சென்னை மழை: சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என்ன சொல்கிறார்கள்?

மிக்ஜாம் புயல், சென்னை மழை

மிக்ஜாம் புயலால் சென்னையில் கொட்டித்தீர்த்த பெருமழை நின்றுவிட்டது.

ஆனால், மாநகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.

தி நகர், அண்ணா சாலை போன்ற நகரின் பிரதான பகுதிகளில் நீர் வடிந்து தற்போது நிலைமை சற்று சரியாகி விட்டிருந்தாலும், மற்ற குடியிருப்புப் பகுதிகளில் பெரும்பாலும் நீர் தேங்கியிருக்கிறது.

இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறியிருக்கின்றனர். பால், உணவு போன்ற அடிப்படை தேவைகள் இன்னும் கிடைக்கவில்லை என்கின்றனர் சிலர்.

களத்திலிருந்து பிபிசி செய்தியாளர்கள் சேகரித்து வழங்கிய மக்களின் குரல்கள் இங்கு தொகுத்து வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் 4,000 கோடி ரூபாய் செலவில் திட்டப்பணிகள் செய்தும் சென்னையில் இந்த அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதை எதிர்க்கட்சிகள் விமர்சித்துவரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதற்கு எதிர்வினையாற்றியுள்ளார்.

மிக்ஜாம் புயல், சென்னை மழை
படக்குறிப்பு,சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலம் அருகிலுள்ள பகுதி

‘மிண்டும் 2015 நிலையா?’

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டு நீர் வரவிருக்கிறது என்ற தகவல் அவர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள் சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலம் அருகிலுள்ள மக்கள்.

அந்தப் பகுதியில் உள்ள பல குடிசைகள் மூழ்கியுள்ளன. குடியிருப்பு கட்டிடத்தில் முதல்மாடி வரை தண்ணீர் வந்ததாகக் கூறுகிறார்கள்

இதனால் அவர்களது வீடுகளில் நீர் புகுந்து இப்பொது அவர்கள் தெருக்களிலும் பேருந்து நிறுத்தங்களிலும் நிற்பதாகக் கூறுகிறார்கள்.

மிக்ஜாம் புயல், சென்னை மழை
படக்குறிப்பு,தாட்சாயணி

சைதாப்பேட்டை குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் வசிக்கும் தாட்சாயணி, 2015-ஆம் ஆண்டின் சென்னை பெருவெள்ளத்தின் போது சந்தித்த அதே சூழ்நிலையை மீண்டும் எதிர்நோக்க வேண்டுமோ என்ற அச்சத்தில் உள்ளதாகச் சொல்கிறார்.

”எங்கள் வீட்டில் நீர் ஏறியிருக்கிறது. கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் சிரமப்படுகிறோம். பால், உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இல்லை,” என்றார்.

மிக்ஜாம் புயல், சென்னை மழை
படக்குறிப்பு,விஜயலக்ஷ்மி

‘இடமும் இல்லை, உணவும் இல்லை’

அதே பகுதியைச் சேர்ந்த விஜயலக்ஷ்மி, தனது வீடு முழுவதும் மூழ்கியிருக்கிறது என்றும், விட்டில் கல்விச் சான்றிதழ்கள் முதல் சமையல் பொருட்கள் வரை அனைத்தையும் விட்டுவிட்டு வெளியே வந்ததாகவும் தெரிவித்தார்.

“மக்களுக்கு இருக்க இடமில்லை. சாலை, பேருந்து நிறுத்தம் போன்ற பொது இடங்களில் தங்கியிருக்கிறோம். உணவு, நீர், கழிவறை, போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதுவரை உதவிக்கு யாரும் வந்ததை தான் பார்க்கவில்லை. உணவு தான் இப்போதைக்கு முக்கியத் தேவை,” என்கிறார் அவர்.

மிக்ஜாம் புயல், சென்னை மழை
படக்குறிப்பு,திலீப்

‘சென்ற முறையை விட பாதிப்பு அதிகம்’

பிபிசி தமிழிடம் பேசிய நந்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த திலீப், ஞாயிறு நள்ளிரவு தங்கள் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்றார்.

மிக்ஜாம் புயல், சென்னை வெள்ளம்
படக்குறிப்பு,நந்தம்பாக்கம்

“இப்போது வரை 2 நாட்களாக அதே நிலை தான். இன்று மாலைக்குள் (செவ்வாய்க்கிழமை) மின் பிரச்சனை சரி செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். தெருக்களில் தண்ணீர் ஓரளவு வடிந்துவிட்டது, வெளியே சென்று வர முடிகிறது. ஆனால் நந்தம்பாக்கம் ஏரி அருகே இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது, இன்னும் மழை நீர் வடியவில்லை, மக்கள் வீட்டிலிருந்து வெளியே வர முடியாத நிலையும் உள்ளது. இந்த்ப் பகுதி மக்களுக்கு 2015-ஆம் ஆண்டை விட பாதிப்புகள் மிகவும் அதிகம்,” என்றார்.

