சே, தற்போதைய இந்திய அரசாங்கம் ‘முஸ்லிம் சார்புடையது’ என்பதால் அதை நம்பவில்லை என்று கூறினார். இருப்பினும், கோட்சேவின் அறிக்கையை நீதிமன்றப் பதிவிலிருந்து நீக்க மறுத்த நீதிபதி ஆத்மாசரண், எழுத்துபூர்வ அறிக்கைகளை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். அன்றைய தினம் நீதிமன்ற அறையில் மக்கள் கூட்டம் நிரம்பியிருந்தது.

1948 நவம்பர் 9ஆம் நாளன்று நீதிபதி ஆத்மாசரண் நாதுராமிடம் 28 கேள்விகளைக் கேட்டார். ஒரு கேள்விக்கு பதிலளித்த கோட்சே, ‘ஆம், நான் காந்திஜியை சுட்டுக் கொன்றேன் என்று சொன்னார். காந்தியை சுட்டுக் கொன்ற பிறகு, பின்னால் இருந்து ஒருவர் என்னை தலையில் அடித்தார், ரத்தம் கசியத் தொடங்கியது. நான் திட்டமிட்டதைச் செய்தேன், எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று அந்த மனிதரிடம் சொன்னேன். அவர் என் கையிலிருந்து கைத்துப்பாக்கியைப் பறித்தார்.

அது தானியங்கி துப்பாக்கி, எனவே தற்செயலாக வேறு யாரையும் சுட்டுவிடக்கூடாது என்று அஞ்சினேன். துப்பாக்கியால் என்னை குறிவைத்த அந்த நபர், உன்னை சுட்டுவிடுவேன் என்று சொன்னான். என்னை சுடு, நான் இறக்க தயாராக இருக்கிறேன்,” என்று நான் சொன்னேன்.

நாதூராம் கோட்சே, நாராயடண ஆப்தே, விஷ்னு ராம கிருஷ்ணா (இடதிலிருந்து வலம்)

பட மூலாதாரம்,BETTMANN / GETTY IMAGES

‘லெட்ஸ் கில் காந்தி’ என்ற தனது புத்தகத்தில் காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி இவ்வாறு குறிப்பிடுகிறார்: “இது கோட்சே நீதிமன்ற அறையில் நடத்திய நாடகம். காந்தியைக் கொன்றால் பிரபல ஹீரோவாக மாறலாம் என்று நினைத்துதான், அவர் கொலை செய்ய ஒப்புக்கொண்டார். “ஆனால், அப்படி நடக்காமல் போனதால், நீதிமன்ற அறையில் வேறு நாடகத்தை நடத்த முயன்றார்.”

30 ஜனவரி 1948

மிகவும் மோசமான நாள். டெல்லி ரயில் நிலைய உணவகத்தில் காலை உணவை உட்கொண்ட நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே மற்றும் விஷ்ணு கர்கரே பிர்லா மந்திர் கோவிலுக்கு புறப்பட்டனர்.

பிர்லா மந்திர் கோவிலுக்கு பின்னால் உள்ள காட்டுப் பகுதியில் மூன்று-நான்கு ரவுண்டுகள் சுட்டு, துப்பாக்கியை சோதனை செய்தார். காலை 11.30 மணிக்கு கோட்சே பழைய டெல்லி ரயில் நிலையத்திற்கு சென்றார். மெட்ராஸ் ஹோட்டலில் இருந்து கர்கரே பழைய டெல்லி ரயில் நிலையத்திற்கு புறப்பட்டார். கர்கரே மதியம் இரண்டு மணிக்கு பழைய டெல்லி ரயில் நிலையத்தை அடைந்தார். அங்கு கோட்சேவையும் ஆப்தேவையும் சந்தித்தார்.

மாலை 4.30 மணியளவில், மூவரும் ரயில் நிலையத்திலிருந்து குதிரை வண்டியில் பிர்லா மந்திர் கோவிலுக்கு புறப்பட்டனர். பிர்லா மந்திருக்குப் பின்னால் இருந்த சிவாஜியின் சிலையை பார்க்க கோட்சே சென்றார். அங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில், அல்புர்கக் சாலையில் (தற்போது தீஸ் ஜன்வரி மார்க் என்று அழைக்கப்படும் சாலை) இருந்த பிர்லா பவனுக்கு , ஆப்தே மற்றும் கர்கரே சென்றனர்.

தற்போது ‘காந்தி ஸ்ம்ருதி’ என்று அழைக்கப்படும் பிர்லா பவனில் பிரார்த்தனை செய்யும் இடத்தை நோக்கி சென்ற கோட்ஸே, மாலை 5.10 மணிக்கு காந்தியை சுட்டுக் கொன்றார். கோட்சே கைது செய்யப்பட்டார், ஆனால் ஆப்தே மற்றும் கர்கரே டெல்லியில் இருந்து தப்பிச் சென்றனர்.

காந்தி படுகொலை செய்யப்பட்ட 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஏன் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது என்பது ஒரு முக்கியமான கேள்வி. இதற்கு பதிலளிப்பதும் கடினமானது அல்ல.

காந்தி

பட மூலாதாரம்,UNIVERSAL HISTORY ARCHIVE

காந்தியை திடீரென படுகொலை செய்யப்படவில்லை. சுதந்திர இந்தியாவில் காவல்துறையின் அலட்சியம் பற்றிய கதை, காந்தி படுகொலையுடனெ தொடங்கிவிட்டது என்றே கூறலாம். காந்தி கொல்லப்பட்டார் என்பதைவிட, கொல்ல அனுமதிக்கப்பட்டார் என்றே பலர் நம்புகிறார்கள்.

காந்தி படுகொலை செய்யப்பட்ட 17 ஆண்டுகளுக்குப் பிறகு, 1965 மார்ச் 22 அன்று தேசத்தந்தையின் கொலை குறித்து விசாரிக்க ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜீவன் லால் கபூரிடம் இந்த விசாரணை ஆணையத்தின் பொறுப்பு வழங்கப்பட்டது. எனவே இது கபூர் விசாரணை கமிஷன் என்று அழைக்கப்படுகிறது.

