மௌலானா அபுல்கலாம் ஆசாத்: இந்தியாவின் கல்விநிலையை மேம்படுத்திய பள்ளிக்கே செல்லாத மேதை

அபுல்கலாம் ஆஸாத்

பட மூலாதாரம்,ALEPH BOOK COMPANY

படக்குறிப்பு,அபுல்கலாம் ஆஸாத்

  • எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி,பிபிசி தமிழ்

சுதந்திர இந்தியாவின் கல்விக் கட்டமைப்பை வலுப்படுத்தியதில் முக்கியப் பங்கு, நாட்டின் முதல் கல்வி அமைச்சரான மௌலானா அபுல்கலாம் ஆசாத்தையே சாரும். அவருடைய சாதனைகள் என்னென்ன?

இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பும் பின்பும் நாட்டின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் மௌலானா அபுல்கலாம் ஆசாத்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, புதிய தேசத்தின் முன்பாக அணிவகுத்து நின்ற பல பிரம்மாண்ட பிரச்னைகளில் ஒன்று, கல்வி. சுமார் 16 சதவீதம் பேர் மட்டுமே எழுத்தறிவு பெற்றிருந்த ஒரு தேசத்திற்கு அறிவொளி ஊட்டும் பொறுப்பு மௌலானா அபுல்கலாம் ஆசாதிற்கு வழங்கப்பட்டது.

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகப் பதவியேற்ற அபுல்கலாம், இந்திய கல்வி அமைப்பின் பல கட்டமைப்புகளை உருவாக்கிய பெருமைக்குரியவர். இதன் காரணமாகவே அவருடைய பிறந்த நாளான நவம்பர் 11ஆம் தேதி இந்தியாவில் தேசிய கல்வி தினமாகக் கொண்டாடப்படுகிறது.

பள்ளிக்குச் சென்று படிக்காத மேதை

அபுல்கலாம் ஆஸாத்

பட மூலாதாரம்,OXFORD UNIVERSITY PRESS

படக்குறிப்பு,இளமைக் காலத்தில் மௌலானா அபுல்கலாம் ஆஸாத்

மௌலானா ஆசாத் 1888 நம்பர் 11ஆம் தேதி ஒட்டோமான் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த மெக்காவில் பிறந்தார். சைய்யித் குலாம் முஹியுத்தீன் அகமது பின் கைருதீன் அல் ஹுசைனி எனப் பெயர் சூட்டப்பட்டது. இவருடைய தந்தையார் முகமது கைருதீன் பின் அகமது அல் ஹுசைனி ஆஃப்கானிய பின்னணியைக் கொண்ட ஒரு இஸ்லாமிய அறிஞர்.

முதலில் இவருடைய குடும்பம் டெல்லியில்தான் வசித்து வந்தது. 1857இல் டெல்லியில் சுதந்திரப் போர் வெடித்தபோது இந்தியாவைவிட்டு வெளியேறிய அவர் மெக்காவில் குடியேறினார். ஆஸாதின் தந்தை பல புத்தகங்களை எழுதியிருந்தார். நிறைய பேர் அவருடைய கருத்துகளைப் பின்பற்றி வந்தனர். 1890 வாக்கிலேயே இவரது குடும்பம் கல்கத்தாவுக்கு வந்து குடியேறியது.

ஆஸாத் பள்ளிக்கூடம் சென்று படித்தவரில்லை. வீட்டிலேயே அவருக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டன. அரபு, வங்கமொழி, இந்துஸ்தானி, பெர்ஷியன், ஆங்கிலம் ஆகிய மொழிகளை அவர் கற்றுத் தேர்ந்தார். 13 வயதிலேயே ஜுலைகா பேகம் என்ற பெண்ணுடன் திருமணமும் நடந்தது.

மிகச் சிறு வயதிலேயே பத்திரிகை ஒன்றை நடத்த ஆரம்பித்த ஆஸாத், வேறு பத்திரிகைகளிலும் கட்டுரைகளை எழுதி வந்தார். இதற்குப் பிறகு, கல்கத்தாவிலும் அம்ரித்ஸரிலும் சில பத்திரிகைகளில் ஆஸாத் வேலை பார்த்தார்.

இதற்குப் பிறகு, 1908இல் எகிப்து, சிரியா, துருக்கி, ஃப்ரான்ஸ் ஆகிய நகரங்களுக்குப் பயணம் மேற்கொண்டார். அப்போது இளம் துருக்கியர் இயக்கம், இரானின் புரட்சியாளர்கள் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்தத் தருணத்தில்தான் ஆஸாத் இந்திய தேசிய இயக்கத்தில் ஈடுபட ஆரம்பித்தார். ஆஸாத், 1905இல் பிரிட்டிஷார் வங்காளத்தை இரண்டாகப் பிரித்தபோது, அதைக் கடுமையாக எதிர்த்தார்.

