சத்ரபதி சிவாஜி மருமகன் கைப்பற்றிய ஆத்தூர் கோட்டையை மீட்க ஔரங்கசீப் உதவியது எப்படி?

ஆத்தூர் கோட்டை, சிவாஜி, ஔரங்கசீப்

  • எழுதியவர்,மாயகிருஷ்ணன் .க.
  • பதவி,பிபிசி தமிழுக்காக

சேலம் மாவட்டம் ஆத்தூரில் பேருந்து நிலையத்திற்குப் பின்புறம், சிதிலமடைந்த நிலையில் நிற்கிறது ஆத்தூர் கோட்டை.

இன்று பெரிதும் மறக்கப்பட்ட நிலையில் இருக்கும் இக்கோட்டையின் வளாகத்திற்குள் சில மக்கள் வீடு அமைத்து வாழ்கின்றனர்.

ஆனால், இந்தக் கோட்டை 1,000 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ளது. சத்ரபதி சிவாஜி, ஔரங்கசீப் போன்ற இந்திய வரலாற்றின் முக்கியமான பெயர்களுடன் தொடர்புடையது.

அந்த வரலாற்றை அறிந்துகொள்ள பிபிசி தமிழ் ஆத்தூர் கோட்டைக்கு நேரடியாகச் சென்றது.

ஆத்தூர் கற்கோட்டை

மன்னராட்சி காலகட்டத்தில் கட்டப்பட்ட, இன்று நம் கண்முன்னே காணக் கிடைக்கும் அரண்மனைகளும் கோட்டைகளும் மற்றக் கட்டுமானங்களும் சிதைந்திருக்கலாம், அழிவின் விளிம்பில் நிற்கலாம். ஆனாலும் அவை கம்பீரமானவை, காண்போரை வியக்க வைப்பவை.

இவை, முன்னோர்களின் வீரத்தை, போர்த் திறனை, நிர்வாகத் திறனை, வாழ்வியலை, உணர்த்தி நிற்கும் மௌன சாட்சியங்கள். கால ஒட்டம் இந்த சின்னங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைத்து வந்தாலும், தன் கடைசி அடையாளம் இம்மண்ணில் உள்ளவரை இவைதம் பணியை நிறுத்தப் போவதில்லை.

கோட்டை என்பது அக்கால அரசர்களால் பாதுகாப்பு காரணங்களுக்காக கட்டப்பட்டது. அதுவே இன்று முன்னோர்களின் கட்டடக் கலையையும் மன்னர்களின் போர் தந்திரத்தையும் அறிய உதவும் சாட்சிகளாகத் திகழ்கின்றது.

இவற்றில் சில கோட்டைகள் அரசர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் தங்குமிடங்களாக, போர் வீரர்களுக்கான பாசறைகள், சில அரச அலுவலகங்களாகச் செயல்பட்டன. சில கோட்டைகள் நகரங்களையும் அவற்றுக்குள் அடக்கி நிற்கின்றன.

பெரும்பாலான கோட்டைகள் மலைகள் மீதும் மலைக் குன்றுகள் மீதும் மேடான பகுதிகள் மீதும் அமைக்கப்பட்டிருந்தன என்ற போதிலும் சில கோட்டைகள் விதிவிலக்காக நிலப்பரப்பிலும் கட்டப்பட்டன. அப்படி நிலப்பகுதியில் ஆற்றின் ஓரத்தில் கட்டப்பட்ட அழிவின் விளிம்பில் நிற்கும் ஆத்தூர் கல் கோட்டையைப் பற்றி இங்கு விரிவாகக் காண்போம்.

கம்பீரமாக நிற்கும் ஆத்தூர் கோட்டை

ஆத்தூர் கற்கோட்டை

சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையத்திற்கு பின்புறம் உள்ளது ஆத்தூர் கோட்டை. வசிஷ்ட நதியின் தென்கரையில் அமைந்துள்ள இந்தக் கோட்டைக்கு விழுப்புரம் வரலாற்றுத் துறையின் பேராசிரியர் ரமேஷ், வரலாற்று ஆய்வாளர் ஜெயபால் ரத்தினம் மற்றும் எழுத்தாளர் இடைப்பாடி அமுதனும் பிபிசி தமிழுடன் இணைந்து வந்தனர்.

