திருப்புறம்பயம் – அனுபவ பகிர்வு| My Vikatan

thirupurambiyam

ஒருமுறை பிரளயம் ஏற்பட்ட காலத்தில் அது இந்த ஊரை அணுகாமல் வெளியே நின்று விட்டது. பிரளயத்திற்கு புறம்பே இருந்தமையால் இந்த ஊர் திருப்புறம்பயம் என்ற பெயரைப் பெற்றது.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

தமிழகத்தில் அதிலும் சோழ தேசத்தின் அத்தனை கோயில்களுக்கும் சென்று தரிசித்து வர என் வாழ்நாள் காலம் போதாது. எனவே மனசிற்கு நிறைவைக் கொடுக்கக் கூடியதாக. வாழ்நாள் காலமெல்லாம் நினைவில் வைத்துக் கொள்ளத் தகுதியான, அடுத்தவருக்கு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்ளக் கூடிய வகையில் ஒரு பயணத்தை திட்டமிட்டேன். நம் பயணத்தை எங்கே தொடங்குவது என்பதை விட எதன் அடிப்படையில் தொடங்குவது என்று தீர்மானித்தேன். பண்டைய தமிழகத்தின் வளமை மிக்க சரித்திரத்தைப் பின்புலமாக கொண்ட அமர காவியமான கல்கியின் பொன்னியின் செல்வனே அன்றி எது நம்மை மனம் நிறைய வைக்கும்?

representational image

representational image

அன்றைய சம்பவங்கள் நடந்ததாக சொல்லப்பட்ட இடங்கள் இன்று சிறு சிறு கிராமங்களாக பழைய சரித்திரத்தின் எச்சங்களாக நின்று போய் விட்டிருக்கிறது. அதன் சாட்சியாக அங்கே கோயில்கள் மட்டும் நம் சரித்திரத்தை இன்னும் நமக்கு விளக்கிக் கொண்டு காலம் கடந்தாலும் கரையாத கற்றளிகளாக நின்று கொண்டிருக்கிறது.

சிதம்பரம் மேலக்கடம்பூர், கீழக்கடம்பூர், திருப்புறம்பயம் சாட்சிநாதர் கோயில், பிரதீபவியின் பள்ளிப்படை கோயில் என வந்தியத்தேவனுடனும் ஆழ்வார்க்கடியானுடனும் பயணித்து தாராசுரம் பழையாறை திருசக்திமுற்றம், பட்டீஸ்வரம் கோபிநாத பெருமாள் கோயில் மேற்றளி எனப்படும் கைலாசநாதர் கோயில், பிரும்ம நந்தீஸ்வரர் கோயில் வடதளி எனப்படும் தர்மபுரீஸ்வரர் கோயில் தென்தளி எனப்படும் பரசுநாதசாமி கோயில், கீழ்தளி எனப்படும் சோமேஸ்வரர் கோயில் கும்பகோணம் அரசலாற்ரங்கரை, என குந்தவையுடனும் வானதியுடனும் உரையாடி விட்டு,

நந்திபுர விண்ணகரத்தில் செம்பியன் மாதேவியாரை, ஆழ்வார்க்கடியானுடன் நானும் தரிசித்து விட்டு உடையாளூரில் ராஜராஜனின் பள்ளிப்படை கோயிலில் கண் கலங்க நின்று விட்டு, பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை கோயிலில் ராஜேந்திர சோழனுடன் வணங்கி விட்டு திருவையாறில் வந்தியத்தேவனுடன் நானும் நந்தினியை கண்டு மலைத்துப் போய் நின்று விட்டு நாகப்பட்டினத்தில் ராஜாராஜா சோழன் தங்கியிருந்த புத்த விகாரை பார்த்து விட்டு, கோடியக்கரையில் குழகர் கோயிலில் திருவிடங்கரை கண்டு வணக்கம் சொல்லி விட்டு பூங்குழலியிடம் என்னையும் இலங்கைக்கு படகில் கொண்டு போக வேண்டிக் கொண்டால் விசா இல்லாமல் அங்கே போக முடியாதே என்று அவள் கை விரிக்க நான் திரும்பி விட்டேன்.

அத்தனை கோயில்களிலும் என் மனதில் நின்ற கோயில் திருப்புறம்பயம். சாதாரண கிராமத்து மண்சாலை. சாலையின் இருபுறமும் பச்சைபசேல் என்று விளைந்து, பாலைப் பிடித்திருந்த நெற்கதிரின் வாசமும், மண், சாணி மற்றும் ஆட்டாம்புழுக்கை வாசனை மொத்தமும் காற்றில் பரவியிருந்தது. மூக்கை விரித்து காற்றை இழுத்து நெஞ்சை நிரப்பிக் கொண்டேன். அப்பா..! மாசு மருவில்லாத காற்று. மாலையும் இரவும் சந்திக்கப் போகும் அந்திப் பொழுது. இளம் வெளிச்சம். பகலெல்லாம் இரையெடுக்க சென்றிருந்த பறவைகள் திரும்ப தங்கள் இடத்திற்கு வந்து அடையும் கண் கொள்ளாக் காட்சி.

representational image

representational image

பட்சிகளின் ஒலி அந்த அமைதியான பிரதேசத்தில் மிகுந்த சப்தமாகவே ஒலித்தது. திருப்புறம்பயம் சாட்சிநாதர் கோயில் குடந்தையிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் இடையில் ஓடும் மண்ணாற்றின் வடகரையில் இருக்கும் ஒரு சிறு கிராமம் திருப்புறம்பியம், ஒருமுறை பிரளயம் ஏற்பட்ட காலத்தில் அது இந்த ஊரை அணுகாமல் வெளியே நின்று விட்டது. பிரளயத்திற்கு புறம்பே இருந்தமையால் இந்த ஊர் திருப்புறம்பயம் என்ற பெயரைப் பெற்றது. அப்போது சப்த சாகரத்தின் நீரையும் இத்தலத்திலுள்ள கிணற்றில் அடங்கி விடும்படி விநாயகர் செய்தமையால் பிரளயம் காத்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

