திருப்பத்தூர்: மாங்கூழ் தொழிற்சாலையால் விளை நிலங்கள் பாலையாவதாக விவசாயிகள் வேதனை

மாம்பழ தொழிற்சாலைகளால் ‘கசந்த’ விவசாயிகளின் வாழ்க்கை - என்ன சொல்கிறார்கள் விவசாயிகள்?

  • எழுதியவர்,சுஜாதா
  • பதவி,பிபிசி தமிழுக்காக

திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மூன்று மாவட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான் அதிகளவில் மாம்பழங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

மூன்று மாவட்டங்களிலும் 75-க்கும் மேற்பட்ட மாங்கூழ் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 72 மாங்கூழ் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

கிருஷ்ணகிரியில் மட்டும் சுமார் ஒரு லட்சம் ஏக்கருக்கு மா சாகுபடி செய்து வருகின்றனர். வருடத்திற்கு மூன்று லட்சம் மெட்ரிக் டன்னுக்கு மேல் மா உற்பத்தியாகின்றது.

மாங்கூழ் தொழிற்சாலைகளில் மாம்பழத்தில் இருக்கக்கூடிய தோல், மாங்கொட்டைகள் இரண்டையும் பிரித்து எடுத்தாலும் பாதிக்குப் பாதி அதாவது, ஒன்றரை லட்சம் மெட்ரிக் டன் மாங்கூழ் தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக, இங்கு தயாரிக்கப்படும் மாங்கூழ், அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதேபோன்று, திருப்பத்தூர் மாவட்டத்தில் கந்திலி மற்றும் நாட்றம்பள்ளி பகுதிகளில்தான் மாம்பழங்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இப்பகுதியில் மூன்று மாங்கூழ் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றது. 14 ஆயிரத்து 700 ஏக்கர் பரப்பளவில் மா விவசாயம் செய்யப்படுகிறது.

இம்மாவட்டத்தில் ஆண்டுக்கு 45 ஆயிரம் டன் மாம்பழம் உற்பத்தி செய்யப்படுகிறது. 70% மாம்பழங்கள் மாங்கூழ் தொழிற்சாலைகள் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மீதமுள்ள 30% மாம்பழங்கள் உள்ளூரில் உள்ள சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

மூன்று மாவட்டங்களும் மலைகளால் சூழப்பட்ட பகுதி என்பதால் 3 மாவட்டங்களிலும் பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தையே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

இப்பகுதியில் விளையக்கூடிய மாம்பழங்கள், வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படும் மாவட்டங்களில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதலிடம் வகிக்கின்றது.

மாங்கூழ் தொழிற்சாலைகளால் ஆபத்து

மாங்கூழ் தொழிற்சாலை கழிவுகள்
படக்குறிப்பு,மாங்கொட்டைகளால் விளைநிலம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

தங்கள் வாழ்வாதாரத்திற்கு விவசாயத்தையே பிரதானமாக நம்பியிருக்கும் இந்த மக்களின் வாழ்க்கை தற்போது அப்பகுதிகளில் இயங்கி வரும் ஒரு சில மாங்கூழ் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் டன் கணக்கிலான மாங்கொட்டைகளால் சுற்றுவட்டார கிராமம் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அப்பகுதியில் வாழ்ந்து வரும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் மூன்று மாங்கூழ் தொழிற்சாலைகள் உள்ளன. இந்தத் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் மாங்கொட்டைகள், விவசாய விளைநிலங்களில் கொட்டப்பட்டு வருவதால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், அதிலிருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் மாங்கொட்டைகள் மண்ணில் ஊறி நிலத்தடி நீர் கருப்பு நிறமாக மாறுவதாகவும் மண்ணின் தன்மை குறைந்துவிட்டதாகவும் பொதுமக்களும் விவசாயிகளும் கவலை தெரிவிக்கின்றனர்.

இதனால் விவசாய மண் அதன் பழைய தரத்திற்கு மாறுவதற்கு குறைந்தது 10 ஆண்டுகளாகும் என்கின்றனர். மண்ணின் தரம் பழைய நிலைக்கு வந்தால் மட்டுமே தங்களால் தரமான விவசாயத்தை மேற்கொள்ள முடியும் என்பதே பல விவசாயிகளின் கருத்தாக உள்ளது.