1964 அக்டோபர் 12ஆம் நாளன்று, ஆயுள் தண்டனை முடிவடைந்த உடன், விஷ்ணு கர்கரேவும் மதன்லால் பஹ்வாவும் விடுவிக்கப்பட்டனர். நாதுராம் கோட்சேவின் தம்பி கோபால் கோட்சே மட்டும் விடுவிக்கப்படவில்லை.

கோபால் கோட்சேவும், விஷ்ணு கர்கரேவும் புனேவுக்கு வந்தததும், அவரை ஒரு ஹீரோ போல வரவேற்க அவர்களது நண்பர்கள் திட்டமிட்டிருந்தனர். இதற்காக, ஒரு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டது, அதில் காந்தியின் படுகொலையில் அவர்களது பங்கைப் பாராட்டவும், கொண்டாடவும் முடிவு செய்யப்பட்டது.

1964 நவம்பர் 12அன்று சத்யவிநாயக் பூஜை, நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மராத்தியில் அழைப்பு அனுப்பப்பட்டன. அதில் தேசபக்தர்கள் விடுவிக்கப்பட்ட மகிழ்ச்சிக்காக இந்த பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அனைவரும் வந்து அவர்களை வாழ்த்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், நாதுராம் கோட்சேவும் தேசபக்தர் என்றே அழைக்கப்பட்டார்.

பால கங்காத திலகரின் பேரன் ஜி.வி.கேட்கரின் கருத்து அனைவருக்கும் மிக்க ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. திலகர் தொடங்கிய கேசரி மற்றும் தருண் பாரத் ஆகிய இரண்டு பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்த ஜி.வி.கேத்கர், இந்து மகாசபையின் சித்தாந்தங்களை பின்பற்றுபவராக அறியப்பட்டார்.

கேத்கர் தலைமை தாங்கிய இந்த நிகழ்ச்சியில் பூஜைக்குப் பிறகு, கோபால் கோட்சே மற்றும் கர்கரே ஆகியோர் சிறைச்சாலை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். அந்த சந்தர்ப்பத்தில் பேசிய கேத்கர், காந்தியின் படுகொலைக்கான திட்டத்தை தான் ஏற்கனவே அறிந்திருந்ததாகவும், அதை நாதுராம் கோட்சேவே தன்னிடம் சொன்னதாகவும் கூறினார்.

காந்தி

பட மூலாதாரம்,MONDADORI PORTFOLIO / GETTY

திலகரின் பேரன் ஜி.வி.கேத்கர் இவ்வாறு கூறினார்: “சில வாரங்களுக்கு முன்பு, சிவாஜி கோயிலில் நடைபெற்ற கூட்டத்தில் கோட்சே தனது விருப்பத்தை தெரிவித்தார். தான் 125 வயது வரை வாழப் போவதாக காந்தி கூறுகிறார், ஆனால் அவரை 125 ஆண்டுகள் வாழ யார் விடப்போகிறார்கள்? என்று கோட்சே தெரிவித்தார். அப்போது எங்களுடன் பாலுகாகா கனேத்கரும் இருந்தார். கோட்சே இப்படிச் சொன்னதைக் கேட்டு அவருக்கு வருத்தம் ஏற்பட்ட து. நாத்யாவுக்கு (நாதுராம்) புரிய வைக்கிறோம் என்று நான் கனேத்கருக்கு உறுதியளித்தன். காந்தியைக் கொல்ல விரும்புகிறீர்களா என்று நான் நாதுராமிடம் கேட்டேன். ஆம் என்று கூறிய அவர், நாட்டில் அதிக பிரச்சனைகளை காந்தி ஏற்படுத்த வேண்டாம் என்று நினைப்பதாக தெரிவித்தார்”. கேத்கரின் அறிக்கை பத்திரிகைகளில் தீயாகப் பரவியது.

‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடு, ஜி.வி.கேட்கரை நேர்காணல் செய்து விரிவான கட்டுரையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் நாதுராம் கோட்சேவின் புகைப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தி, அவரை தேசபக்தர் என்று கூறியதும் வெளியானது. 1964 நவம்பர் 14 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய ஜி.வி. கேத்கர், “மூன்று மாதங்களுக்கு முன்பு, காந்தியின் படுகொலை திட்டத்தை நாதுராம் கோட்சே என்னிடம் கூறினார். 1948 ஜனவரி 20 அன்று காந்தியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் மதன்லால் பஹ்வா ஒரு குண்டை வீசி எறிந்தார். பிறகு அவர் புனேவுக்கு வந்தபோது, தனது எதிர்காலத் திட்டத்தைப் பற்றிச் சொன்னார். காந்தி கொல்லப்படுவார் என்று எனக்குத் தெரியும். இது குறித்து யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கோபால் கோட்சே என்னிடம் சொன்னார் “.

இதன் பின்னர் கேத்கர் கைது செய்யப்பட்டார். கோபால் கோட்சேவும் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். இதன் பின்னரே காந்தியின் படுகொலை குறித்து விசாரிக்க கபூர் ஆணையம் அமைக்கப்பட்டது. காந்தியின் கொலை திட்டமிடப்பட்டு செய்யப்பட்டது என்றும், விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, இதில் வேறு யார் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று கண்டறியவேண்டும் என்பதே கபூர் விசாரணை ஆணையத்தின் பணி.

காந்தி படுகொலைக்கு உடனடி காரணங்கள்

1948 ஜனவரி 13 அன்று, பகல் 12 மணியளவில், காந்தி இரண்டு கோரிக்கைகளுடன் உண்ணாவிரதத்தில் அமர்ந்தார். பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாயை இந்தியா கொடுக்க வேண்டும் என்பது முதல் கோரிக்கை. டெல்லியில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்பது இரண்டாவது கோரிக்கை. உண்ணாவிரதத்தின் மூன்றாம் நாளில், அதாவது ஜனவரி 15 அன்று, பாகிஸ்தானுக்கு உடனடியாக 55 கோடி ரூபாயைத் தருவதாக இந்திய அரசு அறிவித்தது.

