இனி எல்லாம் AI – புதிய பகுதி – 1

இனி எல்லாம் AI
பிரீமியம் ஸ்டோரி

News

இனி எல்லாம் AI

ஓவியம்: AI

“அள்ள அள்ளக் கிடைக்கிறதாம் தங்கம்…’’ – காட்டுத்தீயாகப் பரவ ஆரம்பித்தது இந்த ஒரு வரிச் செய்தி. நடந்தது 19-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி. இடம், அமெரிக்காவின் வட கலிபோர்னியா. தொலைபேசித் தொழில்நுட்பம் கண்டறியப்படாத காலம். செய்தித்தாள்களில் வெளியானதைப் படித்து அமெரிக்காவின் பிற பகுதிகளில் இருந்தும், அண்மை நாடுகளான மெக்சிகோ, வெனிசுலா மற்றும் சீனா, ஆஸ்திரேலியா போன்ற தொலைதூர நாடுகளில் இருந்தும் தங்க வேட்டைக்காகப் படையெடுத்து வர ஆரம்பித்தனர் மக்கள். ஏரிகள், மலைகள், ஆறுகள் என எதையும் விடாமல் நடத்தப்பட்ட இந்தத் தங்க வேட்டை ஏழு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. மொத்த கலெக்‌ஷன் – மூன்றரை லட்சம் கிலோ.

தங்கத்தை வேட்டையாட வந்தவர்களைவிட அவர்களுக்குத் தேவையான கருவிகளை விற்றவர்கள் பெரும் செல்வந்தர்கள் ஆனார்கள். பெருந்திரளாக வந்தவர்கள் தங்குவதற்கான கூடாரத்தைத் தயாரிக்கும் துணியில் உடைகளையே தைத்துவிட்டால் என்ன என்ற எண்ணத்தில் உருவானது ஜீன்ஸ் என்ற புது உடை. அந்த எண்ணத்தைப் பெரு வணிகமாக மாற்றிய Levi Strauss ஜெர்மனியிலிருந்து புலம் பெயர்ந்தவர். தனது படைப்பு நூறாண்டுகளைக் கடந்தும், உலகெங்கும் அறியப்படும் அழுத்தமான brand ஆக இருக்கும் என்பதை அப்போது கற்பனைகூடச் செய்திருக்கமாட்டார்.

தங்க வேட்டையின் எதிர்பாராத இன்னொரு விளைவு, சான் பிரான்சிஸ்கோ நகரம்.

இனி எல்லாம் AI

இனி எல்லாம் AI

1847 வரை பசிபிக் கடலோரத்தில், ஆயிரம் பேருக்கும் குறைவான மக்கள்தொகையுடன் தூங்கி வழிந்துகொண்டிருந்த சிறிய நகரம் சான் பிரான்சிஸ்கோ. தங்கம் கிடைக்கும் இடத்திற்கு அருகில் உள்ள துறைமுகம் என்பதால் தங்க வேட்டை ஆர்வலர்கள் ஆயிரக்கணக்கில் வந்திறங்க, பரபரவென சுறுசுறுப்பாகி, இரண்டு வருடங்களுக்குள் பெருநகராகிவிட்டது. ஒரு சிறு பொறி, சிறிய காலகட்டத்திற்குள் பெரும் மாற்றங்களை உண்டாக்கும் என்பது டெக் உலகில் இருப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதற்கு இந்த நகரின் பிறப்பே அத்தாட்சி.

தங்க வேட்டை சில ஆண்டுகளே நீடித்தாலும், சான் பிரான்சிஸ்கோ சுணங்கிப்போகவில்லை. உலக நாடுகளுடன் சரக்குப் போக்குவரத்து செய்ய வசதியாக பல துறைமுகங்கள், பல தேசத்தினரும் வாழத்தகுந்த வருடம் முழுதும் நீடிக்கும் சீரான தட்பவெப்பம், 19-ம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கப்பட்ட ஸ்டான்போர்டு பல்கலைக் கழகம், அதில் படித்தவர்கள் அருகிலேயே புதிய நிறுவனங்களைத் தொடங்க எடுத்த முடிவு, நிறுவனங்கள் வெற்றி பெற்றதும் புதிய ஸ்டார்ட்அப் முயற்சிகளில் செய்யும் முதலீடு – தங்க வேட்டைக் காலம் கடந்து நூறு ஆண்டு களைத் தாண்டியும் டெக் உலகின் முடிசூடா மன்னனாக சான் பிரான்சிஸ்கோ வளைகுடா இருந்து வருவதற்கான காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

நிற்க!