மாங்கொட்டைகள் விவசாய நிலங்களில் கொட்டப்படுவதால் அவை சேர்ந்து 20 அடிக்கு மேல் புதைகுழி போன்று உருவாகியுள்ளது. இதனால், உடல் ரீதியாக பல பிரச்னைகள் ஏற்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

விவசாய நிலங்கள் பாதிப்பு

மாங்கூழ் தொழிற்சாலைகளால் பாதிப்புகள்
படக்குறிப்பு,மண்ணின் தரம் சீர்கெடுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

சுமார் 2,000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய விளைநிலங்கள் மாங்கூழ் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இதனால் விவசாயமே செய்ய முடியாத அளவுக்கு பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும் இரவு நேரங்களில் மூச்சுத்திணறல், ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மாங்கொட்டைகள் ஒரே இடத்தில் கொட்டப்பட்டு அதிலிருந்து புழுக்கள் மற்றும் கொசுக்கள் உருவாகி சுற்றுச்சூழல் பாதிப்பதாகவும் இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் இந்த நிலை நீடித்தால் விவசாயமே முற்றிலும் அழிந்து போகும் அளவுக்கு மண்ணின் தன்மை மாறிவிடும் எனவும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

‘கழிவுநீரை சுத்திகரிப்பதில்லை’

மாங்கூழ் தொழிற்சாலைகள்
படக்குறிப்பு,சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ராமகவுண்டர், “மாங்கூழை பதப்படுத்த சிட்ரிக் அமிலம் பயன்படுத்துகின்றனர். ஆனால், அதிலிருந்து வெளியேறும் கழிவுநீரை எந்த நிறுவனமும் முழுமையாக சுத்திகரிப்பதில்லை. அந்தக் கழிவுநீரை அப்படியே விவசாய விளைநிலங்களில் திறந்துவிடுகின்றனர்.

தண்ணீரை சுத்தப்படுத்த யூரியா மற்றும் டிடிபி போட வேண்டும். இரண்டும் அதிக விலை என்பதால் நிறுவனங்களில் போடுவதில்லை. யூரியா மூலமாகவும் கழிவுநீரை சுத்திகரிப்பதற்கான ஆலை அமைத்தும் தண்ணீரை சுத்தம் செய்து வெளியேற்றினால் பாதிப்பு இருக்காது,” எனத் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், “மானியத்தில் யூரியா வாங்கினால் 300 ரூபாய். நேரடியாகச் சென்று வாங்கினால் 45 கிலோ யூரியா 1,800 ரூபாய். மானியம் விவசாயிகளுக்கு மட்டும் அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வருகிறது, நிறுவனங்களுக்கு வழங்குவதில்லை. இதனால் அவர்கள் 1,800 ரூபாய் விலை என்பதால் தண்ணீரை சுத்திகரிக்க எதையுமே பயன்படுத்துவதில்லை. அப்படியே நேரடியாக நிலத்தில் விட்டுவிடுகின்றனர்,” எனத் தெரிவித்தார்.

தருமபுரியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அருகாமையில் உள்ள விளைநிலங்கள் அனைத்தும் பொட்டல் காடாக மாறிவிட்டது எனவும் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை மறுசீராய்வுக்கு உட்படுத்தும்போது மண் அதன் பழைய தன்மைக்கு மாற 10 ஆண்டுகளாகும் என்பது தெரிய வந்துள்ளது எனவும் அவர் கூறினார்.

ரசாயன பொருட்கள் கலந்த தண்ணீரில் மண்புழுக்கள் வராது என்பதாலும் விளைநிலம் பாதிக்கப்படுவதாக ராமகவுண்டர் கூறினார்.

‘ஊரே நாசமாகிவிட்டது’

மாங்கூழ் தொழிற்சாலைகளால் ஆபத்து

திருப்பத்தூர் மாவட்டம் மாங்குப்பத்தைச் சேர்ந்த சாந்தி என்பவர் தெரிவிக்கையில், “மாங்கூழ் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் கழிவுநீர் கலந்த குடிநீரால் காய்ச்சல், அந்தக் காற்றை சுவாசிப்பதால் மூச்சுத்திணறல் உள்ளிட்டவை ஏற்படுகிறது.