இந்த அறிவிப்பால் காந்திக்கு எதிராக இந்து மகாசபை உள்ளிட்ட கடும்போக்கு இந்துக்கள் மிகுந்த கோபமடைந்தனர். உண்ணாவிரதத்தை முடித்த காந்தி, பிரார்த்தனைக்கு பிந்தைய உரையில் இவ்வாறு குறிப்பிட்டார், “முஸ்லிம்களை தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றக்கூடாது, முஸ்லிம்களை வீடுகளை விட்டு கட்டாயமாக வெளியேற்றுவதற்காக எந்தவிதமான வன்முறையிலும் ஈடுபடக்கூடாது. இந்து அகதிகள், வெளியேறிய முஸ்லிம்களின் இருப்பிடங்களை ஆக்ரமிக்கக்கூடாது”.

காந்தி

பட மூலாதாரம்,UNIVERSAL HISTORY ARCHIVE

இருப்பினும், பாபுவின் உண்ணாவிரதத்தின் முக்கிய நோக்கம் பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் நிதியைப் பெற்றுத் தருவது அல்ல, மாறாக வகுப்புவாத வன்முறையைத் தடுத்து மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுதான் என்று துஷார் காந்தி கூறுகிறார். “பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று காந்தி கோரியது உண்மை தான். ஆனால் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவரது முக்கிய நோக்கம் ஆகும்”.

பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் கொடுக்க நேருவும் படேலும் ஏன் விரும்பவில்லை? அதற்கு பதிலளிக்கும் துஷார் காந்தி, “இரு நாடுகளுக்கும் இடையிலான பிரிவினை பிரச்சனை தீர்க்கப்படும் வரை பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாயை கொடுக்க வேண்டாம் என்று அமைச்சரவை முடிவு செய்தது. இருப்பினும், பிரிவினைக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு 75 கோடி ரூபாயை நிபந்தனையின்றி இந்தியா வழங்கும் என்று ஒப்பந்தம் இருந்தது. இதில் முதல் தவணையாக பாகிஸ்தானுக்கு 20 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது, நிலுவையில் இருந்த 55 கோடி ரூபாய் நிதியையும் உடனடியாக கொடுக்கவேண்டும் என்று பாகிஸ்தான் கேட்கத் தொடங்கியது. கொடுத்த வாக்குறுதியை எப்படி நிறைவேற்றாமல் இருக்க முடியும்? அது இருதரப்பு ஒப்பந்தத்தை மீறுவதாக இருந்திருக்கும். எனவே தான் காந்தி அதை வலியுறுத்தினார்” என்று கூறுகிறார்.

காந்தியின் உண்ணாவிரதத்திற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாயைக் கொடுக்க அரசாங்கம் முடிவு செய்தது, இந்த முடிவால், கடும்போக்கு இந்துக்களின் பார்வையில் வில்லனாக மாறிவிட்டார் காந்தி. 55 கோடி ரூபாயை பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டும் என்ற காந்தியின் வார்த்தைக்கு சர்தார் படேலும் உடன்படவில்லை. கபூர் கமிஷனின் விசாரணையில் சர்தார் படேலின் மகள் மணிபன் படேல் சாட்சி எண் 79 ஆக ஆஜராகியிருந்தார்.

கபூர் கமிஷனிடம் சாட்சியளித்த மணிபென், “பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்ற மகாத்மா காந்தியுடன் என் தந்தை உடன்படவில்லை என்பது எனக்கு நினைவில் இருக்கிறது. பாகிஸ்தானுக்கு இந்த தொகை வழங்கப்பட்டால், இந்திய மக்கள் கோபப்படுவார்கள் என்று என் தந்தை நம்பினார். பாகிஸ்தானுடனான அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்ட பின்னரே இந்த தொகை வழங்கப்பட வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது.

“பாகிஸ்தானுக்கு இந்த தொகை கிடைத்தால், இந்தியாவில் உள்ளவர்கள் அதை தவறாகப் புரிந்துகொள்வார்கள், பாகிஸ்தான் இந்த பணத்தை நமக்கு எதிராகப் பயன்படுத்தலாம் என்று என் தந்தை சொன்னார். இதுபோன்ற சூழ்நிலையில் நம் நாட்டு மக்களின் உணர்வுகள் புண்படும் என்றும் சொன்னார். இந்த உண்ணாவிரதத்தை மக்கள் சரியானதாக கருத மாட்டார்கள் என்றும் இது பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் ஆயுதமாக பயன்படுவதாக கருதப்படும் என்று என் தந்தை மகாத்மா காந்தியிடம் தெரிவித்தார்” என்றார் மணிபென்.

பொதுமக்களின் உணர்வை கருத்தில் கொண்டு நேருவும் படேலும் 55 கோடி ரூபாயைக் கொடுக்க ஒப்புக் கொள்ளவில்லை என்று துஷார் காந்தி கூறுகிறார். “எது சரி எது தவறு என்பதை மனிதநேய அடிப்படையில்தான் பாபு தீர்மானிப்பார். வாக்குறுதியை மீறுவதை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பொதுமக்களின் உணர்வு என்ற அழுத்தத்தின் கீழ் தவறான முடிவை எடுப்பதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்தியா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதில் பாபு உறுதியாக இருந்தார். நேருவும் படேலும் தேர்தல் அரசியலில் நுழைந்துவிட்டாலும், சுதந்திரத்திற்குப் பிறகும் பாபு தனது கொள்கைகளைப் பின்பற்றி வந்தார். பொதுமக்களின் உணர்வுகளை விட சத்தியமே முக்கியம் என்று அவர் நம்பினார். பாபு மரணத்திற்கு பயப்படவில்லை “.

