அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்தால் பழவேற்காடு ஏரி அழிந்துவிடுமா? உண்மை என்ன? கள நிலவரம்

அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்தால் பழவேற்காடு ஏரி அழிந்துவிடுமா?

  • எழுதியவர்,க. சுபகுணம்
  • பதவி,பிபிசி தமிழ்

சென்னைக்கு அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பள்ளியில் அமைந்துள்ளது எல்&டி துறைமுகம். தற்போது 330 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இந்தத் துறைமுகத்தை 6,110 ஏக்கருக்கு விரிவாக்கம் செய்யும் திட்டத்தை அதானி நிறுவனம் முன்மொழிந்துள்ளது.

இந்தத் திட்டம், ஏற்கெனவே கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டிருக்கும் கடலோரப் பகுதிகளை பேரழிவில் தள்ளும் என்று பழவேற்காடு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அதானி குழுமத்தின் மூத்த அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “இந்தத் திட்டத்தை அப்பகுதி மக்கள் எதிர்ப்பதாகக் கூறுவது தவறான கருத்து, மாறாக இது அமல்படுத்தப்பட்டால் தங்கள் வாழ்வாதாரத்திற்குப் பெரும் பலன் கிடைக்கும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்,” என்று தெரிவித்தார்.

ஆனால், இந்தத் திட்டத்தை உயிருள்ளவரை கடுமையாக எதிர்ப்போம் என்றும் இதனால் எப்பேற்பட்ட விளைவுகளைச் சந்திக்க நேர்ந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயார் எனவும் பழவேற்காட்டைச் சேர்ந்த மீனவப் பெண்கள் தெரிவித்தனர்.

அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்தால் பழவேற்காடு ஏரி அழிந்துவிடுமா? உண்மை என்ன? கள நிலவரம்

காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டம் என்பது என்ன?

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைக்கு அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்தியாவின் இரண்டாவது பெரிய உவர்நீர் ஏரியான பழவேற்காடு.

அதற்கு அருகே ஏற்கெனவே எல்&டி துறைமுகம் இருக்கிறது. இதன் ஒரு பகுதியைப் பெற்றுள்ள அதானி குழுமம், தற்போது 330 ஏக்கரில் இருக்கும் இந்தத் துறைமுகத்தை 6,110 ஏக்கருக்கு விரிவுபடுத்தும் திட்டத்தை மத்திய அரசிடம் முன்மொழிந்துள்ளது.

இதில் 2,000 ஏக்கர் அளவுக்கு கரைக்கடல் பகுதியிலும் சுமார் 4,000 ஏக்கர் நிலப்பகுதியிலும் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படும். காட்டுப்பள்ளி குப்பம், களாஞ்சி ஆகிய பகுதிகளின் கரைக்கடல் முழுவதும் ஆழமற்ற சேற்று நிலங்களைக் கொண்டது. அங்கு நண்டு, இறால், சிறு ஆமை வகைகள் எனப் பலவும் வாழ்கின்றன.

இத்திட்டத்தின்படி, அப்பகுதி மணல் கொட்டி நிலமாக்கப்படும். மேலே காட்டப்பட்டுள்ள வரைபடத்தின்படி, அங்கு அமைந்துள்ள கருகாளி, ஆலமரம், லாக்கு, களாஞ்சி, களாஞ்சி கோடை, கோட ஆகிய கரைக்கடல் சேற்றுப் பகுதிகள் மணல் கொட்டப்பட்டு நிலமீட்பு செய்யப்படும். அங்கு துறைமுகப் பணிகளுக்கான பல்வேறு கட்டுமானங்கள் நடைபெறும்.

இவற்றுக்கு நடுவே ஒரு பகுதி கடலை ஆழப்படுத்தி அலைத்தடுப்புச் சுவர்கள் அமைத்து கப்பல்கள் வந்து செல்வதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படும். நிலப்பகுதியில் இருக்கும் களாஞ்சி கிராமம், காட்டூர் தொடங்கி தெற்கே, ஊர்ணம்பேடு, வயலூர் வரை துறைமுகத்திற்கான கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படும்.

