ஐசிசி இடைநீக்கம்: இலங்கை கிரிக்கெட் வாரியம் அடுத்து என்ன செய்யும்? எதிர்காலம் என்ன?

இலங்கை கிரிக்கெட் வாரியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி,பிபிசி தமிழுக்காக

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியத்திற்கு ஐசிசி தடை விதித்தமையானது, தற்போது சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

ஆசியக் கோப்பை மற்றும் உலகக்கோப்பை போட்டிகளில் இலங்கை கிரிக்கெட் அணி மிக மோசமான முறையில் விளையாடியிருந்தது. அத்துடன், கடந்த காலங்களில் இடம்பெற்ற போட்டிகளிலும் படுதோல்வியைச் சந்தித்திருந்தது.

இந்நிலையில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பில் இலங்கை முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம், இலங்கை நாடாளுமன்றத்தில் நாளொன்றை ஒதுக்கி, விவாதம் நடத்தி ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையிலேயே, ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியத்தின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு ஐசிசி தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியத்தின் உறுப்புரிமையை உடன் அமலுக்கு வரும் வகையில் நேற்று மாலை முதல் ஐசிசி இடை நிறுத்தியது.

சர்வதேச கிரிக்கெட் வாரியம் நேற்று கூடி ஆராய்ந்த போதே இந்தூஹ் தீர்மானத்தை எட்டியுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகம், அரசியல் தலையீடு ஆகிய காரணங்களே சர்வதேச கிரிக்கெட் வாரியம் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை தடை செய்யக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசாங்கத்தின் தலையீடு இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை தடை செய்யும் கூட்டத்தில் ஷமி சில்வா

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியத்தின் உறுப்புரிமையை இடை நிறுத்துவதற்கான தீர்மானத்தை எடுப்பதற்காக ஐசிசி நேற்றைய தினம் விசேஷ கூட்டமொன்றை ஏற்பாடு செய்தது.

இந்தக் கூட்டத்தில் இந்தியாவிற்கு தற்போது விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷமி சில்வாவும் கலந்துகொண்டிருந்ததாக பிரபல கிரிக்கெட் இணையதளமான கிரிக்இன்ஃபோ செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், ஆமதாபாத்தில் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள ஐசிசி கூட்டங்களிலும், ஷமி சில்வா கலந்துகொள்ள இருப்பதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இறுதியாக 2014ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் இடைக்கால குழுவொன்று செயற்பட்டமைக்கு ஐசிசி அனுமதி வழங்கியிருந்தது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் சர்ச்சைக்கான தீர்வுக்காக நியமிக்கப்பட்ட குழுக்கள்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியத்திற்கான இடைக்கால குழுவொன்று கடந்த 5ஆம் தேதி நியமிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு இடைக்கால குழுவொன்று நியமிக்கப்பட்டதை அடுத்து, அது நாட்டில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

இதையடுத்து, ஸ்ரீலங்கா கிரிக்கெட் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளை ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சரவை குழுவொன்று நியமிக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் மற்றும் நிர்வாக பிரச்னைகளை ஆராய்வதற்காகப் பல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு நியமிக்கப்பட்ட குழுக்கள் குறித்து பிபிசி ஆராய்கின்றது.

கிரிக்கெட் மறுசீரமைப்பு தொடர்பில் நியமிக்கப்பட்ட சுயாதீன ஆலோசனை சபை

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியத்தை மறுசீரமைப்பு செய்வதற்காக 2017ஆம் ஆண்டு அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் சுயாதீன ஆலோசனை சபையொன்று நியமிக்கப்பட்டது.

இந்த சுயாதீன சபையின் தலைவராக முன்னாள் கிரிக்கெட் குழுவொன்றின் தலைவராக செயல்பட்ட ஹேமக்க அமரசூரிய நியமிக்கப்பட்டிருந்தார்.

அத்துடன், முன்னாள் வீரர்களான மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார, அரவிந்த டி சில்வா, அநுர தென்னக்கோன் ஆகியோர் சபையின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

கிரிக்கெட்டை மேம்படுத்த பிரபல்யங்கள் அடங்கிய குழு

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியத்தை மேம்படுத்துவதற்காக 2021ஆம் ஆண்டு அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக கடமையாற்றிய நாமல் ராஜபக்ஸவினால் தொழில்நுட்ப ஆலோசனை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் தலைவராக அரவிந்த டி சில்வா நியமிக்கப்பட்டதுடன், குழுவின் உறுப்பினர்களாக ரொஷான் மஹநாம, முத்தையா முரளிதரன் மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இலங்கை கிரிக்கெட் வாரியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

