இரண்டாம் உலகப்போர்: இந்தியாவின் இமயமலையில் நொறுங்கிய 600 அமெரிக்க விமானங்கள் – என்ன நடந்தது?

இரண்டாம் உலகப்போர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இரண்டாம் உலகப்போரின் போது இமயமலையில் விழுந்த அமெரிக்க விமானங்களின் பாகங்கள் இந்தியாவில் புதிதாக திறக்கப்பட்ட அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவுக்குள் உலகப்போர் அடியெடுத்து வைத்தபோது நடந்த ஒரு துணிச்சலான, அபாயகரமான வான்வழி நடவடிக்கை குறித்து பிபிசியின் சௌதிக் பிஸ்வாஸ் இங்கு விவரிக்கிறார்.

80 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மலைகளில் விபத்துக்குள்ளான நூற்றுக்கணக்கான விமானங்களின் சிதைவுகள் மற்றும் உடைந்த பாகங்களை 2009-ஆம் ஆண்டு முதல் இந்திய மற்றும் அமெரிக்கக் குழுக்கள் தேடி வந்தனர்.

இரண்டாம் உலகப்போரின் போது 42 மாத காலமாக இந்தியாவில் நடைபெற்ற ராணுவ நடவடிக்கையில் சுமார் 600 அமெரிக்க விமானங்கள் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இந்த தொலைதூரப் பகுதியில் விபத்துக்குள்ளானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பலராலும் மறக்கப்பட்ட இந்த விபத்துகளில் குறைந்தது 1,500 விமானப் பணியாளர்கள் மற்றும் பயணிகள் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களுள் அமெரிக்க மற்றும் சீன விமானிகள், ரேடியோ ஆபரேட்டர்கள் மற்றும் வீரர்கள் அடங்குவர்.

குன்மிங் மற்றும் சங்கிங்கில் (இப்போது சோங்கிங் என்று அழைக்கப்படுகிறது) சீனப் படைகளுக்கு ஆதரவாக, இந்திய மாநிலங்களான அசாம் மற்றும் வங்காளத்தில் இருந்து இந்த நடவடிக்கை ஒரு முக்கிய விமானப் போக்குவரத்து வழித்தடத்தில் மேற்கொள்ளப்பட்டது.

இரண்டாம் உலகப்போர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உயிர் நாடியான விமான வழித்தடம்

அச்சு நாடுகளுக்கும் (ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான்) மற்றும் நேச நாடுகளுக்கும் (பிரான்ஸ், கிரேட் பிரிட்டன், அமெரிக்கா, சோவியத் யூனியன், சீனா) இடையேயான போர் பிரிட்டிஷ் ஆளும் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியை எட்டியிருந்தது. அப்போது, வடக்கு மியான்மர் (அப்போது பர்மா என்று அழைக்கப்பட்டது) வழியாக சீனாவுக்கான தரைவழியை திறம்பட மூடி, இந்தியாவின் எல்லைகளுக்கு ஜப்பானியர்கள் முன்னேறியதைத் தொடர்ந்து இந்த விமான வழித்தடம் ஒரு உயிர் நாடியாக மாறியது.

ஏப்ரல் 1942-இல் தொடங்கப்பட்ட அமெரிக்க ராணுவ நடவடிக்கையில், 6,50,000 டன் போர் ஆயுதங்கள் வெற்றிகரமாக இந்த வழித்தடத்தில் கொண்டு செல்லப்பட்டது. இது நேச நாடுகளின் வெற்றியை கணிசமாக உயர்த்தியது.

விமானிகள் இந்த ஆபத்தான விமானப் பாதையை “தி ஹம்ப்” (The Hump) என்று அழைத்தனர். இந்த நடவடிக்கைக்காக இன்றைய அருணாச்சல பிரதேசமான கிழக்கு இமயமலையின் நம்ப முடியாத உயரத்திற்கு அவர்கள் செல்ல வேண்டியிருந்தது.

அடர்ந்த வெப்ப மண்டல காடுகளுக்குள் கடந்த 14 ஆண்டுகளாக, மலையேற்றம் செல்பவர்கள், மாணவர்கள், மருத்துவர்கள், தடயவியல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மீட்பு நிபுணர்கள் அடங்கிய இந்திய-அமெரிக்கக் குழுக்கள் பயணித்து, மியான்மர் மற்றும் சீனாவின் எல்லையில் உள்ள அருணாச்சல பிரதேசத்தில் 15,000 அடி (4,572 மீ) உயரத்தை எட்டியுள்ளனர். இவர்களுள் அமெரிக்க பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் டிபிஏஏ (DPAA) எனும் முகமையின் உறுப்பினர்களும் அடங்குவர். இந்த முகமை ராணுவ நடவடிக்கைகளில் காணாமல் போன வீரர்கள் குறித்து ஆராயும் முகமையாகும்.