விகடனில் நான் எழுதும் நான்காம் தொடர் இது. 15 ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான ‘வருங்காலத் தொழில்நுட்பம்’ தொடரில் நான் அறிமுகப்படுத்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் கிட்டத்தட்ட அனைத்துமே சான் பிரான்சிஸ்கோ வளைகுடாவில் உதயமானவை. (‘ட்விட்டர் என்ற புதிய சேவை பிரமாதமாக இருக்கிறது’ என்று எழுதிய நினைவு). அவற்றில் சில மகத்தான வெற்றி பெற, பல படுதோல்விகளை சந்தித்திருப்பதை இப்போது பார்க்க முடிகிறது. தொழில்நுட்ப உலகில் இது சாதாரண நிகழ்வு என்பதை அதன் வரலாற்றைப் புரட்டிப் பார்ப்பவர்களுக்குப் புரியவரும். ஆப்பிள், கூகுள், பேஸ்புக், ட்விட்டர், நெட்ப்ளிக்ஸ் போன்ற நிறுவனங்களின் வெற்றி முரசுகளுக்குப் பின்னால், மளிகைப் பொருள்களை வீட்டிற்கு டெலிவரி செய்ய முயன்ற முதல் நிறுவனமான Webvan, வீட்டில் இருக்கும் கணினி போல ரத்தப் பரிசோதனை செய்துகொள்ளும் கருவியைத் தயாரிக்க முற்பட்ட Theranos போன்ற நிறுவனங்கள் முதலீட்டாளர்களின் பணத்தை முழுங்கிய கையோடு முழுகிப்போய்விட்ட சோகக் கதைகளே அதிகம்.

சென்ற சில மாதங்களாக சான் பிரான்சிஸ்கோ நகரத்திற்குச் செல்லும்போதெல்லாம் பார்க்க நேரும் விநோதம் – நாம் ஓட்டிக்கொண்டுவரும் வாகனத்திற்கு அடுத்து இருக்கும் லேனில் வரும் காரில் யாரும் இருப்பதில்லை. தானியங்கி வாகனத் தொழில்நுட்பம் கிடுகிடுவென வளர்ந்து வருகிறது. டெஸ்லாவின் கார்களில் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு தானியங்கும் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது என்றாலும், முழுக்க எவருமே இல்லாமல் சாலையில் ஓடும் வாகனத்தைப் பார்க்கையில் பிரமிப்பு நேரிடுவதை மறைக்க முடிவதில்லை.

இனி எல்லாம் AI

இனி எல்லாம் AI

பெரிய சைஸ் கேமராக்கள், ரேடார்கள் உள்ளிட பல்வேறு சென்சார்களை உடலெங்கும் பொருத்தியபடி ஓடும் தானியங்கி வாகனங்களை இயக்க அனுமதி பெற்றிருக்கும் நிறுவனங்களான Waymo மற்றும் Cruise இரண்டையும் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் எனச் சொல்வதைவிட செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence, சுருக்கமாக, AI) ஆராய்ச்சி நிறுவனங்கள் என்று சொல்வதே பொருத்தம்.

கணினித் தொழில்நுட்பம் அறிமுகமான காலத்திலிருந்தே செயற்கை நுண்ணறிவு பற்றிய ஆர்வம் தொடங்கி விட்டது. இயற்கை நுண்ணறிவைப் புரிந்துகொண்டால், அதையொட்டி AI தொழில்நுட்பத்தை வடிவமைக்கலாம் என்ற ஆர்வத்தில் கணினியியல் ஆராய்ச்சியாளர்கள் நரம்பியலைக் கற்றுக்கொள்ள விழைந்தனர். கணக்கீட்டு நரம்பியல் (Computational Neuroscience) என்ற புதியதொரு துறையே உதயமானது.

