சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் சந்திக்கும் பிரச்னைகள் – பிபிசி கள ஆய்வு

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்படியிருக்கிறது?
படக்குறிப்பு,மாநகரப் பேருந்துகளின் மூலம் இந்தப் பேருந்து நிலையத்தை அடைபவர்கள் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டியிருக்கிறது

  • எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி,பிபிசி தமிழ்

சென்னையில் சுமார் 88 ஏக்கர் பரப்பளவில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தற்போது இயங்க ஆரம்பித்துள்ளது. புதிய பேருந்து நிலையம் எப்படியிருக்கிறது? பயணிகள் என்ன சொல்கிறார்கள்?

சென்னை நகரிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் தற்போது கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயங்கிவந்தன. ஆனால், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு இந்தப் பேருந்துகள் வந்து செல்வது நகரின் மையப் பகுதியில் ஏற்படுத்தும் போக்குவரத்து நெரிசல், விழாக் காலங்களில் பெருங்களத்தூர், தாம்பரம் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை மனதில் வைத்து, கிளாம்பாக்கத்தில் புதிதாக ஒரு பேருந்து நிலையத்தை உருவாக்கியிருக்கிறது சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்.

வண்டலூருக்கு அருகில் உள்ள கிளாம்பாக்கத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பேருந்து நிலையம், 88.52 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கிறது.

2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமியால் இந்தப் பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தப் பேருந்து நிலையத்திற்கான பணிகள் முடிவடைந்து டிசம்பர் 30ஆம் தேதியன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் பேருந்து நிலையம் திறந்துவைக்கப்பட்டது. இந்தப் பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. சுமார் 394 கோடி ரூபாய் செலவில் இந்தப் பேருந்து நிலையம் கட்டப்பட்டிருக்கிறது.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் (TNSTC), மாநில விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் (SETC) முதற்கட்டமாக இங்கிருந்து இயங்கத் துவங்கியிருக்கின்றன. விரைவிலேயே, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தனியார் பேருந்துகளும் இங்கிருந்தே இயங்கவிருக்கின்றன.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்படியிருக்கிறது?
படக்குறிப்பு,கோயம்பேட்டிலிருந்து பேருந்துகளின் இயக்கம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டதை அறியாத பயணிகள் சற்றுத் திண்டாடிப் போயிருக்கிறார்கள்.

கார்கள், இரு சக்கர வாகனங்களை நிறுத்த தரைக்குக் கீழே இரண்டு தளங்கள், பயணிகள் வந்து செல்வதற்கான தரைத் தளம், ஓட்டுநர்கள் ஓய்வெடுப்பதற்கான அறைகள், கடைகள் ஆகியவற்றுக்கான முதல் தளம் ஆகியவற்றுடன் இந்தப் பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் இந்தப் பேருந்து நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட பேருந்துகளை நிறுத்தும் வகையில் நடை மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர, 300 பேருந்துகளை நிறுத்திக் கொள்வதற்கான பகுதியும் தனியாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

சென்னை நகருக்குள் இருந்து இந்தப் பேருந்து நிலையத்தை வந்தடையும் நகரப் பேருந்துகளுக்கான பேருந்து நிலையம் ஒன்றும் இங்கே அமைக்கப்பட்டுள்ளது.

மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் இந்தப் பேருந்து நிலையம், ஆச்சரிய உணர்வை ஏற்படுத்தினாலும் இதனைப் பயன்படுத்துவதில் பயணிகளுக்கு பல சிரமங்கள் இருக்கின்றன. குறிப்பாக, கோயம்பேட்டிலிருந்து பேருந்துகளின் இயக்கம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டதை அறியாத பயணிகள் திண்டாடிப் போயிருக்கிறார்கள்.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்படியிருக்கிறது?
படக்குறிப்பு,கிளம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம்

“நாங்க கோயம்பேட்டிலிருந்து டிக்கெட் பதிவுசெய்திருந்தோம். கோயம்பேட்டிற்குப் போன பிறகுதான் பேருந்துகள் அங்கிருந்து புறப்படாது, கிளாம்பாக்கத்திலிருந்துதான் புறப்படும் என்பது தெரிந்தது. பிறகு கோயம்பேட்டிலிருந்து பேருந்தைப் பிடித்து மிகுந்த சிரமப்பட்டு இங்கே வந்தோம். இந்தப் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கினால், அங்கிருந்து ரொம்ப தூரம் நடக்க வேண்டியிருக்கிறது. எங்களுக்கு நான்கரை மணிக்குப் பேருந்து. ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து வந்திருக்கிறோம். நாங்கள் செல்ல வேண்டிய பேருந்து இருக்கிறதா, இல்லையா என்பதே தெரியவில்லை. போய் பார்த்தாதான் தெரியும். எங்களுக்கு உண்மையிலேயே மிக சிரமமாக இருக்கிறது. மக்களை இதற்குத் தயார் செய்திருக்க வேண்டும்” என்கிறார் க்ரீன் வேஸ் சாலையிலிருந்து அவசரஅவசரமாக இங்கு வந்து சேர்ந்திருக்கும் பேபி.