தற்போதைய ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட இந்த கோட்டையானது 8வது வார்டு பகுதியாக உள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்ட இந்தக் கோட்டையின் உள்புறம் மக்கள் வீடு கட்டியும் விவசாயம் செய்தும் வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களின் வீடுகளைத் தாண்டி உள்ளே நுழையும்போது இடப்புறத்தில் உயர்ந்த கற்சுவரைச் சுற்றி கம்பி வேலி ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது.

அங்கிருந்தே பிபிசி தமிழிடம் ஆத்தூர் கோட்டை குறித்து விழுப்புரம் அண்ணா கலைக் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ் பேசத் தொடங்கினார்.

நாயக்கர் கால கட்டுமானங்கள்

ஆத்தூர் கற்கோட்டை

“இந்தக் கோட்டையானது சேலத்தில் இருந்து கிழக்கில் 50 கி.மீ. தூரத்தில் சென்றுகொண்டிருக்கும் வசிஷ்ட நதியின் தென்கரையில் அமைந்துள்ளது. மிகப்பெரிய அளவிலோன கருங்கற்களை மட்டுமே பயன்படுத்தி அமைக்கப்பட்ட, 30 அடி உயரமும் 15 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட கற்கோட்டை இது,” என்று விளக்கினார் பேராசிரியர் ரமேஷ்.

“கி.பி. 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் பராந்தக சோழன் கல்வெட்டில் ஆற்றூர் கூற்றம் என்று இந்தப் பகுதி கூறப்படுகிறது. இடைக்காலத்தில் அதாவது, மைசூர் மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கி.பி.1689 முதல் அனந்தகிரி என்று அழைக்கப்பட்டது.

இந்தக் கோட்டை கட்டுமானம் குறித்துப் பல்வேறு கருத்துகள் நிலவி வந்தாலும் 11ஆம் நூற்றாண்டில் கெட்டி முதலிகள் வம்சத்தினரால் கட்டப்பட்டது. இதனுடைய கட்டுமான அமைப்புகள் நாயக்கர்கள் கால பாணியில் உள்ளன,” என்று விளக்கினார் அவர்.

மேலும், நாயக்கர் காலத்தில் இது மேம்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக அவர்களின் குறுவால் சின்னமும் சுவற்றில் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

எதிரிகள் எளிதில் நுழைய முடியாத கட்டுமானம்

ஆத்தூர் கற்கோட்டை

இந்தக் கோட்டை 62 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஆனால், வாயில் மிகவும் குறுகிய அமைப்பில், எதிரிகள் எளிதில் நுழைய முடியாதவாறு அமைக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் ரமேஷ் விவரித்தார்.

“கோட்டைக்கு மிக அருகில் ஓடிக் கொண்டிருக்கும் வசிஷ்ட நதி, மிகச் சிறந்த பாதுகாப்பு அரணாக அமைந்தது. பீரங்கிகளை கொண்டு தாக்கினாலும் பாதிக்கப்படாத வகையில் கட்டுமானம் வலிமையாக உள்ளது.

கோட்டை நுழைவுவாயிலைத் தாண்டி உள்ளே செல்லும்போது சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட காய நிர்மலேஸ்வரர் ஆலயம் உள்ளது. இதில் பராந்தக சோழன் மற்றும் கிருஷ்ண தேவராயரின் 16ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. இவை தானங்கள் குறித்த தகவல்களைக் கூறுகின்றன.

சற்று தூரத்தில் அதே காலத்தில் கட்டப்பட்ட பெருமாள் கோவிலும் உள்ளது,” எனக் கூறினார் ரமேஷ்.

இரண்டு மாளிகைகளும், களஞ்சியமும்

ஆத்தூர் கற்கோட்டை

கோட்டைக்குள் தற்போதும் பார்க்கும் வகையில் உள்ள இரண்டு மாளிகைகள், மாடங்கள், களஞ்சியக் கூடங்கள் உள்ளன.

பேராசிரியர் ரமேஷின் கூற்றுப்படி, நல்ல காற்றோட்டமான, வெளிச்சமான இந்த மண்டபம் நெடுங்காலம் பயன்பாட்டில் இருந்துள்ளது.

தானியக் களஞ்சியங்களை அடுத்து மதில் சுவர் ஓரத்திலேயே சென்று கொண்டிருக்கும்போது கோட்டையின் வடமேற்கு சுவருக்கு உள்ளே கல்லறை மற்றும் நினைவுச் சின்னம் காணப்படுகிறது.

ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவத்தில் பணிபுரிந்த குதிரைப்படை லெஃப்டினன்ட் கர்னல் ஜான் முர்ரே கி.பி.1799 மே மாதம் 6ஆம் தேதி மரணமடைந்தார்.

அதன் நினைவாக அவரது மனைவி ஆன் முர்ரே சார்பாக எழுப்பப்பட்ட நினைவுச்சின்னம் இது. தற்போது முட்புதர்களால் சூழப்பட்டுக் காணப்படுகிறது.

கோட்டையை செப்பனிட்ட இந்தூர் அரவை இயந்திரம்

ஆத்தூர் கற்கோட்டை

இந்தக் கோட்டையின் தானியக் கிடங்குகள் மண்டபங்களைப் பழுது நீக்க இயந்திரம் ஒன்று 90 ஆண்டுகளுக்கு முன்னர் வட இந்தியாவின் இந்தூரில் இருந்து எடுத்து வரப்பட்டு, அந்தக் கால முறையிலேயே கடுக்காய், சுண்ணாம்பு பயன்படுத்தி இந்த இயந்திரத்தில் அரைத்து கோட்டையைப் பழுது பார்த்துள்ளனர். அந்த இயந்திரம் தற்போதும் காட்சிப் பொருளாகவே இங்கு வைக்கப்பட்டுள்ளது.

கோட்டையின் பின்புறம் மேற்குப் பகுதியில் அகழியை ஒட்டி சுரங்கப் பாதை காணப்படுகிறது. இது தற்போது மண் சரிந்து மூடியுள்ளது என்று கூறியவாறு அதகக் காண்பித்தார் பேராசிரியர் ரமேஷ்.

“கி.பி. 1689இல் மைசூர் மன்னர் சிக்கப்பா தேவர் ஆத்துரைக் கைப்பற்றினார் . தொடர்ந்து, கி.பி .1768ஆம் ஆண்டு கிழக்கிந்திய ராணுவ தளபதி கர்னல் வுட் இந்தக் கோட்டையைக் கைப்பற்றினார். அதே ஆண்டின் டிசம்பர் மாதம் ஹைதர் அலி இந்தக் கோட்டையை மைசூர் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.

கி.பி.1792இல் மங்களூர் போருக்குப் பிறகு ஆங்கிலேயர்களுக்கும் திப்பு சுல்தானுக்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி, ஆங்கிலேயர் வசம் இந்தக் கோட்டை ஒப்படைக்கப்பட்டது. இதில், கேப்டன் கேம்பல் தலைமையில் 23வது படைப்பிரிவைக் கொண்டு ராணுவ முகாமாகவும் இந்த இடம் மாற்றப்பட்டது. தொடர்ந்து பீரங்கி நிறுத்தும் பகுதியாகவும் இது செயல்பாட்டில் இருந்தது.

இறுதியாக கி.பி.1524ஆம் ஆண்டு ஆத்தூர் கோட்டை நிர்வாக காரணங்களுக்காக ராணுவ நிலையம் என்னும் அடையாளத்தை இழந்து அங்கிருந்த படைகள் கலைக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து இது ஆத்தூர் நகரப் பகுதியாக மாற்றப்பட்டது என்று,” கூறினார் ரமேஷ்.

ஆனால், தற்போது இந்தக் கோட்டை மக்களின் ஆக்கிரமிப்புப் பகுதியாக மாறி வருவதாகவும் வருத்தத்துடன் குறிப்பிட்டார் பேராசிரியர் ரமேஷ்.

மலையமான்கள் ஆண்ட பகுதி ஆத்தூர்

ஆத்தூர் கற்கோட்டை

ஆற்றின் கரையில் தோன்றியதால் ஆற்றூர் எனப் பெயர் பெற்றாலும், பேச்சு வழக்கில் ஆத்தூர் எனத் திரிந்து இன்றைய ஆவணங்களிலும் அவ்வாறே பெயர் நிலைத்துவிட்டது என்று கூறினார் வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான ஜெயபால் ரத்தினம்.

இந்தக் கோட்டை குறித்து மேலும் பல கூடுதல் விவரங்களை அவர் பிபிசி தமிழிடம் கூறத் தொடங்கினார்.

