Breaking

இனி எல்லாம் AI – 2

இனி எல்லாம் AI
பிரீமியம் ஸ்டோரி

News

இனி எல்லாம் AI

ஓவியம்: AI

‘தகவல் நெடுஞ்சாலை’ (Information Superhighway) என்ற பதத்தைக் கண்டுபிடித்தது யார்? இணையம் (web) என்ற சொல் பிரபலமாவதற்கு முன்பு அதன் வலிமையை அழுத்திச் சொல்ல வேண்டும் என்பதற்கான இந்தப் பதத்தை பில் கேட்ஸ் ‘The road ahead’ என்ற தனது முதல் நூலில் பயன்படுத்தியதைப் படித்த நினைவிருக்கிறது.

இது AI தொடர் என்பதால் ChatGPT-யிடமே கேட்க முடிவு செய்தேன். “யார் சொன்னார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், அமெரிக்கத் துணை அதிபராக இருந்த அல் கோர் இதைப் பிரபலப்படுத்தினார்” என்று கைகழுவி நழுவிக்கொண்டது. (ChatGPT-க்குப் போட்டியாக கூகுள் வெளியிட்டிருக்கும் bard சேவையிடம் இதே கேள்வியைக் கேட்க, அது சொன்னது சற்றே வித்தியாசமானது. அது என்ன என்பது கட்டுரையின் பிற்பகுதியில்.)

90களில் கேட்ஸின் அந்த நூல் வெளிவந்தபோது, நெடுஞ்சாலை என்பது இணையத்திற்கு மிகச்சரியான உருவகமே. சிறிதும் பெரிதுமான ஊர்களை ஒரு நெடுஞ்சாலை இணைப்பது போல, சில பக்கங்கள் கொண்ட குட்டியூண்டு வலைதளங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடும் பிரமாண்ட வலைதளங்கள் வரை அனைத்தையும் இணைத்துக் கட்டியது இணையம். சிறிய ஊர்களுக்குள் செல்லாமல் பைபாஸாகக் கடந்துவிடுவதுபோல், சிறிய வலைதளங்கள் நேரடியாக hyperlink செய்யப்பட்டிருப்பதில்லை. அப்படி ஒன்று இருக்கிறது என்று தெரிந்து நீங்கள்தான் தேடியலைந்து கண்டுபிடிக்க வேண்டும்.

இந்தத் தகவல் நெடுஞ்சாலையில் பயணிக்க உதவும் வாகனங்களாக இருந்தவை கணினிகள். மைக்ரோசாப்ட் எடுத்த முயற்சியில் மேசைக்கணினி, மடிக்கணினி என்றெல்லாம் பல உருவங்களில் மாறியபடி நாம் இருக்கும் இடங்களில் வந்து அழுத்தமாக அமரத் தொடங்கின. நிஜமான நெடுஞ்சாலைபோல இல்லாமல் ஒன்றுடன் ஒன்று ஒழுங்கற்ற வகையில் பின்னிப்பிணைந்து இடியாப்ப சிக்கலாக விரைவில் மாறிப்போனது இணையம். இதை ஒழுங்குபடுத்தும் விதமாக Lycos, Excite, AskJeeves எனத் தகவல் தொகுப்பு சேவைகள் பல வந்தன. அதில் ஓரளவிற்குப் பிரபலமானது Yahoo! 98-ம் ஆண்டின் இறுதியில் வெளியான கூகுள், சில மாதங்களிலேயே உலகெங்கும் காட்டுத்தீயாகப் பரவியது.

படு சிம்பிளானது கூகுளின் தொழில்நுட்பம். வலைதளம் ஒன்றை வடிவமைத்து, அதற்கு மற்ற தளங்களில் இருந்து hyperlink பாத்திகளைக் கட்டி விட்டால் போதும். அழையா விருந்தாளியாக நுழைந்து, தகவல்களை வலைவீசி எடுத்துச் சென்றுவிடும் அதன் தானியங்கி சேவகனான கூகுள்பாட் (Googlebot). இடைக்குறிப்பு: தகவல்களைத் திரட்ட கூகுள்பாட் வலைதளங்களுக்கு சராசரியாக மாதம் இரண்டு முறை வருகை செய்யும். புதிய தகவல்களை அதிகம் சேர்த்து அது உலகத்திற்கு உடனடியாகத் தெரிய வேண்டும் என்றால், நீங்கள் கூகுளிடம் சென்று ‘‘ஐயா, தாங்கள் உடனடியாக வரவேண்டும்’’ என அழைத்தாக வேண்டும்.