அபுல்கலாம் ஆஸாத்

பட மூலாதாரம்,ANI

ஆஸாத், 1912இல் அல் ஹிலால் என்ற இதழைத் தொடங்கி, பிரிட்டிஷ் ஆட்சியைக் கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தார். இந்த இதழ் இந்து – முஸ்லிம் ஒற்றுமையை ஆதரித்ததோடு, முஸ்லிம்களும் கூடுதலாக இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வலியுறுத்தியது. இந்த இதழ் 1914லேயே தடைசெய்யப்பட்டது.

வங்கப் பிரிவினையை ஒட்டி, இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் ஏற்பட்டிருந்த நிலையில் அன்ஜுமான் – இ- உலாமா – இ- பங்களா என்ற அமைப்பை உருவாக்கி, இரு தரப்பினர் இடையிலும் தொடர்ந்து பேசினார் ஆஸாத்.

இந்த முயற்சிகளால் வங்கத்தில் நிலைமை ஓரளவுக்கு மேம்பட்டது. கிலாஃபத் இயக்கத்திலும் மிகுந்த ஈடுபாடு காட்டினார்.

இதற்குப் பிறகு அல் – பலாஹ் என்ற பத்திரிகையைத் துவங்கினார் ஆஸாத். இந்தப் பத்திரிகையும் தடைசெய்யப்பட்டு, ஆஸாத் கைது செய்யப்பட்டார். பம்பாய், ஐக்கிய மாகாணம், பஞ்சாப், டெல்லி ஆகிய மாநிலங்கள் அவர் உள்ளே நுழையத் தடை விதித்தன. 1920 வரை இந்த வழக்கில் சிறையில் இருந்தார் ஆஸாத்.

காந்தி, நேருவுடன் நெருக்கம்

அபுல்கலாம் ஆஸாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஜவஹர்லால் நேரு, மௌலானா ஆசாத் மற்றும் மகாத்மா காந்தி

அவர் சிறையில் இருந்து வெளியே வந்த காலகட்டத்தில், மகாத்மா காந்தி சுதந்திரப் போராட்டத்தில் இறங்கியிருந்தார். ஆஸாதும் அவருடன் கிலாஃபத் இயக்கத்தில் ஈடுபட்ட முக்தார் அகமது அன்சாரி, ஹக்கீம் அஜ்மல் கான் ஆகியோரும் காந்திக்கு நெருக்கமாயினர். பிரிட்டிஷாரின் ஆதரவின்றி உயர் கல்வி படிக்க விரும்புபவர்களுக்காக ஒரு உயர்கல்வி அமைப்பை உருவாக்க நினைத்த இவர்கள், ஜாமியா மிலியா இஸ்லாமியா கல்வி நிலையத்தை உருவாக்கினர். இந்தத் தருணத்தில்தான் நேரு, சித்தரஞ்சன் தாஸ், சுபாஷ் ஆகியோரோடும் நெருக்கமானார் ஆஸாத்.

பைகாம் என்ற பத்திரிகையை 1921இல் தொடங்கினார். பத்திரிகை தடைசெய்யப்பட்டு, ஆஸாத் மீண்டும் கைதுசெய்யப்பட்டார். அவர் சிறையில் இருந்த காலகட்டத்தில், வெளியில் பல முக்கிய நிகழ்வுகள் நடந்தன. ஒத்துழையாமை இயக்கம் கைவிடப்பட்டது.

மோதிலால் நேருவும் சித்தரஞ்சன் தாஸும் காங்கிரசிலிருந்து பிரிந்து சுவராஜ் கட்சியை துவங்கியிருந்தனர். ஆனால், ஆஸாத் தொடர்ந்து காந்திக்கு நெருக்கமாகவே இருந்தார். 1923இல் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்வானார் ஆஸாத்.

லக்னௌவில் 1936ஆம் ஆண்டு நடந்த காங்கிரஸில், சோஷலிசத்தை காங்கிரசின் அடிப்படையாகக் கொள்ள முடியுமா என்பதில் வல்லபாய் படேல், ராஜாஜி, ராஜேந்திர பிரசாத் ஆகியோருடன் ஆஸாதுக்கு முரண்பாடு ஏற்பட்டது. இந்த விஷயத்தில் ஆஸாத் நேருவை ஆதரித்தார். நேரு அடுத்தடுத்து இரு ஆண்டுகள் காங்கிரஸ் தலைவரானதில் ஆஸாத் முக்கியப் பங்கு வகித்தார்.

ஜின்னா இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் என தனித்தனி தேசம் என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தபோது, ஆஸாத் அதைக் கடுமையாக எதிர்த்தார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்ட ஆஸாத் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். பிரிட்டிஷார் இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்து, இந்தியாவை இரண்டாகப் பிரிக்க ஒப்பக்கொண்டபோதும், அதைக் கடுமையாக எதிர்த்தார். இதற்காக முஸ்லீம் லீக்கின் கடும் எதிர்ப்பை அவர் எதிர்கொண்டார்.

