ஏமனில் பணம் கொடுத்தால் மரண தண்டனையிலிருந்து தப்பி விடலாமா? நிமிஷா பிரியா வழக்கின் பின்னணி என்ன?

டெல்லி நீதிமன்றம், ஏமன், இந்தியா, கேரளா, மரண தண்டனை
படக்குறிப்பு,கேரள செவிலியர் நிமிஷா

  • எழுதியவர்,சிராஜ்
  • பதவி,பிபிசி தமிழ்

ஏமன் நாட்டில் மரண தண்டனை வழங்கப்பட்டுச் சிறையில் இருக்கும் கேரளாவைச் சேர்ந்த செவிலியரான நிமிஷா பிரியாவை விடுவிக்க அவரது குடும்பத்தின் தரப்பில் ஒரு பெரிய போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில், நிமிஷாவின் குடும்பம், கொலை செய்யப்பட்ட ஏமன் நாட்டைச் சேர்ந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை வழங்கினால் விடுதலை கிடைத்துவிடும் என்று பரவலாகப் பேசப்படுகிறது.

இந்நிலையில் இது ‘ஏமனில் கொலை செய்துவிட்டுப் பணம் கொடுத்தால் தப்பித்துவிடலாம்’ என்பதுபோன்ற பிம்பத்தைத் தோற்றுவிப்பதாகக் கூறுகிறார்கள் நிமிஷாவை விடுவிக்கப் போராடி வருபவர்கள்.

பணத்தைவிட இந்த வழக்கில் முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது.

அது, கொலை செய்யப்பட்டவரின் குடும்பம் தரும் மன்னிப்பு.

இந்த மன்னிப்பைப் பெறவே தாம் முயன்று வருவதாகவும், அதற்காகத்தான் அவர்கள் ஏமன் செல்லவிருப்பதாகவும் கூறுகின்றனர், நிமிஷாவை விடுவிக்கப் போராடி வருபவர்கள்.

என்ன வழக்கு?

2017-ஆம் ஆண்டு ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்ற உள்ளூர்வாசியின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு ஏமனின் மத்திய சிறையில் இருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த 34 வயதான செவிலியர் நிமிஷா பிரியா.

மரண தண்டனையை ரத்து செய்யக் கோரிய அவரது மேல்முறையீட்டு மனுவை கடந்த நவம்பர் 13-ஆம் தேதி ஏமனின் தலைமை நீதித்துறை கவுன்சில் நிராகரித்தது. இதனால், மரண தண்டனை உறுதி செய்யப்பட்டு ஏமனின் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் நிமிஷா பிரியா.

ஏமன் நாட்டில் ஷரியத் சட்டம் நடைமுறையில் உள்ளதால் மரண தண்டனையில் இருந்து தப்ப மற்றொரு வாய்ப்பு நிமிஷாவுக்கு உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தின் மன்னிப்பைப் பெற்று இழப்பீட்டுத் தொகை செலுத்தி மரண தண்டனையில் இருந்து விடுதலையாவதே நிமிஷாவிற்கு இருக்கும் அந்த ஒரே வாய்ப்பு.

ஆனால், ஏமன் நாடு ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்களுக்கும் ஏமன் அரசுக்கும் இடையே நீண்ட காலமாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. ஹூதி கிளர்ச்சியாளர்களை இந்திய அரசு அங்கீகரிக்கவில்லை.

எனவே இந்திய குடிமக்கள் ஏமனுக்கு செல்வது ஆபத்தானதாக இருக்கும் என இந்திய அரசு கருதுகிறது. எனவே இங்கிருந்து நிமிஷாவின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் சென்று அவரை மீட்பதில் சிக்கல் நிலவி வந்தது.

ஏமனுக்கு செல்ல அனுமதி அளித்த டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி நீதிமன்றம், ஏமன், இந்தியா, கேரளா, மரண தண்டனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஏமன்

இது குறித்து முன்னர் பிபிசியிடம் பேசியிருந்த நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி. “நான் ஏமனுக்கு சென்று அவர்களிடம் மன்னிப்பு கேட்பேன். என் உயிரை எடுத்துக்கொள்ளுங்கள், மகளை மன்னித்துவிடுங்கள் என அவர்களிடம் கேட்பேன்,” என்று கூறினார்.

நிமிஷாவை மீட்க ஏமன் செல்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அங்கு ராஜ்ஜிய ரீதியான கட்டமைப்பு இல்லை என்ற காரணத்தைக் கூறி இதற்கான அனுமதியை இந்திய அதிகாரிகள் நிராகரித்தனர். இதைத் தொடர்ந்து நிமிஷாவின் தாயார் பிரேமா டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார்.

சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில் குழு சார்பில் (Save Nimisha Priya International Action Council) டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பிரேமா குமரியை தங்கள் கவுன்சிலை சேர்ந்த இரு உறுப்பினர்கள் உடனிருந்து அழைத்துச் செல்வார்கள் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஏமனுக்கு நிமிஷாவின் தாயார் மற்றும் அவருடன் மேலும் ஒரு நபரும் பயணிக்க அனுமதி அளித்துள்ளது. இந்த பயணத்திற்கு அவர்கள் மத்திய அரசைச் சாராமல், சொந்த பாதுகாப்பை தாங்களே உறுதி செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஏமன் செல்ல டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் தனது பயணம் தொடர்பாக ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறும், பயண விவரங்களையும் முழுமையாக தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.

ஏமன் வரலாற்றில் இது முதல்முறை

டெல்லி நீதிமன்றம், ஏமன், இந்தியா, கேரளா, மரண தண்டனை
படக்குறிப்பு,தமிழ்நாட்டைச் சேர்ந்த சாமுவேல் நிமிஷாவை மீட்க முயற்சித்து வருகிறார்

“ஏமனில் பல கொலை வழக்குகளுக்கு உடனடியாக தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வழக்கில் நிமிஷா தரப்பு நியாயத்தை புரிந்துகொண்டு ஏமன் அரசு தண்டனை நிறைவேற்றுவதில் காலம் தாழ்த்தி வருகிறார்கள். ஏமன் வரலாற்றில் ஒரு வழக்கிற்கு இவ்வளவு நாட்கள் எடுத்துக்கொள்வது இதுவே முதல் முறை,” என்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாமுவேல் ஜெரோம்.

நிமிஷா பிரியா வழக்கை ஊடக வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் சாமுவேல் ஜெரோம். ஏமன் நாட்டில் வானூர்தி ஆலோசகராக பணிபுரியும் இவர் தற்போது தமிழ்நாட்டில் உள்ளார். நிமிஷாவின் தாயாருடன் ஏமன் செல்ல இவருக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தொடர்ந்து பேசிய சாமுவேல், “ஒரு சக இந்தியர் என்பதால் தான் நிமிஷா குறித்து ஊடகங்களிடம் கூறினேன். ஆரம்பத்தில் நானும் அவரை குற்றவாளியாக தான் பார்த்தேன். ஆனால் பின்னர் அவரது நிலையைக் குறித்து முழுதாக தெரிந்து கொண்டதால் அவர் பக்க நியாயம் எனக்கு புரிந்தது. நிமிஷாவின் நிலையில் இருந்து பார்க்கும்போது மன்னிக்கப்பட அவர் தகுதியானவரே,” என்கிறார்.

அவர் மேலும் கூறுகையில், “முதலில் நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நிமிஷா கொலை செய்து விட்டார், இப்போது பணம் கொடுத்து அவரை நாங்கள் மீட்க போகிறோம் என்றே பலரும் நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள் அந்த குடும்பத்திடம் மன்னிப்பைப் பெறப் போகிறோம்.

“பணம் இங்கு ஒரு முக்கியமான விஷயமே அல்ல, மன்னிப்பிற்கான ஒரு குறியீடு மட்டுமே. அதை ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் தலால் அப்தோ மஹ்தி குடும்பத்தின் தனிப்பட்ட விருப்பம்,” என்று கூறுகிறார் சாமுவேல் ஜெரோம்.

‘பணம் கொடுக்க அல்ல, மன்னிப்பு பெறவே செல்கிறோம்’

“ஏமன் நாட்டின் ஒரு குடிமகனைக் கொலை செய்துவிட்டு, பணம் கொடுத்தால் மட்டும் விட்டுவிடுவார்களா? பல கொலை வழக்குகளில் உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் நிமிஷாவின் நிலையைப் புரிந்து ஏமன் நாட்டு அதிகாரிகள் பொறுமை காத்து வருகிறார்கள். நிமிஷா செய்த செயலை நான் நியாயப்படுத்தவில்லை ஆனால் அவர் எந்த சூழ்நிலையில் அதை செய்தார் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்,” என்கிறார் சாமுவேல் ஜெரோம்.

அவர் மேலும் கூறியது, “ஏமன் நாட்டின் ஷரியத் சட்டத்தின் படி பாதிக்கப்பட்ட குடும்பத்தின் மன்னிப்பைப் பெறுவதே முக்கியம். முதலில் ஏமன் பழங்குடி இனத்தலைவர்களுடன் நாங்கள் பேச வேண்டும். அவர்கள் எங்கள் மன்னிப்பை ஏற்க வேண்டும்.

அதன் பின் பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் பழங்குடித் தலைவர்கள் பேசுவார்கள். அந்த குடும்பம் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். பின்னர் மன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை ஏமன் நீதிமன்றத்தில் தெரிவித்த பின் நிமிஷா விடுதலை செய்யப்படுவார். இது ஒரு கூட்டு முயற்சி,” என்கிறார் சாமுவேல்.

“பணம் மட்டுமே பிரதானம் என்பது போல சில ஊடகங்கள் சித்தரித்து விட்டதால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மனம் புண்பட்டுள்ளது. உங்கள் குடும்பத்தில் ஒருவரை கொன்றுவிட்டு மிகப்பெரிய தொகையைத் தருகிறோம் என்று சொன்னால் யாராவது ஒப்புக் கொள்வார்களா? இதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.