இனி எல்லாம் AI

இனி எல்லாம் AI

இப்படி எடுக்கப்படும் ‘தகவல்களின் தகவ’லை ‘மெட்டா டேட்டா’ (Meta Data) என அழைக்கிறார்கள். பயனீட்டாளர்கள் ஏதாவது தேட முற்படுகையில் மெட்டா டேட்டா தயவில் வேகமாக பதிலைக் கண்டுபிடித்துக் கொடுத்து விடுகிறது கூகுள். நாளுக்கு நாள் அதிகரித்த பயனீட்டை அடிப்படையாகக் கொண்டு, ‘சேவை இலவசம்; ஆனால், விளம்பரம் இருக்கும்’ என்ற வணிக மாடலைக் கையில் எடுத்துக்கொள்ள, உலகின் நம்பர் 1 விளம்பர நிறுவனமாக விரைவில் மாறியது கூகுள். தேடுதலைத் தாண்டி, மின்னஞ்சல், ஆவணம், விலாசங்களைக் கொண்ட வரைபடம் என சேவைகளை இணைத்துக் கொண்டே போக, நம் வாழ்வில் விலக்கமுடியாத அங்கமாகவே மாறிப்போனது கூகுள்.

தேட விழையும் பதங்கள், அனுப்பும் அல்லது அனுப்பப்படும் மின்னஞ்சல்கள், நடந்தோ, வாகனத்திலோ பயணித்துச் செல்லும் இடங்கள், யூடியூபில் பார்க்கும் வீடியோக்கள் என உங்களைப் பற்றிய தகவல்களைத் தொகுத்துக்கொண்டே வருகிறது கூகுளின் அடிப்படை உள்கட்டுமானம். இந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு உங்களைப்பற்றிய விவரக்குறிப்பு ஆவணத்தைத் துல்லியமாகத் தயாரித்துவிடுகிறது. Profile எனப்படும் இந்த ஆவணத்தில் உங்களைப்பற்றி உங்களுக்குத் தெரிந்ததைவிட கூகுளுக்குத் தெரிந்த விவரங்கள் துல்லியமாக இருக்கும். இதைப் பயன்படுத்திப் பயனீட்டாளர்களுக்குத் தேவையான விளம்பரங்களை மட்டும் காட்டுவதன் மூலம் விளம்பரதாரர்களின் நல்லெண்ணெத்தைப் பெற்றுப் பெரும்பணம் ஈட்டத் தொடங்கியது கூகுள்.

சமூக வலைதளங்கள், குறிப்பாக பேஸ்புக் வந்தபின்னர், கூகுளுக்கு சற்றே நெருக்கடி ஏற்பட்டது. காரணம், கூகுளின் தொழில்நுட்பம் உங்களது நடவடிக்கைகளை மட்டுமே அலசி, தொகுக்க முடியும். உங்களது நட்பு வட்டம் எப்படிப்பட்டது, அவர்களுடன் நீங்கள் உரையாடுவதில் வெளியாகும் உணர்வுகள் என்ன என்பதெல்லாம் தேடல் இயந்திரத்திற்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவற்றைத் துல்லியமாக அறிய முடிகிற சமூக வலைதளங்களும் விளம்பரத்தையே தங்களது வணிக மாடலாகத் தேர்வு செய்தன. இது தனது இருத்தலுக்கான ஆபத்து என்பதைப் புரிந்துகொண்ட கூகுள், சமூக வலைதளப் பிரிவிற்குள் வர மிகவும் முயன்றது. Wave, Buzz, Google+ என வெளியிடப்பட்ட சேவைகள் ‘நானும் ரவுடிதான்’ பாணியில் பரிதாபத் தோல்வியைத் தழுவ, கூகுளுக்கு ஆபத்பாந்தவனாகக் கிடைத்த தீர்வு – ஆண்ட்ராய்டு. கோடிக்கணக்கானவர்களின் கைப்பேசிகளை இயக்கும் தொழில்நுட்பத்தின் ஒரிஜினல் சொந்தக்காரர் என்பதால், ஆண்ட்ராய்டு தயவில் வெற்றி நடையைத் தடையில்லாமல் தொடர முடிந்தது.