மிக்ஜாம் புயல், சென்னை மழை

பட மூலாதாரம்,X/VISHNU VISHAL – VV

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூறியது என்ன?

சென்னை வெள்ளம் குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், ”தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வோர் ஆண்டும் ஒரு வாரத்திற்கு முழங்கால் அளவு நீர் தேங்குவதும், குறைந்தது 100 மணி நேர மின்வெட்டும் எங்கள் பகுதியில் வாடிக்கையாக உள்ளது. இந்த ஆண்டு புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. இது வரலாற்று ரீதியாக ஏரியோ தாழ்வான பகுதியோ கிடையாது. எங்கள் கொளப்பாக்கம் பகுதிதான் நிறைய திறந்த நிலமும், குளங்களும் உள்ள பகுதி. ஆனால், வெறும் அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசை மழை நீர் மற்றும் கழிவுநீரை ஒரே கால்வாயில் கொட்ட வழிவகுக்கிறது. இதனால் ஒவ்வொரு முறையும் கால்வாய் ஆறு போல் பெருக்கெடுத்து குடியிருப்பாளர்களை பாதிக்கிறது. இந்த நேரத்தில் ஏதேனும் நோய் அல்லது மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால் மரணம் நிச்சயம். எங்கள் பகுதி மக்களுக்கு உதவ என்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறேன். சென்னைவாசிகளின் மன உறுதிக்கு பாராட்டுகள். எங்கு சென்றாலும் நெகிழ்ச்சியும் நேர்மறையான எண்ணமும் இருக்கிறது. தீர்வுக்கான முயற்சி இருக்கும் என நம்புகிறேன். எனக்கு நியாயமற்ற எதிர்பார்ப்பெல்லாம் இல்லை, ஆனால் நிலைமை தற்போது இருப்பதை விட சிறப்பாக இருக்க முடியும். பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்புவீர்கள் என்று நான் நம்புகிறேன்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

சந்தோஷ் நாராயணன்

பட மூலாதாரம்,FACEBOOK/SANTHOSH NARAYANAN

படக்குறிப்பு,சந்தோஷ் நாராயணன், இசையமைப்பாளர்

அரசு மீது சீமான் குற்றச்சாட்டு

திமுக அரசின் நிர்வாகத் தோல்வியே சென்னை வெள்ளப் பெருக்குக்குக் காரணம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

“அதிகப்படியான மழைப்பொழிவு மற்றும் முறையான வடிகால் கட்டமைப்புகள் இல்லாமை ஆகியவற்றின் காரணமாக சென்னை மாநகரத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கும், மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கமும் பெரும் வேதனையளிக்கிறது. தமிழகத்தின் தலைநகரமாகவும், மக்கள் அடர்த்தி மிகுந்த தொழில் நகரமாகவும் விளங்கும் சென்னையில் அடிப்படைக்கட்டுமானம் இல்லாததன் விளைவை ஒவ்வொரு ஆண்டும் மக்கள் அனுபவித்து வருவது கொடுந்துயரமாகும்.” என்று அவர் புதன்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“அரை நூற்றாண்டு காலமாக தமிழகத்தை ஆண்டு வரும் இருபெரும் திராவிடக்கட்சிகளும் அதனை செய்யத் தவறி, மாநகரத்தையே வாழத் தகுதியற்ற நிலம் போல மாற்றியிருப்பது வெட்கக்கேடானது. ஒவ்வொரு ஆண்டும் வடிகால் அமைப்பதற்கென சில பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கீடு செய்துவிட்டு, வெள்ளத்தில் மக்களைத் தத்தளிக்க விடுவது அப்பட்டமான முறைகேடாகும். 2015ஆம் ஆண்டு அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மதிப்பிட முடியாத அளவுக்குப் பேரிழிவை எதிர்கொண்டும், இன்றுவரை அதிலிருந்து பாடம் கற்காதுவிட்டு மக்களை வெள்ளப் பாதிப்பிற்குள்ளாக்கியது திமுக அரசின் நிர்வாகத் தோல்வியாகும்.”

ஒவ்வொரு முறையும் மக்கள் பாதிக்கப்பட்டப் பிறகுதான், அரசு விழித்துக் கொண்டு செயலாற்றுமென்றால், அது அரசின் நிர்வாகத் திறமையின்மையும், அலட்சியமும்தான் என்பதை எவராலும் மறுக்க முடியாது. இருந்தபோதிலும், தற்சமயத்தில் எல்லோரும் இணைந்து செயலாற்றினால்தான், இப்பேரிடலிருந்து முழுமையாக மீண்டு வர முடியும் என்பதால், அரசுக்கும், அதிகாரிகளுக்கும், தன்னார்வத் தொண்டர்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும், மின்வாரியப் பணியாளர்களுக்குமென எல்லோருக்கும் மக்கள் முழு ஒத்துழைப்பை நல்கக் கோருகிறேன். நாம் தமிழர் உறவுகளுக்கு மீட்புப்பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருக்கிறேன். அவர்களும் களத்தில் செயலாற்றி, உதவிக் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும், அரசு முழு வீச்சில் செயல்பட்டால் மட்டும்தான் மாநகரத்தை மீட்டுக் கொண்டு வர முடியுமென்பதை உணர்ந்து, கூடுதல் கவனத்துடன் பணியாற்ற முன்வர வேண்டும் என ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்துகிறேன்.

