ஒரு பெருமழை, நான்குவிதமான  சென்னை – ஒரு செய்தியாளரின் வாக்குமூலம்!

சென்னை பெருமழை
News

சென்னை பெருமழை ( விகடன் )

இந்தப் பெருமழையில் நான்குவிதமான சென்னையை எதிர்கொண்ட ஒரு பத்திரிகையாளரின் அனுபவம்.

மழையின் பொருட்டு செய்தி சேகரிப்பதற்காக கடந்த மூன்று நாள்களாக சென்னையின் வெவ்வேறு பகுதிகளுக்குப் பயணமானேன். சொல்லப்போனால் சென்னை பெருமழை தனிப்பட்ட முறையில் எனக்குப் புதிதல்ல. 2015-ம் ஆண்டு பெருமழையில் `தருமபுரி மக்கள் மன்றம்’ எனும் மக்கள் குழுவுடன் சேர்ந்து களப்பணியாற்றியிருக்கிறேன். ஆனால், இந்த மழை கொடுத்த படிப்பினையும், அனுபவமும் வேறு மாதிரியானதாக இருந்தது.

ஒரு பெருமழை, நான்குவிதமான  சென்னை - ஒரு செய்தியாளரின் வாக்குமூலம்! 

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் திங்கள்கிழமை பகல் வரை!

ஞாயிற்றுக்கிழமை இரவெல்லாம் வழக்கம்போல்தான் இருந்தது. என் வீடு மடிப்பாக்கம் வடக்கு ராம் நகரில் இருக்கிறது. சிறு மழை வந்தாலே வேளச்சேரி பாலத்தின்மீது வாகனத்தை நிறுத்தும் மத்திய தர வர்க்கம் அதிகம் வாழும் பகுதி இது. வேளச்சேரி பாலத்தின்மீது வாகனத்தை நிறுத்துவது என்பது 2015 பெருமழை தந்த அனுபவம். ஞாயிற்றுக்கிழமை இரவு நானும் என சக பத்திரிகையாளர்கள் துளசிதரனும், அஜய்யும் இரண்டு மணி வரை சென்னையின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் மேற்கொண்டு ஃபேஸ்புக் நேரலையில் செய்தி வழங்கிக்கொண்டிருந்தோம். மழை பெய்தது. நவம்பரில் பெய்த மழைபோல்தான் இருந்தது. எல்லாம் வழக்கம்போல இருந்தன.

அந்த மழையிலும் தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தார்கள். முதலில் அதிர்ச்சி தந்த சம்பவம், பெருங்களத்தூர் பகுதியில் ஒரு முதலை நடமாடியது என்ற செய்திதான். பிறகு இரவு 2 மணி இருக்கும். தாழ்வான பகுதியில் துளசி வசிப்பதால், அவர் வீட்டிலிருந்த சில பொருள்களை ஷெல்ஃப்பில் வைத்துவிட்டு வந்தோம்.

அப்போதும் எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. அரசு எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருக்கும். பெரிதாக கவலைகொள்ள, அச்சப்பட தேவையில்லை என்ற நம்பிக்கையில் உறங்கச் சென்றோம்.

ஆனால், திங்கள் விடியல் எல்லா நம்பிக்கைகளையும் பொய்யாக்கியது. வீட்டிலிருந்து சாதாரணமாக வெளியே செல்ல முடியாத அளவுக்குத் தண்ணீர். செய்தி வழங்குவதற்காக நானும் அஜய்யும் வெளியே செல்ல, துளசி தன் வீட்டைப் பார்க்கச் சென்றார். துளசி வீட்டுக்குள் தண்ணீர் புகுந்திருந்தது. எங்கள் வீட்டில் தரைத்தளத்துக்கு நெருங்க தண்ணீர் வந்திருந்தது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தது.

இப்போது சிலருக்கு சில கேள்விகள் வரலாம். அந்தக் கேள்விகளை சமூக ஊடகத்திலும் எதிர்கொண்டோம்.

