தீபாவளி: வீட்டில் வழிபடுவது ஏன்? எப்படி? – எண்ணெய்க் குளியல், லட்சுமி பூஜை – உகந்த நேரம் என்ன?

தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளி அன்று மாலை லட்சுமி குபேர பூஜை செய்ய வேண்டியது அவசியம். குறிப்பாக வியாபாரம் செய்பவர்கள் தங்கள் வணிகத் தலங்களில் இந்த பூஜையைச் செய்துவந்தால் வியாபாரம் விருத்தியாகி லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.

தீபாவளி… நம் மனதுக்கு மிகவும் நெருக்கமான திருநாள். நாடெங்கும் கொண்டாடப்படும் இந்தத் திருநாள் பலவிதமான முக்கியத்துவங்களைக் கொண்டது. ஓர் ஆண்டு முழுவதும் உற்சாகமாக இயங்கத் தேவையான சக்தியை நமக்குக் கொடுப்பது. ஆன்மிகம், பொருளாதாரம், ஆயுள், ஆரோக்கியம், அன்பு, நல்லுறவு இவை அனைத்தும் பெருக வகை செய்யும் வழிபாடுகளை உள்ளடக்கியது.

அதனால்தான் நம் பாரத தேசம் எங்கும் தீபாவளி வெகு சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. தீபம் என்றால் விளக்கு. ஆவளி என்றால் வரிசை. தீபங்களை வரிசையாக ஏற்றி வழிபடும் நாள் தீபாவளி. வாருங்கள் இப்படி தீபாவளி குறித்த பல தகவல்களையும் வழிபடும் முறைகளையும் எண்ணெய்க் குளியல், லட்சுமி குபேர பூஜை ஆகியவை செய்ய உகந்த நேரம் என்ன என்பன குறித்தும் அறிந்துகொள்வோம்.

லட்சுமி குபேரர்

லட்சுமி குபேரர்

தீபாவளி கொண்டாடுவது ஏன்?

முன்னொரு காலத்தில் நரகாசுரன் என்கிற அசுரன் இருந்தான். அவன் மிகுந்த வலிமை நிறைந்தவன். பூமாதேவியின் மைந்தன். ஆனால் பெரும்பாவங்களுக்கு அஞ்சாதவன். அப்படிப்பட்டவனை சத்யபாமாவின் துணையோடு வதம் செய்தார் ஶ்ரீகிருஷ்ணர். அவன் இறந்ததும் அவன் கடத்தி அடைத்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான இளம் பெண்களை விடுதலை செய்தார் பகவான் கிருஷ்ணர். அப்படிப் பெண்கள் வாழ்வில் இருந்த அடிமைத்தனம் என்னும் இருள் நீங்கி விடுதலை என்னும் ஒளி பெற்ற நாள் தீபாவளியாகக் கொண்டாடப்பட்டது என்கிறார்கள் பெரியோர்கள். மேலும் நரகாசுரன் சாகும் தருவாயில் ‘அதர்மம் அழிந்த ஒளித் திருநாளாக இந்நாள் மக்களால் கொண்டாடப்பட வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டானாம். அவனின் கோரிக்கையை பகவான் ஏற்க, தீபாவளி ஒரு பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ராமாயணத்தில் தீபாவளி

ஶ்ரீராமர் வனவாசம் முடிந்து நாடு திரும்பினார். அந்த நாள் தீபாவளி என்பார்கள். அதுவரை களையிழந்து காணப்பட்ட அயோத்தி புத்துணர்ச்சி கொண்டது. கோசலை தன் மருமகளான சீதையை அழைத்து, ‘அயோத்தி இனி ஒளி பெற, விளக்கேற்றி வை’ என்று கூறினாள். சீதை தீபங்களை ஏற்றி வைத்தாள். அதைத் தொடர்ந்து அயோத்தி மக்களும் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி அயோத்தி மாநகரம் முழுவதும் தீப ஒளியில் ஜொலிக்குமாறு செய்தனர். அன்றுமுதல் தீபாவளி மக்கள் போற்றும் மாபெரும் பண்டியகையானது என்பார்கள்.

