சிவபெருமானை வழிபட ஆண்டு முழுவதும் பல்வேறு விரதங்களும் வழிபாடுகளும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும் கட்டாயம் வழிபட வேண்டிய விரதங்கள் எட்டு. அவற்றை அஷ்ட மகாவிரதங்கள் என்று குறிப்பிடுவர். அவற்றுள் மிகவும் முக்கியமானது கேதார கௌரி விரதம்.
ஈசனை அடைவதற்காகப் பூ உலகில் அவதரித்தாள் அன்னை பார்வதி. கேதார மலைச் சாரலில் அவள் தங்கியிருந்தபோது கௌதம மகரிஷி அவளுக்கு விரதம் ஒன்றை உபதேசம் செய்தார். அந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் சிவபெருமானின் தரிசனம் கிட்டும். மேலும் வேண்டும் வரமும் பெறலாம் என்று கூறினார். அதைக் கேட்ட பார்வதி தேவி அவர் உபதேசித்தவண்ணமே பூஜை செய்து ஈசனின் அருளைப் பெற்றார். ஈசன் தேவிக்கு இடபாகம் அளித்து அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி கொடுத்தார்.
அன்னை கடைப்பிடித்து சிவனின் அருளைப் பெற்ற இந்த விரதத்தை நாமும் கடைப்பிடித்தால் சகல நன்மைகளையும் பெறலாம் என்பதை நம் முன்னோர்கள் உணர்ந்து கடைப்பிடிக்கும் முறைமைகளையும் தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக, ‘இந்த விரதத்தை சுமங்கலிப் பெண்கள் கட்டாயம் மேற்கொள்ளவேண்டும்’ என்றும் ‘அவ்வாறு மேற்கொள்ளும் சுமங்கலிப் பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியமும் கணவனை விட்டுப் பிரியாத ஆனந்த வாழ்வும் ஸித்திக்கும்’ என்றும் அறிவுருத்தியுள்ளனர்.
கேதார கௌரி விரதம்
புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி தினத்தில் (நவராத்திரி துர்காஷ்டமி) இந்த விரதத்தைத் தொடங்க வேண்டும். கும்பம் ஸ்தாபனம் செய்து அதில் சுவாமியை ஆவாஹனம் செய்து தொடர்ந்து 21 நாள்கள் பூஜை செய்துவரவேண்டும். 21 நாள்களும் இந்தப் பூஜையை செய்ய முடியாதவர்கள் தீபாவளி அன்று இந்த நோன்பினை மேற்கொள்ளலாம்.
விரதம் மேற்கொள்ளும் நாளில் சூரிய உதயத்துக்குப்பின் மாலைவரை உபவாசம் இருந்து பூஜை செய்யவேண்டும். முதலில் கலச ஸ்தாபனம் செய்ய வேண்டும். பூஜைக்குத் தேவையான பூ, பழம், நைவேத்தியங்களைத் தயார் செய்துகொள்ளவேண்டும். பச்சரிசி மாவில் அதிரசம் செய்து நைவேத்தியம் செய்வது விசேஷம். ஒரு மஞ்சள் சரடில் 21 முடிச்சுகள் இட்டு அதைக் கலசத்தில் அலங்கரித்து வைக்க வேண்டும்.

முதலில் பிள்ளையார் பூஜை செய்து பிறகு கௌரி பூஜையைத் தொடங்க வேண்டும். தொடங்கும் பூஜை எந்த விக்னங்களும் இல்லாமல் பரிபூரணமாக நடைபெற வேண்டும் என்று விநாயகரை வேண்டிக்கொண்டு பூஜையைத் தொடங்க வேண்டும்.
பூஜையைத் தொடங்கும் முன்பு சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும். பிறகு சிவபெருமானுக்குரிய அஷ்டோத்திரத்தைச் சொல்லி வில்வம் மற்றும் மலர்களால் பூஜை செய்ய வேண்டும். பிறகு கலசத்தில் சாத்தியிருக்கும் தோரணத்தை எடுத்து அதற்குப் பூஜை செய்ய வேண்டும். தோரணத்திலிருக்கும் 21 முடிச்சுகளுக்கும் சிவனின் 21 நாமங்களைச் சொல்லிப் பூஜை செய்து பிறகு வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் கொடுத்துக் கையில் கட்டிக்கொள்ள வேண்டும்.
பின் கலசத்துக்கு தூப தீபங்கள் காட்டி நைவேத்தியம் செய்து கற்பூர ஆரத்திகாட்டி நமஸ்காரம் செய்யவேண்டும். பிறகு நிவேதனங்களை உட்கொண்டு விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.

இந்த ஆண்டு கேதார கௌரி பூஜை எப்போது?
கேதார கௌரி விரதம் இந்த ஆண்டு நவம்பர் 12-ம் தேதியா 1-ம் தேதியா என்று சிலருக்குக் குழப்பம் உள்ளது. நவராத்திரியில் வரும் துர்காஷ்டமி நாளில் தொடங்கி 21 நாள்கள் நிறைவு பெற்றபின் இந்த பூஜையைச் செய்ய வேண்டும். அந்த வகையில் இந்த ஆண்டு பூஜை செய்ய வேண்டிய நாள் நவம்பர் – 12. அன்று பகல் 3.09 வரை சதுர்த்தசி திதி உள்ளது. அதன்பிறகு அமாவாசை தொடங்கிவிடுகிறது. எனவே அன்று மாலையே கேதார கௌரி விரதத்தைக் கடைப்பிடிக்கலாம்.
நவம்பர் 12-ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் 8 மணிக்குள் கேதார கௌரி விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.