கேள்வி 1 : அது மழை தேங்கும் பகுதி என்று தெரியும்தானே… உங்களை யார் அங்கு வாடகைக்கு (அல்லது சொந்தமாகவோ) வீடு எடுக்க சொன்னது?

எல்லாம் மையப்படுத்தப்பட்ட இந்தச் சூழலில், பிழைப்பின் காரணமாக சென்னைக்கு வரும் யாரும் ஏரியின் மீதுதான் குடியிருப்பேன் என்று சபதம் எடுத்து வருவதில்லை.  தாக்குப்பிடிக்க முடிந்த வாடகையும், பணிச்சூழலும் அந்தப் பகுதியைக் கோருவதால்தான் அங்கு குடியேறுகிறார்கள், வசிக்கிறார்கள். உங்கள் கேள்வி, ஏரியை மனைகளாக மாற்ற அனுமதி தந்த அரசை நோக்கி இருக்கட்டும். ஏற்கெனவே பொருளாதாரத்தை இழந்து நிற்கும் மக்களை நோக்கி இருக்க வேண்டாம். ஏன் எல்லாம் சென்னையில் இருக்கிறது… ஏன் இந்த மையப்படுத்தப்பட்ட சூழல் என்று அரசு இயந்திரத்தை நோக்கி உங்கள் சுட்டு விரல் நீளட்டும். குறைந்தது ஓராண்டு சேமிப்பை இழந்து நிற்கும் மக்களை நோக்கி வேண்டாம்.

கேள்வி 2: சரி. பெருமழைக்கான எச்சரிக்கையை அரசு கொடுத்ததுதானே… பிறகு ஏன் அந்தத் தாழ்வான பகுதியிலுள்ள வீட்டில் தங்கினீர்கள்?

தவறுதான். ஆனால், முகாமில் தங்கிக்கொள்ளுங்கள் என்று ஞாயிற்றுக்கிழமை இரவு அரசு கூறியதா… குறைந்தபட்சம் அந்தப் பகுதியில் முகாமையாவது ஏற்படுத்தியிருந்ததா?

திங்கட்கிழமை மதியம் முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை

வீட்டில் மின்சாரம் இல்லை. இணையமும் துண்டிக்கப்பட்டிருந்தது. சார்ஜ் செய்யப்பட்ட விளக்கில் நேரத்தைக் கடத்தினோம். வீட்டின் கீழே தண்ணீரின் அளவு ஏறிக்கொண்டிருந்தது.  வீட்டில் குழந்தைகளோ அல்லது வயதில் பெரியவர்களோ இல்லாததால் அச்சப்படவில்லை. சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், வெளியுலகில் நடந்துகொண்டிருக்கும் எந்த விஷயமும் எங்களுக்கு வந்து சேரவில்லை. ஓர் ஊடகராக இதுதான் திங்கள் இரவு பெரும் குறையாக இருந்தது.  இன்னும் இரு நண்பர்களும் வீட்டுக்கு வந்தார்கள். அவ்விரவு வீட்டில் இருந்த சில ரெடி டு குக் உணவுகளை வைத்துச் சமாளித்தோம்.

திங்கள் நள்ளிரவுக்கு மேல் மழை இல்லை. இது பெரும் நிம்மதியைத் தந்தது. செவ்வாய் காலை வீட்டிலிருந்து வெளியேற படி இறங்கினால், தரைத்தளம் வரை தண்ணீர் நின்றது.

சில வாகனங்களுக்குள் தண்ணீர் சென்றிருந்தன. வெளியே சென்றால் இடுப்புவரை தண்ணீர். அந்தத் தண்ணீரில் நடந்து ஆலந்தூர் – வேளச்சேரி இணைப்புச் சாலைக்குச் சென்றோம். அந்தச் சாலையில் பெரிதாகத் தண்ணீர் இல்லை. ஆனால், அங்கிருந்து வாகனத்தில் வெளியே செல்ல முடியாத அளவுக்கு எல்லா பக்கமும் தண்ணீர் சூழ்ந்திருந்தது. பிறகு மிதிவண்டியை எடுத்துக்கொண்டு அலுவலகத்துக்குப் புறப்பட்டேன்.

இரு வேறு சென்னை! 