கணினிப் பொறியாளர்களும், கணித மேதைகளும் அறைக்குள் அமர்ந்து செய்த ஆராய்ச்சி முயற்சிகள் வெகுஜனங்களிடையே பேசுபொருளாக சில நாள்கள் இருந்துவிட்டு அடங்கிவிடும் என்பதுதான் இதுவரை இருந்த நியதி. உதாரணத்திற்கு, அமேசானின் ஜெஃப் பெசோஸ், ரோபாட் நாய் சகிதம் நடந்து செல்லும் புகைப்படம் வெளிவந்ததும், அதுபற்றிய விவாதங்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பாகி, அதே வேகத்தில் ஓய்ந்தும்போயின.

இனி எல்லாம் AI

ChatGPT 3.5 தொழில்நுட்பம் வெளிவந்த சில மாதங்களிலேயே ஜெட் வேகத்தில் பறக்க ஆரம்பித்திருக்கிறது. அதென்ன GPT? எதற்காக 3.5? என்றெல்லாம் எழும் கேள்விகளுக்கு மட்டுமல்லாமல், செயற்கை நுண்ணறிவுத் தளம் நடந்து வந்த பாதை, சமகால வெளியீடுகள் மற்றும் தாக்கங்கள், நடந்துவரும் ஆராய்ச்சிகள், அவற்றை உலகின் அரசுகள் பார்க்கும் விதம், இதற்குள் சென்று கொண்டிருக்கும் தொழில் முதலீடுகள், இதன் ஆபத்துகள் என்ன, எப்படிப்பட்ட புதிய தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் வரலாம் என்பவற்றையெல்லாம் ஆழமாக அலசுவதுதான் இந்தத் தொடரின் நோக்கம். முதலில் சில அடிப்படை களை இந்த வாரத்தில் பார்த்து விடுவோம்.

செயற்கை நுண்ணறிவுத் தளம் மூன்று வடிவங்களில் இயங்குகிறது.

கட்டளை சார்ந்த தர்க்கம் (Rule-based):

அடிப்படை விதிகளைத் தொகுத்துக்கொண்டு, அவற்றை தர்க்கத்தைக் கொண்டு மேற்பார்வை செய்யும் செயற்கை நுண்ணறிவு. தானியங்கி வாகனங்கள் இதற்கு நல்ல உதாரணம். தனக்கு முன்னிருக்கும் வாகனம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது, எவ்வளவு வேகத்தில் செல்கிறது, போகும் வழியில் விபத்துகள் ஏதாவது நடந்திருக்கிறதா என தொடர்ந்து சேகரிக்கும் தகவல் துளிகளை அடிப்படையாக வைத்து வேகத்தைக் கூட்ட வேண்டுமா, குறைக்க வேண்டுமா, எந்தப் பக்கம் திரும்ப வேண்டும் என்றெல்லாம் முடிவுகளை எடுத்தபடி இருக்கத் தேவையான நுண்ணறிவு இது. இன்றைக்கு இயக்கத்தில் இருக்கும் பெரும்பாலான ரோபாட்டுகள் இந்த வகையறாவில் வரும்.

இயந்திரக் கற்றல் (Machine Learning):