காந்தி உண்ணாவிரதத்தில் அமர்ந்தபோது, மக்கள் அவருக்கு எதிராக பிர்லா பவனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 55 கோடி ரூபாய் கொடுக்குமாறு அரசாங்கத்தை காந்தி கட்டாயப்படுத்துவதாகவும், டெல்லியில் உள்ள முஸ்லிம்களின் வீடுகளை இந்து அகதிகளுக்கு வழங்கவில்லை என்றும் மக்கள் கோபமடைந்தனர். டெல்லியில் வகுப்புவாத பதற்றம் காரணமாக, முஸ்லிம்கள் வீடுகளை விட்டு வெளியே சென்றனர். அவர்கள் புரானா கிலா மற்றும் ஹுமாயூன் கிலாவிலும் தங்க வைக்கப்பட்டனர்.

இந்து அகதிகள் முஸ்லிம் வீடுகளை கையகப்படுத்த விரும்பினர், காந்தி அதற்கு எதிராக உண்ணாவிரதத்தில் அமர்ந்தார். காந்தியின் உண்ணாவிரதத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவர்கள், “காந்தி இறந்தால் பரவாயில்லை, அவர் இறக்கட்டும்” என்று அறைகூவல் விடுத்தார்கள். மகாத்மா காந்தியிடம் இறுதி வரை செயலாளராக இருந்த பியரேலால் எழுதிய ‘Mahatma Gandhi the last phase’ என்ற புத்தகத்தில், “இந்த உண்ணாவிரதம் டெல்லியில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான பகைமையைக் குறைக்க கணிசமான பங்காற்றியது” என்று எழுதினார்.

1948 ஜனவரி 18இல் அமைதிக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. “மெஹ்ரோலியில், சூஃபி துறவி குதுப்-உத்-தின் பக்தியார் காக்கியின் உர்ஸ் (திருவிழா) வழக்கம்போலவே ஆண்டுதோறும் கொண்டாடப்படும். டெல்லியில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்லலாம். இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் ஆக்கிரமித்த மசூதிகள் அவர்களின் ஆக்ரமிப்பில் இருந்து விடுவிக்கப்படும். முஸ்லிம் பகுதிகள் சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்படும். அச்சம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறிய முஸ்லிம்கள் திரும்பி வருவதை இந்துக்கள் எதிர்க்க மாட்டார்கள்” என்று அந்தக் குழு காந்திக்கு உறுதியளித்தது.

இந்த உத்தரவாதங்களுக்குப் பிறகு, மகாத்மா காந்தி ஜனவரி 18 அன்று மதியம் 12.45 மணிக்கு மெளலானா ஆசாத் கொடுத்த ஆரஞ்சு பழச்சாற்றைக் குடித்து உண்ணாவிரதத்தை முடித்தார்.

இதன் பின்னர் இந்து மகாசபையின் மேடையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இந்திய அரசு பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் கொடுக்குமாறு கட்டாயப்படுத்தியது மற்றும் இந்து அகதிகளை முஸ்லிம்களின் வீடுகளில் தங்க அனுமதிக்கவில்லை என்பது தொடர்பாக கடுமையான விவாதங்கள் நடைபெற்றன. இந்தக் கூட்டத்தில் மகாத்மா காந்திக்கு எதிரான மோசமான வார்த்தைகளும் பயன்படுத்தப்பட்டன. சர்வாதிகாரி என்று அழைக்கப்பட்ட காந்தி, ஹிட்லருடன் ஒப்பிடப்பட்டார். இந்து மகாசபையின் செயலாளர் அசுதோஷ் லஹிரி ஜனவரி 19 அன்று, இந்துக்களிடம் உரையாற்றியபோது கடுமையாக பேசினார்.

முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மகாத்மா காந்தி உண்ணாவிரதம் இருப்பது குறித்து சீக்கியர்களும் கோபமடைந்ததாக காவல்துறை அறிக்கை கூறுகிறது. இந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்காக காந்தி எதுவும் செய்யவில்லை என்று சீக்கியர்களும் கருதினர். மறுபுறம், காந்தி தன்னலமற்ற முறையில் தங்களுக்கு சேவை செய்ததாக ஜனவரி 19 மற்றும் 23 ஆகிய தேதிகளில் முஸ்லிம்கள் இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றியதாக காவல்துறையின் அறிக்கை கூறுகிறது.

காந்தி

காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு இந்த சம்பவங்கள் உடனடி காரணமாக இருந்தன. ஜனவரி 17 முதல் 19 வரை, காந்தியின் படுகொலையைத் திட்டமிட்டு செய்தவர்கள் டெல்லிக்கு ரயில் மற்றும் விமானத்தில் வந்தனர். அவர்கள் டெல்லியில் உள்ள ஹோட்டல்களிலும், இந்து மகாசபா பவனிலும் தங்கியிருந்தனர். 1948 ஜனவரி 18 அன்று, மாலை ஐந்து மணியளவில் பிர்லா பவனில் நடந்த மகாத்மா காந்தியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் சில சதிகாரர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தையும் இடத்தையும் சரிபார்ப்பதற்காக அவர்கள் சென்றார்கள்.

அவர்கள் ஜனவரி 19 அன்று இந்து மகாசபா பவனில் சந்தித்தனர். மகாத்மா காந்தியின் படுகொலை குறித்த முழு வரைபடமும் தயாரிக்கப்பட்டது. ஜனவரி 19 அன்று, நாதுராம் விநாயக் கோட்சே, விஷ்ணு கர்கரே மற்றும் நாராயண் ஆப்தே ஆகிய மூவர் பிர்லா மாளிகைக்குச் சென்று பிரார்த்தனைக் கூட்டத்தை ஆய்வு செய்தனர். அதே நாளில் மாலை நான்கு மணியளவில், மீண்டும் பிரார்த்தனைக் கூட்டத்திற்குச் சென்ற அவர்கள், இரவு பத்து மணிக்கு, ஐந்து பேரும் மகாசபா பவனில் சந்தித்தனர்.