“எனவே நான் வைக்கும் ஒரு வேண்டுகோள், நிமிஷா ஒரு சூழ்நிலைக் கைதி. அவரது நிலையைப் புரிந்து அந்த நாட்டினரே மன்னிப்பைக் குறித்து யோசிக்கும் போது, பலரும் பணம் கொடுத்து அழைத்து வருகிறோம் என்று எழுதுகிறார்கள். அது உண்மையில்லை,” என்று கூறுகிறார் சாமுவேல்.

ஜனவரியில் ஏமனுக்கு பயணம்

டெல்லி நீதிமன்றம், ஏமன், இந்தியா, கேரளா, மரண தண்டனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஏமனில் நிலவும் போர் சூழல்

நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரிக்கு விசா கிடைத்தவுடன் ஜனவரி மாதத்தின் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் ஏமனுக்கு செல்லவிருப்பதாக கூறினார் சாமுவேல்.

“டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. கேரளாவைச் சேர்ந்த சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில் குழுவின் முயற்சியால் தான் இது நடந்தது. நிமிஷாவை மீட்பதில் அவர்களது பங்கு முக்கியமானது. இந்திய அதிகாரிகளும் ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளனர். எல்லாம் சரியாக நடக்கும் என நம்புகிறோம்” என்கிறார் சாமுவேல் ஜெரோம்.

பிரேமா குமரியின் வழக்கறிஞர் கே.எல்.பாலச்சந்திரனிடம் பேசிய போது, “டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பல வருட போராட்டத்திற்கு கிடைத்துள்ள பலன். 2020-இல் நிலைமை ஏமனில் சீராக இருந்தபோதே அங்கு செல்ல எனக்கும் நிமிஷாவின் தாயாருக்கும் இந்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.

“பின்னர் போர் சூழல் நிலவியதால் எங்களால் அங்கு செல்ல முடியாத நிலை நிலவி வந்தது. இப்போது இந்த தீர்ப்பால் அடுத்த மாதம் ஏமன் செல்ல பிரேமா குமரிக்கு விசா கிடைத்து விடும். நிமிஷாவை கண்டிப்பாக மீட்டு விடலாம் என்ற நம்பிக்கை உள்ளது. அங்கு போர் சூழல் உள்ளதால் நிலைமை சற்று பதற்றமாக தான் உள்ளது, ஆனாலும் பிரேமா குமாரி தன் மகளை மீட்பதில் உறுதியாக உள்ளார்,” என்று அவர் கூறினார்.

‘தடைகளைத் தாண்டி மகளை மீட்டு வருவேன்’

டெல்லி நீதிமன்றம், ஏமன், இந்தியா, கேரளா, மரண தண்டனை
படக்குறிப்பு,நிமிஷாவின் தாய் பிரேமா குமாரி

“அயல்நாட்டு மண்ணில் என் மகள் இறப்பதை நான் விரும்பவில்லை. அங்கு நிலைமை சரியில்லை, பாதுகாப்பில்லை எனக் கூறுகிறார்கள், ஆனாலும் அங்கு செல்வதில் உறுதியாக உள்ளேன். எனக்கு நம்பிக்கை உள்ளது, பாதிக்கப்பட்ட குடும்பம் எனது மகளை நிச்சயமாக மன்னித்து விடுவார்கள்,” எனக் கூறுகிறார் நிமிஷாவின் தாய் பிரேமா குமாரி.

நாட்கள் கடக்க கடக்க பிரேமாவின் தாங்கொணா துயர் அதிகரித்து வருகிறது. “நிமிஷாவிற்கு பெண் குழந்தை உள்ளது. அந்தக் குழந்தைக்கு தாய் இருக்க வேண்டும்,” என்கிறார் பிரேமா.

அவர் தொடர்ந்து கூறியது, “நிமிஷா படிப்பில் சிறந்து விளங்கினார். நாங்கள் வறுமையில் இருந்ததால் அவரது பள்ளி மற்றும் செவிலியர் படிப்பிற்கான செலவை உள்ளூர் தேவாலயம் ஏற்றுக்கொண்டது. ஆனால், டிப்ளமோ படிப்பிற்கு முந்தைய பள்ளி தேர்வில் தேர்ச்சி பெறாததால் கேரளாவில் செவிலியராகப் பணிபுரிய நிமிஷா தகுதி பெறவில்லை. எனவே தான் ஏமன் சென்றார்,” என்கிறார் பிரேமா குமாரி.

“வறுமையிலிருந்து குடும்பத்தை விடுவிக்க ஏமன் சென்ற என் மகள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் மாட்டிக்கொள்வார் என கனவிலும் நினைக்கவில்லை. எப்படியாவது என் மகளை மீட்டு விடுவேன்,” எனக் கூறுகிறார் பிரேமா குமாரி.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்இன்ஸ்டாகிராம்எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

 

சிறப்புச் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டது

Author


Hit Counter provided by technology news