திருமகள் திருமாலை மணந்த நாள்

தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து தோன்றியவள் மகாலட்சுமி. அவள் அழகைக் கண்டு தேவர்களும் அசுரர்களும் ஆசைகொள்ள, மகாலட்சுமியோ யோகத்தில் ஆழ்ந்திருந்த மகாவிஷ்ணுவையே மணம் புரிய விரும்பினாள். அவளின் விருப்பத்தை ஏற்றுக்கொண்ட பெருமாள் மகாலட்சுமியைத் திருமணம் செய்துகொண்ட நாளும் தீபாவளி என்கிறார்கள். அதனால்தான் இந்த நாளில் லட்சுமி பூஜை செய்வது வழக்கம். வட இந்தியாவில் லட்சுமி பூஜை செய்து புதுக்கணக்குத் தொடங்குவது தீபாவளி நாளிலேயே.

எப்படிக் கடைப்பிடிக்க வேண்டும்?

தீபாவளிப் பண்டிகை அன்று அதிகாலையிலேயே எழுந்துகொள்ள வேண்டும். எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். பொதுவாக சூரிய உதயத்துக்கு முன்பாக எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் வழக்கம் நம்மிடையே இல்லை. ஆனால், ‘நரக சதுர்த்தசி எனப்படும் தீபாவளி அன்று உஷத் காலத்தில் எழுந்து, எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்’ என்கிறது சாஸ்திரம். ‘தைலே லக்ஷ்மீ ஜலே கங்கா’ என்பது புராண வாக்கு. அதாவது, தீபாவளி நாளில் எண்ணெயில் லட்சுமி உட்கார்ந்திருக்கிறாள். நீரில் கங்கை இருக்கிறாள். பொதுவாக கங்கையில் நீராடக் காசிக்குச் செல்ல வேண்டும். ஆனால் தீபாவளி அன்று அதிகாலை வேளையில் அனைத்து நீர்களிலும் கங்கையின் சாந்நித்தியம் நிறைந்திருக்கும். அப்படிப்பட்ட கங்கை சகல பாவங்களும் போக்கும் சக்தி கொண்டது. லட்சுமி நம்மோடு இருந்தால் ஐஸ்வரியம் பெரும். இதற்காகவே பெரியோர்கள் இப்படிப்பட்ட நியமங்களை வகுத்திருக்கிறார்கள். அதிகாலையில் எண்ணெய்க்குளியல் செய்யச் சொல்கிறார்கள்.

நீராடிய பிறகு புத்தாடை அணிந்து இறைவனையும் வீட்டுப் பெரியோர்களையும் வணங்க வேண்டும். பிறகு மத்தாப்புகள் கொளுத்த வேண்டும். புரட்டாசி மாதத்தில் நம் முன்னோர்கள் பூவுலகுக்கு வந்து தங்கியிருப்பார்கள் என்பது நம்பிக்கை. அவர்கள் மீண்டும் பித்ரு லோகத்துக்குத் திரும்பும் காலமான ஐப்பசி அமாவாசை நாளில் ஏற்றும் தீபங்களும் மத்தாப்புகளும் அவர்களுக்குத் தேவையான வழியைக்காட்டும் என்று சொல்வார்கள். மேலும் மத்தாப்புகளைக் கொழுத்துவதன் மூலம் மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் பொங்கும்.

தீபாவளி அன்று மாலை லட்சுமி குபேர பூஜை செய்ய வேண்டியது அவசியம். குறிப்பாக வியாபாரம் செய்பவர்கள் தங்கள் வணிகத் தலங்களில் இந்த பூஜையைச் செய்துவந்தால் வியாபாரம் விருத்தியாகி லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. வீட்டில் லட்சுமி தேவியின் படம் மற்றும் குபேரனின் படங்களை வைத்து விளக்கேற்றி வீட்டில் இருக்கும் ஆபரணம் ஏதேனும் ஒன்றை அணிவித்து மகாலட்சுமிக்கு உரிய அஷ்டோத்திரம் படித்துப் பூசை செய்வது அவசியம். வில்வம் கொண்டு பூஜை செய்தால் செல்வம் சேரும். இந்த நாளில் பூஜை முடித்து ஏழைகளுக்குத் தேவையான உடை, உணவு ஆகியவற்றை தானம் செய்தால் சகல பாவங்களும் விலகிப் புண்ணிய பலன்கள் பெருகும். எப்போதும் ஐஸ்வர்யம் நிறைந்து காணப்படும்.

கங்கா ஸ்நானம் (எண்ணெய்க் குளியல்) செய்ய உகந்த நேரம்: 12.11.23 அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்

லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம்: 12.11.23 மாலை 6 மணி முதல் 8 மணிக்குள்

 

Author


Hit Counter provided by technology news