குசலா சரோஜனி குழு

கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டிகளுக்காக நியமிக்கப்பட்ட இலங்கை அணி தொடர்பிலும், அதனுடன் தொடர்புடைய விஷயங்கள் குறித்தும் ஆராய்வதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் குசலா சரோஜனி வீரவர்தனவின் தலைமையிலான ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சரின் செயலாளர் கிங்ஸிலி பெர்ணான்டோ, ஓய்வு பெற்ற பிரதி போலீஸ் மாஅதிபர் சுதத் நாகஹமுல்ல, ஓய்வூ பெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ், முன்னாள் கிரிக்கெட் வீரர் நலிந்த அல்விஸ், சட்டத்தரணி ஷலனி ரொஷானா பெர்ணான்டோ ஆகியோர் இந்தக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

அர்ஜுண தலைமையில் இடைக்காலக் குழு

உலகக்கோப்பை - இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தற்போதைய தலைவர் உள்ளிட்ட நிர்வாகத்திற்குப் பதிலாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியத்தை முன்னோக்கிக் கொண்டு செல்லும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் கடந்த 5ஆம் தேதி இடைக்கால குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இந்த குழுவின் தலைவராக முன்னாள் அணித் தலைவர் அர்ஜுண ரணதுங்க நியமிக்கப்பட்டிருந்தார்.

அத்துடன், ஓய்வூ பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ.இமாம், ஓய்வூ பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ரொஹினி மாரசிங்க, ஓய்வூ பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ஐராங்கணி பெரேரா, எச்.கே.உபாலி தர்மதாஸ, சட்டத்தரணி ரகித்த நி;மல ராஜபக்ஸ மற்றும் எம்.எச்.ஜமால்டீன் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பிடித்துள்ளனர்.

கிரிக்கெட் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளை தீர்ப்பதற்கு அமைச்சரவை குழு

ஸ்ரீலங்கா கிரிக்கெட் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளை தீர்க்கும் வகையில் அமைச்சரவை விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கடந்த 6ஆம் தேதி கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த குழு நியமிக்கப்பட்டது.

இந்த குழுவின் தலைவராக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நியமிக்கப்பட்டிருந்தார்.

அத்துடன், அமைச்சர்களான காஞ்சன விஜேசேகர, டிரான் அலஸ், மனுஷ நாணயக்கார ஆகியோர்; இந்த அமைச்சரவை குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளை விரைவில் தீர்க்கும் வகையிலான பரிந்துரைகளை முன்வைக்கும் நோக்கிலேயே இந்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

புதிய யாப்பின் பிரகாரம் நியமிக்கப்பட்ட குழு

நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியத்திற்காக புதிய யாப்பொன்றை அறிமுகப்படுத்துவதற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ரி.சித்ரசிறி தலைமையிலான 10 பேரை கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த குழுவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகள் அடங்கிய யோசனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

உத்தேச புதிய யாப்பு சட்டமூலத்தின் ஊடாக, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தை நியமிக்கும் நடைமுறையை முழுமையாக மாற்றுவதற்கு பரிந்துரை முன்வைக்கப்பட்டதுடன், அதன் உறுப்பினர்கள், நிர்வாகம் மற்றும் முகாமைத்துவத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உத்தேச புதிய யாப்பின் பிரகாரம், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாக சபை 4 வருடங்களுக்கு நியமிக்கப்படுவதுடன், 18 பேரை கொண்ட பணிப்பாளர் சபையின் ஊடாக அதை நிர்வகிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டு தொடர்பிலான கொள்கைகளை வகுப்பதற்கான அதிகாரம் பணிப்பாளர் சபைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் பணிப்பாளர் சபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தயாரிக்கப்பட்டு, ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவிற்கு அமைய, ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால், கிரிக்கெட் விளையாட்டு குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான அமைச்சரவை குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

உலகக்கோப்பை - இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தில் ஊழல் காணப்படுவதாகத் தெரிவித்து, தலைவர் உள்ளிட்ட நிர்வாகத்தைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்கட்சியினால் ஒன்றிணைந்த பிரேரணையொன்று கொண்டு வரப்பட்டு, நேற்று முன்தினம் விவாதம் நடாத்தப்பட்டது.

இந்த விவாதத்தின் பின்னர் நடத்தப்பட்ட இந்த பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் தோல்விக்கு சூழ்ச்சியே காரணம் – தேர்வு குழுத் தலைவர் தெரிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் தொடர் தோல்விக்கு சூழ்ச்சியே காரணம் என இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வு குழுத் தலைவர் பிரமோதய விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.