“தற்போது ஆத்தூர் என்ற பெயர் நிலைத்துவிட்டாலும், பண்டைய கல்வெட்டுகளும் ஓலைச் சுவடிகளும் சுட்டும் பெயர் ஆற்றூர்தான். சங்ககாலப் புலவர்கள் போற்றிய புகழ்மிக்க குறுநிலங்களுள் ஒன்று ’மலையநாடு’. திருக்கோவிலூர் முதல் ஆற்றூர் வரை பரந்து நீண்டிருந்த இவ்வரசின் தலைவன் மலையமான் எனப்பட்டான்.

இந்தத் தொல்குடி மரபில் வந்த மலையமான் திருமுடிக்காரியின் நாடுதான் மலையநாடு. அவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த ஊர்களுள் ஒன்றுதான் ஆற்றூர் என்ற அனந்தகிரி,” என்று விளக்கினார் ஜெயபால் ரத்தினம்.

ஆத்தூர் கற்கோட்டை
படக்குறிப்பு,வரலாற்று ஆய்வாளர் ஜெயபால் ரத்தினம்

மேற்கொண்டு பேசியவர், அனந்தகிரி என்றால் மலைகளுக்கிடையே அமைந்துள்ள ஊர் எனப் பொருள் உண்டு. ஆத்தூர், அனந்தகிரி என இரு பெயர்களால் இது அழைக்கப்பட்டதாக “ரிச்சர்ட்ஸ்” என்ற ஆங்கிலேயர் தனது குறிப்பில் எழுதியுள்ளதாகக் கூறினார்.

“சில குறுநில அரசுகள், தங்கள் தனித்தன்மைகளை இழக்காமல் பேரரசுகளின் அங்கமாகச் செயல்பட்டு வந்திருந்ததை வரலாறு பதிவு செய்துள்ளது.

அவ்வாறான குறுநில அரசுகளில் மலையநாடும் ஒன்று. பல்லவர்-சோழர் பேரரசு காலங்களில் அவ்வரசுக்கு உட்பட்ட, ஆனால் மரபார்ந்த ஆட்சியுரிமையுடன் கூடிய சிற்றரசாகவே மலையநாடு செயல்பட்டது.

அதன்படி, மலையமான் மரபினரே தொடர்ந்து மலையநாட்டின் சிற்றரசராக விளங்கி வந்தனர். மலையநாடு ’மலாடு’ மற்றும் ’மிலாடு’ எனவும் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் குறிப்பிடப்படுகிறது.”

மலைய நாடு பகுதிளை அடக்கிய ஜனநாத வளநாடு

ஆத்தூர் கற்கோட்டை

மேலும், நிர்வாக வசதிக்காக கூற்றங்களும் நாடுகளும் உருவானபோது, ஆற்றூர் உள்ளிட்ட பகுதிகள், ஆற்றூரைத் தலைமையிடமாகக் கொண்ட ’ஆற்றூர் கூற்றம்’ என உருவானதாகவும் கூறுகிறார் வரலாற்று ஆய்வாளர் ஜெயபால் ரத்தினம்.

“சோழ அரசில் வளநாடுகள் உருவானபோது ஆற்றூர் கூற்றம் உள்ளிட்ட மலையநாட்டுப் பகுதிகள் முழுவதையும் உள்ளடக்கி ’ஜனநாத வளநாடு’ என்ற பெயரில் வளநாடு உருவானது.

முதலாம் குலோத்துங்க சோழனுக்குப் பின் வந்த அரசரான ராஜாதிராஜன் காலத்தில் சோழ அரசில் ஆற்றூர் கூற்றத்திற்கு உட்பட்டிருந்த ‘ஆறகழூர்’ என்னும் ஊரைத் தலைமையிடமாகக் கொண்டு, வன்னாடு, வள்ளுவப்பாடிநாடு, மலையநாடு மற்றும் சில பகுதிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ’மகதநாடு’ என்ற பெயரில், ஒரு புதிய சிற்றரசு உருவாக்கம் பெற்றது.

இந்த சிற்றரசில் ஆற்றூர் கோட்டத்திலிருந்த அனைத்துப் பகுதிகளும் இடம் பெற்றிருந்தன. வாணகோவரையர் மகதநாட்டின் சிற்றரசர் ஆனார். அச்சிற்றரசில் ஆற்றூர் கூற்றமும் தொடர்ந்தது.

