Breaking

 

ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வருவது போன்ற உளவு சாதனங்களை தயாரிக்கும் ரகசிய தொழிற்சாலை – நேரடி விசிட்

இங்கிலாந்து, உளவு அமைப்புகள், வரலாறு, உளவாளிகள், அரசியல்
படக்குறிப்பு,கார் ஸ்பீக்கர் போலத் தோன்றும் ஒரு உளவு சாதனம்

  • எழுதியவர்,கோர்டன் கொரேரா
  • பதவி,பாதுகாப்பு நிருபர், பிபிசி செய்தி

லண்டனின் வடமேற்கில் உள்ள மில்டன் கெய்ன்ஸ் நகருக்கு வெளியே ஒரு பூங்காவில், ஐந்து முள்வேலி வளையங்களால் பாதுகாக்கப்பட்ட ஒரு அசாதாரணமான உற்பத்திப் பட்டறை உள்ளது.

அதன் 85 ஆண்டு கால வரலாற்றில் இப்பொழுது வரை ஊடகங்களுக்கு அதன் கதவுகள் திறக்கப்பட்டதில்லை.

ஹன்ஸ்லோப் பூங்காவில் உள்ள ஹெர் மெஜஸ்டியின் அரசாங்க தகவல் தொடர்பு மையத்தில் (His Majesty’s Government Communications Centre -HMGCC), பார்த்தவுடன் அன்றாட உபயோகத்திற்கு தேவையானவை போலத் தோன்றும் சில பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஆனால் அதற்குப் பின்னால், கோட் பிரேக்கர் ஆலன் டூரிங், சீல் செய்யப்பட்ட அறைகள் மற்றும் ஜேம்ஸ் பாண்ட் படங்களின் உயர்-ரகசிய சாதனங்களுடன் ஒப்பிடக்கூடிய பொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு ஆச்சரியமான கதை உள்ளது.

பிபிசிக்கு கிடைத்த பிரத்யேக அனுமதி

இவ்வளவு கடுமையான பாதுகாப்புக்கு என்ன காரணம்?

இந்தப் பொருட்கள் இங்கிலாந்து உளவாளிகளுக்காக உருவாக்கப்பட்டவை. அவர்களின் வேலையை மறைப்பதற்கு இவை உதவுகின்றன.

பிபிசி இந்த ரகசிய இடத்திற்கான பிரத்யேக அனுமதியைப் பெற்றுள்ளது, உள்ளே செல்ல நாங்கள் எங்கள் கைப்பேசிகளை ஒப்படைக்க வேண்டும் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் எப்பொழுதும் எங்களுடன் இருப்பார்கள்.

HMGCC அமைப்பு உளவு உலகில் முன்னேறவும், புதிய நட்பு நாடுகளைக் கண்டறியவும் முயற்சி செய்வதால், இந்த இடத்தின் உள்ளே என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய ஒரு பார்வையைப் பெற நாங்கள் அனுமதிக்கப்பட்டோம்.

“மக்கள் எங்களுடன் தொடர்புகொள்வதை நாங்கள் மிகவும் கடினமான ஒன்றாக வைத்துள்ளோம், அது எங்கள் 85 ஆண்டு கால வரலாற்றில் ஒரு சிறந்த வேலையாக இருந்தது,” என்று தலைமை நிர்வாகி ஜார்ஜ் வில்லியம்சன் விளக்குகிறார்.

மக்களிடம் இருந்து விலகி இருப்பது ‘விசித்திரமாக’ தோன்றினாலும், மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அவர் நம்புகிறார்.

பெயர் தெரியாத கட்டிடங்களுடன், அந்த இடம் ஒரு தொழிற்பேட்டை போல் காட்சியளிக்கிறது.

பொறியாளர்கள், இயற்பியலாளர்கள், வேதியியலாளர்கள், வடிவமைப்பாளர்கள், குறியீட்டாளர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் என பலரும் இணைந்து ‘கலை மற்றும் பொறியியல் துறையின் கலவை’ என்று விவரிக்கக்கூடிய ஒரு வேலையில் ஈடுபடுகிறார்கள்.