இப்படியாக, அப்பகுதி நில அமைப்பு மாற்றியமைக்கப்பட்டு ஒரு புதிய துறைமுகத் திட்டத்திற்கு நிகரான விரிவாக்கத்தை மேற்கொள்வதால் காட்டுப்பள்ளியில் தொடங்கி பழவேற்காடு வரை நீண்டிருக்கும் கடற்கரை அபாயகரமான கடல் அரிப்பை எதிர்கொள்ளும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்தால் பழவேற்காடு ஏரி அழிந்துவிடுமா? உண்மை என்ன? கள நிலவரம்

பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN

கடல் அரிப்பால் பழவேற்காடு ஏரி பேரழிவைச் சந்திக்குமா?

நூற்றுக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள், பழவேற்காடு ஏரியிலும் அதைச் சுற்றியுள்ள கடல் பகுதியிலும் இருக்கும் மீன்வளத்தைச் சார்ந்துள்ளன. அவையனைத்துமே, கடல் அரிப்பால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகக் கூறுகிறார் அலையாத்திக் காடுகள் மீட்டுருவாக்க வல்லுநரான மீரா ஷா.

“ஏற்கெனவே, பல்வேறு கடலோர கட்டுமானங்களால் ஏற்பட்டிருக்கும் சுற்றுச்சூழல் மாசுபாடு, கடல் அரிப்பு ஆகியவற்றால் தாக்குதலுக்கு உள்ளான ஓர் இடமாகத்தான் பழவேற்காடு ஏரி இருக்கிறது.

இந்நிலையில், மேன்மேலும் கடலில் கட்டுமானங்களை மேற்கொண்டால் பழவேற்காடு ஏரி பேரழிவைச் சந்திக்கும். இதனால் ஏரியும் கடலும் ஒன்றாகக் கலந்துவிடும் அபாயமும் இருக்கிறது,” என்று தெரிவித்தார் அலையாத்திக் காடுகள் மீட்டுருவாக்க வல்லுநர் மீரா ஷா.

அதானி துறைமுக விரிவாக்கம் கடல் அரிப்பை வேகப்படுத்துமா?

இந்திய நிலப்பரப்பின் கிழக்குக் கடற்கரையில், குறிப்பாக தமிழ்நாட்டின் கடலோரத்தில் துறைமுகம் அமைப்பதற்கான நில அமைப்பே இல்லை எனக் கூறுகிறார் மெட்ராஸ் ஐஐடியின் நீர்நிலவியல் (Hydrogeology) பேராசிரியர் இளங்கோ லட்சுமணன்.

சென்னையின் கடலோரத்தில் நிகழும் கடல் அரிப்பு மெட்ராஸ் துறைமுகம் கட்டமைக்கப்பட்ட காலத்திலேயே தொடங்கிவிட்டது.

செயற்கைக்கோள் படங்களின் உதவியோடு 1985ஆம் ஆண்டில் இருந்த சென்னை நிலப்பரப்பையும் தற்போதைய நிலப்பரப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சென்னை துறைமுகத்திற்கு வடக்கே அமைந்துள்ள பெரிய குப்பம், சின்ன குப்பம் ஆகிய பகுதிகளின் கடற்கரை 180 மீட்டர் அளவுக்கு கடலுக்குள் மூழ்கியுள்ளது.

அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்தால் பழவேற்காடு ஏரி அழிந்துவிடுமா? உண்மை என்ன? கள நிலவரம்
படக்குறிப்பு,சென்னை துறைமுகத்தின் அலைத்தடுப்புச் சுவர்கள் இடையூறு செய்ததால் மணல் வடக்கே பயணிக்க முடியாமல் போனது. அதனால், வடக்கில் கடல் அரிப்பு ஏற்பட்டு 180 மீட்டர் கரை கடலுக்குள் மூழ்கிவிட்டது.

இதற்கு துறைமுக கட்டுமானம் ஒரு முக்கியக் காரணம் என்று கூறுகிறார் பேராசிரியர் இளங்கோ.