சோழர் ஆட்சி முடிவுற்று பாண்டியர் ஆட்சி மலர்ந்தபோது, பாண்டிய நாட்டிற்கு உட்பட்ட மகதை மண்டலமாக ஆறகழூர் சிற்றரசுப் பகுதிகள் விளங்கின. போசளர் ஆட்சியிலும் சில காலம் இருந்தன. பாண்டியர் அரசின் வீழ்ச்சிக்குப் பின் விஜயநகர அரசின் ஆட்சி ஏற்பட்டது,” என்று விளக்கினார் ஜெயபால் ரத்தினம்.

செஞ்சி நாயக்கத்திற்கு உட்பட்ட பகுதி

ஆத்தூர் கற்கோட்டை

மேலும், விஜயநகர அரசில் சந்திரகிரி, மைசூர், மதுரை, தஞ்சாவூர், செஞ்சி, ஆகிய ஊர்களைத் தலைமையிடமாகக் கொண்டு நாயக்கங்கள் உருவானபோது ஆத்தூர் பகுதிகள் செஞ்சி நாயக்கத்திற்கு உட்பட்ட பகுதியாகவே விளங்கியதாக அவர் விவரித்தார்.

ஆனாலும், “விஜயநகர மைய அரசும் செஞ்சி நாயக்கமும் பலவீனமடைந்தபோது மதுரை நாயக்கர்கள், ஆத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளை ஆக்கிரமித்து மதுரை நாயக்கத்துடன் இணைத்துக் கொண்டனர். மதுரை நாயக்க ஆட்சிப் பகுதியில் மொத்தம் 72 பாளையங்கள் செயல்பட்டன. அவற்றில் தாரமங்கலமும் ஒன்று. அதன் பாளையக்காரர் கெட்டி முதலி.

விஜயநகர அரசின் பிற்காலம் தொடங்கி ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்டது வரையிலான சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுக்காலம் தமிழகம் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் திருப்பங்கள், போர்கள், ஆட்சி மாற்றங்கள், அணி சேர்க்கை, சொந்த ஆட்சியாளர்களுக்குள் முரண்பாடு எனப் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு நாடுகளை ஆங்கிலேயர்களிடம் பறிகொடுத்த காலகட்டமாக இருந்தது.”

இந்தக் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளின் களங்களில் ஒன்றாக ஆத்தூரும் திகழ்ந்தது, என்பதை வரலாறு ஆவணப்படுத்தியுள்ளதாக வரலாற்று ஆய்வாளர் ஜெயபால் ரத்தினம் தெரிவித்தார்.

கெட்டி முதலிகள் கட்டிய கோட்டை

ஆத்தூர் கற்கோட்டை

ஆத்தூரில் வசிஷ்ட நதிக் கரையில் இந்தக் கோட்டையைக் கட்டியவர்களாக அறியப்படுவோர் ‘கட்டி முதலிகள்’ அல்லது ‘கெட்டி முதலிகள் எனப்படும் குறுநில அரசர்களாவர் என்று விளக்கினார் ஜெயபால் ரத்தினம்.

“இந்திய தொல்லியல் அளவீட்டு நிறுவனம் தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவித்து பாதுகாத்து வரும் 12 கோட்டைகளில் இந்த ஆத்தூர் கோட்டையும் ஒன்று.

கெட்டி முதலிகளின் தோற்றம் பற்றி இதுவரை தெளிவான சான்று எதுவும் கிடைக்கவில்லை. கெட்டி முதலிகள் கி.பி. 10ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து கி.பி. 16ஆம் நூற்றாண்டு வரை சேலம் மாவட்டப் பகுதிகளில் குறுநில ஆட்சியாளர்களாகச் செயல்பட்டிருக்கின்றனர் என்பது தெரிய வருகிறது.

கெட்டிமுதலிகள் குறித்து கல்வெட்டுகள், அரசிதழ், ஆங்கிலேயக் கிடங்கு ஆவணங்கள், மெக்கன்சி தொகுப்பு, உள்ளிட்ட ஆவணங்களும் ஆய்வாளர்களது நூல்களும் ஏராளமான தகவல்களை அளிக்கின்றன.