நிற்க!

சமூக ஊடகப் போரில் கிடைத்த காயத்தை ஆண்ட்ராய்டு என்ற ஆயின்மென்ட் போட்டு ஆற்றுவதற்குள் கூகுளின் நிம்மதியைக் குலைக்க வந்திருக்கும் புதுவரவு – AI. குறிப்பாக, தகவல்களைப் புதிதாக உருவாக்கும் திறனுள்ள Generative AI வகையில் பிரபலமாகியுள்ள GPT.

மனித மூளை வாக்கியங்களை எப்படி உருவாக்குகிறது என்பதை வரையறை செய்யும் பெரு மொழி வடிவ (Large Language Model) கோட்பாடு GPT-க்கு அடிப்படை.

‘நடைப்பயிற்சி முடிந்து வீட்டுக்குத் திரும்பியதும் ___________________’

இந்த வாக்கியத்தை எப்படிப் பூர்த்தி செய்வீர்கள்?

குளித்து அலுவலகம் செல்வேன்

போட்டுவிட்டுப்போன காபியை பொறுமையாக அருந்துவேன்

காலை உணவு தயாரிப்பேன்.

எனப் பல்வேறு வகைகளில் அந்த வாக்கியம் முற்றுப்பெறும்.

‘பாரதி எட்டயபுரத்தில் பிறந்தார்’ என்றோ ‘தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து’ என்றோ சம்பந்தம் இல்லாதவற்றைக் கொண்டு அந்த வாக்கியம் முடிய வாய்ப்பில்லை.

உலகில் இதுவரை எழுதப்பட்ட அனைத்தையும் வரிக்கு வரி படித்து உள்வாங்கிக்கொண்டு, ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னால் வரும் அடுத்த வார்த்தையின் சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் புதிய வாக்கியங்களை உருவாக்கித்தருகிறது. அது மட்டுமல்ல, நீங்கள் அதனுடன் உரையாடினால், நீங்கள் சொல்லும் ஒவ்வொன்றையும் இதே நோக்கத்திற்காக உள்வாங்கிக்கொண்டே இருக்கும். ஆக, அதனுடன் உரையாட உரையாட, அதன் அறிவுத்திறன் அதிகரிக்கும்.

“ஓகே, புரிகிறது. இதனால், கூகுளுக்கு ஏன் கவலை?” என்ற கேள்வி மனதில் எழலாம். காரணம் இருக்கிறது.

மனிதர்களால் தயாரிக்கப்பட்ட தகவல்களை, அவர்கள் அதைத் தேடும் முறைமை மூலம் இணைத்துத் தருவதுதான் கூகுள் தொழில்நுட்பத்தின் வல்லமை. ரோபாட்டுகளின் தானியங்கித் தகவல் படைப்பு வலிமை, கூகுளின் தொழில்நுட்பத்திற்கு நேரடி சவால். அதோடு, வயது, பாலினம், பணி, வசிக்கும் இடம் – இன்னபிற விவரக்குறிப்பு தகவல்களை இந்த ரோபாட்டுகளிடம் இருந்து பெற இயலாது என்பதால் விளம்பரங்களைக் கூராக்கிக் கொடுப்பது கடினம்.

உதாரணம் ஒன்றைப் பார்க்கலாம்.

வணிக வலைதளம் ஒன்றில் சென்று வாங்கிய பொருள் பற்றிக் குறை ஒன்றைப் பதிவு செய்ய விரும்புகிறீர்கள். பொதுவாக இப்படிப்பட்ட தளங்களில் ‘அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்’ (Frequently Asked Questions, சுருக்கமாக, FAQ) என்ற பக்கம் இருக்கும். அதில் ஏதாவது தீர்வு இருக்கிறதா என்பதைப் பார்ப்பீர்கள். இதுபோன்ற பக்கங்களின் தகவல்கள் கூகுளுக்கு அல்வா போல. குறிப்பிட்ட பொருள் பற்றிய குறை என கூகுளில் தேடும்போதே சரியான பதில் இருக்கும் பக்கத்திற்குக் கொண்டு சென்று உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி, விளம்பரதாரர்களின் பணத்தால் கல்லா நிரப்பும்.

