Breaking

மார்கழி ஸ்பெஷல்
பிரீமியம் ஸ்டோரி

News

மார்கழி ஸ்பெஷல்

ஐந்து ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், பஞ்சகிருஷ்ண க்ஷேத்திரங்களுள் முக்கியமானதும், கீழை வீடு என்று போற்றப்படுவதுமான க்ஷேத்திரம் ‘திருக்கண்ணபுரம்.’

மார்கழி மாதம் தொடங்கிவிட்டது. மார்கழி என்றாலே ஆருத்ரா, ஆண்டாள், கண்ணன், கீதை என்று ஆன்மிக விஷயங்களாகத்தான் ஞாபகம் வரும். `இந்த மாதத்தில் அதிகாலை எழுந்து ஆண்டவனைத் துதிப்பது என்பது மனதுக்கு மகிழ்ச்சி தரும்’ என்கிறது ஆன்மிகம். `இப்படி அதிகாலையில் எழுவது மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் நல்லது’ என்கிறது அறிவியல்.

மார்கழியின் முக்கியமான விழா வைகுண்ட ஏகாதசி. அந்த நாளில் வைணவ ஆலயங்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் எல்லோரும் தரிசனம் செய்வார்கள். திருவரங்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட விசேஷ ஆலயங்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பரமபத தரிசனம் சொர்க்கவாசல் தரிசனம் செய்வோருக்கு சகல தோஷங்களும் பாவங்களும் தொலைந்து போகும்; பூமியில் சகல ஐஸ்வர்யங்களுடன் நிறைவாக வாழ்ந்து மோட்சம் அடையும் பாக்கியம் கிடைக்கும். எல்லா வைணவ ஆலயங்களிலுமே சொர்க்க வாசல் என்ற புண்ணிய இடம் இருப்பதுண்டு. ஆனால், தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 6 வைணவ ஆலயங்களில் மட்டும் சொர்க்க வாசல் என்ற இடம் இல்லை.

மார்கழி ஸ்பெஷல்

மார்கழி ஸ்பெஷல்

அவை திருக்கண்ணபுரம் – சௌரிராஜப் பெருமாள் கோயில், காஞ்சிபுரம் – வைகுண்டபெருமாள் கோயில், ஸ்ரீபெரும்புதூர் – ஆதிகேசவப் பெருமாள் கோயில், திருவெள்ளறை – புண்டரீகாட்ச பெருமாள் கோயில், கும்பகோணம்- சார்ங்கபாணி கோயில், சிங்கவரம் – ரங்கநாதர் கோயில். காரணம் இந்தக் கோயில்களே பூலோக வைகுண்டமாக – சொர்க்கமாக இருப்பதாக ஐதிகம்!

இதேபோல திருப்பதியிலும் சொர்க்க வாசல் கிடையாது. அங்கே முக்கோடி பிரதட்சணம் பிராகாரம் உண்டு. வைகுண்ட ஏகாதசியையொட்டி இதில் வலம் வருவது, சொர்க்க வாசல் தரிசனத்துக்கு இணையாகப் போற்றப்படுகிறது.

இந்த ஆலயங்களை எப்போது தரிசனம் செய்தாலும் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி நாளில் சொர்க்க வாசலை தரிசனம் செய்த புண்ணியமும் பலனும் கிடைத்துவிடுமாம். இதில் பூலோக வைகுந்தம் என்றே போற்றப்படும் திருக்கண்ணபுரம், சௌரிராஜப் பெருமாள் ஆலயத்தைப் பற்றிச் சிந்திப்போம்.

ஐந்து ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், பஞ்சகிருஷ்ண க்ஷேத்திரங்களுள் முக்கியமானதும், கீழை வீடு என்று போற்றப்படுவதுமான க்ஷேத்திரம் ‘திருக்கண்ணபுரம்.’ இங்கு அருள்பாலிப்பவர் ஸ்ரீசௌரிராஜப் பெருமாள். ரிஷிகளை இம்சித்த அரசனை எதிர்த்து பெருமாளே சிறுவனாக வந்து போரிட்ட இடம். பக்தனான அர்ச்சகரைப் பாதுகாக்கத் திருமுடியுடனே காட்சி தந்ததனால் சௌரிராஜப் பெருமாள் என்றானார். இன்றும் இவர் அமாவாசைத் திருவுலாவில் சௌரியோடு நடந்துபோகும் நடை அழகு.

மார்கழி ஸ்பெஷல்

மார்கழி ஸ்பெஷல்

இங்கு மூலவர் நீலமேகப் பெருமாள். உற்சவர் சௌரிராஜப் பெருமாள். கருவறையில் நீலமேகப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார். மற்ற பெருமாள்களைப் போல வலக்கரம் அபய கரத்துடன் இல்லாமல் உள்ளங்கையில் உலகைக் காட்டும் வகையில் குவிந்த கரத்துடன் உள்ளார். தன்னை நம்பி வரும் பக்தர்களின் துன்பங்களையெல்லாம் தானே பெற்றுக்கொள்வது போன்ற ஐதிகம் என்கிறார்கள். அதேபோல திருமாலிருஞ்சோலை, திருக்கண்ணபுரம் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே பெருமாள் ஸ்ரீசக்கரத்தைப் பிரயோகிக்கும் நிலையில் காட்சி தருகிறார். இது, பக்தர்களை எப்போதும் காக்கத் தயாராக இருக்கும் நிலை என்கிறார்கள்.

