மாடர்ன் தியேட்டர்ஸ் சர்ச்சை: சறுக்கிய அரசு, சங்கப் பிரமுகரைக் கடிந்துகொண்ட முதல்வர்? நடப்பது என்ன?

மாடர்ன் தியேட்டர்ஸ்

“சிலை வைக்க வேண்டுமெனில் முறையாக அணுகினாலே நடந்திருக்கும். ஆனால் நெடுஞ்சாலைத் துறையின் இடம் என்றால், அந்தக் காலத்திலேயே மாடர்ன் தியேட்டர் நிறுவனம் ஆக்கிரமிப்புச் செய்ததா என்கிற ஒரு கேள்வியும் எழுகிறது.”

சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோ இருந்த வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை வைப்பதற்காக சம்பந்தப்பட்ட அந்த இடத்தை `ஆக்கிரமிப்பு’ என அறிவித்த நெடுஞ்சாலைத் துறையின் செயல்தான் கடந்த இரு தினங்களாக தமிழக அரசியல் களத்தில் அனல் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

முன்னாள் முதல்வருக்குச் சிலை வைக்க வேண்டுமெனில் கட்சிக்குச் சொந்தமான இடங்களில் வைக்கலாமே என சமூக வலைதளங்களில் ஒரு சாரர் கருத்துத் தெரிவிக்க, சம்பந்தப்பட்ட அந்த இடத்தின் தற்போதைய உரிமையாளர் விஜய் வர்மா இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்று விட்டார்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தவறான சில தகவல்களும் பரவிவரும் நிலையில், இந்த விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்து நடந்தவை குறித்து இங்கு பார்க்கலாம்.

மாடர்ன் தியேட்டர்

மாடர்ன் தியேட்டர்

மாடர்ன் தியேட்டர்: MGR, கருணாநிதியின் திரைவாழ்வின் அங்கம்; 129 படங்கள் தயாரித்த இடத்தின் அவல நிலை!

– இந்தத் தலைப்பில் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி நம் தளத்தில் வெளியானது ஒரு கட்டுரை.

Also Read

மாடர்ன் தியேட்டர்: MGR, கருணாநிதியின் திரைவாழ்வின் அங்கம்; 129 படங்கள் தயாரித்த இடத்தின் அவல நிலை!

மாடர்ன் தியேட்டர்: MGR, கருணாநிதியின் திரைவாழ்வின் அங்கம்; 129 படங்கள் தயாரித்த இடத்தின் அவல நிலை!

சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் நினைவாக எஞ்சியிருக்கும் ஸ்டூடியோவின் நுழைவாயிலான ஆர்ச் இடிக்கப்பட இருப்பதாகத் தகவல் கிடைக்க, தியேட்டர் நிறுவனரான மறைந்த டி.ஆர்.சுந்தரத்தின் கொள்ளுப் பேரனான கார்த்திகேயனிடம் நாம் அப்போது பேசினோம்.

“ஸ்டூடியோ இருந்த இடம் 20 ஆண்டுகளுக்கு முன் ‘முதியோர் இல்லம்’ ஒன்றிற்குக் கொடுக்கப்பட்டது. 10 ஏக்கருக்கும் அதிகமான அந்த இடத்தில் ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’னு பொறிக்கப்பட்ட நுழைவாயில், அதாவது ஆர்ச்சும் அடங்கும். ‘முதியோர் இல்லம்’ அமைவதற்காகன்னு கேட்கப்பட்டதால குறைவான விலைக்குத்தான் எங்க மூதாதையர் அந்த இடத்தை வித்திருக்காங்க. வாங்கினவங்க தரப்புல ஆர்ச் இருக்கிற இடம் ‘மாடர்ன் தியேட்டர்ஸ் நினைவாக அப்படியே இருக்கும்’னு உறுதிமொழி கொடுத்ததாகச் சொல்றாங்க.

பிறகு, எங்ககிட்ட இருந்து இடத்தை வாங்கிய தரப்புக்கு பண நெருக்கடி வர, அவங்க இன்னொருத்தருக்கு விற்க, அங்க இருந்தும் கைமாறி இப்ப நாலாவது தரப்புக்கு இடம் போயிடுச்சு.