கெட்டிமுதலிகளின் தலைமையிடங்களாக தாரமங்கலம், அமரகுந்தி ஆகிய ஊர்கள் செயல்பட்டிருக்கின்றன. இவர்கத காவேரி ஆற்றின் வலது புறத்தில் அமைந்த, காவேரிபுரம் பகுதியில் ஆட்சி செலுத்தி வந்தவர்கள் என்றும், கிழக்கே தலைவாசல் வரையிலும், மேற்கில் தாராபுரம் வரையிலும், தெற்கில் கரூர் வரையிலும் இவர்களது ஆட்சி பரவி இருந்தது என்பதும் தெரிய வருகிறது,” என்றும் அவர் விளக்கினார்.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஆத்தூர்

ஆத்தூர் கற்கோட்டை

நிலவியல் அடிப்படையில், சமவெளியின் துவக்கத்தில் அமைந்த காவேரிபுரம், மைசூர் பீடபூமியின் நுழைவாயிலாக அமைந்த தொப்பூர் மற்றும் பெரும்பாலை ஆகிய கணவாய்களின் முகப்பில் அமைந்த ஓமலூர், வெள்ளாற்றின் வடிநிலப் பகுதிகள் வழியாக வங்கக் கடலை எளிதில் அடையவும், திருச்சிராப்பள்ளிக்குச் செல்லவும் வசதியளிக்கும் தனித் தனி சாலைகளின் துவக்கப் பகுதியாக அமைந்த ஆத்தூர் ஆகிய அனைத்துப் பகுதிகளையும் ஒருங்கிணைத்து கட்டமைக்கப்பட்டிருந்த ஆட்சி நிர்வாகப் பகுதிகள் என்பதால், கட்டி முதலிகளின் ஆள்நிலப் பகுதிகளும் அவர்களது ஓமலூர் மற்றும் ஆத்தூர் கோட்டைகளும் அரசியல் ரீதியாகப் பல்வேறு முக்கியத்துவங்களைப் பெற்றிருந்தன என அரசிதழ் குறிப்பிடுவதாக வரலாற்று ஆய்வாளர் ஜெயபால் ரத்தினம் விளக்கினார்.

மேலும், “காவேரிபுரம், மதுரை மைசூர் ஆகிய இரு நாயக்கங்களுக்கான எல்லைப் பகுதியாகவும் விளங்கின. மூவேந்தர்களின் சின்னங்களான புலி, வில், கயல் ஆகியவற்றுடன் சிங்கம், வண்ணத்தடுக்கு, வாடாமாலை ஆகிய சின்னங்களை இவர்கள் தங்கள் கொடியில் பொறித்துக் கொண்டனர்.

ஓமலூர் கோட்டையையும் கட்டி முதலிகள்தான் கட்டியுள்ளனர். சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் தாரமங்கலம் சிவன்கோவிலும் இன்னும் பல கட்டுமானங்களும் இவர்களால் கட்டப்பட்டிருக்கின்றன.

சங்ககிரி, திருச்செங்கோடு, இடங்கணசாலை, பூலாம்பட்டி போன்ற இடங்களிலும் இந்த கட்டி முதலிகள் ஏற்படுத்திய கட்டுமானங்கள் முக்கிய வரலாற்று சான்றுகளாக உள்ளன. வேட்டைக்குச் சென்ற இடத்தில் ஒரு புதையல் மூலம் கிடைத்த செல்வத்தைக் கொண்டே ஆத்தூர் கோட்டை கட்டப்பட்டது என்று ஒரு தகவலும் உண்டு.

மதுரை நாயக்கத்திற்கு உட்பட்ட பாளையக்காரராகத் திகழ்ந்த காலத்தில், மதுரை நாயக்கரது படையணிகளில் ஒன்றாகச் செயல்பட்டு பல போர்களில் கெட்டி முதலிகள் தங்களது படைகளுடன் கலந்துகொண்டு போரிட்டுள்ளனர் என்பதை ’இராமப்பையன் அம்மாணை’ உள்ளிட்ட ஆவணங்கள் விவரிக்கின்றன.

பல்வேறு சிறப்புகளுடன் செயல்பட்ட மதுரை நாயக்கம் திருமலை நாயக்கர் மறைவுக்குப்பின் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வீழ்ச்சியின் பாதையில் பயணிக்கத் தொடங்கியபோது, மதுரை-மைசூர் நாயக்கங்களின் எல்லைப்பகுதி நிர்வாகியான கெட்டி முதலிகளும் பிரச்னைகளைச் சந்தித்தனர்,” என்று கூறினார் ஜெயபால் ரத்தினம்.