ஜனவரி 20ஆம் தேதி, நாதுராம் கோட்சேவின் உடல்நிலை மோசமடைந்தது. ஆனால் நான்கு பேர் மீண்டும் பிர்லா பவனுக்குச் சென்று அங்குள்ள செயல்பாடுகளைப் புரிந்து கொண்டனர். இந்த நான்கு பேரும், பிர்லா பவனில் இருந்து இந்து மகாசபா பவனுக்கு காலை 10.30 மணிக்கு திரும்பினார்கள். இதன் பின்னர், இந்து மகாசபா பவனுக்குப் பின்னால் உள்ள காட்டில் தனது ரிவால்வரை சுட்டுப் பரிசோதித்தார். ரிவால்வரை பரிசோதித்த பின்னர், அவர்கள் அனைவரும் டெல்லியின் கன்னாட் பிளேஸில் உள்ள மரீனா ஹோட்டலில் சந்தித்து இறுதித் திட்டத்தை அமைத்தனர். மாலை ஐந்து மணிக்கு அவர்கள் பிர்லா பவனுக்குச் சென்றார்கள். பிர்லா பவனின் பின்ப்புற சுவரில் இருந்து ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் மதன்லால் பஹ்வா ஒரு குண்டை வீசினார்.

சம்பவ இடத்திலேயே மதன்லால் கைது செய்யப்பட்டார், அவரிடமிருந்து ஒரு கைக்குண்டு மீட்கப்பட்டது. பிரார்த்தனைக் கூட்டத்தில் இருந்த மற்ற முவரும், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி தப்பி ஓடிவிட்டார்கள். ஜனவரி 20 தேதியே பாபுவைக் கொல்வதாக சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்ததாகவும், , ஆனால் அன்று அது தோல்வியடைந்தததால், திட்டம் பத்து நாட்களுக்குத் தள்ளிப்போடப்பட்டது என்றும் காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி கூறுகிறார்.

கொலை வழக்கு குறித்து தீவிரமாக விசாரணை நடத்திய துஷார் காந்தியிடம் பிபிசி பேசியது. “குண்டு வீசியதும் அது வெடிக்கும்போது, மக்கள் இங்கும் அங்குமாக சிதறியோடுவார்கள். அப்போது திகம்பர் பட்கே காந்தியை சுட்டுவிட வேண்டும் என்பதே அவர்களின் திட்டம். ஆனால் மதன்லால் பாஹ்வா குண்டை வீசி எறிந்தபோது, மக்களை சமாதானப்படுத்தி உட்காரச் செய்தார் காந்தி. அப்போது கொலை முயற்சியை மேற்கொள்ள திகம்பர் பட்கேவுக்கு சந்தர்ப்பம் கிடைக்காத சூழ்நிலையில் பாபு தப்பிவிட்டதால் திகம்பர் பட்கே அங்கிருந்து நழுவிச் சென்றுவிட்டார். அன்று காந்தியை கொலை செய்ய வேண்டிய பொறுப்பு திகம்பர் பட்கேவுக்கு கொடுக்கப்பட்டிருந்தது.

காந்தி

பட மூலாதாரம்,DINODIA

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நாதுராம் கோட்சே மற்றும் நாராயண் ஆப்தே ஆகிய இரண்டு முக்கிய குற்றவாளிகளும் அதே நாளில், டெல்லியின் முக்கிய ரயில் நிலையத்திலிருந்து அலகாபாத் கான்பூர் வழியாக பம்பாய்க்கு தப்பிச் சென்றார்கள். ஜனவரி 23ஆம் தேதியன்று மாலை பம்பாய்க்கு சென்று சேர்ந்துவிட்டார்கள். மூன்றாவது நபரான நாதுராம் கோட்சேவின் சகோதரர் கோபால் கோட்சே, அன்று இரவு டெல்லியில் இந்து ஹோட்டலில் தங்கியிருந்தார்,

ஜனவரி 21 காலை, ஃப்ரண்டியர் மெயில் மூலம் பம்பாய்க்கு புறப்பட்டார். விஷ்ணு கர்கரே மற்றும் சங்கர் கிஸ்ட்யாவும் ஜனவரி 23 மதியம் வரை டெல்லியில் தங்கியிருந்தார்கள். பிற்பகலில் அவர்களும் ரயில் மற்றும் பேருந்து என மாறிமாறி பயணித்து, ஜனவரி 26 ஆம் தேதி காலை கல்யாணுக்கு சென்றார்கள். அங்கிருந்து அன்றே புனேவுக்கு புறப்பட்டனர். அப்படித்தான் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் டெல்லியில் இருந்து தப்பிச் சென்றனர், யாருக்கும் எதுவும் தெரியவில்லை.

காவல்துறையின் அலட்சியம்

ஜனவரி 20 அன்று குண்டு வீசப்பட்ட செய்தி மறுநாள் செய்தித்தாள்களில் வெளிவந்தது. டைம்ஸ் ஆப் இந்தியா, தி ஸ்டேட்ஸ்மேன், பாம்பே குரோனிக்கிள் என்ற நாளிதழ்களில் இந்த செய்தி வந்த்து. அப்போது டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் பேசிய ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், “வெடிகுண்டு சக்தி வாய்ந்தது, பலர் உயிரிழந்திருக்கலாம். மகாத்மா காந்தியைக் கொலை செய்யும் நோக்கத்தில் கைக்குண்டு வீசப்பட்டது” என்று கூறியிருந்தார்.

குண்டு வீசிய குற்றத்தை மதன்லால் பாஹ்வா ஒப்புக்கொண்டதாகவும், மகாத்மா காந்தியின் சமாதான பிரசாரம் தனக்கு கவலையளிப்பதால் அவரைத் தாக்கியதாகவும் பம்பாய் குரோனிக்கிள் செய்தி வெளியிட்டிருந்தது.

மதன்லால் பாஹ்வாவிடம் முதலில் பிர்லா பவனில் விசாரணை நடைபெற்றது. பின்னர் அவர் நாடாளுமன்ற வீதியில் இருக்கும் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, மூத்த போலீஸ் அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டார். பாஹ்வா சொன்ன கருத்துகள் தொடர்பாகவும் சர்ச்சைகள் எழுந்தன. கர்கரேவின் பெயரை மதன்லால் தெரிவித்தார். அதோடு, அவரும் எஞ்சிய தோழர்களும் டெல்லியில் தங்கியிருந்த இடத்தையும் கூறினார். மெரினா ஹோட்டல் மற்றும் இந்து மகாசபா பவனில் சோதனைகள் நடத்தப்பட்டன. கோட்சே மற்றும் ஆப்தே இருவரும் தங்கள் பெயரை மாற்றி எஸ். மற்றும் எம். தேஷ்பாண்டே என்ற பெயரில் தங்கியிருந்தது தெரியவந்தது.

