Breaking

 

திமுக – விசிக: ரூ.4,000 கோடி மழைநீர் வடிகால் பணிக்கு திருமாவளவன் வெள்ளை அறிக்கை கேட்பதன் பின்னணி

தொல். திருமாவளவன்/மு.க.ஸ்டாலின்

சென்னையில் கடந்த வாரம் ஏற்பட்ட புயல்-வெள்ள பாதிப்புகளை தொடர்ந்து, சுமார் ரூ. 4,000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்ட மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், இந்த கோரிக்கையை வலியுறுத்தும் கட்சிகளின் பட்டியலில் திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகளும் இணைந்திருக்கிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், மழைநீர் வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவது அவசியம் என்றால் வெளியிடலாம் என கூறியிருக்கிறார். மேலும், என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன, எவ்வளவு நிதி செலவழிக்கப்பட்டுள்ளது என்பதை பொதுமக்கள் பார்வைக்கு தெரியப்படுத்துவது அவசியம் என அவர் தெரிவித்திருக்கிறார்.

இதன் மூலம், தமிழக அரசுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறார் அவர்.

சமீப காலமாக, திமுகவை பல்வேறு விவகாரங்களில் வெளிப்படையாகவே விமர்சித்து வருகிறார் திருமாவளவன்.

மு.க.ஸ்டாலின்/தொல். திருமாவளவன்

பட்டியல் பிரிவினர் மீதான வன்கொடுமைகள்

கரூர் மாவட்டத்தில் விசிக கொடிக்கம்பம் வெட்டி சாய்க்கப்பட்ட விவகாரம், வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம், நாங்குநேரியில் பட்டியல் பிரிவு மாணவர் மற்றும் அவரது தங்கையை சக மாணவர்கள் வெட்டிய சம்பவம் என, பல்வேறு சம்பவங்களில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறையின் மீது வெளிப்படையாகவே அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

அந்தந்த மாவட்டங்களில் இச்சம்பவங்களை கண்டித்து விசிக போராட்டங்களையும் நடத்தியிருந்தது. ”திமுக, அதிமுக என இரு கட்சிகளின் ஆட்சிகளிலும் பட்டியல் பிரிவினர் மீதான வன்கொடுமைகள் தொடர்கிறது” என்று அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், “திமுக கூட்டணியிலிருந்து விசிகவை வெளியேற்ற போலீஸ் முயற்சிக்கிறது,” என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார் அவர். நாங்குநேரி விவகாரத்தைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் இதனை தெரிவித்திருந்தார். தமிழ்நாட்டில் காவல்துறை முதல்வர் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

திமுக மீது கூர்மையான விமர்சனங்களை முன்வைப்பதோடு, அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் குறித்தும் அவர் நேரடியாக கருத்து சொல்கிறார். குறிப்பாக, ’பாஜகவுடன் கூட்டணி இல்லை’ என அதிமுக அறிவித்த போது அதிமுகவுக்கு திருமாவளவன் பாராட்டு தெரிவித்திருந்தார்.

விசிக தலைவரின் இத்தகைய கருத்துகள், திமுக-விசிக கூட்டணி குறித்த சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.

தொல். திருமாவளவன்

பட மூலாதாரம்,FACEBOOK/THOL.THIRUMAVALAVAN

“நல்லதை பாராட்டவும் செய்கிறோம்”

தமிழக அரசியல் அரங்கில் வி.சி.க.வைப் பொருத்தவரை, பா.ஜ.க.வுக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதி காட்டுகிறது. பா.ஜ.க.வுடன் அதிமுக உறவை முறித்துக் கொண்டதில் இருந்தே திமுக கூட்டணியில் வி.சி.க. தொடருமா என்ற கேள்வி தொடர்ந்து முன்வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

அதுகுறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு, ”கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. சில இடங்களில் எங்களின் கட்சி கொடியேற்றுவதற்கு அனுமதி கேட்போம், போலீஸ் கொடுக்க மாட்டார்கள். அது அதிகாரம் தொடர்புடையது. எப்போதும் நடப்பதுதான். கூட்டணிக்காக நாங்கள் அடிப்படை விஷயங்களை விட்டுத்தர முடியாது. மக்கள் பக்கம்தான் நாங்கள் நிற்க முடியும். கூட்டணி என்பது தேர்தல் சமயத்தில் தலைவர்கள் முடிவெடுப்பது. அரசு நல்லது செய்யும்போது பாராட்டுகிறோம். குறைகள் இருந்தால் அதையும் கூறுகிறோம்.

2015, 2018-இல் நடந்த மழை-வெள்ளங்களில் அதிமுகவுடன் ஒப்பிடுகையில் இப்போது வெள்ள பாதிப்புகள் குறைந்துள்ளன. மக்களுக்கு எல்லாம் கிடைத்துவிட்டதாக நாங்கள் சொல்லவில்லை, தேவைகள் இருக்கின்றன. செம்மஞ்சேரியில் மக்கள் கவனிப்பாரற்று இருக்கின்றனர். நகரத்திற்குள் அளிக்கப்பட்ட கவனம் இந்த பகுதிகளுக்கு அளிக்கப்படவில்லை” என்கிறார்.