தொடர்ச்சியான போர்கள்

சேலம் மாவட்டப் பகுதிகள் 17ஆம் நூற்றாண்டில் சென்னப்ப நாயக்கர் என்ற ஆட்சியாளரின் கீழ் செயல்பட்டன என்றும் ஜெயபால் ரத்தினம் விவரித்தார்.

மேலும், “கி.பி-1641இல் மைசூரின் நரசராஜா, கோயம்புத்தூர் பகுதிகளில் கட்டி முதலியிடமிருந்த பல பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டார். கி.பி. 1667இல் மைசூர் படைகளுக்கும் மதுரை மற்றும் தஞ்சாவூர் நாயக்கங்களுக்கும் இடையே ஈரோட்டில் நடைபெற்ற போரில், மதுரை-தஞ்சாவூர் நாயக்கர்கள் முறியடிக்கப்பட்டனர். கட்டி முதலியிடமிருந்த ஓமலூர் கோட்டை மைசூர் நாயக்கர் வசம் சென்றது.

ஆத்தூர் கி.பி. 1678இல் சிக்கதேவராயரால் கைப்பற்றிக் கொள்ளப்பட்டது. கட்டி முதலிகளின் ஆதிக்கம் அத்துடன் முடிவுற்றது,” என்று குறிப்பிடுகிறார் அவர்.

“கி.பி.1689இல் ஏற்பட்ட ஒப்பந்தங்களின்படி ஆத்தூர் கோட்டை மைசூர் அரசரான சிக்கதேவராயரது கட்டுப்பாட்டுக்குள் சென்றது. பிறகு கி.பி.1768இல் கர்னல் வுட் என்ற ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக் குழுவின் அதிகாரி கட்டுப்பாட்டிற்குச் சென்றது. இருப்பினும் விரைவிலேயே ஹைதர் அலியின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

ஹைதர் அலியின் இறப்புக்குப்பின் கி.பி.1792இல் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கைக்குப் பிறகு ஆத்தூர் கோட்டை ஆங்கிலேய வணிகக் குழுவின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வந்தது. அதன் தொடர்ச்சியாக, ஆங்கிலேயரின் ராணுவ நிர்வாகத்தில், கேப்டன் கேம்பெல் தலைமையிலான 24வது சென்னை படைப்பிரிவின் தலைமையிடமாக ஆத்தூர் கோட்டை செயல்படத் தொடங்கியது.

ராபர்ட் கிளைவ் ஆணையின்படி ஆத்தூர் கோட்டை கி.பி.1799 முதல் 1824 வரை ஆங்கிலேய ராணுவத்தின் ஆயுதக் கிடங்காகவும் செயல்பட்டது. அதற்குப் பிறகு இக்கோட்டை எவ்வித பயன்பாட்டிலும் இல்லை,” என்று கூறினார் ஜெயபால் ரத்தினம்.

பிறை நிலா, குறுவாள் சின்னம்

ஆத்தூர் கற்கோட்டை
படக்குறிப்பு,வரலாற்று எழுத்தாளர் இடைப்பாடி அமுதன்

ஆத்தூர் கற்கோட்டை குறித்து வரலாற்று எழுத்தாளர் இடைப்பாடி அமுதன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “ஆத்தூர் கோட்டையின் கட்டுமான அமைப்பானது நாயக்கர் கால பாணியில் இருந்தாலும் கெட்டி முதலி அரசர்களும் இதைக் கட்டியதாக சேலம் மேனுவலை எழுதிய லீ ஃபானு பதிவு செய்துள்ளதைக் கூறினார்.

அதுமட்டுமின்றி, “கோட்டையின் கிழக்கு வாயிலின் தென்புறச் சுவரில் காணப்படும் குருவால், பிறைநிலா சின்னம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது என்பதற்கு சான்று,” என்று கூறுகிறார் இடைப்பாடி அமுதன்.

மேலும், “விஜயநகர பேரரசின் பெனுகொண்டா அரசர் வெங்கடாபதியின் கீழ் சின்னம நாயக்கர் இந்தப் பகுதியை ஆட்சி செய்தார் என்பதற்கான தகவலும் தனியே கிடைக்கின்றது. சேலம் பாளையக்காரர் பற்றி ராபர்ட் டி நோபிலி கி.பி.1623இல் குறிப்பிட்டுள்ளார்.