வேளச்சேரி – காமாட்சி மருத்துவமனை சாலையில் தண்ணீர் நெஞ்சளவுக்கு நின்றது. இதைக் கடந்துவிட்டால், எந்தப் பிரச்னையும் இல்லை எனத் தகவல் வர, சைக்கிளை தூக்கிக்கொண்டு நடக்க தொடங்கினேன். புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் வேளச்சேரி பாலத்தில் ஏறிச் செல்ல, நூறடி மைய சாலையில் தண்ணீர் தேங்கவில்லை. ஆனால், தண்டீஸ்வரம்  உள்ளிட்ட உள்ளடங்கிய சாலைகள் எங்கும் தண்ணீர்.

பிறகு ஃபீனிக்ஸ் மால் வழியாக சைதாப்பேட்டை சாலையைப் பிடித்து, அண்ணா சாலையிலிருக்கும் அலுவலகத்துக்கு வந்தேன். வெயிலும் வந்தது. அந்த மைய சாலை எங்கும் தண்ணீர் இல்லை.

இரு வேறு சென்னை இருந்தது. இந்த சென்னை சுபிக்‌ஷமாக இருந்தது, சிலர் ‘பாருங்கள் சென்னையில் தண்ணீரே இல்லை’ என்று சமூக ஊடகங்களில் எழுத, புகைப்படம் பகிர ஏற்றதுபோல் இருந்தது.

கேள்வி : மழை பெய்தால் சில பகுதிகளில் தண்ணீர் நிற்கத்தான் செய்யும். ஆனால், நீங்களே சொல்கிறீர்கள், `மைய சாலைகளில் தண்ணீர் இல்லை’ என்று. பிறகு ஏன் இந்த விமர்சனம்?

பதில்: ஹூம்… அண்ணாசாலையிலோ அல்லது பிற மையசாலைகளிலோ குடியிருப்புகள் இல்லை. அல்லது அந்தக் குடியிருப்புகளில் வசிக்கும் அளவுக்கு பெரும்பாலானவர்களுக்குப் பொருளாதார சூழல் இல்லை.

ஒரு பெருமழை, நான்குவிதமான  சென்னை - ஒரு செய்தியாளரின் வாக்குமூலம்! 

வேளச்சேரி சம்பவம்

அலுவலகத்துக்கு வந்த பிறகு கைப்பேசியை சார்ஜ் போட்டேன். இணைய வசதி கிடைத்தது. இதற்குள் அலுவலகத்துக்கு வந்த நண்பர்கள் வேளச்சேரி செக்போஸ்ட் பகுதியில் 50 அடி பள்ளத்தில் தொழிலாளர்கள் சிலர் கீழே விழுந்து சிக்கியிருப்பதாகத் தகவல் சொன்னார்கள். இரவு முழுவதும் அந்தப் பகுதியிலேயே அலுவலக புகைப்படக் கலைஞர் சுரேஷ் இருந்து செய்தி தந்திருக்கிறார். அந்தப் பகுதிக்கு நான், சிபி, வீடியோ டிபார்ட்மென்ட்டைச் சேர்ந்த ஹசன், கார்த்தி, குட்டி கார்த்தி ஆகியோர் பயணமானோம்.

நிலைமை மிக மோசமாக இருப்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

என்ன நடந்தது?

பாதிக்கப்பட்டவர்களின் உறவினர் வாக்குமூலம்: ‘ஒரு கட்டடத்துக்கான பணிகள் நடந்தன. அதற்கான அஸ்திவாரத்துக்காக  50 அடிக்குப் பெரும் பள்ளத்தைத் தோண்டியிருக்கிறார்கள். ஞாயிறு இரவு பெய்ய தொடங்கிய மழையில் அந்தப் பள்ளத்தில் தண்ணீர் நிரம்ப, தண்ணீரை வெளியேற்ற எங்கள் பிள்ளைகளை நிர்பந்தப்படுத்தினார்கள். இதற்குள் மண் சரிய அதில் எங்கள் பிள்ளைகள் மூழ்கிவிட்டார்கள். சில கன்டெய்னர்களும் உள்ளே விழுந்திருக்கின்றன. அதில் சிலர் இருந்திருக்கலாம்.’