மாங்கொட்டைகளில் இருந்து வரக்கூடிய பூச்சிகளால் பாம்புகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகின்றது. எங்களுடைய ஊரே நாசமாகிவிட்டது. ஒரு நிறுவனம் வாழ்வதற்காக ஒரு ஊரையே அழிப்பது எந்த வகையில் நியாயம்,” எனக் கேள்வி எழுப்பினார்.

சுகாதார சீர்கேடுகள்

இதுதொடர்பாக தன்னார்வலர் அசோகன் கூறுகையில், “மாங்கூழ் பதப்படுத்தும் மிகப்பெரிய நிறுவனம் கந்தலியில் அமைந்துள்ளது. இதையடுத்து, தருமபுரி மாவட்டத்தில் உள்ளது. மாம்பழங்களில் தோல் மற்றும் மாங்கொட்டைகளைக் காய வைத்து வெளியில் விற்று விடுகின்றனர்.

சிறுசிறு நிறுவனங்கள் அனைத்தும் தோலை மட்டும் எடுத்துக்கொண்டு மாங்கொட்டைகள் மற்றும் அதிலுள்ள பருப்புகளை சாலையோரங்களில் கொட்டிவிடுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றன.

மாங்கொட்டைகள் ஒரே இடத்தில் கொட்டப்படுவதால் அதிலிருந்து கசடுகள் உருவாகும். இதனால் உருவாகும் புழுக்கள், ஈக்கள், கொசுக்கள் மூலமாகப் பல்வேறு நோய்த்தொற்றுகள் உருவாவதுடன் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது,” எனக் கூறினார்.

‘உரிய நடவடிக்கை எடுப்போம்’

மாங்கூழ் தொழிற்சாலைகளால் ஆபத்து

இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய மாவட்ட சுற்றுச்சூழல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், “மாங்கூழ் தொழிற்சாலைகளை நேரில் சென்று பார்வையிட்டேன். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் `எக்சாட்டிக்` என்ற நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தில் இருந்து பாலு என்ற வழக்கறிஞர் மாங்கொட்டைகளை வாங்கி வந்து தன்னுடைய நிலத்தில் கொட்டிக் காய வைத்து, அவை எரியும் தன்மை கொண்டது என்பதால் டீ கடைகளுக்கு விற்று வருகிறார்.

இதிலிருந்து வரும் கழிவுநீர் நல்லதல்ல. இரண்டு ஏக்கருக்கு மேல் பாலு மாங்கொட்டைகளைக் கொட்டியுள்ளார். இதுபற்றி பாலுவிடம் விளக்கம் கேட்கப்பட்டது. தன்னுடைய நிலத்திலேயே மாங்கொட்டைகளை கொட்டுவதாக அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆய்வாளர் வெங்கடேசனிடம் பேசியுள்ளேன். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு கழிவுநீரை வெளியேற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” எனத் தெரிவித்தார்.

மாங்கூழ் தொழிற்சாலை கழிவுகள்

கந்திலியில் இயங்கி வரும் மாங்கூழ் தொழிற்சாலையான ஸ்ரீ சாமுண்டீஸ்வரி ஃபுட் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தினேஷ் தன்னுடைய நிறுவனம் குறித்த புகாருக்கு பதில் தெரிவிக்காமல் மற்ற நிறுவனங்கள்தான் கழிவுகளையும் மாங்கொட்டைகளையும் ஆங்காங்கே கொட்டுவதாக குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தார்.

“மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் இதுகுறித்து ஆலோசித்து, ஆய்வு மேற்கொண்ட பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்,” என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் அமைச்சர் என்ன சொல்கிறார்?

மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் பிபிசியிடம் கூறுகையில், “மாங்கூழ் தொழிற்சாலைகள் அனைத்தும் உரிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் இயங்க வேண்டும்.

பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நிறுவனங்களை ஒரு வார காலத்திற்குள் அனைத்து இடங்களையும் ஆய்வு செய்து பராமரிப்பற்ற முறையில் இயங்கி வரும் நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மேலும் இதற்கென மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் சிறப்பு உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன் அறிக்கைகளின் அடிப்படையில் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” எனத் தெரிவித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்இன்ஸ்டாகிராம்எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

Author


Hit Counter provided by technology news