இங்கிலாந்து, உளவு அமைப்புகள், வரலாறு, உளவாளிகள், அரசியல்

பட மூலாதாரம்,ALAMY

படக்குறிப்பு,ஹான்ஸ்லோப் பூங்காவில் உள்ள வளாகம்

சில பகுதிகளில், நம்மை மின்சாரப் பாதிப்பிலிருந்து காப்பாற்றக்கூடிய ஆடைகளை அணியச் சொன்னார்கள், மற்றவற்றில் எலக்ட்ரானிக் சர்க்யூட் போர்டுகள், லேசர் கட்டர்கள் மற்றும் 3D அச்சுப்பொறிகள் (ஸ்டார் வார்ஸில் வரும் டார்த் வேடர், லூக் மற்றும் லியா என பெயரிடப்பட்டவை) உள்ளிட்ட பல்வேறு வகையான இயந்திரங்களைக் காட்டினார்கள்.

ஆனால் இந்த இயந்திரங்கள் எதற்காக உருவாக்கப்படுகின்றன?

பிரச்னை என்னவென்றால், இதைத் தெரிந்து கொள்ள எவ்வளவு முயற்சி செய்தாலும், யாரும் சொல்லப் போவதில்லை. ஏனென்றால், இங்கிருந்து தயாரிக்கப்பட்டு வெளியேறும் பொருட்கள் அரசு ரகசியத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன.

இரண்டாம் உலகப் போரில் நடந்த மாற்றம்

ஆனால் கடந்த காலத்திலிருந்து இந்த பொருட்கள் குறித்த துப்புகள் கிடைக்கலாம். இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாக ஐரோப்பாவில் உள்ள உளவாளிகள் மற்றும் தூதர்கள் ஐக்கிய ராஜ்ஜியத்துடன் இரகசியமாகவும் பாதுகாப்பாகவும் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் உண்டான போது HMGCC உருவாக்கப்பட்டது.

இது ஒரு அலுவலக பையில் கொண்டு செல்லக்கூடிய ரகசிய வானொலி அமைப்புகளை உருவாக்க வழிவகுத்தது. 1939-இல் போலந்து மீதான ஜெர்மன் படையெடுப்பிற்குப் பிறகு வார்சாவிலிருந்து தப்பியோடிய அதிகாரிகள், என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய செய்திகளைப் பரப்ப அவற்றில் சிலவற்றைப் பயன்படுத்தினர்.

இங்கிலாந்து, உளவு அமைப்புகள், வரலாறு, உளவாளிகள், அரசியல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆலன் டூரிங் இரண்டாம் உலகப் போரின் போது ஹான்ஸ்லோப் பூங்காவில் வேலை பார்த்து வந்தார்

போர் தொடங்கிய போது, ​​சிறிய வானொலிப் பெட்டிகளை தயாரிக்கத் தொடங்கியது HMGCC. அவை MI6 முகவர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட ஐரோப்பாவில் எதிரிகளின் எல்லைகளுக்குச் சென்று உளவுத் தகவல்களைச் சேகரித்து அனுப்புவதற்கு வழங்கப்பட்டது.

போரின் போது, ​​ஆலன் டூரிங் ஹான்ஸ்லோப் பூங்காவில் வசித்து வந்தார். அருகிலுள்ள பிளெட்ச்லி பூங்காவில் இரகசிய நாஜிக் குறியீடுகளை படிப்பதில் பிரபலமானவராக இருந்தார். குரல் குறியாக்கத்தை வழங்குவதற்கான சாதனத்தை உருவாக்க HMGCC-இல் பணியாற்றினார் ஆலன் டூரிங்.

பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க போர்க்கால தலைவர்கள் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் ஆகியோர் பயன்படுத்திய அமைப்பு 50 டன் எடை கொண்டது.

டெலிலா என்று அழைக்கப்படும் டூரிங்கின் இயந்திரம், ஒரு ரெக்கார்ட் பிளேயரின் சத்தத்தை குரலின் மேல் ஏற்றி வைத்தது. இது கைக்கு அடக்கமாகவும் இருந்தது, தொலைநோக்கு பார்வையுடன் உருவாக்கப்பட்ட ஒன்றாகவும் இருந்தது. அந்த இடத்தில் இன்று என்ன தயாரிக்கப்படுகிறது என்பது குறித்து ஒரு துப்பும் நமக்கு இதன் மூலம் கிடைக்கிறது.

நவீன உளவாளிகள்

“70 அல்லது 80 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு என்ன நடந்தது என்பதை நேரடியாகக் கண்டறிய முடியும் என்று நான் நினைக்கிறேன்,” என்று டூரிங்கின் மருமகன் சர் டெர்மட் டூரிங் பிபிசியிடம் கூறினார்.

“பாதுகாப்பான தகவல்தொடர்புகளின் தேவை முற்றிலுமாக அழியவில்லை,” என்று அவர் கூறுகிறார்.

சரி, இது நவீன உலகத்துடன் எவ்வாறு தொடர்புடையது?