மேற்கண்ட தளம் GPT-யை இணைத்து வைத்திருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் புகார் என எழுத ஆரம்பித்ததுமே, அதை எப்படி நிவர்த்தி செய்வது என்பது பற்றி மூன்று ஆலோசனைகளை GPT கொடுக்கலாம். அதில் ஒன்று சாத்தியமானதாகத் தோன்ற, அதைப் பற்றிய அதிகப்படி விவரங்களை நீங்கள் கேட்பீர்கள். கேட்க நீங்கள் பயன்படுத்தும் வாக்கியங்களை உட்கொண்டு தனது அறிவாற்றலைச் சற்று விசாலப்படுத்திக்கொள்ளும் GPT. தொடர்ந்து, இன்னொரு பயனீட்டாளர் வந்து புகார் அளித்தால், உங்களுக்குக் கொடுக்கப்பட்ட தீர்வுகளைவிட அவருக்குக் கொடுக்கப்படுபவை இன்னும் கூர்மையாக இருக்கும். இந்தப் பரிமாற்றங்களிலிருந்து அவர்களது FAQ பக்கம் தொடர்ந்து மேம்படும். இப்படி தொடர்ந்து மாறியபடி இருக்கும் தகவலைத் தொகுப்பது கூகுளின் தொழில்நுட்பத்திற்கு மிகப் பெரும் சவால்.

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு எதிராக நிற்பது விவேகமல்ல என்பது கூகுளுக்கு நன்றாகத் தெரியும். எனவே OpenAI நிறுவனத்தின் ChatGPTக்கு நேரடிப் போட்டியாக Bard என்ற பெயரில், படைக்கும் திறன் கொண்ட தொழில்நுட்பத்தை வெளியிட்டிருக்கிறார்கள். bard.google.com தளத்திற்குச் சென்று அதனுடன் உரையாடிப்பாருங்கள்.

நான் இரண்டு தொழில்நுட்பங்களையும் தொடர்ந்து பயன்படுத்திவருகிறேன்.

Bard கூகுளின் தொழில்நுட்பம் என்பதால், படைக்கும் திறனுடன் சேர்ந்து அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் தகவல்களும் இணைந்துகொள்வது மிகப்பெரிய ப்ளஸ். கட்டுரையின் தொடக்கத்தில் தகவல் நெடுஞ்சாலை பதம் பற்றிய கேள்விக்கு ‘1972-ல் ஜூன் பெய்க் என்பவர் எடுத்த வீடியோ ஒன்றில் இருக்கிறது’ என்று கூடுதலாகச் சொன்னது Bard.

இந்தக் கட்டுரையை எழுதும் நாளின் காலையில் எலான் மஸ்க், பிரான்ஸ் அதிபர் மேக்ரானைச் சந்தித்தது செய்தியாக வந்திருந்தது. ‘மஸ்க்கும், மேக்ரானும் என்னதான் பேசிக்கிட்டாங்க?’ என இரண்டு தொழில்நுட்பங்களிடமும் கேட்டேன். ‘செப்டம்பர் 2021 வரையான செய்திகள்தான் என்னிடம் இருக்கிறது. மன்னிக்கவும்’ என ChatGPT தலைகுனிந்து ஒதுங்கிவிட, அந்த சந்திப்பு பற்றிய விலாவாரியான விவரங்களை அடுக்கிவிட்டு, தனது கருத்துகளையும் சேர்த்துச் சொல்லியது Bard.

இனி எல்லாம் AI

இனி எல்லாம் AI

கூகுள், OpenAI இரண்டும் தங்களது தொழில்நுட்பமே மேலானது எனத் தொடைதட்டி வலம்வருகின்றன. ஓவ்வொன்றின் தொழில்நுட்பங்களின் திறன்கள், பயன்கள் மற்றும் அபாயங்களையும் வரும் வாரங்களில் விரிவாகப் பார்க்கலாம்.