ஐஐடி, யுஜிசியை நிறுவிய ஆஸாத்

மகாத்மா காந்தியுடன் மௌலானா ஆஸாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மகாத்மா காந்தியுடன் மௌலானா ஆஸாத்

இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, ஆஸாத் நாட்டின் முதல் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார். நாடு முழுவதும் ஆரம்பக் கல்வி, உயர் கல்வியை அளிப்பதற்கான தேசியக் கொள்கையை வகுப்பதில் முக்கியப் பங்கு வகித்தார் ஆஸாத்.

கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் தலைவராக இருந்தபோது, வயது வந்தோர் கல்வி, எல்லோருக்குமான ஆரம்பக் கல்வி, 14 வயது வரையிலான இலவசக் கல்வி ஆகியவற்றை வலியுறுத்தினார். “அடிப்படைக் கல்வியைப் பெறுவது இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமக்களின் உரிமை” என்று குறிப்பிட்டார் ஆஸாத்.

இவர் கல்வி அமைச்சராக இருந்த காலகட்டத்தில்தான், நாட்டின் உயர் கல்வி அமைப்பாக ஐஐடியை உருவாக்க முடிவுசெய்யப்பட்டது. முதல் ஐஐடி 1951இல் டெல்லியில் நிறுவப்பட்டது. நாடு முழுவதும் பல்கலைக்கழகங்களுக்கான வழிகாட்டும் அமைப்பாக பல்கலைக்கழக மானியக் குழு – யுஜிசி 1953இல் உருவாக்கப்பட்டது.

இது மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் அரசுத் துறைகளிலும் கல்விக்கான அமைப்புகளை, துறைகளை உருவாக்கினார். டெல்லி பல்கலைக்கழகத்திற்குள் ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர் அண்ட் ப்ளானிங்கை உருவாக்கினார்.

டெல்லியில் சென்ட்ரல் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் எஜுகேஷனை உருவாக்கினார். பிறகு இது டெல்லி பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியானது. 1948 பல்கலைக்கழக கல்வி ஆணையம், ஆரம்பக் கல்விக்கான கேர் ஆணையம் ஆகியவை இவரால் அமைக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக 1952இல் பள்ளிக்கூட மேல்நிலைக் கல்விக்கான அகில இந்திய கவுன்சிலை 1952இல் உருவாக்கினார் ஆஸாத்.

இவர் கல்வி அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே கலாசார உறவுகளுக்கான இந்திய கவுன்சில், அடிப்படைக் கல்விக்கான தேசியக் கழகம், ஹிந்தி சிக்ஷா சமிதி, லலித் கலா அகாதெமி, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக்கான அகில இந்திய கவுன்சில், டெல்லி பாலிடெக்னிக் ஆகியவையும் இவரால் உருவாக்கப்பட்டன.

அபுல்கலாம் ஆஸாத்

பட மூலாதாரம்,ORIENT BLACK SWAN

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஆரம்பக் கல்வி தொடங்கி, உயர் கல்வி வரை அனைத்து மட்டங்களிலும் ஆஸாத்திடம் கொள்கைகள் இருந்தன. புதிதாகப் பிறந்த நாட்டில் அதை எப்படி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற பார்வை இருந்தது.

எந்தவிதமான பாரபட்சமும் இன்றி, சர்வதேச பார்வையுடன் நாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற திட்டம் அவருக்கு இருந்தது. புதிய இந்தியாவின் கல்வி, கலாசார, அறிவியல் வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும் என்பதைத் திட்டமிட்டு, அதை முன்னெடுத்துச் சென்றார் ஆஸாத்.

அவர் 1958 பிப்ரவரி மாதம் உயிரிழக்கும்வரை ஆஸாதே இந்தியாவின் கல்வி அமைச்சராக நீடித்தார். இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதான பாரத் ரத்னா நிறுவப்பட்டபோது, முதல் விருதுகளுக்கு ஆஸாத் பெயரும் பரிந்துரைக்கப்பட்டது.

மத்திய அமைச்சரவையில் கட்டுப்பாடும் அதிகாரமும் கொண்டவர்கள் இந்த விருதுகளைப் பெறக்கூடாது என்று கூறி, விருதைப் பெற மறுத்தார் ஆஸாத். அவர் மறைந்து பல ஆண்டுகள் ஆன பிறகு 1991இல் அவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது.

ஆஸாத் தனது சுயசரிதையை India Wins Freedom என்ற தலைப்பில் எழுதினார். அதில் சில பகுதிகளை தான் இறந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகே வெளியிடவேண்டும் என்றும் குறிப்பிட்டார். அந்தப் பகுதிகள் கல்கத்தாவில் உள்ள தேசிய நூலகத்திலும் தேசிய ஆவணக் காப்பகத்திலும் வைக்கப்பட்டன. 30 ஆண்டுகள் கழித்து 1988இல் அந்தப் பகுதிகளையும் இணைத்து புதிய பதிப்பு வெளியிடப்பட்டது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்இன்ஸ்டாகிராம்எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

 

சிறப்புச் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டது

Author


Hit Counter provided by technology news