இதற்கு பதில், ரஷ்யா அல்லது ஈரான் போன்ற ‘அனுமதி மறுக்கப்பட்ட பகுதிகளில்’ செயல்படும் ரகசிய முகவர்கள் தொடர்பு கொள்ள இது தேவை.

HMGCC இது கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், நவீன உளவாளிகள் ரகசிய டிரான்ஸ்மிட்டர்கள் போன்ற சாதனங்களை நம்பியிருப்பதாக மற்ற ஆதாரங்கள் கூறுகின்றன. அவை சாதாரண பொருட்களைப் போல தோற்றமளிக்கும் மற்றும் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் தகவல்களை அனுப்பலாம்.

அவர்கள் இதைத் தான் செய்கிறார்கள் என்று நான் கற்பனை செய்கிறேன், ஆனால் யாரும் அதைப் பற்றி சொல்ல விரும்பவில்லை.

இங்கிலாந்து, உளவு அமைப்புகள், வரலாறு, உளவாளிகள், அரசியல்

பட மூலாதாரம்,ALAMY

படக்குறிப்பு,உச்சக்கட்ட பாதுகாப்பில் தொழிற்சாலை

ஒட்டுக் கேட்க உதவும் சாதனங்கள்

அவர்கள் எனக்குக் காண்பிக்கும் மற்றொரு பொருள், HMGCC என்ன செய்கிறது என்பதற்கான கூடுதல் துப்பு அளிக்கிறது.

கார் ரேடியோ ஸ்பீக்கர், இது 1930-களில் இருந்து வருகிறது. இதன் பின்புறத்தில் ஒரு ரகசிய டிரான்ஸ்மிட்டர் உள்ளது.

தொடர்பு கொள்வது என்பது வேலையின் ஒரு பகுதி. ஒட்டுக் கேட்கும் மற்றும் கண்காணிப்பு சாதனங்களும் வேலையின் ஒரு பகுதியே. இருப்பினும் நான் மீண்டும் அவர்களிடம் கேட்கும் போது அதிகாரிகள் அதைப் பற்றி வாய் திறக்கவில்லை.

“எங்கள் 85 ஆண்டு கால வேலைகளில் நாங்கள் பாதுகாப்பான தகவல்தொடர்பு அமைப்புகளை உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் தொலைதூர, பெரும்பாலும் மோசமான மற்றும் ஆபத்தான இடங்களில் உள்ளவர்கள் இங்கிலாந்திற்கு இரகசியமாக தொடர்பு கொள்ள இவை அனுமதிக்கிறது,” என்று வில்லியம்சன் கூறுகிறார்.

மேலும் சில தேசிய பாதுகாப்பு ஏஜென்சிகளைப் பொறுத்தவரை, “கண்காணிப்பு போன்ற விஷயங்களைச் செய்ய அனுமதிக்கும் தொழில்நுட்பங்களை உருவாக்குவதன் மூலம் அவர்களின் சில ஆராய்ச்சிப் பணிகளுக்கு நாங்கள் உதவ முடியும்,” என்று அவர் கூறுகிறார்.

HMGCC-இன் வாடிக்கையாளர்களில், உள்நாட்டு உளவுத்துறை சேவையான MI5 அமைப்பும் அடங்கும். இது இங்கிலாந்தில் உள்ள ஒரு சந்தேகத்திற்குரிய நபரை ஒட்டுக் கேட்க அல்லது வாகனத்தில் அவரை பின்தொடர்ந்து கண்காணிக்க இவர்களின் உதவி MI5 அமைப்புக்கு தேவை.

யாரும் கண்டறியாத ஒரு அன்றாடப் பொருளாக கேட்கும் சாதனத்தை மறைத்து வைப்பதும் இதில் அடக்கம். பொருள் என்னவாக இருக்கலாம் என்பது இங்கே யாரும் பேச விரும்பாத மற்றொரு விஷயம்.

ஜேம்ஸ் பாண்ட் படங்களில் இருப்பது போல

இங்கிலாந்து, உளவு அமைப்புகள், வரலாறு, உளவாளிகள், அரசியல்
படக்குறிப்பு,ஸ்டார்கேட், இடைக்கால சித்திரவதை அறை போல் உணர வைக்கிறது

இதெல்லாம் ஜேம்ஸ் பாண்டின் ‘கியூ பிராஞ்ச்’ போல ஒரு அமைப்பு என்று சொல்லலாம்.

ஆனால் இந்த ஒப்பீடு முற்றிலும் சரியல்ல என்று நிபுணர்கள் நம்புகிறார்கள்.

