கறுப்பு ஜூலையின் நாற்பதாண்டுகளின் பின்

Editorial   / 2023 நவம்பர் 06 , பி.ப. 12:14 – 0      – 73

facebook sharing button
twitter sharing button
print sharing button
whatsapp sharing button
கறுப்பு ஜூலையின் நாற்பதாண்டுகளின் பின்  காலிமுகத்திடல் முதல் திருகோணமலை வரை
தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ
தனிச்சிங்களச் சட்டம் சட்டமூலமாவதற்கான விவாதம் 1956 ஜூன் மாதம் 5ஆம் திகதி பாராளுமன்றில் நடந்து கொண்டிருந்த வேளையில், தமிழரசுக் கட்சியினர் செல்வநாயகம் தலைமையில் பாராளுமன்றத்திற்கு வெளியே காலிமுகத்திடலில் அமைதிவழி சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தனிச்சிங்களம் சட்டமூலம் சட்டமாவதைத் தடுக்கும் வலிமை தமிழரசுக் கட்சியினருக்கு இருக்கவில்லை. மக்களை ஒன்றுதிரட்டிப் போராடுகின்ற மரபு மேட்டுக்குடி தமிழ்த்தலைமைகளுக்கு இருக்கவில்லை. எனவே, கையறுநிலையிலான ஒரு நடவடிக்கையாகவே இந்த  சத்தியாகிரகம் நடந்தது.
சிங்கள மட்டுமே என்ற சட்டமூலத்திற்கான அதிதீவிர சிங்களத் தேசியவாதிகளின் ஏகோபித்த ஆதரவு குறித்து தமிழரசு கட்சியோ அதன் தலைமையில் இருந்த எஸ்.ஜே.வி. செல்வநாயகமோ சிந்திக்கவில்லை.
இந்த சத்தியாகிரகத்தின் மீது வன்முறை ஏவப்படலாம் அல்லது குழப்பம் விளைவிக்கப்படலாம் என்பது எதிர்பார்க்கப்படவேண்டியதொன்றே. ஆனால், அது குறித்த அக்கறையற்றே தமிழரசுக் கட்சியினர் காலிமுகத்திடலில் போய் அமர்ந்தனர்.
அன்று நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பில் இலங்கை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட பேராசிரியர் ஜேம்ஸ் மனோர் Sri Lanka in Change and Crisis என்ற தனது நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
தமிழரசுக் கட்சித் தலைவர்கள் பல வாரங்களாக இந்த சட்டமூலத்திற்கு எதிரான உணர்வைத் தூண்டினர், ஜூன் 5 அன்று, அது பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் நாளில், தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் ஒரு முழுமையான ‘ஹர்த்தால்’ நடத்தப்பட்டது.
குறித்த திகதிக்கு முதல் நாள் செல்வநாயகம் பண்டாரநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அக்கடிதம் வருமாறு: ‘எங்கள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 200 சத்தியாகிரகிகளைப் பிரதிநிதிகள் சபையின் மேற்கு நுழைவாயிலின் படிக்கட்டுகளில் உட்கார வைப்பார்கள், அங்கு அவர்கள் நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருப்பார்கள். சத்தியாகிரகிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க உங்கள் ஒத்துழைப்பைக் கேட்டு நான் உங்களுக்கு இதை எழுதுகிறேன்’.
ஜூன் 5 அன்று, பாராளுமன்றத்திற்குள் நுழைய மறுக்கப்பட்ட தமிழ் சத்தியாகிரகிகள், வேலிகளால் சுற்றி வளைக்கப்பட்டு, காவல்துறையினரால் பாதுகாக்கப்பட்டு, அருகில் உள்ளிருப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர், இது அவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதற்கு வழிவகுத்தது மற்றும் கலவரத்தை அடையாளம் காட்டியது. காலி முகத்திடலில் நடைபெற்ற இந்த சத்தியாகிரக பேரணியில் முன்னணி அரசியல்வாதிகள் உட்பட சுமார் 200 தமிழ் எதிர்ப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
சிங்களக் கூட்டம் ஒன்று திரண்டது, சத்தியாகிரகத்தில் கலந்துகொண்ட பல தமிழ்த் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உடல்ரீதியாகக் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதற்கிடையில், சிறிய சிங்களக் குழுக்கள் நகரத்தில் சுற்றித் திரிந்தன, கடைகளைச் சூறையாடி சில வாகனங்களை அழித்தன.