கட்டளை சார்ந்த தர்க்க முடிவுகளுக்கு ஒரு படி மேலானது இயந்திரக் கற்றல் சார்ந்த செயற்கை நுண்ணறிவு. மலையாகக் குவித்து வைக்கப்பட்டிருக்கும் தகவல் துளிகளைப் பல கோணங்களில் பகுத்து வைத்துக்கொண்டு, அதிலிருந்து என்ன சாத்தியக் கூறுகளை எடுக்கலாம் என்பதை அலசி எடுத்துத் தீர்வாகக் கொடுப்பது இந்த நுண்ணறிவின் ஸ்பெஷாலிட்டி. உதாரணத்திற்கு, புகைப்படம் ஒன்றில் இருக்கும் நபர் மகிழ்ச்சியாக இருக்கிறாரா, கோபமாக இருக்கிறாரா அல்லது சோகமாக இருக்கிறாரா என்பதைக் கண்டறிய வேண்டும். இயந்திரக்கற்றல் இதை இப்படி சாத்தியமாக்குகிறது – லட்சக்கணக்கான மனித முகங்களின் படங்களைப் பதிவேற்றம் செய்து, அவை ஒவ்வொன்றும் என்னவித உணர்வுகளைக் காட்டுகிறது என்பதையும் பதிவேற்றம் செய்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு படத்திலும் இருக்கும் முகபாவனைகளைத் தகவல் புள்ளிகளாக மாற்றிக் கற்றுக் கொடுத்தபடி வர, அது போதுமான அளவு கற்றுக்கொள்ளும். அந்த இயந்திரத்திடம், புதிய படத்தைக் கொடுத்தால், அதில் இருக்கும் மனித முகத்தின் உணர்வு என்ன என்பதைச் சொல்லிவிடுகிறது.

படைக்கும் திறன் (Generative):

செயற்கை நுண்ணறிவுத் தளத்தின் பரிணாம வளர்ச்சியின் உச்சியில் இப்போது இருப்பது, படைக்கும் திறனைத் தொடர்ந்து வளர்த்துக்கொண்டே போகும் செயற்கை நுண்ணறிவு. கேட்பதற்கு பிரமிப்பும், திகைப்பும் ஒரு சேர வரவழைக்கும் தொழில்நுட்பம் இது. GPT இந்த வகையைச் சார்ந்ததே. Generative Pre-trained Transformer என்பதன் சுருக்கமே GPT. ‘மாற்றத்தில் முன்பயிற்சி பெற்ற படைப்பாளி’ என இதை மொழிபெயர்க்கலாம். இயற்கை நுண்ணறிவு தனது ஆற்றலை எழுத்துகள், எண்கள் மற்றும் உணர்வுகள் என்பவற்றைத் தொகுப்பது மற்றும் பகுப்பது மூலமாக வளர்த்துக்கொண்டே போகிறது. இந்த அறிவின் உதவியின் மிகப்பெரிய பலன் – நம்மால் புதிய படைப்புகளை உருவாக்க முடிகிறது. உதாரணத்திற்கு, இந்த வரியை நான் எழுதுவதற்கு நான் வாசித்த வாக்கியங்களும், இதுவரை பெற்றிருக்கும் எழுத்துப் பயிற்சியும் காரணம். இந்தக் கட்டுரையை அச்சிலும், வலைப்பக்கத்திலும் லே-அவுட் செய்யும் விற்பன்னருக்குப் பல வலை தளங்களைப் பார்த்து ஏற்பட்ட புரிதல்கள் மற்றும் வண்ணம், வடிவம் போன்றவற்றில் பெற்றிருக்கும் பயிற்சி காரணம். GPT வகையில் இப்போது பிரபலமாகியிருக்கும் ChatGPT எழுத்து வடிவங்களில் இருக்கும் தகவல்களைக் கொண்டு தன்னைப் பயிற்சி செய்தபடி இருக்கிறது. பெரு மொழி வடிவம் (Large Language Model) எனப்படும் வடிவமைப்பின்படி, உலக இலக்கியங் களிலிருந்து உஷா ஃபேன் இயக்கத் தேவையான நான்கு பக்கக் கையேடு வரை என்னவெல்லாம் கிடைக்கிறதோ, அதையெல்லாம் உள்வாங்கிக் கொண்டிருக்கிறது ChatGPT. இந்த தகவல்களை அடிப் படையாகக் கொண்டு, நீங்கள் என்ன கேட்கி றீர்களோ, அதற்குத் தகுந்த விதத்தில் வார்த்தைகளைப் போட்டு உங்களிடம் திருப்பிக் கொடுத்து உங்களை அசர வைக்கிறது. பை தி வே, OpenAI என்ற நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது ChatGPT. கூகுள், அமேசான் போன்ற நிறுவனங்கள் தங்களுக்கான பெரு மொழி வடிவத் தொழில்நுட்பங்களைத் தயாரித்தபடி இருக்கிறார்கள். OpenAI நிறுவனமும் சான் பிரான்சிஸ் கோவில்தான் இருக்கிறது என்பது கொசுறுத்தகவல்.