“கிழக்குக் கடற்கரையில் ஆண்டின் 75% நாட்கள் மணல் வடக்கு நோக்கியே நகர்கிறது. 25% நாட்களில் மட்டுமே தெற்கு நோக்கி நகர்கிறது. ஆகவே, அதன் பாதையில் எங்கெல்லாம் இடையூறு ஏற்படுத்துகிறோமோ அங்கெல்லாம் கடலோர நிலவியலில் மாறுபாடுகள் நிகழும்,” என்று அவர் தெரிவித்தார்.

துறைமுக கட்டுமானத்திற்காக அலைத்தடுப்புச் சுவர்கள் அமைப்பதும் ஒரு வகையான இடையூறுதான் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

உதாரணமாக காட்டுப்பள்ளி துறைமுகம் அமைந்துள்ள பகுதியை எடுத்துக்கொண்டால், அதற்கு வடக்கே அமைந்துள்ள கருங்காலி என்ற பகுதியில் 1985ஆம் ஆண்டில் இருந்த 187.29 மீட்டர் கடற்கரை 2022ஆம் ஆண்டின்போது கடலுக்குள் மூழ்கியுள்ளது.

அதேவேளையில், அந்தத் துறைமுகத்திற்குத் தெற்கே, எண்ணூர் துறைமுகத்திற்கும் காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கும் இடைப்பட்ட நிலப்பகுதியில் கடற்கரை அந்தக் காலகட்டத்தில் 160.77 மீட்டர் அளவுக்கு கடற்கரை பெரிதாகியுள்ளது.

அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்தால் பழவேற்காடு ஏரி அழிந்துவிடுமா? உண்மை என்ன? கள நிலவரம்
படக்குறிப்பு,காட்டுப்பள்ளி துறைமுகத்தின் தெற்குப் பகுதியைத் தாண்டி மணல் பயணிக்க முடியாததால், அங்கு கடற்கரை பெரிதாகியுள்ளது. துறைமுகத்தைத் தாண்டி மணல் வந்து படியாததால், வடக்குப் பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு கரையை கடல் விழுங்கியுள்ளது.

அதாவது, வடக்கு நோக்கி கடல் அலைகள் சுமந்து வந்த மணலை காட்டுப்பள்ளி எல்&டி துறைமுகத்தின் அலைத்தடுப்புச் சுவர்களைத் தாண்டிக் கொண்டு செல்ல முடியாததால், அவை அதற்குத் தெற்கிலேயே படிந்து கடற்கரை பெரிதாகிவிட்டது.

அதேவேளையில், வடக்கே மணல் ஏதுமின்றி வெறுமனே செல்லும் அலைகள் கரையில் இருக்கும் மணலை அரித்தெடுத்துக்கொண்டு செல்கின்றன.

இப்படியாக நிகழும் கடல் அரிப்பின் வேகம், எதிர்காலத்தில் அதானி குழுமம் முன்மொழிந்துள்ள திட்டம் அமல்படுத்தப்பட்டால் மேலும் விரைவடைந்து, அதன் விளைவுகளை பழவேற்காடு வரை வாழும் மக்கள் சந்திக்க நேரிடும் என்று அப்பகுதி மீனவ சமூகங்களும் வல்லுநர்களும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

அதானி நிறுவனம் கூறுவது என்ன?

அதானி குழுமத்தின் மூத்த அதிகாரியிடம் பேசியபோது, இந்தத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு உட்படப் பல்வேறு ஆய்வறிக்கைகளில் குறிப்பிட்ட பகுதி கடல் அரிப்பு அபாயமுள்ள பகுதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளனவே, இந்நிலையில் இத்திட்டம் அச்செயல்முறையை வேகப்படுத்தாதா என்ற கேள்வியை முன்வைத்தோம்.

அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்தால் பழவேற்காடு ஏரி அழிந்துவிடுமா? உண்மை என்ன? கள நிலவரம்

ஆனால் கடல் அரிப்பு ஏற்படுவதற்கு துறைமுக கட்டுமானம் ஒரு முக்கியக் காரணம் இல்லையென்று கூறிய அவர், “1990 முதல் 2016 வரை 26 ஆண்டுக்கால தரவுகள் அடிப்படையில் தேசிய கடலோர ஆய்வு மையம் வெளியிட்ட 2018ஆம் ஆண்டு ஆய்வறிக்கையின்படி, நாட்டின் சில பெரிய துறைமுகங்கள் அமைந்துள்ள குஜராத், மகராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கிழக்குடன் ஒப்பிடுகையில் அரிப்பு விகிதம் குறைவாக உள்ளது. எனவே, இந்திய கடலோரப் பகுதி முழுவதும் ஏற்பட்டுள்ள கடல் அரிப்புக்குப் வேறு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக துறைமுக நடவடிக்கை அதற்குக் காரணம் அல்ல,” என்றார்.

இருந்தாலும்கூட, துறைமுகங்களின் சுற்றுச்சூழல் ஒப்புதல் செயல்முறை, கரையோர அரிப்பைத் தணிக்க எடுக்கும் நடவடிக்கைகளின் பட்டியலையும் ஒரு முக்கிய அங்கமாக துறைமுக நிறுவனம் உள்ளடக்கியுள்ளது என்றும் அதானி குழுமத்தின் மூத்த அதிகாரி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

துறைமுக விரிவாக்கத்தை மீனவர்கள் எதிர்ப்பது ஏன்?

அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்தால் பழவேற்காடு ஏரி அழிந்துவிடுமா? உண்மை என்ன? கள நிலவரம்

பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN

இந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கும் மீனவப் பெண்களில் ஒருவரான விஜயா, இந்தத் துறைமுக விரிவாக்கம் நடைபெற்றால் தங்கள் கிராமங்கள் கடலுக்குள்தான் போக வேண்டும் என்று அச்சம் தெரிவிக்கிறார்.

தனது கணவர் அதிகாலையில் பிடித்து வந்த மீன்களை பழவேற்காடு சந்தைக்குக் கொண்டு வந்து விற்பதற்காகத் தயாராகிக் கொண்டிருந்த விஜயா, தனது வேலையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு பிபிசி தமிழிடம் இந்தத் திட்டம் குறித்துப் பேசத் தொடங்கினார்.

“இந்தத் திட்டத்தை நாங்கள் நிச்சயமாகத் தடுத்து நிறுத்துவோம். இதன்மூலம் எங்கள் வாழ்வாதாரத்தை மொத்தமாக இழக்க நேரிடும். ஆகவே, இதற்காகப் போராடுவதில் எதை வேண்டுமானாலும் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்தத் திட்டம் வரக்கூடாது, எங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்,” என்று தெரிவித்தார்.

அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்தால் பழவேற்காடு ஏரி அழிந்துவிடுமா? உண்மை என்ன? கள நிலவரம்

அதை ஆமோதித்தார் மற்றொரு மீனவப் பெண்ணான ராஜலட்சுமி.

“பழவேற்காட்டின் மீன்களும் நண்டுகளும் பெயர் பெற்றவை. ஏற்கெனவே எல்&டி துறைமுகம், எண்ணூர் அனல்மின் நிலையம் ஆகியவை வந்த பிறகு மீன் வளம் பெரிதும் குறைந்துவிட்டது. மீன், இறால், நண்டு எதையும் முன்பு போல் பார்க்க முடிவதில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட வகை மீன்கள் இருக்க வேண்டிய இடத்தில் இப்போது ஐம்பதுக்கும் குறைவான வகை மீன்களைத்தான் பார்க்க முடிகிறது,” என்று கூறினார்.