விநாயகர் சதுர்த்தி அன்று செய்யப்படும் தேனாபிஷேகம் இந்த பிள்ளையாரின் உடலில் இறங்கி விடும் என்பது சிறப்பு. அதாவது கல்கியின் வார்த்தைகளில் சொல்வதென்றால் உலக சரித்திரம் அறிந்தவர்கள், சரித்திரத்தின் போக்கை மாற்றியதாக சொல்லப்பட்ட வாட்டர்லூ பானிபட் பிளாசிக் சண்டைகளைப் போன்றே திருப்புறம்பியம் என்ற இந்த இடத்தில் நடந்த சண்டையும் சோழர்களின் சரித்திரத்தை மாற்றியது. ராஜராஜ சோழனின் தாத்தாவிற்கு தாத்தா விஜயாலய சோழன் குறுநில மன்னனாக ஆண்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் வரகுணவர்ம பாண்டியனுக்கும் அபராஜித பல்லவனுக்கும் நடந்த போரில் பல்லவனுக்கு ஆதரவாக கங்க மன்னன் பிரதீவிபதியுடன் விஜயலாயனின் மகன் ஆதித்தன் கலந்து கொண்டான்.

பாண்டியன் வெற்றி பெற்றால் சோழர்கள் என்ற இனமே அழிந்து போயிருக்கும். உடல்நலம் குன்றிய விஜயாலயனின் கடைசி நேர வீரத்தினால் இறுதியில் பல்லவன் வெற்றிப் பெற்ற இடம் இது. கைமாறாக சோழர்கள் தனிநாடு பெற்று பின்னாளில் சாம்ராஜ்யாதிபதி ஆனார்கள்.

representational image

representational image

சிறிய செங்கல் கோவிலாக இருந்ததை ஆதித்த சோழன் கற்றளியாக ஆக்கினான். திருவிளையாடல் புராணத்தில் ஒரு நிகழ்வு. திருப்புறம்பயத்தில் சாகும் தருவாயில் ஒருவன், மதுரையில் வசிக்கும் திருமணமான தன் அக்கா மகனான வணிகனிடம் தன் மகளை ஒப்படைத்து விட்டு இறந்து போகிறான். புன்னை மரத்தினடியில் சிவலிங்கம், அதனருகில் வன்னிமரம் மற்றும் ஒரு கிணறு இருந்த இடத்தில் இருவரும் ராத்திரி தங்க நேரிடுகிறது. இரவில் பாம்பு கடித்து வணிகன் இறந்து விட அந்த பெண் அழுகிறாள். சிவனே வந்து அந்த வணிகனுக்கு உயிர் கொடுத்து அவனுக்கு அந்த பெண்ணை மணம் செய்து வைக்கிறார். மதுரையில் முதல் மனைவி இந்த திருமணம் நடந்ததை ஒப்பவில்லை.

அரசவையில் வழக்கு வருகிறது. திருமணம் நடந்ததற்கு சாட்சி எங்கே என்று மன்னன் கேட்க, அப்போது சிவன் வன்னிமரம் மற்றும் கிணறு மூவரும் நேரில் வந்து சாட்சி சொல்கிறார்கள். எனவே இந்த சிவனுக்கு சாட்சிநாதர் என்று பெயராயிற்று. நீதி சம்பந்தப்பட்ட அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெறவும் ஆயில்ய நட்சத்திர பரிகாரத்திற்கும் இங்கே வழிபடுவது உகந்தது. இறைவி கடும்படி சொல்லியம்மை.

பேச்சு வராத, திக்குவாய் குழந்தைகள் நாக்கில் அபிஷேக தேனை தடவி வந்தால் பேச்சு வன்மை ஏற்படும் என்பது ஐதீகம். வாசல் கோபுரத்திற்கு வெளியே உள்ள தட்சிணாமூர்த்தியின் சன்னதி சிவன் அவதரித்த இடமாக கருதப்படுகிறது. துர்வாசரால் சபிக்கப்பட்ட அரித்துவஜ மன்னன் சாப விமோசனம் பெற இத்தலத்தில் சிவனை வழிபட்டார்.

thirupurambiyam

thirupurambiyam

தரிசனம் முடிந்து பிரகாரம் சுற்றி, கொடிமரத்தின் அடியில் விழுந்து தெண்டனிட்டு விட்டு சற்று நேரம் அமர்ந்தேன். சட்டென்று இருட்டத் தொடங்கியது. வானம் நிர்மலமாக இருந்தது. நட்சத்திரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கண் சிமிட்ட தொடங்கியிருந்தது. சாயரட்சை பூஜைக்கான காண்டாமணி டாண் டாண் என்று ஓங்கி ஒலித்தது. கோயிலுக்குள் எண்ணி பத்தி பத்து பேர் தான் இருந்திருப்போம். ஆளற்ற அமைதியான அந்த இடத்தில் மணியோசை தெய்வீக உணர்வை எழுப்பி சிலிர்க்க வைத்தது. எத்தனை வருடங்கள் ஆகிறது இதுப்போல சாயரட்சை மணியோசைக் கேட்டு. இவ்வளவு அமைதியும் எத்தனை விலை கொடுத்தாலும் கிடைத்திடுமா!

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Author


Hit Counter provided by technology news