ஆத்தூர் பகுதி கொங்கு நாட்டைச் சேர்ந்தது அல்ல என்பதையும் இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்தப் பகுதியானது கி.பி. 1641வரை பெனுகொண்டாவில் இருந்து விஜயநகர ஆட்சியில் அதாவது செஞ்சி நாயக்கரின் கீழ் இருந்து வந்தது என்று பாராமகால் ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன.

அதன் பிறகு சேலம் பாளையக்காரரான சின்னப்ப நாயக்கர் இரண்டு ஆண்டுங்கள் ஆண்டதாகவும் பின்னர் 15 ஆண்டுகள் கெட்டி முதலிகள் ஆண்டதாகவும் அவை குறிப்பிடுகின்றன.”

மராத்தியர் கட்டுப்பாட்டிலும் ஆத்தூர் கோட்டை

ஆத்தூர் கற்கோட்டை
படக்குறிப்பு,வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ்

“கி.பி.1670ஆம் ஆண்டு கெட்டி முதலிகளிடம் இருந்து ஓமலூர், சங்ககிரி முதல் ஆத்தூர் வரையிலான பகுதிகளை சிக்கதேவராயர் என்ற மைசூர் ராஜா கைப்பற்றினார்.

கி.பி.1680இல் சிக்க தேவராஜன் ஆட்சிக் காலத்தில் அவரது படைகள் திருச்சியை நோக்கிப் படை எடுத்துச் சென்றபோது மராத்திய மன்னர் சாம்பாஜியின் படைத்தலைவரும் சிவாஜியின் மருமகனுமான ஹராஜி ராஜா என்ற அரசு மாலை சிக்கதேவராயரை தோற்கடித்தார்,” என்று விவரித்தார் இடைப்பாடி அமுதன்.

“அதைத் தொடர்ந்து சங்ககிரி, ஓமலூர் பகுதிகளும் ஆத்தூர் கோட்டையும் 1682இல் மராத்தியர் வசமானது. தொடர்ந்து ஔரங்கசீப் உதவி பெற்ற சிக்க தேவராயர் என்ற மன்னர் ஹராஜி ராஜா கைப்பற்றிய பகுதிகளைப் போராடி மீட்டார்.

இதையடுத்து சிக்கதேவராயருடன் கி.பி. 1690இல் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆத்தூர் கோட்டையை ஹராஜி ராஜா மைசூருக்கு ஒப்படைத்தார். பல அரசர்கள் போர் செய்த இந்தப் பகுதி இறுதிக் காலத்தில் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் படைகள் தங்க வைக்கப்பட்ட இடமாகவே பயன்படுத்தப்பட்டது. இறுதியில் படைகளும் திரும்பப் பெறப்பட்டது. தொல்லியல் துறை இதை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தது,” என்று விளக்கினார் இடைப்பாடி அமுதன்.

“தொல்லியல் துறையின் பாதுகாப்பில் கீழுள்ள 62 ஏக்கர் பரப்படைய இந்தப் பகுதியானது மக்கள் வாழிடமாக மாறிவிட்டது என்ற போதிலும் எஞ்சியிருக்கும் மண்டபங்களும் மேடைகளும் மாளிகைகளும் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டு வருங்கால தலைமுறையினரும் தெரிந்துகொள்ள வழிசெய்ய வேண்டும்.

அக்கால மன்னர்களின் பெரும்பாலான கோட்டைகள் மலைகள் மீது அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இது நிலப்பரப்பில் அமைந்த சிறந்த கட்டுமானமுடைய கோட்டை.

இந்நிலையில், தற்போது இது அழிவின் விளிம்பில் உள்ளது. இதை முறையாகப் பாதுகாப்பது அவசியம். பாதுகாக்கப்பட்ட மிகப்பெரிய சுற்றுலாத் தளமாக இதை அறிவித்தால் நன்றாக இருக்கும்,” என்றும் கூறினார் வரலாற்று எழுத்தாளர் இடைப்பாடி அமுதன்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்இன்ஸ்டாகிராம்எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

 

சிறப்புச் செய்திகள்

 

அதிகம் படிக்கப்பட்டது

Author


Hit Counter provided by technology news