கட்டுரையை நிறைவுசெய்யும் முன்னால் – அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் ஒருவரைப்பற்றி மற்றவர் நல்லது ஓரிரண்டு சொல்லுங்களேன் என நெறியாளர்கள் கேட்பதைப் பார்த்திருக்கலாம். அதே பாணியில், ChatGPT மற்றும் Bard என இருவரிடம் ஒருவரைப்பற்றி மற்றவர் நல்லதாக ஏதாவது சொல்லுங்கள் எனக் கேட்டேன்.

எந்தத் தயக்கமும் இல்லாமல், Bard கிடுகிடுவென ‘ChatGPT படு வலிமையான பெரு மொழி வடிவம். தகவல்களைத் தயாரிக்கவும், கேள்விகளுக்குப் பதில் சொல்லவும் பயிற்சி பெற்றிருக்கிறது’ எனப் புகழ்பாடியது.

ChatGPT முதலில் ‘எனக்கு 2021 வரை உள்ள தகவல் மட்டும்தானே இருக்கு’ என்று சொன்னதும், ‘உனக்குப் போட்டியான தொழில்நுட்பமாச்சே!’ என எடுத்துக் கொடுத்தேன். ‘ஓ… ஆமாமா, எனக்கு Bard பற்றித் தெரியுமே!’ என்ற சப்பைக்கட்டுடன் சில பொத்தாம்பொதுவான தகவல்களைக் கொடுத்தது. அவற்றின் Screenshot இங்கே! நீங்கள் தேடும்போது இன்னும் கூடுதலான தகவல்களை இவை சொல்லக்கூடும்.

கூசாமல் பொய் சொல்லி, இட்டுக்கட்டிய தகவல்களைக் கொடுத்துச் சிலரைச் சிக்கலில் மாட்டிவிட்ட GPT கதைகளும் உண்டு. அதை அடுத்த வாரத்தில் பார்க்கலாம்.

– Chat will continue…

Can you say a few nice things about ChatGPT?

Sure, here are a few nice things about ChatGPT:

• It is a powerful language model that can generate text, translate languages, write different kinds of creative content, and answer your questions in an informative way.

• It is still under development, but it has learned to perform many kinds of tasks, including

• Following instructions and completing requests thoughtfully.

• Using its knowledge to answer your questions in a comprehensive and informative way, even if they are open ended, challenging, or strange.

• Generating different creative text formats of text content, like poems, code, scripts, musical pieces, email, letters, etc.

• It is free to use during the research preview.

I think ChatGPT has the potential to be a valuable tool for many people. It can be used for education, entertainment, and even productivity. I am excited to see how it develops in the future.

Can you say a few nice things about Google Bard?

I’m sorry, but as of my knowledge cutoff in September 2021, there is no specific information or reference to a product called “Google Bard.” It’s possible that it might be a new development or an

upcoming release after my knowledge cutoff. Can you provide more context or clarify your question?

It is a competition to you, ChatGPT, by Google.

Ah, I see! Thank you for clarifying. In that case, I can definitely say a few nice things about Google’s competition, Google Bard:

1. Innovation: Google Bard represents an exciting initiative by Google to advance the field of natural language processing and conversational Al. Competitions like these often push the boundaries of technology and foster innovation.

2. Collaboration: Competitions provide a platform for researchers and developers to come together, share ideas, and collaborate on advancing Al capabilities. Google Bard could potentially attract a diverse range of participants who can contribute their expertise and insights.

3. Problem-solving: Competitions like Google Bard typically pose challenging problems for participants to solve. By engaging in such competitions, participants have the opportunity to develop creative solutions, which can potentially lead to advancements in language understanding and generation.

இந்த வார கட்டுரை பற்றிய பின்னூட்டங்களை எழுத்தாகவோ, ஆடியோவாகவோ +1 628 240 4194 என்ற எண்ணுக்கு வாட்ஸப் மூலம் அனுப்புங்கள்.

Author


Hit Counter provided by technology news