ஹோட்டல்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் இந்து மகாசபாவின் சில ஆவணங்களும் கிடைத்தன. ஜனவரி 21 ஆம் தேதி, பாஹ்வா 15 நாள் ரிமாண்டில் எடுக்கப்பட்டார். நாடாளுமன்ற வீதியில் உள்ள காவல் நிலையத்திலிருந்து சிவில் லைன்ஸ் பகுதிக்கு பாஹ்வா கொண்டு செல்லப்பட்டு ஜனவரி 24 வரை விசாரணை நடைபெற்றது.

‘இந்து ராஷ்டிரா’ செய்தித்தாளின் உரிமையாளரின் பெயரையும் பாஹ்வா குறிப்பிடார். ஆனால் முன்னணி செய்தித்தாளின் ஆசிரியரின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. இந்த பத்திரிகையின் உரிமையாளர் நாராயண் ஆப்தே, நாதுராம் கோட்சே ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 23ஆம் தேதி, மெரினா ஹோட்டலின் பணியாளர் காளிராம் சில துணிகளை டெல்லி போலீசாரிடம் ஒப்படைத்தார், ஆனால் விசாரணையில் அவற்றைப் பயன்படுத்த காவல்துறை தவறிவிட்டது. ஜனவரி 25ஆம் தேதி, பம்பாய் போலீசார் பம்பாய்க்கு அழைத்துச் சென்றது. ஜனவரி 29 வரை விசாரணை தொடர்ந்தாலும், அதில் எந்த பலனும் ஏற்படவில்லை.

ஜனவரி 27 அன்று, கோட்சே மற்றும் ஆப்தே பம்பாயிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டனர். ரயிலில் குவாலியருக்கு வந்த இருவரும் இரவில் டாக்டர் தத்தாத்ரேயா பர்ச்சுரேவின் வீட்டில் தங்கினர். அடுத்த நாள் இத்தாலியில் தயாரிக்கப்பட்ட ஒரு கருப்பு நிற தானியங்கி பைரெடா துப்பாக்கியை வாங்கினார்கள். ஜனவரி 29 காலை டெல்லிக்கு வந்து, இருவரும் டெல்லி ரயில் நிலையத்தில் ரயில்வேயின் அறையிலேயே தங்கினார்கள். அங்குதான் கர்கரேவை அவர்கள் சந்தித்தார்கள்.

ஜனவரி 30ஆம் தேதி, பிர்லா பவனுக்குப் பின்னால் உள்ள காட்டில் கைத்துப்பாக்கி சுடுவதற்கு பயிற்சி எடுக்க்கொண்டு, மாலை ஐந்து மணிக்கு பாபுவை சுட்ட நாதுராம் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார், ஆனால் ஆப்தே மற்றும் கர்கரே மீண்டும் டெல்லியில் இருந்து தப்பித்துச் சென்றனர். இவர்கள் இருவரும் பிப்ரவரி 14 அன்று கைது செய்யப்பட்டனர்.

காந்தி

பட மூலாதாரம்,BETTMANN / GETTY

உள்துறை அமைச்சர் படேல் மீதான குற்றச்சாட்டுகள்

1948 ஜனவரி 20 முதல் 30 வரை காவல்துறையினர் மிகுந்த அலட்சியம் காட்டியதாக நீதிபதி ஆத்மாசரண் தீர்ப்பின் போது கூறினார். மதன்லால் பாஹ்வா கைது செய்யப்பட்ட பின்னர், காந்திஜியை படுகொலை செய்வதற்கான சதிச் செயல் தொடர்பான போதுமான தகவல்கள் டெல்லி காவல்துறையிடம் இருந்தன.

“சதித்திட்டம் குறித்து மதன்லால் பாஹ்வா பல தகவல்களைக் கூறியிருந்தார். பம்பாய் மாகாணத்தின் உள்துறை அமைச்சர் மொரார்ஜி தேசாயிடம், ருயா கல்லூரியின் பேராசிரியர் ஜி.சி.ஜெயின் சதி குறித்து தெரிவித்தார். அதோடு, அவர் அனைத்து தகவல்களையும் மும்பை காவல்துறைக்கு கொடுத்தார். ஆனால் காவல்துறையினர் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. காவல்துறை சரியாக செயல்பட்டிருந்தால், காந்திஜி கொல்லப்பட்டிருக்க மாட்டார்” என்பதே துஷார் காந்தியின் இறுதிக் கருத்து.

இவை அனைத்திற்கு பிறகும், எந்த போலீஸ்காரர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காந்தி படுகொலை வழக்கை விசாரித்த ஜாம்ஷெட் தோராப் நகர்வாலா, பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு என்ன சொன்னார் தெரியுமா? “சாவர்க்கரின் உதவியும் ஈடுபாடும் இல்லாமல் காந்தியை படுகொலை செய்வதற்கான வேலை முழுமையடைந்திருக்காது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்”. இதை துஷார் காந்தி ‘லெட்ஸ் கில் காந்தி’ புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். (‘லெட்ஸ் கில் காந்தி’, பக்கம் -691)

நாட்டின் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் படேல் மீதும் பல கேள்விகள் எழுந்தன. “உள்துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் சர்தார் படேல் காந்தி படுகொலை விவகாரத்தில் தனது பொறுப்பை துறக்க முடியாது என்று ஜெயபிரகாஷ் நாராயண் கூறினார்” என மெளலானா ஆசாத் எழுதினார். (இண்டியா வின்ஸ் ஃப்ரீடம், பக்கம் – 223)

சர்தார் படேலின் மகள் மணிபென் படேல் கபூர் கமிஷனுக்கு அளித்த சாட்சியத்தில், தனது தந்தை முஸ்லிம் விரோதியாக பார்க்கப்பட்டதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறியுள்ளார். காந்தியின் படுகொலைக்கு தனது தந்தைக்கு பொறுப்பு இருப்பதாக ஜெயபிரகாஷ் நாராயண் பகிரங்கமாக குற்றம் சாட்டியதாக மணிபென் படேல் ஒப்புக் கொண்டார்.