“வடிகால் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ஏறக்குறைய 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாவண்ணம் தடுக்க முன்னெச்சரிக்கை சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.” என்று சீமான தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சீமான்

பட மூலாதாரம்,SEEMAN FACEBOOK

நடிகர்கள் விஷ்ணு விஷால், ஆமீர் கான் மீட்பு

நடிகர் விஷ்ணு விஷால், காரப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டினுள் வெள்ளம் புகுந்து அதன் அளவு விரைவாக அதிகரித்து வருவதாகத் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

தனது வீட்டில் மின்சாரம், வைஃபை, தொலைபேசி சிக்னல் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.

மொட்டைமாடியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே சிக்னல் கிடைப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

விரைவில் உதவி கிடைக்குமெனெ நம்புவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

“சென்னையிலிருக்கும் அத்தனை மக்களோடும் எனது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறேன்,” என்று பதிவிட்டிருக்கிறார்.

மிக்ஜாம் புயல், சென்னை மழை
படக்குறிப்பு,விஷ்ணு விஷால், ஆமீர் கான் ஆகியோர் மீட்கப்பட்ட காட்சி

விஷ்ணு விஷால் இதை பதிவிட்டதைத் தொடர்ந்து, தற்போது அவரை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் மீட்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை விஷ்ணு விஷால் சமூக ஊடகப்பக்கத்தில் பதிவிட்டிருக்கும் நிலையில், அந்தப் புகைப்படத்தில் பாலிவுட் நடிகர் ஆமிர் கான் இருப்பதையும் காண முடிகிறது.

தங்களை மீட்ட பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் விஷ்ணு விஷால்.

ஆமிர் கான், தனது தாயாரின் சிகிச்சைக்காக சில காலம் முன்பு சென்னைக்குச் சென்று தங்கியதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அஜித் குமார்

பட மூலாதாரம்,VISHNU VISHAL

பின்னர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட விஷ்ணுவிஷால், “எங்களது நிலையைப் பற்றி ஒரு பொது நண்பர் மூலம் கேள்விப்பட்ட அஜித் சார், எங்களைப் பார்க்க வந்ததுடன் எங்கள் குடியிருப்பில் உள்ள மற்றவர்கள் பயணம் செய்வதற்கும் ஏற்பாடு செய்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அஸ்வின் கூறியது என்ன?

அஸ்வின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சென்னை வெள்ளத்தால் தானும் பாதிக்கப்பட்டிருப்பதாக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

“30 மணி நேரமாக எனது பகுதியில் மின்சாரம் இல்லை. பல இடங்களில் இதுதான் நிலைமை என்று நினைக்கிறேன். வேறு வழி என்னவென்று தெரியவில்லை” என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

வைரமுத்துவின் கவிதை

சென்னை வெள்ளம் பற்றி தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள கவிஞர் வைரமுத்து, ” முதலமைச்சர் தூங்கமாட்டார், நீரோடும் சாலைகளில் காரோடும் வரைக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு அவர் துடிப்பையும் துயரத்தையும் புரிந்து கொண்ட அமைச்சர்களும் அதிகாரிகளும் களப் ணியாளர்களும் படையாக இணைந்தார்கள்; குடையாக நனைந்தார்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் என்ன சொன்னார்?

மிக்ஜாம் புயல், சென்னை வெள்ளம்

பட மூலாதாரம்,X/MKSTALIN

படக்குறிப்பு,4,000 கோடி ரூபாய் செலவில் செய்யப்பட்ட திட்டப்பணிகளின் காரணமாக சென்னையில் பெரும் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன என்றார் ஸ்டாலின்

இந்நிலையில், சென்னையில் பத்திரிகையாளார்களைச் சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை, 2015-ஆம் ஆண்டின் மழையைக் காட்டிலும் மிக அதிகமாக இருந்ததாகக் கூறினார். ஆனாலும் வெள்ள பாதிப்புகள் 2015-ஆம் ஆண்டைக் காட்டிலும் மிகக்குறைவு என்றார்.

“2015-ஆம் ஆண்டின் வெள்ளம் செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டதால் ஏற்பட்ட செயற்கையான வெள்ளம், ஆனால் இப்போது ஏற்பட்டது இயற்கையான வெள்ளம்,” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், 4,000 கோடி ரூபாய் செலவில் செய்யப்பட்ட திட்டப்பணிகளின் காரணமாக சென்னையில் பெரும் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன என்றார் அவர். 2015-ஆம் அண்டு 199 இறப்புகள் பதிவானதாகவும், தற்பொது 8 இறப்புகள் மட்டுமே பதிவாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்இன்ஸ்டாகிராம்எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

 

சிறப்புச் செய்திகள்

 

அதிகம் படிக்கப்பட்டது

Author


Hit Counter provided by technology news