பெயர் வெளியிட விரும்பாத அரசு ஊழியர் சொன்ன தகவல்:  ‘உள்ளே மூன்று பேர் சிக்கியிருக்கிறார்கள். அவர்கள் இறந்திருக்கக்கூடும்.’

செவ்வாய் இரவு முதல் புதன் மாலை வரை 

செவ்வாய்க்கிழமை இரவு அலுவலகத்தில் தங்கினோம். உடன் சிபியும், செய்தியாளர் சக்தி தமிழ்ச்செல்வனும் தங்கியிருந்தார்கள். அப்போது சில சமூக ஊடகப் பகிர்வுகளைப் பார்த்தோம். ‘சென்னை சுபிக்‌ஷமாக இருக்கிறது. சிலர் திட்டமிட்டே வதந்தியைப் பரப்புகிறார்கள்’ – என்று ஒரு பகிர்வு. அந்தப் பகிர்வைப் பார்த்துவிட்டு சக்தி இவ்வாறாகச் சொன்னார், “சென்னையில் எங்கும் தண்ணீர் நிற்கவில்லை என்கிறார். ஆனால், இவர் சென்னையிலேயே இல்லை” என்றார். ஆம் அவர் வசிப்பது துபாயில். இதுபோலப் பல பகிர்வுகளைப் பார்க்க முடிந்தது. ஆனால், இவற்றைப் பகிர்ந்தவர்கள் எவரும் சென்னையில் இல்லை. ஏன்… சிலர் இந்தியாவிலேயே இல்லை.

தண்ணீர் தேங்கியிருக்கிறது என யாராவது புகைப்படத்துடன் தகவல் பகிர்ந்தால், அவர்கள், ‘Bully’ செய்யப்பட்டார்கள். சிலர், ‘Character assassination’ செய்யப்பட்டார்கள். இது தீவிர வலதுசாரிகளின் குணம். அவர்கள் எதிர்க்குரல்களுக்கு முகம் கொடுக்க மாட்டார்கள். எதிர்க்குரல்களை மெளனமாக்க இந்த யுக்தியைத்தான் பயன்படுத்துவார்கள். வேண்டுமானால் ‘I am troll’ புத்தகத்தைப் படியுங்கள்.  இப்போது இந்தப் பண்பாடு தமிழ்நாட்டிலும்.

Also Read

மிக்ஜாம் புயல்: மிதக்கும் சென்னை... அனைத்துப் பகுதிகளிலும் கனமழையின் தாக்கம்... வீடியோ | Spot Visit

மிக்ஜாம் புயல்: மிதக்கும் சென்னை… அனைத்துப் பகுதிகளிலும் கனமழையின் தாக்கம்… வீடியோ | Spot Visit

ஒரு பெருமழை, நான்குவிதமான  சென்னை - ஒரு செய்தியாளரின் வாக்குமூலம்! 

மூன்றாவது சென்னை

வேளச்சேரி, பள்ளிக்கரணை பகுதிகள் ஒரு சென்னை. அங்கு இருந்தவர்களுக்கு அதிகாரமட்டத்தைத் தொடர்புகொள்ள முடிந்தது. குறைந்தது தாங்கள் சிக்கலில் இருக்கிறோம் என்று குரல் எழுப்பாவாவது முடிந்தது. ஆனால், புதன்கிழமை மதியம் நாங்கள் சென்ற சென்னைக்கு அப்படி எந்த வாய்ப்பும் இல்லை.

நாங்கள் வடசென்னை புளியந்தோப்புப் பகுதிக்குச் சென்றோம்.  இடுப்பளவு கழிவுநீர் கலந்த தண்ணீரில் நாங்கள் நடந்து செல்ல, எங்களை நோக்கி ஒரு பிணம் மிதந்து சென்றது.