“காந்தியை படுகொலை செய்ததற்கு தனது தந்தைக்கு பொறுப்பு இருப்பதாக ஜெயபிரகாஷ் நாராயண் குற்றம் சாட்டிய கூட்டத்தில் மெளலானா ஆசாத் இருந்தார், ஆனால் அவர் அதை எதிர்க்கவில்லை. இது என் தந்தையை மிகவும் பாதித்தது” என்றும் மணிபென் கூறியுள்ளார்.

கபூர் கமிஷனிடம் சாட்சியமளித்த மணிபென், “பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் கொடுத்தது எனது தந்தைக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இந்த பணத்தை கொடுத்ததால்தான் பாபு கொல்லப்பட்டிருக்கலாம் என்பதை அவர் உணர்ந்தார். நேரு கூட பணம் கொடுக்க ஆதரவாக இல்லை. இதற்கிடையில், தன்னை அமைச்சரவையில் இருந்து விடுவித்துவிடுமாறு நேருவிடம் அப்பா கேட்டுக் கொண்டார். ஏனெனில் மெளலானாவுக்குக் கூட தன்னை பிடிக்கவில்லை என்று நேருவிடம் அவர் தெரிவித்தார்” என்று தெரிவித்தார்.

காந்தியின் படுகொலைக்குப் பிறகு, படேலுக்கு கடிதம் ஒன்றை எழுதிய நேரு, “கடந்த காலத்தை மறந்து நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். அதற்கு சர்தாரும் ஒப்புக் கொண்டார், ஆனால் ஜெயபிரகாஷ் நாராயண் தொடர்ந்து அப்பாவைத் தாக்கிக் கொண்டேயிருந்தார். 1948 மார்ச் 5ஆம் தேதியன்று, சர்தார் படேலுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது, இப்போது நான் இறந்து காந்திஜியிடம் சென்றுவிட வேண்டும், அவர் தனியாக சென்றுவிட்டார் என்று அப்பா கூறினார்” என மணிபென் படேல் தெரிவித்தார்..

காந்தி படுகொலை செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, அதாவது 1948 பிப்ரவரி ஆறாம் தேதியன்று, நாடாளுமன்றத்தின் ஒரு சிறப்பு கூட்டம் அழைக்கப்பட்டது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சர்தார் படேலிடம் பல கூர்மையான கேள்விகளைக் கேட்டனர். ‘தேஜ்’ செய்தித்தாளின் நிறுவனரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தேஷ்பந்து குப்தா, “மதன்லால் பாஹ்வா கைது செய்யப்பட்ட பின்னர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார், அப்போது இது குறித்த திட்டம் குறித்தும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் பற்றியும் தெரிவித்தார். டெல்லி சி.ஐ.டி பம்பாயில் இருந்து அவர்களுடைய புகைப்படங்களை ஏன் சேகரிக்கவில்லை? புகைப்படங்களைப் பெற்று விநியோகித்திருந்தால், மக்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள். இதில் ஏன் அலட்சியம் காட்டப்பட்டது? இது எவ்வளவு பெரிய தவறு? ” என்று சராமாரியாக கேள்விகளை எழுப்பினார்.

இந்த கேள்விக்கு பதிலளித்த படேல், “டெல்லி காவல்துறை அவர்களைக் கைது செய்ய முயன்றது, ஆனால் அனைவரும் வெவ்வேறு இடங்களில் இருந்தனர். அவர்களின் புகைப்படங்களும் கிடைக்கவில்லை” என்றார். விசாரணையில் சாட்சி எண் 54 ஆக மகாத்மா காந்தியின் தனிச்செயலாளர் பியரேலால் இருந்தார். பிரிவினைக்குப் பிறகு காந்தியுடன் படேலுக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், காந்தி மீதான அவரது மரியாதை ஒருபோதும் குறைந்த்தில்லை என்று அவர் தெரிவித்தார். “முஸ்லிம்கள் இங்கு வாழலாம், அவர்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும் என்று படேல் சொல்லியிருந்தார், ஆனால் அவர்களின் விசுவாசமானது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பிரிக்க முடியாத ஒன்று” என்று பியரேலால் கூறியிருந்தார்.

இதற்கு முன்னரும் தாக்குதல்கள் நடந்ததால் பாபுவின் பாதுகாப்பு குறித்து, தனது தந்தை சர்தார் படேல் அக்கறை கொண்டிருந்ததாக மணிபென் படேல் கூறியுள்ளார். “பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள வருபவர்களை பரிசோதித்த பிறகுதான் உள்ளே விடுவேன் என்று என் தந்தை மகாத்மா காந்தியிடம் தெரிவித்தார். ஆனால் காந்தி அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை” என்று மணிபென் கபூர் விசாரணை கமிஷனிடம் தெரிவித்தார்.

காந்தி படுகொலை மற்றும் ஆர்.எஸ்.எஸ்

காந்தியின் படுகொலையில் தனக்கு பங்கு இல்லை என ஆர்எஸ்எஸ் தொடர்ந்து மறுத்து வருகிறது. ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு கூட பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த விஷயம் அவ்வளவு எளிதல்ல.

காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தை தடை செய்தபோது படேல் இவ்வாறு தெரிவித்தார்: “காந்தியின் படுகொலைக்கு நாடு முழுவதும் பரவிய இனவாத நச்சுதான் காரணம்”.

