கறவை கரிசனையும் கண்டுகொள்ளப்படாத மேய்ச்சல் தரையும்

Editorial   / 2023 நவம்பர் 02 , பி.ப. 12:42 – 0      – 30

twitter sharing button
facebook sharing button
print sharing button
pinterest sharing button
கறவை கரிசனையும் கண்டுகொள்ளப்படாத மேய்ச்சல் தரையும்

உள்நாட்டில் உற்பத்தியைப் பெருக்கிக் கொள்ளக்கூடியவற்றில் கவனம் செலுத்திப் பெருக்கிக்கொள்ளாது இறக்குமதியிலேயே தங்கியிருப்பதால், பெருந்தொகையில் அந்நியச் செலாவணியைச் செலவிடவேண்டிய நிர்ப்பந்தம் ஒவ்வோர் அரசாங்கங்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

எனினும், உள்ளூர் விவசாயிகள், உற்பத்தியாளர்களின் கனவை நனவாக்குவதைப் போலவே வாக்குறுதிகளை அரசியல்வாதிகள் அள்ளிவீசுவர். இறுதியில், இறக்குமதியிலேயே தங்கியிருப்பர்.
இதில் முக்கியமாகப் பால் மாவைக் குறிப்பிட்டுச் சொல்லாம்.

பசும்பால் பயன்பாட்டை ஊக்குவிக்கத் தவறியதால் பால் மா இறக்குமதிக்காகப் பெருந்தொகை பணத்தை செலவிட நேரிடுகின்றது. கிடைக்கும் பசும் பாலில் இருந்து உற்பத்திச் செய்துகொள்ளக்கூடிய ஏனைய பண்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை அல்லது தரமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பதே யதார்த்தம்.

எனினும், பசும் பாலுக்கான கொள்வனவு விலை அதிகரிக்கப்படுமென, பண்ணையாளர்களை மகிழ்விக்கும் வகையில், பாதீடுகளில் முன்மொழிவுகளை முன்வைப்பர். அதனை நடைமுறைப்படுத்தாமலே விட்டுவிடுவர். இதனால், பண்ணையாளர்களே பாதிக்கப்படுவர்.

வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பிரதேசங்களில் இருக்கும் பாற் பண்ணையாளர்களை ஊக்குவித்தால், தன்னிறைவை காணாவிடினும், உள்ளூர் தேவைக்கு போதுமான பசும்பாலை உற்பத்திச் செய்துகொள்ளலாம். ஆனால், அவற்றைப்பற்றி அரசாங்கமே சிந்திப்பதே இல்லை.  சிந்தித்திருக்குமாயின் மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சற்தரை பிரச்சினைக்கு என்றோ தீர்வை கண்டிருக்கும்.

அந்த மேய்ச்சற்தரையை பயன்படுத்தும் பண்ணையாளர்கள், தங்களுடைய போராட்டத்தை முன்னெடுத்து, புதன்கிழமை 25ஆம் திகதியுடன் 41 நாட்கள் நிறைவடைந்தன. வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றனவே தவிர, நடைமுறைப்படுத்துவதில்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விடுக்கப்பட்ட பணிப்புரையும் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளன.

புத்தர் சிலையை வைக்கின்றனர். வேறுமாவட்டங்களை சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்கள் மாதவனை காணியினை அபகரிப்பதற்கு முயற்சிக்கின்றனர் என்பது மட்டுமே உண்மையாகும்.
அந்த மேய்ச்சற்தரை பிரச்சினைக்கு உரியத் தீர்வை கண்டிருந்தால் அங்கிருக்கும் பாற்பண்ணையாளர்கள் பெரும் நன்மை அடைந்திருப்பர்.

போதியளவான மேற்ச்சற்தரை இன்மையால், பண்ணையாளர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். பசுக்களுக்குப் போதியளவில் புற்கள் கிடைப்பதில்லை. இன்னும் சிலர், மாடு வளர்ப்பதையே கைவிட்டுள்ளனர்.

இந்நிலையில்தான், கறவைகளை களவெடுத்தால் ஒரு இலட்சம் ரூபாய் தண்டம் அறவிடப்படும் என அறிவித்துள்ள புதிய விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, அதற்கு ஏற்ற வகையில் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதனூடாக கறவைகள் திருடப்படுவதும், இறைச்சிக்காக அறுக்கப்படுவதையும் ஓரளவுக்குத் தடுத்து நிறுத்த முடியும். அதுமட்டுமன்றி, குளிரூட்டப்பட்ட வாகனங்களின் வந்து, மாடுகள் களவாடப்படுவதாகவும் கம்பஹா மாவட்டத்திலேயே கூடுதலான மாடுகள் களவாடப்பட்டுள்ளன என்றும் கவலைகொண்டுள்ளார்.

கறவைகள் மீதான கரிசனையை மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சற்தரை விவகாரத்திலும் காண்பித்து, அப்பிரச்சினைக்கு உரியத் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமென நாமும் வலியுறுத்துகின்றோம்.

2023.10.26


Author


Hit Counter provided by technology news