அதுமட்டுமின்றி, இதற்கு முன்பு 2010-இல் எல்&டி துறைமுகம் வந்தபோது ஊருக்கு 150 முதல் 200 பேருக்கு வேலை தருவதாகச் சொன்னதாகவும், ஆனால், ஊருக்கு 5, 10 பேருக்கு மேல் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை எனவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

“இந்த இடத்தில் ஏற்கெனவே இருக்கும் நிறுவனங்களால்தான் இவ்வளவு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. அதனால்தான் மீண்டும் இந்தத் துறைமுகத்தை விரிவாக்குவதைத் தடுக்கிறோம். இதனால் எங்கள் உயிரே போனாலும் சரி, தடுக்காமல் விடமாட்டோம்,” என்றும் கூறினார் ராஜலட்சுமி.

அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்தால் பழவேற்காடு ஏரி அழிந்துவிடுமா? உண்மை என்ன? கள நிலவரம்

‘துறைமுக விரிவாக்கத்தை மக்கள் ஆதரிக்கிறார்கள்’

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அதானி குழுமத்தின் மூத்த அதிகாரி ஒருவர், காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறுவது தவறான கருத்து என்று தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, துறைமுகப் பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள், சமூகங்கள், குக்கிராமங்கள் ஆகியோருடன் தாங்கள் தொடர்பில் இருப்பதாகவும், அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதைவிட வேலைவாய்ப்பு பெறவும் விரிவாக்கத்துடன் தொடர்புடைய தொழில்கள் மூலம் இந்தத் திட்டத்தில் தாங்களும் பங்கு பெற அதிக ஆர்வம் காட்டுவதாகவும் கூறினார்.

மேலும், “சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எனத் தங்களை அழைத்துக்கொள்ளும் விரிவாக்கத்தை எதிர்க்கும் நபர்கள், எந்த முதன்மை ஆய்வுத் தரவுகளையும் கொண்டிருக்கவில்லை. அவர்கள் விளம்பரத்திற்காகவும் உள்நோக்கத்துடனும் செயல்படும் போலி ஆர்வலர்கள்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ள சில நல்ல அரசு சாரா நிறுவனங்களுக்குச் சில உண்மையான கேள்விகள் இருக்கலாம். அவை எதிர்காலத்தில் சூழலியல் அனுமதி செயல்முறையின்போது தீர்க்கப்படும்,” என்றும் கூறினார்.

வாழ்வாதாரத்தை எண்ணி அஞ்சும் கிராம மக்கள்

அதானி குழுமத்தில் இருந்து வாரந்தோறும் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மருந்து மாத்திரைகளை வழங்க ஆட்கள் வருவதாகவும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை அவர்கள் முன்னெடுப்பதாகவும் செங்கழனீர்மேடு மக்கள் கூறுகின்றனர்.

ஆனால், தாங்கள் அவற்றை ஏற்றுக்கொள்வதாலேயே இந்தத் திட்டத்தை ஆதரிப்பதாக அர்த்தமில்லை என்றும் அவர்கள் பிபிசி தமிழிடம் பேசியபோது தெரிவித்தனர்.

காட்டுப்பள்ளி அதானி துறைமுகம்
படக்குறிப்பு,காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டத்தை ரத்து செய்வதாக திமுக அளித்த வாக்குறுதி என்ன ஆனது என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

“வாரந்தோறும் வந்து மருந்து, மாத்திரைகளைக் கொடுத்துவிட்டுப் போவதால் அதை மக்களும் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், மாத்திரை கொடுத்துவிட்டு, நிலத்தை எடுத்துக்கொள்வதாக இருந்தால் அதற்கு விடமாட்டோம். மக்கள் இப்போது மிகவும் உஷாராக இருக்கிறார்கள். அதை அதானி அவர்கள்தான் தெரிந்துகொள்ள வேண்டும்,” என்று கூறினார் இந்தத் திட்டத்தால் நேரடியாகப் பாதிக்கப்படப் போகும் செங்கழனீர்மேடு பகுதியைச் சேர்ந்த மீனவப் பெண் ரூபாவதி.

இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களில் சிலர் விவசாயத் தொழிலாளர்களாகச் செல்கின்றனர். சிலர் நண்டு, இறால் ஆகியவற்றைக் கைகளால் பிடித்து, சேகரித்து விற்பனை செய்யும் தொழிலைச் செய்து வருகின்றனர். ஆண்கள் ஏரிகளில் வலை அமைத்து மீன்பிடித் தொழிலைச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விரிவாக்கத் திட்டத்திற்காகக் கையகப்படுத்தும் நிலங்களில் இவர்களது வாழ்வாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் விவசாய நிலங்கள், ஏரி மற்றும் நீர்பிடிப்புப் பகுதிகள் வருவதாகக் கூறும் ஊர் மக்கள், அது நடந்தால் தங்கள் வாழ்வாதாரமே இல்லாமல் போய்விடும் எனவும் அஞ்சுகின்றனர்.

திமுக-வின் தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது?

“தேர்தலின்போது திமுக தரப்பில் இந்தத் திட்டத்தை முற்றிலுமாக ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்தார்கள். ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுக்காலம் ஆகிவிட்டது. ஆனால், வாக்கு கேட்டு வரும்போது இதை ரத்து செய்வதாகக் கூறியவர்கள், இன்னமும் அதுகுறித்த பேச்சையே எடுக்காமல் இருக்கிறார்கள். இப்போது நடந்துகொண்டிருப்பதைப் பார்த்தால், மாநில அரசு அதானி துறைமுகத்திற்குச் சாதகமாகச் செயல்படுவதைப் போல் எங்களுக்குத் தெரிகிறது,” என்று மாநில அரசைக் குற்றம் சாட்டுகிறார் செங்கழனீர்மேட்டைச் சேர்ந்த மீனவர் தாமோதரன்.

அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்தால் பழவேற்காடு ஏரி அழிந்துவிடுமா? உண்மை என்ன? கள நிலவரம்

பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN

இந்தத் திட்டம் குறித்த திமுக-வின் நிலைப்பாட்டைத் தெரிந்துகொள்ள தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் மெய்யநாதனை தொடர்புகொள்ள நவம்பர் 7ஆம் தேதி முதல் பல முறை முயன்றோம். ஆனால், அவர் பதிலளிக்க முன்வரவில்லை.

அதானி துறைமுகத்திற்கும் காலநிலை நெருக்கடிக்கும் என்ன தொடர்பு?

“குறிப்பாக எண்ணூர் – பழவேற்காடு தொடர்ச்சியில் இருக்கக்கூடிய சதுப்புநிலங்கள், மேய்ச்சல் மற்றும் விளை நிலங்களில் இந்தத் திட்டம் வரப்போகிறது. இவையனைத்துமே அதீத சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள்,” என்று கூறுகிறார் சுற்றுச்சூழல் பொறியாளர் எம்.துர்கா.

துறைமுக கட்டுமானம் வருவது நிச்சயமாக கடல் அரிப்புக்கு வழிவகுக்கும் எனக் கூறும் அவர், “அவர்களுடைய சூழலியல் தாக்க மதிப்பீட்டிலேயே இந்தப் பகுதியில் ஆண்டுக்கு 8 மீட்டர் என்ற அளவில் கடல் அரிப்பு இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆண்டுக்கு ஒரு மீட்டருக்கும் மேல் கடல் அரிப்பு இருந்தால் அந்தப் பகுதியை அதீத கடல் அரிப்பு நிகழும் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறியுள்ளது. அப்படிப்பட்ட பகுதியில் துறைமுகம் போன்ற கட்டுமானங்கள் வர முடியாது.

ஏற்கெனவே காலநிலை நெருக்கடி பெரியதொரு பிரச்னையாக உருவெடுத்து வரும் நிலையில், அதற்கு எதிராக எதிர்செயலாற்றும் ஓர் அற்புதமான திறனைக் கொண்டுள்ள நிலப் பகுதிகளைப் பாதுகாப்பதுதான் சரியான முடிவாக இருக்கும்,” என்று தெரிவித்தார் துர்கா.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்இன்ஸ்டாகிராம்எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

 

Author


Hit Counter provided by technology news