புளியந்தோப்பு மாறனின் வாக்குமூலம்: “இந்தப் பகுதியில் மட்டும் ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் வசிக்கிறோம். மழை பெய்து மூன்று நாள்களாகின்றன. ஆனால், இதுவரை எந்த அரசு அதிகாரியும் வரவில்லை. 2015-ல் மழையில் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவும் ஒன்று. ஆனால், அதன் பிறகும் அரசு இதற்கு எந்த வடிகால் வசதியும் செய்து தரவில்லை. மூன்று நாள்களாக மலம் கழிக்கக்கூட வசதியில்லாமல் இருக்கிறோம். அதிகம் சாப்பிட்டால் மலம் கழிக்க நேரிடும் என்பதால், பலர் சாப்பிடாமலும் இருக்கிறார்கள்.”

மாறன் சொல்வது அப்பட்டமான உண்மைதான். இன்னும் விரிவாகத் தெரிந்துகொள்ள இந்தக் காணொளியைப் பாருங்கள்.

நான்காவது சென்னை

பிறகு அங்கிருந்து நான்காவது சென்னைக்குப் பயணமானோம். இந்த நான்காவது சென்னை ‘எண்ணூர் சென்னை.’ சென்னைவாசிகளே மறந்த சென்னை. சூழலியல் செயற்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராமன், அந்தப் பகுதி குறித்த பிரச்னையைச் சொல்ல, அது குறித்து விசாரிக்க நாங்கள் பயணமானோம்.

ஒரு பெருமழை, நான்குவிதமான  சென்னை - ஒரு செய்தியாளரின் வாக்குமூலம்! 

இதுதான் பிரச்னை?!

எண்ணூர் பகுதியைச் சுற்றியுள்ள எண்ணெய் நிறுவனங்கள் சென்னை பெருமழையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி கொசஸ்தலை ஆற்றில் (கொற்றலை ஆறு )  எண்ணெய்க் கழிவுகளை கலக்கிறார்கள் என்பதுதான் பிரச்னை.

எண்ணூர் ஶ்ரீனிவாசனின் வாக்குமூலம்: “இது முதன்முறை அல்ல. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இங்கிருக்கும் எண்ணெய் நிறுவனங்கள் இப்படிச் செய்கின்றன. நீங்களெல்லாம் மழை வடிந்தால் பணிக்குச் செல்வீர்கள். ஆனால், எங்களால் மழைவிட்ட பிறகும் வேலைக்குச் செல்ல முடியாது. எங்கள் ஆறு முழுவதும் எண்ணெய்க் கழிவுகள். இதில் எப்படி மீன்பிடிக்க முடியும்… சரி, எங்கள் வாழ்வாதாரத்தின் மீது உங்களுக்கு அக்கறை வேண்டாம். உங்கள் ஆரோக்கியத்தின் மீது உங்களுக்கு அக்கறை இருக்கிறதுதானே… ஒருவேளை நாங்கள் மீன்பிடித்து அந்த மீனை நீங்கள் சாபிட்டால் உங்கள் ஆரோக்கியம் என்னவாகும்?”

இது குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள இந்தக் காணொளியை பாருங்கள்.

இப்படியாக நாங்கள் கடந்த நான்கு நாள்களாக மிக்ஜாமை எதிர்கொண்டோம்.

சரி. இறுதியாக ஒரு கேள்வி,

கேள்வி: கடந்த 2015 பெருமழையின்போது தன்னார்வலர்கள் அத்தனை பேர் களம் இறங்கினார்களே… இப்போது ஏன் இல்லை?

பதில்: எல்லாம் சுபிக்‌ஷமாக இருப்பதுபோல் அல்லது வெள்ள பாதிப்பு குறைவாகவே இருப்பதுபோலக் கொடுத்த சித்திரம்தான் காரணம்.

(இந்தப் புயலில் நீங்கள் எதிர்கொண்ட சவால்களை my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.)

Also Read

வெள்ளக்காடான வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை & முடிச்சூர் சாலை; மிதக்கும் வாகனங்கள்! - Spot Visit

வெள்ளக்காடான வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலை & முடிச்சூர் சாலை; மிதக்கும் வாகனங்கள்! – Spot Visit

 

Author


Hit Counter provided by technology news