மறுநாள் காலை, பெட்டா கடைவீதியில் இன்னும் தீவிரமான கொள்ளைகள் நிகழ்த்தப்பட்டன. இரண்டு நாட்களில் ஏற்பட்ட சேதங்களின் உத்தியோகபூர்வ மதிப்பீடுகள் 87 நபர்களுக்குக் காயங்கள் மற்றும் 43 கடைகள் சூறையாடப்பட்டுள்ளன. 113 பேர் கைது செய்யப்பட்டனர்.
சுதந்திர இலங்கையில், தமிழர்கள் மீது வன்முறை ஏவப்படலாம் என்பதைக் கோடு காட்டிய முதலாவது சம்பவம் இது. இதற்கு முன்னரும் இதற்கான வாய்ப்புகள் இருந்தபோதும் சிங்களப் பெருந்தேசியவாதத்தால் வன்முறையை ஏவும் துணிவு இருக்கவில்லை. ஆனால் செல்வநாயகம் திட்டமிடாத சத்தியாகிரக நடவடிக்கையால் இதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். தமிழர்கள் மீது காலிமுகத்திடலில் ஏவப்பட்ட வன்முறையானது பரவி கிழக்கின் கல்லோயா குடியேற்றத் திட்டத்தில் மோசமாக அரங்கேறியது. கல்லோயாவில் குடியேறிய சிங்களக் காடையர்களால் 150 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.
இங்கு எழுகின்ற முக்கிய கேள்வி யாதெனில் தலைநகர் கொழும்பில் நடந்த வன்முறை ஏன் கிழக்கு மாகாணத்தில் எதிரொலித்தது. கிழக்கு மாகாணத்தில் உத்தியோகபூர்வ மொழி சர்ச்சைக்கும் இனக்கலவரத்திற்கும் என்ன தொடர்பு. கலவரம் ஏன் மேற்குக் கரையோரத்தில் உள்ள நகர்ப்புற கொழும்பில் இருந்து கல் ஓயாவுக்குத் தாவியது. இதற்கான பதில் பரபரப்பான அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் விவசாயிகளின் மீள்குடியேற்றம் ஆகியவற்றில் தங்கியுள்ளது. இந்த நேரத்தில், மொழிப் பிரச்சினை தீவின் மக்கள் தொகை குறைவாக உள்ள பகுதிகளில் விவசாயிகள் மீள்குடியேற்றம் என்ற அரசாங்கத்தின் கொள்கையுடன் பின்னிப்பிணைந்துள்ளது.
முதல் பிரச்சினை தமிழர்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தாக்கங்களை ஏற்படுத்தி கட்டுப்படுத்துகிறார்கள் என்ற எண்ணம். இரண்டாவது பிரச்சினை கிழக்கு மாகாணத்தில் சிங்கள மற்றும் தமிழ் (மற்றும் முஸ்லிம்) இன விகிதாச்சாரத்தில் மக்கள்தொகை மாற்றங்களை ஏற்படுத்துவதன் அவசியத்தை சிங்களத் தேசியவாதம் முன்னிறுத்தி வந்த நிலையில் முரண்பாடுகள் தவிர்க்கவியலாதனவாயின.
காலிமுகத்திடல் வன்முறைக்குப் பின்னர், தமிழரசுக் கட்சி சிங்களம் மட்டுமே சட்டத்தை எதிர்த்துத் தமிழ் மக்களை அணி திரட்டி ‘சாத்வீகப் போராட்டம்’ நடத்தப் போவதாக அறிவித்தது. சிங்களம் அரச கரும மொழியான பின்பு தமிழரசுக்கட்சி திருகோணமலையில் 1957இல் நடத்திய மாநாடு முக்கியமானது. தமிழர்கள் பெருமளவில் இம்மாநாட்டில் திரண்டனர்.
சிங்களம் மட்டுமே சட்டமே ஏற்படுத்திய நெருக்கடியும், தமிழர்கள் மீது ஏவப்பட்ட வன்முறையால் ஏற்பட்ட கோபமும் இதற்கு முக்கிய காரணியாகின.  சிங்களம் மட்டுமே என்பதற்கு எதிரான உணர்வுடன் திரண்ட இக்கூட்டம் மொழி உணர்வாலும் இன உணர்வாலும் உந்தப்பட்ட பலரையும் கவர்ந்தது. தமிழ் பேசும் மக்கள் என்று தமிழரசு தலைமை கூறுகிற மக்களில் மலையகத் தமிழர் அங்கு திரளாவிட்டாலும், முஸ்லிம்கள் கணிசமான அளவில் பங்கு பற்றினர். அ.அமிர்தலிங்கம், செ.இராசதுரை, மஷுர் மௌலானா ஆகியோரது உரைகள் பொது மக்களால் ரசிக்கப்பட்டன.