உள்ளூர் பழங்குடியினரின் உதவியுடன், ஒரு மாத கால பயணங்களுக்குப் பிறகு அவர்கள் விபத்துக்குள்ளான இடங்களை அடைந்தனர். அங்கு குறைந்தது 20 விமானங்கள் மற்றும் காணாமல் போன விமானப்படை வீரர்கள் பலரின் சேதமடைந்த உடைமைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இரண்டாம் உலகப்போர்

பட மூலாதாரம்,HUMP MUSEUM

சவாலான பயணம்

ஆறு நாள் மலையேற்றம், இரண்டு நாள் சாலைப் பயணம் என சவாலான பயணத்திற்குப் பின்னரே விபத்து நடந்த ஒரு இடத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது. இந்த தேடுதல் பயணத்தின்போது பனிப்புயல் தாக்கத்தின் காரணமாக, மூன்று வாரங்கள் மலையிலேயே அவர்கள் சிக்கித் தவிக்க நேர்ந்தது.

“தட்டையான வண்டல் சமவெளிகள் முதல் மலைகள் வரை நிரம்பியுள்ள இப்பகுதி ஒரு சவாலான நிலப்பரப்பாகும். வானிலை ஒரு பிரச்னையாக இருக்கலாம். பொதுவாக இலையுதிர் காலத்தின் பிற்பகுதியிலும், குளிர்காலத்தின் ஆரம்பத்திலும் மட்டுமே இங்கு சென்று பணிகளை மேற்கொள்ள முடியும்,” என்கிறார், இப்பயணங்களில் ஈடுபட்டுள்ள தடயவியல் மானுடவியலாளர் வில்லியம் பெல்ச்சர்.

ஆக்சிஜன் சிலிண்டர்கள், இயந்திர துப்பாக்கிகள், விமானத்தின் முதன்மைப் பகுதி உட்பட ஏராளமானவை இந்த தேடுதலில் கண்டுபிடிக்கப்பட்டன. இறந்தவர்களை அடையாளம் காண்பதற்காக மண்டை ஓடுகள், எலும்புகள், காலணிகள், கடிகாரங்கள் மற்றும் டிஎன்ஏ மாதிரிகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. காணாமல் போன விமானப்படை வீரர் ஒருவரின் ’இனிஷியல்’ பொறிக்கப்பட்ட காப்பு, நினைவுச்சின்னம் ஆகியவற்றை இடிபாடுகளில் இருந்து கண்டெடுத்த கிராமவாசி ஒருவரிடமிருந்து அவை மீட்கப்பட்டன. விபத்து நிகழ்ந்த சில இடங்கள் பல ஆண்டுகளாக உள்ளூர் கிராம மக்களால் துடைத்தெடுக்கப்பட்டு, அங்கிருந்த அலுமினிய எச்சங்கள் விற்கப்பட்டுள்ளன.

இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் நகரமான பாசிகாட்டில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ‘தி ஹம்ப்’ மியூசியத்தில் இந்த அழிந்த விமானங்கள் தொடர்பான பிற கலைப்பொருட்கள் மற்றும் விவரிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் உலகப்போர்

பட மூலாதாரம்,WILLIAM BELCHER

சமாளிக்க முடியாத வானிலை

நவம்பர் 29 அன்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, “இது அருணாச்சல பிரதேசத்திற்கோ அல்லது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கோ கிடைத்த பரிசு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் உலகுக்கும் கிடைத்த பரிசு” என்று கூறினார். அருங்காட்சியகத்தின் இயக்குனர் ஓகென் தாயெங் மேலும் கூறுகையில், “மற்றவர்களின் நினைவை மதிக்கும் இந்த பணியின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் அருணாச்சல பிரதேசத்தின் உள்ளூர் மக்கள் அனைவருக்கும் இது ஒரு அங்கீகாரம்” என தெரிவித்தார்.

இந்த வழியில் விமானத்தில் பறப்பதால் ஏற்படும் ஆபத்துகளை அருங்காட்சியகம் துல்லியமாக வெளிப்படுத்துகிறது. அமெரிக்க விமானப்படை விமானியான மேஜர் ஜெனரல் வில்லியம் டர்னர், செங்குத்தான சரிவுகள், அகன்ற பள்ளத்தாக்குகள், ஆழமான பள்ளத்தாக்குகள், குறுகிய நீரோடைகள் மற்றும் கரும் பழுப்பு நிற ஆறுகளில் உள்ள கிராமங்கள் மீது தனது சி-46 சரக்கு விமானத்தை வழிநடத்தியதை நினைவுகூர்ந்துள்ளார்.

இளம் மற்றும் புதிதாகப் பயிற்சி பெற்ற விமானிகளால் இயக்கப்படும் விமானங்கள் கொந்தளிப்பாக இருந்தன. டர்னரின் கூற்றுப்படி, ‘தி ஹம்ப்’பின் வானிலை, “நிமிடத்திற்கு நிமிடம், ஒரு மைலில் இருந்து மற்றொரு மைலுக்கு” மாறும் தன்மை கொண்டது. அப்பகுதியின் ஒரு முனை இந்தியாவின் தாழ்வான, நீராவி காடுகளிலும் மற்றொரு முனை மேற்கு சீனாவின் உயரமான பீடபூமியிலும் உள்ளது.