உலகக்கோப்பை போட்டிகளில் தோல்வி அடைந்த பின்னணியில், நாடு திரும்பிய இலங்கை குழு நேற்று அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இதன்போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த போதே இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் பிரமோதய விக்ரமசிங்க இதைக் குறிப்பிட்டார்.

”தோல்வியடைந்தமை கவலையளிக்கின்றது. இலங்கை அணி வீழ்ச்சிக்கு என்ன காரணம் என்பதை நான் இரண்டு தினங்களில் வெளியிடுகின்றேன். ஊடகங்களுக்கு இரண்டு தினங்களின் பின்னர் கதைக்கின்றேன்.

தோல்விக்கான காரணம் என்ன என்பதை அந்த இரண்டு தினங்களில் நன்றாக சிந்தித்துப் பாருங்கள். நாங்கள் திட்டத்துடனேயே சென்றோம். எதிர்காலத்தில் இந்த அணி எவ்வாறு விளையாடும் என்பதைப் பார்க்க முடியும்.

இரண்டு தினங்களில் அனைத்தையும் வெளிப்படுத்துகின்றேன். தோல்விக்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கின்றேன். நான் தப்பிச் செல்ல மாட்டேன். சூழ்ச்சி இருந்ததா, இதை யார் வீழ்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்றார்கள், யார் இதை இல்லாது செய்ய முயன்றார்கள் என்ற அனைத்தையும் நான் எதிர்காலத்தில் வெளிப்படுத்துவேன்.

இலங்கை அணியின் தோல்விக்கு ஒரு குழுவின் சூழ்ச்சி காணப்பட்டது. அதை வெளிப்படுத்துவேன்,” என இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் பிரமோதய விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.

தடை செய்யப்பட்டதன் பின்னர் அடுத்த என்ன நடக்கும்? – விளையாட்டுத்துறை அமைச்சர் பதில்

ரொஷான் ரணசிங்க

பட மூலாதாரம்,ROSHAN RANASINGHE

படக்குறிப்பு,ரொஷான் ரணசிங்க

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க கருத்து வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட இடைக்கால குழுவிற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் 14 நாட்களுக்கு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கிக் கொள்ளும் நோக்கில்தான் எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தை நாடவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவிக்கின்றார்.

”நான் திங்கட்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடவுள்ளேன். அந்த இடத்தில் நியாயத்தை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அவ்வாறு இல்லையென்றால், உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளோம். சட்ட மாஅதிபரின் செயற்பாடுகள் தொடர்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் எனக்கான சட்டத் தரணிகளை நானே நியமிக்கவுள்ளேன்,” என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குறிப்பிடுகின்றார்.

அத்துடன், சர்வதேச தடையை அடுத்து, ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகத்தை அர்ஜுண ரணதுங்கவிடம் கையளித்து, 6 மாதங்களுக்குள் புதிய விளையாட்டு சட்டமொன்றை நிறைவேற்றி, நிர்வாகத் தேர்தல் ஒன்றை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

கடந்த 20 வருட காலமாக இலங்கையில் செயற்பட்டு வரும் கிரிக்கெட் சங்கங்களை கலைத்து, புதிய தேர்தல்களை நடாத்தி, கிரிக்கெட் சங்கங்களை மறுசீரமைக்க தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவிக்கின்றார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் எதிர்காலம் ?

யசிஹரன்

பட மூலாதாரம்,YASIHARAN

படக்குறிப்பு,யசிஹரன்

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு சர்வதேச தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக பத்திரிகையாளர் ஆர்.யசி பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.

எதிர்கால கிரிக்கெட் சமூகத்திற்கு இந்தத் தடை பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறுகின்றார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியத்திற்குள் காணப்படுவதாகக் கூறப்படும் ஊழலை முழுமையாக இல்லாது செய்து, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை சுத்திகரிக்கும் நடவடிக்கைகளைத் தற்போதைய தலைவர்கள் மேற்கொண்டால் மாத்திரமே, இலங்கையின் அடுத்த தலைசிறந்த கிரிக்கெட் தலைமுறையொன்றை உருவாக்க முடியும் எனவும் பத்திரிகையாளர் ஆர்.யசி குறிப்பிடுகின்றார்.

அவ்வாறு இல்லையென்றால், இலங்கையின் அடுத்த கிரிக்கெட் தலைமுறை கேள்விக்குறியாகும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது எனவும் அவர் கூறுகின்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்இன்ஸ்டாகிராம்எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

 

சிறப்புச் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டது

Author