மேலும், பட்டியல் பிரிவினருக்கு எதிரான பிரச்னைகளை தமிழக அரசு கையாண்ட விதம் விசிகவுக்கு திருப்திகரமாக இல்லை என கூறுகிறார் வன்னி அரசு.

“பட்டியல் பிரிவினருக்கு எதிரான வன்கொடுமைகளை முன்கூட்டியே தடுக்கும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. தனியாக இதற்கென பிரிவு உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறோம். ஆனால், இந்த பிரச்னைகளை வைத்து இன்னொரு கூட்டணிக்கு சென்றால் சாதிய பிரச்னைகளை ஒழித்துவிட முடியாது. அதனை ஒரு முன்நிபந்தனையாக வைக்க முடியாது. சாதியவாதிகள் எல்லா கட்சிகளிலும் இருப்பார்கள். ஆனால், கட்சி எடுக்கும் கொள்கை முடிவுகளை விசிக ஆதரிக்கிறது. சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை என அரசு அறிவித்துள்ளது. இம்மாதிரியான முயற்சிகளை ஆதரிக்கிறோம்” என்றார்.

திமுக கூட்டணியில் தான் தொடர்வோம் என திருமாவளவன் தெளிவுபடுத்தியுள்ளதாக அவர் கூறுகிறார்.

”அதிமுக – பாஜக கூட்டணி முறிவே தேர்தல் உத்திதான். பாஜகவின் செயல் தந்திரம் அது. பாஜகவின் மக்கள் விரோத செயல் திட்டங்களை அதிமுக ஆதரிக்கிறது,” என, அதிமுக மீதான விசிகவின் எதிர்ப்பு நிலைப்பாட்டை தெரிவிக்கிறார் விசிகவின் வன்னி அரசு.

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம்,GETTY IMAGES

”எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது”

திருமாவளவனின் இத்தகைய பேச்சுகள், கூட்டணிக்குள் பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது, மற்ற கட்சிகளிடமிருந்து தனித்து தெரிவதற்கான திருமாவளவனின் பாணி இது என, சில மூத்த பத்திரிகையாளர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

பிபிசியிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ‘தராசு’ ஷ்யாம், “இவையெல்லாம் கூட்டணியில் எந்த பாதிப்புகளையும் ஏற்படுத்தாது. திருமாவளவனுக்கு அனைத்து பிரச்னைகளிலும் தனி நிலைப்பாடு உள்ளது. திமுகவுடன் கூட்டணி தவிர்த்து அவர்களுக்கு வேறு வழி இல்லை” என்றார்.

’பாஜக இருக்கும் கூட்டணியில் நாங்கள் சேர மாட்டோம்’ என திருமாவளவன் தொடர்ந்து கூறிவருகிறார். தற்போது அதிமுக-பாஜக கூட்டணி முறிவை சுட்டிக்காட்டி ‘தராசு’ ஷ்யாமிடம் கேள்வி எழுப்பினால், “அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்பதன் காரணமாக விசிக-திமுக கூட்டணியின் உறுதி குறித்த யூகங்கள் எழுகின்றன. ஆனால், அதிமுக கூட்டணியில் யாருமே இல்லையே. அதிமுக கூட்டணி மெகா கூட்டணியாக உருப்பெறவில்லை. அதிமுக கூட்டணியில் பாமக வரும் என்ற நிலைமை இருக்கும் போது விசிக அக்கூட்டணிக்கு செல்லாது, அந்த பேச்சுக்கே இடமில்லை” என்றார் அவர்.

திருமாவளவனின் இத்தகைய பேச்சுகள் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தாதா என கேட்டால், “மக்கள் பிரச்னைகளில் திருமாவளவன் சுதந்திரமாக குரல் கொடுக்கிறார். திமுகவின் செயல்கள் அனைத்துக்கும் விசிக அடியொற்றி நடப்பதில்லை. திருமாவளவனின் பாணி அது. அது சரிதான் என நினைக்கிறேன். அத்தகைய பாணியை கடைபிடிக்காததால்தான், ’புதிய தமிழகம்’ கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஜான் பாண்டியன் போன்றோர் நிலைக்கவில்லை” என தெரிவித்தார்.

மு.க. ஸ்டாலின்

பட மூலாதாரம்,X/DMK

“எல்லோரும் ஒரே கட்சி இல்லை”

திமுக-விசிக கூட்டணி எவ்வளவு வலுவாக இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த திமுகவின் அமைப்பு செயலாளார் ஆர்.எஸ். பாரதி, “வெள்ளை அறிக்கை அவசியம் என்றால் வெளியிடுவதில் தவறில்லை என திருமாவளவன் கூறியிருக்கிறார். ஒவ்வொரு கட்சியும் தங்கள் எதிர் கருத்துகளை சொல்வார்கள். எல்லோரும் ஒரே கட்சி இல்லையே. அவர்களுக்கென தனி கொள்கை இருக்கிறது. மக்களவை தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தலை விசிகவுடன் இணைந்தே சந்தித்துள்ளோம். எங்களின் கூட்டணி வலுவாக இருக்கிறது” என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்இன்ஸ்டாகிராம்எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

 

சிறப்புச் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டது

Author


Hit Counter provided by technology news