இந்தச் சூழல்ல சில மாதங்களுக்கு முன்னாடி திடீர்னு ஒருநாள் ‘அந்த ஆர்ச்சை இடிக்கப் போறாங்க’ன்னு செய்தி கேள்விப்பட்டோம். அந்தப் பகுதி மக்கள் திரண்டு போய் எதிர்ப்பு தெரிவிச்சதால, அந்த முயற்சி கைவிடப்பட்டதாகவும் தெரிய வந்துச்சு.

கார்த்திகேயன்

கார்த்திகேயன்

தமிழ் சினிமாவுக்கே முன்னோடி இந்த நிறுவனம். 129 படங்கள் தயாரிச்சிருக்கு மாடர்ன் தியேட்டர்ஸ். எம்.ஜி.ஆர், கலைஞர், கவிஞர் கண்ணதாசன், டி.ஆர்.மகாலிங்கம், ஜானகி ராமச்சந்திரன், என்.டி.ஆர் மற்றும் முரசொலி மாறன்னு பிற்காலத்துல பெரிய பெரிய ஆளுமைகளா வந்தவங்கெல்லாம் புழங்கிய இடம் இது. அந்தச் சாதனைகளுக்கெல்லாம் அடையாளமா இப்ப மிச்சமிருக்கிறது இந்த ஒரு ஆர்ச்தான். ஆனா கோரிக்கை மட்டுமே வைக்க முடியும்ங்கிற சூழல்ல எங்க நிலை” என அப்போது பேசியிருந்தார் கார்த்திகேயன்.

தொடர்ந்து கார்த்திகேயன் தரப்பினர் சென்னை வந்து நடிகர் சங்கத்திலும் ஆளுங்கட்சியிலும் பவர்ஃபுல்லாக இருக்கும் பிரமுகரைச் சந்திக்க, அவர் மூலமாக இந்த விவகாரம் முதல்வர் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

அடுத்த சில மாதங்களில் முதல்வர் சேலம் விசிட் சென்ற போது அந்தப் பகுதிக்குச் சென்றதுடன் ஆர்ச் முன்பாக நின்று செல்ஃபி எடுத்துக்கொள்ளவும் செய்தார்.

அப்போதே இடத்தின் தற்போதைய உரிமையாளர் விஜய் வர்மாவை அழைத்த மாவட்ட ஆட்சியர், ‘ஆர்ச் இடிக்கப் படப் போறதா வந்த தகவல்கள் முதல்வர் வரைக்கும் போயிருக்கு. ஆர்ச் பாதுகாக்கப்படணும்னு நினைக்கிற முதலமைச்சர், அந்த இடத்துல மறைந்த முதல்வர் கருணாநிதியின் சிலையை வைக்க விரும்புறார். இதுக்கு என்ன சொல்றீங்க?’ எனக் கேட்டிருக்கிறார்.

‘குடும்பத்தினருடன் கலந்து பேசிவிட்டுச் சொல்கிறேன்’ என அந்த நேரத்தில் தெரிவித்தாராம் வர்மா.

மாடர்ன் தியேட்டர்ஸ் - நில உரிமையாளர் விஜயவர்மன்

மாடர்ன் தியேட்டர்ஸ் – நில உரிமையாளர் விஜயவர்மன்

தொடர்ந்து வர்மா தரப்பிலிருந்து எந்தத் தகவலும் செல்லாததலோ என்னவோ, தற்போது அதிரடியாக ‘ஆர்ச் இருக்கும் அந்த இடம் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமானது’ எனச் சொல்லி, அங்கு ஒரு அறிவிப்பையும் வைத்திருக்கிறது மாவட்ட நிர்வாகம்.

நெடுஞ்சாலைத் துறை அறிவிப்பு வந்த பிறகுதான் இந்த விவகாரம் வெளியில் பரவத் தொடங்கியது.

ஒருபுறம், ”மாடர்ன் தியேட்டர்ஸ்’ குடும்பத்தினரிடமிருந்து இடத்தை அபகரித்து கலைஞரின் சிலை வைக்கப் பார்க்கிறார்கள்’ என்கிற ரீதியில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தொடங்கி பலரும் கண்டன அறிக்கை விட,  இன்னொருபுறம் இடத்தின் தற்போதைய உரிமையாளரான வர்மாவும் மீடியா மற்றும் நீதிமன்றத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றார்.