கனரக போக்குவரத்து விமானங்கள், கீழ்நோக்கி அடிக்கும் காற்றில் சிக்கி, விரைவாக 5,000 அடி கீழே இறங்கி, அதே வேகத்தில் மேலே உயரும். ஒரு விமானம் 25,000 அடி உயரத்தில் கீழ்நோக்கி சென்ற பிறகு முற்றிலும் திரும்பியது குறித்து டர்னர் எழுதியுள்ளார்.

வசந்த கால காற்று, பனிமழை மற்றும் ஆலங்கட்டி மழை, இடியுடன் கூடிய மழை என இயற்கை இடர்களுக்கு மத்தியில் அடிப்படை வழிசெலுத்தல் கருவிகளைக் கொண்டு விமானங்களைக் கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருந்துள்ளது. ’லைஃப்’ இதழின் பத்திரிகையாளர் தியோடர் ஒயிட், கட்டுரை ஒன்றுக்காக ஐந்து முறை இந்த பாதையில் விமானத்தில் பயணித்திருக்கிறார். பாராசூட்கள் இல்லாத சீன வீரர்களை ஏற்றிச் சென்ற ஒரு விமானத்தின் விமானி தனது விமானம் பனிக்கட்டியால் சூழ்ந்தபிறகு தரையிறங்க முடிவு செய்ததாக எழுதியுள்ளார்.

துணை விமானியும் வானொலி இயக்குனரும் எப்படியோ சமாளித்து வெளியேறி, “பெரிய வெப்பமண்டல மரங்களில் தரையிறங்கினர். அங்கிருந்த பூர்வீக குடிமக்கள் 15 நாட்கள் அலைந்து திரிந்து அவர்களைக் கண்டுபிடித்தனர்” என அவர் எழுதுகிறார். தொலைதூர கிராமங்களில் உள்ள உள்ளூர் மக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சை அளித்து நலம் பெற உதவியுள்ளனர். (விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது என்றும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்றும் பின்னர் தெரியவந்தது.)

வானொலி தர நிலையம் அழைப்புகளால் நிரம்பியதில் ஆச்சரியமில்லை. மலைகளுக்குள் விமானங்கள் மோதியதால், 50 மைல்களுக்குள் எங்கு இருக்கிறோம் என்பது விமானிகளுக்குத் தெரியாது என டர்னர் நினைவுகூர்கிறார். ஒரு புயல் மட்டும் ஒன்பது விமானங்களை நொறுக்கியது. இதில், 27 பணியாளர்கள் மற்றும் பயணிகள் கொல்லப்பட்டனர். “உலகில் இதற்கு முன்பும் பின்பும் இப்படியொரு தீவிரமான கொந்தளிப்பை எங்கும் பார்த்ததில்லை,” என அவர் எழுதுகிறார்.

இரண்டாம் உலகப்போர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

”எனது மகன் எங்கே?”

காணாமல் போன விமானப்படை வீரர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினர். “எனது மகன் எங்கே? இந்த உலகம் அதையறிய நான் விரும்புகிறேன்/அவரது பணி முடிந்து பூமியை விட்டு சென்றுவிட்டானா?/அவன் தேவலோகத்தில் இருக்கிறானா? அல்லது அவன் இன்னும் இந்தியாவின் காடுகள் மற்றும் மலைகளில் அலைந்து கொண்டிருக்கிறானா?” என, 1945-இல் ஒரு கவிதையில் காணாமல் போன விமானப்படை வீரர் ஜோசப் டுனவேயின் தாயார் பேர்ல் டுனவே எழுதியுள்ளார்.

காணாமல் போன விமானப்படையினர் இப்போது நினைவுகளில் மட்டுமே உள்ளனர். “இந்த ஹம்ப் மனிதர்கள் ஜப்பானியர்களோடும், காடுகளோடும், மலைகளோடும், மழைக்காலங்களோடும் ஆண்டு முழுவதும் இரவும் பகலும் போராடுகிறார்கள். அவர்களுக்குத் தெரிந்த ஒரே உலகம் விமானங்கள். அவர்கள் அவற்றின் சத்தங்களை கேட்பதையோ, அவற்றில் பறப்பதையோ, சபிப்பதையோ நிறுத்த மாட்டார்கள். ஆனாலும் அவர்கள் சீனாவுக்கு வெளியே செல்லும் விமானங்களைப் பார்த்து சோர்வடைய மாட்டார்கள்,” என்று ஒயிட் விவரித்தார்.

இந்தியாவின் வாசலை எட்டிய இரண்டாம் உலகப்போரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை உண்மையில் வான்வழி தளவாடங்களின் துணிச்சலான சாதனையாகும். “’தி ஹம்ப்’ நடவடிக்கை மூலம் அருணாச்சல பிரதேசத்தின் மலைகள் மற்றும் மக்கள் இரண்டாம் உலகப்போர் குறித்த கதைகள், வீரம் மற்றும் சோகங்களுக்குள் ஈர்க்கப்பட்டனர்” என்று தாயெங் கூறுகிறார். இவை சிலருக்கு மட்டுமே தெரிந்த கதைகள்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

 

 

Author


Hit Counter provided by technology news