காந்தி

பட மூலாதாரம்,ULLSTEIN BILD DTL. / GETTY

அகமதாபாத்தில் இருந்து வெளியிடப்பட்ட நவ்ஜீவன் என்ற பத்திரிகையில் காந்தியின் தனிச் செயலாளர் பியரேலால் இவ்வாறு எழுதினார்: ” “வெள்ளிக்கிழமையன்று வானொலியை கண்டிப்பாக கேளுங்கள், நல்ல செய்தி வரப்போகிறது என்று காந்தி கொல்லப்படுவதற்கு முன்னரே ஆர்எஸ்எஸ் சில இடங்களில் அறிவித்திருக்கிறது. காந்தி படுகொலை செய்தி வெளியானதும், ஆர்.எஸ்.எஸ் கிளை அலுவலகங்களில் இனிப்புகள் விநியோகிக்கப்பட்டன”. (துஷார் காந்தி, லெட்ஸ் கில் காந்தி, பக்கம் 70)

காந்தி படுகொலை செய்யப்பட்ட இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, ஆர்எஸ்எஸ்ஸின் ‘ஆர்கனைசர்’ என்ற பத்திரிகை 1970 ஜனவரி 11 அன்று ஒரு தலையங்கத்தில் இவ்வாறு எழுதியது, “நேரு பாகிஸ்தான் சார்புடையவராக இருந்ததும், காந்திஜி உண்ணாவிரதம் இருப்பதற்கும் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி இருந்தது.” அத்தகைய சூழ்நிலையில், நாதுராம் கோட்சே மக்களின் பிரதிநிதியாக செயல்பட்டார். காந்தியின் படுகொலை பொதுமக்களின் சீற்றத்தின் வெளிப்பாடாகும்.”

ஜெயபிரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோஹியா மற்றும் கமலதேவி சட்டோபாத்யாய் ஆகியோரின் செய்தியாளர் கூட்டத்தைப் பற்றியும் கபூர் கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது, அதில் அவர்கள் ‘காந்தியின் படுகொலைக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை, ஆனால் அதன் பின்னால் ஒரு பெரிய சதி மற்றும் அமைப்பு உள்ளது’ என்று கூறியிருந்தனர். அமைப்புகள் என்பதில், ஆர்.எஸ்.எஸ், இந்து மகாசபா மற்றும் முஸ்லிம் லீக் பெயர் குறிப்பிடப்பட்டது. காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் ஆர்.எஸ்.எஸ். மீது விதிக்கப்பட்ட தடை பிப்ரவரி 1948 முதல் ஜூலை 1949 வரை இருந்தது.

1994 ஜனவரி 28ஆம் தேதி, பிரண்ட்லைன் பத்திரிகைக்கு பேட்டியளித்த நாதுராம் கோட்சேவின் சகோதரர் கோபால் கோட்ஸே, “சகோதரர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ்ஸில் இருந்தோம். நாதுராம் , தத்தத்ரேயா, நான், கோவிந்த் அனைவரும் வளர்ந்தது எங்கள் வீட்டில் அல்ல, ஆர்.எஸ்.எஸ்ஸில்தான். எங்கள் குடும்பமே ஆர்.எஸ்.எஸ். தான். ஆர்.எஸ்.எஸ்ஸில் அறிவார்ந்த ஆர்வலராக நாதுராம் இருந்தார். ஆர்.எஸ்.எஸ்ஸை விட்டு வெளியேறுவதாக தனது அறிக்கையில் நாதுராம் கூறியிருந்தார்.”

“ஏனெனில் காந்தியின் படுகொலைக்குப் பிறகு, கோல்வல்கர் மற்றும் ஆர்.எஸ்.எஸ்க்கு சிக்கல்கள் ஏற்பட்டதால், அவர்களை காப்பாற்றுவதற்காக நாதுராம் இப்படி அறிவித்தார். ஆனால், ஆர்.எஸ்.எஸ் ஒருபோதும் அவரை வெளியேற்றவில்லை” என்று கூறியிருந்தார்.

நாதுராமுடனான தொடர்பை அத்வானி மறுத்தது பற்றி அந்த பேட்டியில் கோபால் கோட்சேவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘அத்வானி கோழைத்தனமாக பேசுகிறார். ‘சென்று காந்தியை கொன்றுவிட்டு வா என்று நாதுராமுக்கு ஆர்.எஸ்.எஸ் உத்தரவிடவில்லை என்று அவர் கூறுகிறாரா?’ நாதுராமுக்கும் ஆர்எஸ்எஸ்க்கும் எதவித தொடர்பும் இல்லை என்று மறுத்துவிடமுடியாது. ஆனால் இந்து மகாசபை நாதுராமுடனான தொடர்பை மறுக்கவில்லை. நாதுராம் 1944ஆம் ஆண்டிலேயே இந்து மகாசபைக்கு வேலை செய்ய தொடங்கிவிட்டார்.”

நாதுராம் கோட்சே ஒரு காலத்தில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக இருந்தார், ஆனால் அவர் பிறகு இந்து மகாசபாவிற்கு வந்தார். இருப்பினும், 2016 அன்று செப்டம்பர் 8ஆம் தேதியன்று எகனாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு கோட்சேவின் குடும்பத்தினர் அளித்த பேட்டியில் கூறியது மிகவும் முக்கியமானது.

நாதுராம் கோட்சே மற்றும் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் வம்சாவளியான சத்தியகி கோட்சே, எகனாமிக் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில், “நாதுராம் சாங்லியில் இருந்தார். அவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் 1932ஆம் ஆண்டில் இணைந்தது முதல் உயிருடன் இருந்தவரை ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராகவே இருந்தார். அவர் ஒருபோதும் அமைப்பை விட்டு வெளியேறவில்லை, அவர் நீக்கப்படவும் இல்லை” என்று தெரிவித்திருந்தார்.

காந்தி கொலை செய்யப்படுவதற்கு ஏறக்குறைய ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, தனது 72வது வயதில், 125 ஆண்டுகள் வாழ விரும்புவதாகக் கூறினார். ஆனால், 37 வயதான மராத்தி பிராமணரான நாதுராம் கோட்சேவால் 78 வயதிலேயே கொல்லப்பட்டார் மகாத்மா காந்தி. அவரது விருப்பம் நிறைவேறாமல் போய்விட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

 

சிறப்புச் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டது

Author


Hit Counter provided by technology news