Also Read

முதல்வரின் ட்வீட் போதும் `மார்டன் தியேட்டர் ஆர்ச்'தப்பிச்சிடும்னு நம்புகிறோம்! - கார்த்திகேயன்

முதல்வரின் ட்வீட் போதும் `மார்டன் தியேட்டர் ஆர்ச்’தப்பிச்சிடும்னு நம்புகிறோம்! – கார்த்திகேயன்

‘ஆர்ச்சை இடிக்கிற நோக்கமே எங்களுக்கு இல்லை, தவிர கருணாநிதி சிலை தொடர்பாகவும் யோசிச்சுச் சொல்றேன்னுதான் சொன்னோம். சிலை வைக்கக் கூடாதுனு சொல்லலையே’ என மீடியாவிடம் பேசிய வர்மா, அரசாங்கத்தின் இந்தப் போக்கு அராஜகமானது என்றார்.

‘இந்த விவகாரத்தைத் தேவையில்லாமல் பெரிதுபடுத்தி அரசியல் கலக்க வைத்து விட்டார்கள்’ என்று டி.ஆர்.சுந்தரம் குடும்பத்தின் மீது எழுந்த கோபத்தினாலேயே கருணாநிதி சிலை விஷயம் தொடர்பாக உடனடியாகச் சம்மதம் தராமல் வர்மா இழுத்தடித்தார் என்கிறார்கள்.

மாடர்ன் தியேட்டர் குடும்பத்தினரோ, ‘பாரம்பரியம் மிக்க இந்த இடத்தைப் பாதுகாக்காமல் இப்படியொரு நிலை உருவாகக் காரணமாகி விட்டோமே’ என்கிற குற்ற உணர்வு காரணமாகவே அவர்கள் இதுவரை இது தொடர்பாக எந்தவொரு கருத்தும் சொல்லாமல் இருக்கிறார்கள் என்கிறார்கள்.

தற்போது, இந்த விவகாரத்தில் தலையிட்டு அரசுக்குத் தேவையில்லாமல் கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டதாகக் கோபப் பட்ட முதல்வர் முதலில் இந்த விவகாரத்தைத் தன்னிடம் கொண்டு வந்த அந்த பாலிடிக்ஸ் கம் சங்கப் பிரமுகரைக் கூப்பிட்டுக் கடிந்து கொண்டாராம்.

மாடர்ன் தியேட்டர் முன்பாக முதல்வர் ஸ்டாலின்

மாடர்ன் தியேட்டர் முன்பாக முதல்வர் ஸ்டாலின்

அந்தப் பிரமுகரோ, தன்னிடம் இந்த விவகாரத்தைக் கொண்டு வந்தவர்களைக் கூப்பிட்டுச் சத்தம் போட்டு, ‘தேவையில்லாம என் தலை உருண்டுடும் போலிருக்கு’ என நொந்து போய்ப் பேசினாராம்.

‘பாரம்பரியம் மிக்க இடம் பாதுகாக்கப் பட வேண்டுமென்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் இந்த விவகாரத்தை அரசு அணுகிய விதம்தான் தற்போதைய கெட்ட பெயருக்குக் காரணம். கலைஞர் சிலை வைக்க வேண்டுமெனில் முறையாக அணுகினாலே  நடந்திருக்கும். ஆனால் நெடுஞ்சாலைத் துறையின் இடம் என்று இப்போது திடீரெனச் சொன்னால், அந்தக் காலத்திலேயே மாடர்ன் தியேட்டர் நிறுவனம் ஆக்கிரமிப்புச் செய்ததா?’ என்கிற ஒரு கேள்வியும் எழுகிறது என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.

முதல்வர் இந்த விஷயத்தில் அவசரப்பட்டு விட்டார் என்றே சொல்கிறார்கள் பலரும். இனி இந்த விவகாரத்தை தமிழக அரசு எப்படிக் கையாளப் போகிறது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Author


Hit Counter provided by technology news