வைகாசி மாத பிரம்மோற்சவ விழாவின் போது, சௌரிராஜப் பெருமாள் அதிகாலையில் சிவனாகவும், மாலையில் பிரம்மாவாகவும், இரவில் திருமாலாகவும் எழுந்தருளும் மும்மூர்த்தி தரிசனம் இங்கு மட்டுமே நடைபெறக் கூடியது. தாயார் கண்ணபுர நாயகி தனிச்சந்நிதியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தீர்த்தம் நித்யபுஷ்கரணி. இந்தத் தீர்த்தம் மிகவும் விசேஷமானது. உத்ராயணத்தில் மூன்று நாள்கள் இத்தீர்த்தத்தில் அனைத்து நதிகளும் நீராடி தங்கள் பாவத்தைப் போக்கிக்கொள்வதாக ஐதிகம். இதில் அமாவாசை தினத்தில் பித்ரு பூஜைகள் செய்கிறார்கள். தோஷத்தால் பாதிக்கப்பட்ட இந்திரன் இங்கு வந்து நவகிரக பிரதிஷ்டை செய்து தோஷம் நீங்கப்பெற்றான். இந்திரன் பிரதிஷ்டை செய்த நவகிரகம் கோபுரத்திற்கு அடியில் மதிற்சுவர் அருகே மேற்குப் பார்த்தபடி இருக்கிறது. இந்த நவக்கிரகம் சுற்றிலும் 12 ராசிகளுடன் இருப்பது வித்தியாசமான அமைப்பு .

மார்கழி ஸ்பெஷல்

மார்கழி ஸ்பெஷல்

இக்கோயிலை வலம் வரும்போது விமானத்தை தரிசனம் செய்ய முடியாதபடி சுற்றி மதில் எழுப்பப்பட்டு அமைந்திருப்பது சிறப்பு. கருவறைக்கு மேலே இருக்கும் உத்பலாவதக விமானத்தில் பெருமாளை வணங்கி ரிஷிகள் தவம் இருப்பதாக ஐதிகம். அதனாலேயே விமானம் மறைக்கப்பட்டுள்ளதாம். மாசி மாத பௌர்ணமியில் கடற்கரையில் கருடனுக்குக் காட்சி தரும் வைபவம் நடைபெறும். காரைக்கால், திருமலைராயன் பட்டின கடற்கரைக்குச் செல்லும் சௌரிராஜப் பெருமாளுக்கு அங்குள்ள வெள்ளை மண்டபத்தில் அலங்காரம் செய்யப்படும். அங்கிருக்கும் மீனவ மக்கள் நெற்கதிர்களால் மண்டபத்தை அலங்கரிப்பர். பவளக்கால் சப்பரத்தில் தங்க கருடவாகனத்தில் அமர்ந்திருக்கும் சௌரிராஜப் பெருமாளை, `மாப்பிள்ளைப் பெருமாள்’ என்று மீனவ மக்கள் அழைக்கின்றனர். புரட்டாசி மாதத்தில் கருட வாகன சேவையும், பவளக்கால் சப்பர வீதி உலாவும், புஷ்கரணி தீர்த்தத்தில் தீர்த்தவாரியும் நடைபெறும்.

மார்கழி ஸ்பெஷல்

மார்கழி ஸ்பெஷல்

திருப்பதி லட்டைப் போல திருக்கண்ணபுரத்தின் விசேஷப் பிரசாதம் முனையதரன் பொங்கல். முனையதரையர் என்ற ஏழை பக்தரின் வீட்டுக்குச் சென்று பெருமாள் ஏற்றுக்கொண்ட பிரசாதமே இது. அந்த பக்தரின் பெருமையை உலகுக்கு அறிவிக்க, இன்றும் அர்த்த சாம பூஜையில் பெருமாளுக்கு இந்தப் பொங்கல் படைக்கப்படுகின்றது. குலசேகர ஆழ்வார் இந்த சௌரிராஜப் பெருமாளைத்தான் குழந்தையாக பாவித்துத் தாலாட்டிப் பாடியுள்ளார்.

சௌரிராஜப் பெருமாள் இங்கு திருமாலின் அம்சமான எட்டெழுத்து எனும் `ஓம் ந மோ நா ரா ய ணா ய’ என்ற அஷ்ட அட்சரங்களிலும் உருக்கொண்டு திகழ்வதால் இது `அஷ்டாக்ஷர மகாமந்திர ஸித்தி க்ஷேத்ரம்’ என்று போற்றப்படுகிறது. ரிஷிகளுக்கு வைகுந்த விமானத்தோடு இங்கு வந்து எழுந்தருளி காட்சி அளித்ததால் இது பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது. அதனால் இத்தலத்தில் சொர்க்க வாசல் என்று தனியாகக் கிடையாது. இந்த ஆலயமே சொர்க்கம்தான். எப்போது இங்குவந்து பெருமாளை தரிசித்தாலும் சொர்க்கவாசலை, பரமபத க்ஷேத்திரத்தை தரிசித்த புண்ணியமும் பலனும் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

தெய்விக மாதமான மார்கழியில் பூலோக வைகுந்தமாகத் திகழும் இந்த ஆறு ஆலயங்களில் பெருமாளை தரிசித்து இகலோக சுகங்களையும் பரலோகப் பெருவாழ்வையும் சிறப்புடன் பெறுவோம்.

Author


Hit Counter provided by technology news