தமிழ் மக்கள் இனியும் பொறுமை காக்க மாட்டார்கள். தமிழர்களை இனியும் யாரும் அடக்கியாள முடியாது என்ற விதமாக உரைகள் அடைந்தது. இந்த மாநாடு தமிழர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்தது. தமிழரின் ‘அப்புக்காத்து அரசியல்’ தமிழருக்கான சம உரிமையை உறுதி செய்யும் என்று மக்கள் நம்பினர். ‘திருமலைக்குச் செல்லுவோம். தமிழின் உரிமை வெல்லுவோம்’, ‘அறப்போர் தொடுப்போம்’ என்ற விதமான கோஷங்களுடன் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கால்நடையாகவே மாநாட்டுக்கு வந்தவர்கள் பலர். இது இம்மாநாடு எவ்வாறு மக்களை உணர்வுபூர்வமாக ஒன்றிணைத்தது என்பதற்கான ஒரு சான்று மட்டுமே.
ஆனால், இம்மாநாடு தமிழரசுக் கட்சியிடம் உரிமைகளை வெல்வதற்கான திட்டங்களையோ போராட்டங்களை நடத்துவதற்கான வேலைமுறைகளையோ கொண்டிருக்கவில்லை என்பதை இந்த மாநாடு தெட்டத் தெளிவாகக் காட்டியது. ஆனால், துரதிஷ்டவசமாக இது பற்றி மக்கள் அன்று அறிந்திருக்கவில்லை.
இந்த மாநாட்டில் தமிழரசுக் கட்சியின் நான்கு பிரதான அரசியற் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
1. மலையக மக்களுக்குப் பூரண குடியுரிமையும், வாக்குரிமையும் வழங்கப்படவேண்டும். 
2. தமிழுக்கும், சிங்களத்துக்கும் சமமான அரச கருமமொழி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். 
3. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் நிறுத்தப்பட வேண்டும். 
4. வடக்கு, கிழக்கு மாகாணங்கட்கான ஒரு சமஷ்டி ஆட்சி உருவாக்கப்பட வேண்டும்.
இக்கோரிக்கைகளில் ஒரு அடிப்படையான நியாயமிருந்தது. இதை வென்றெடுக்க எவ்வகையான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது பற்றிய எவ்விதமான கலந்துரையாடலும் இன்றி வெறும் அரசியற் கோரிக்கைகளோடு இம்மாநாடு முடிவுக்கு வந்தது.
இதில் கவனிப்புக்குள்ளாக வேண்டியது யாதெனில் மலையக மக்கள் சார்பில் பேசுவதற்கான அதிகாரமோ தகுதியோ தமிழரசுக் கட்சிக்கு இருக்கவில்லை. மலையக மக்களின் குடியுரிமையை மையப்படுத்தியே தமிழரசுக் கட்சியின் தோற்றமும் தமிழ்க் காங்கிரசுடனான முரண்பாடும் பொதுவெளியில் இருந்த நிலையில் மாநாடு மலையக மக்கள் சார்பில் பேசுவதை இதயசுத்தியுடனன்றி அரசியல் நோக்கங்களுக்கான முன்வைத்தது. இதில் முரண்நகை யாதெனில்
ஜி.ஜீ.பொன்னம்பலம் தோட்ட உரிமையாளராக இருந்தமையாலேயே அவர் குடியுரிமைப் பறிப்புக்கு ஆதரவாக வாக்களித்தார் என்பது தமிழரசுக் கட்சியின் வாதமாகும்.
ஆனால் செல்வநாயகமும் ஒரு தோட்ட உரிமையாளரே. எனவே மலையக மக்களின் நல நோக்கில் அவர்களது உரிமைக்கான கோரிக்கையைத் தமிழரசுக் கட்சி முன்வைக்கவில்லை என்பது கண்கூடு. பாராளுமன்ற அரசியல் சாக்கடையில் புரள்வதற்கான வழிகளில் மலையகத் தமிழருக்கான குரலும் சாத்வீகப் போராட்டம் என்ற ஏமாற்றும் புதிதாகச் சேர்ந்து கொண்டன.
2023.11.03

Author


Hit Counter provided by technology news