விகடன் வாசகர்களைப் பற்றிச் சுருக்கமாக ஒரு கவிதை எழுதிக் கொடேன் என ChatGPT-யிடம் கேட்டேன்.

Vikatan readers, curious souls,

Expand their minds, explore the world,

From politics to art and sound,

Their hunger for knowledge knows no bounds.

இதை இப்படி மொழிபெயர்க்கலாமா?

ஆர்வமிக்க விகடன் வாசகர் வட்டம்

விசால மனதுடன் உலகைச் சுற்றும்

அரசியல், கலை மற்றும் இசையென

அவர்தம் அறிவுதாகத்திற்கு எல்லையே இல்லை.

‘‘நீ ஏன் மொழிபெயர்க்க வேண்டும் அண்டன்? ChatGPT-யிடமே கேட்டிருக்கலாமே?” என உங்கள் மனதில் வரும் கேள்விக்கும் பதில் கேட்டேன். ஆங்கிலத்தில் மட்டுமே தீவிர பயிற்சி எடுத்துக்கொண்டிருப்பதால், தமிழில் எழுது என்று கேட்டதும் இப்படி உளறிக் கொட்டிவிட்டது.

Can you give that in Tamil?

விகடன் படிக்கும் படித்தவருக்கு,

குறிப்பிட்ட வழிகளில் தேவை அளிக்கின்றனர்,

செய்திகள் மற்றும் கலைகளில் ஆர்வம் கொள்ளும்,

அறிவு தங்களை பெருக்கும் விதமாக வாழும்.

– Chat will continue…

******

அண்டன் பிரகாஷ்

அண்டன் பிரகாஷ்

தமிழக தெற்குக் கடலோரத்தின் அழகிய மணப்பாடு நான் பிறந்த ஊர். 90களில் மாணவப் பத்திரிகையாளனாக விகடனுடனான தொடர்பு தொடங்கியது. அமெரிக்கா வந்தபோது அதிபராக பில் கிளிண்டன். அவரது அரசியல், தனிவாழ்வு சிக்கல்கள், அக்டோபரில் வரும் ஹாலோவீன் என கதம்பமாகக் கட்டுரைகளைக் கையால் எழுதி, ஃபேக்ஸில் அனுப்பி, கட்டுரை பிரசுரமானதும் அவர்கள் அதை ஃபேக்ஸிலேயே கறுப்பு/வெள்ளையாக அனுப்பிவைத்தது எல்லாம் இன்றைய டெக் உலகிற்கு காமெடி. தொழில்முறையில் நிதிமேலாண்மையும் தொழில்நுட்பமும் இணைந்து Fintech என அழைக்கப்படும் துறையில் செயல்படும் EphronTech நிறுவனத்தை நடத்திவருகிறேன்.

2009 வாக்கில் ஆனந்த விகடனில் எழுதிய ‘வருங்காலத் தொழில்நுட்பம்’ என்ற தொடர் 140 வாரங்கள் சென்றது. சிறிய இடைவேளைக்குப் பின்னர் ‘அறிவிழி’ என்ற தொடர். அடுத்து அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி நிகழ்வுகளை அலசும் ‘அன்லாக் அறிவியல் 2.0′. தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) ஆழிப்புயலாக நம்மை அறியாமலேயே கடந்துகொண்டிருக்கிறது என்ற நிலவரம் அறிந்து ‘இனி எல்லாம் AI’ எனத் தலைப்பிட்ட தொழில்நுட்பப் பயணத்தில் மீண்டும் உங்களுடன் இணைகிறேன்.

இந்த வார கட்டுரை பற்றிய பின்னூட்டங்களை எழுத்தாகவோ, ஆடியோவாகவோ +1 628 240 4194 என்ற எண்ணுக்கு வாட்ஸப் மூலம் அனுப்புங்கள்.

Author


Hit Counter provided by technology news