அவர்கள் வெடி பொருட்களையோ அல்லது ராக்கெட் லாஞ்சர்களைக் கொண்டு கார்களையோ உருவாக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன், ஆனால் முற்றிலும் உறுதியாக எதையும் சொல்ல முடியாது.

ஒரு ரப்பர் தரை பதிக்கப்பட்ட அறையில், தற்செயலாக யாரையும் தாக்காமல் இருக்க, இரண்டு ஊழியர்கள் மின் சாதனங்களைச் சோதனை செய்கிறார்கள். இங்கு தயாரிக்கப்படும் பொருட்கள் கடுமையான வெப்பம் மற்றும் குளிர்ந்த வெப்பநிலையில் வேறு இடங்களில் சோதிக்கப்பட்டு, அவை அந்த சூழ்நிலைகளில் கூட தகவல் தொடர்புக்கு உதவும் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

அவர்கள் எனக்குக் காண்பிக்கும் விசித்திரமான இடங்களில் ஒன்று ஸ்டார்கேட் என்று அழைக்கப்படுகிறது, இது சிறிய சாம்பல் நுரை கூர்முனைகளால் வரிசையாக மூடப்பட்ட கொள்கலன். அறை பூட்டப்பட்டிருக்கும் போது, ​​நான் ஒரு மத்திய காலத்தைச் சேர்ந்த சித்திரவதை அறையின் நவீன பதிப்பில் இருப்பது போல் உணர்கிறேன்.

அறையில் ஒரு சுழலும் தளம் உள்ளது. ஒரு குறிப்பிட்ட தகவல் தொடர்பு சாதனம் எந்த வகையான தகவல் வெளியிடுகிறது என்பதை சோதிக்கும் சென்சார்கள் கொண்ட இயந்திரம் இந்த சுழலும் தளம் மூலம் நகர்த்தப்படுகிறது.

ஒரு எதிரி அரசிடம் உளவாளி சிக்கிக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளைக் அறிந்து கொள்ளவும், நமது பிராந்தியத்தில் பயன்படுத்தப்படும் சாதனங்களையும் அடையாளம் காணவும் இது உதவும்.

இங்கிலாந்து, உளவு அமைப்புகள், வரலாறு, உளவாளிகள், அரசியல்
படக்குறிப்பு,ஜார்ஜ் வில்லியம்சன் இந்த ஒத்துழைப்பு ‘சிறப்பான தொழில்நுட்பத்திற்கு’ வழிவகுக்கும் என்று நம்புகிறார்

பல வருடங்களுக்கு பிறகு திறக்கப்படும் கதவுகள்

மிகவும் கடுமையான விதிகளுக்கு உட்பட்டு, சிறிய தொடக்க நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படுகின்றன என்பதை அறிந்து, தனது பணிக்கு இன்றியமையாததாக இருக்கும் என்பதால், உலகிற்குத் தன் கதவுகளைத் திறக்கிறது HMGCC.

தேசிய பாதுகாப்புடன் எந்த தொடர்பும் இல்லாத பகுதிகளுடன் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டிருந்தாலும், டெவலப்பர்கள் அறியாத பயன்கள் அதில் இருக்கலாம்.

கடந்த காலத்தில் கடுமையான பாதுகாப்பு நியதிகள் இந்த முயற்சிக்கான ஒத்துழைப்பை சாத்தியமற்றதாக்கியிருக்கும், ஆனால் இப்போது அது நடக்கலாம் என்பது நம்பிக்கை.

“திட்டம் என்னவென்றால், தொழில்துறை அல்லது கல்வித்துறையைச் சேர்ந்த எங்கள் பொறியாளர்களையும் அவர்களின் சிறந்த யோசனைகளையும் ஒரே அறையில் செயல்படுத்தலாம் என்பது,” என்று வில்லியம்சன் கூறுகிறார்.

மேலும் அவர் கூறுகையில், “அந்த மாயாஜால தருணத்தில் வெவ்வேறு யோசனைகள் ஒன்றிணைந்தால், உண்மையிலேயே சிறப்பான ஒரு தொழில்நுட்பம் வெளிப்படும்,” என்றார்.

ஆனால், அந்தத் தொழில்நுட்பம் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பது இந்த இடத்தில் உள்ள எல்லாவற்றையும் போலவே எப்போதும் ரகசியமாகவே இருக்கும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்இன்ஸ்டாகிராம்எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

 

சிறப்புச் செய்திகள்

 

அதிகம் படிக்கப்பட்டது

Author


Hit Counter provided by technology news