இவர் சொல்வதைப் போல மாநகரப் பேருந்துகளின் மூலம் இந்தப் பேருந்து நிலையத்தை அடைபவர்கள் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நடக்கவேண்டியிருப்பது, படிகளில் இறங்கி ஏற வேண்டியிருப்பது போன்றவை பலருக்கும் சிரமமாக இருக்கிறது. மாநகரப் பேருந்து நிலையத்திலிருந்து இந்தப் பேருந்து நிலையத்தை வந்தடைய பேட்டரி கார்கள் போன்ற ஏற்பாடுகள் இருந்தாலும் கூடுதலாக சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்கிறார்கள் பயணிகள்.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்படியிருக்கிறது?
படக்குறிப்பு,சென்னை நகரிலிருந்து வெகுதூரம் தள்ளியிருப்பதை பயணிகள் ஒரு பிரச்சனையாகக் குறிப்பிடுகிறார்கள்

“மாநகரப் பேருந்தில் வந்தால் பேருந்திலிருந்து இறங்கி இங்கே வர வேண்டுமானால், லிஃப்டில் போக வேண்டும், எஸ்கலேட்டரில் போக வேண்டும் என்கிறார்கள். விவரம் தெரியாதவர்களுக்கு இதெல்லாம் கடினம். மாநகரப் பேருந்தில் வந்து இறங்கினால், புறநகர் பேருந்தைப் பிடிப்பது எளிதாக இருக்க வேண்டும். கோயம்பேட்டில் அப்படித்தான் இருந்தது” என்கிறார் கே.கே. நகரைச் சேர்ந்த ஜெயசிங். மாகரப் பேருந்துகளை, புறநகர்ப் பேருந்து நிலையத்தின் வாசல் வரை வந்து, பயணிகளை இறக்கிவிட்டுச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்கிறார்கள் சில பயணிகள்.

வேறு சிலரைப் பொறுத்தவரை, சென்னை நகரிலிருந்து வெகுதூரம் தள்ளியிருப்பதை ஒரு பிரச்சனையாகக் குறிப்பிடுகிறார்கள். “முன்பு கோயம்பேட்டில் பேருந்து நிலையம் இருந்தபோது, எல்லோருக்கும் வசதியாக இருந்தது. இது வெகு தூரத்தில் இருக்கிறது. நாங்கள் இருக்குமிடத்திலிருந்து தாம்பரம் வந்து, அங்கிருந்து மற்றொரு பேருந்தைப் பிடித்து இங்கே வர வேண்டியிருக்கிறது. பெட்டி, படுக்கைகளைத் தூக்கிக்கொண்டு இத்தனை பேருந்துகள் மாறுவது மிகக் கடினம்” என்கிறார் சூளைமேட்டைச் சேர்ந்த பிரசாந்த்.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்படியிருக்கிறது?
படக்குறிப்பு,மின்சார ரயிலில் வருபவர்கள், வண்டலூர் ரயில் நிலையத்தில் வந்திறங்கி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வரலாம்

வட சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்பவர்களுக்கு இந்தப் பேருந்து நிலையம் உண்மையிலேயே வெகுதூரம்தான்.

“நாங்க திருவொற்றியூரில் இருந்து வருகிறோம். கோயம்பேடே எங்களுக்குத் தூரமாகத்தான் இருந்தது. இப்போது கிளாம்பாக்கம் வரவேண்டுமென்றால் நினைத்துப் பாருங்களேன். சுமார் 50 கி.மீ. பயணம் செய்ய வேண்டும். நாங்கள் இருக்கும் பகுதியிலிருந்து இங்குவர போதுமான பேருந்துகளும் இல்லை. இது ஒரு மூலையில் இருக்கிறது. நாங்கள் ஒரு மூலையில் இருக்கிறோம். குடும்பமாக வருபவர்கள் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு, லக்கேஜோடு வருவதை நினைத்துப் பார்த்தாலே பயமாக இருக்கிறது. மெட்ரோவை இதுவரை நீடித்தால் நன்றாக இருக்கும். சென்னையின் எல்லாப் பகுதியிலிருந்தும் இங்கே நேரடி பேருந்து வரவேண்டும்” என்கிறார் திருவொற்றியூரைச் சேர்ந்த தியாகராஜன்.

மின்சார ரயிலில் வருபவர்கள், வண்டலூர் ரயில் நிலையத்தில் வந்திறங்கி இங்கே வரலாம் என்றாலும் சாலையைக் கடந்து, ஒரு ஆட்டோவைப் பிடித்து வர வேண்டியிருப்பது பயணிகளுக்குச் சிரமத்தைக் கொடுக்கிறது. தற்போது பேருந்து நிலையத்திற்குள் விற்கும் உணவுப் பொருட்களின் விலை அதிகமாக இருப்பதாக பலர் கருதுகிறார்கள். மேலும் வாகன நிறுத்தக் கட்டணத்தை நிர்ணயிக்கும்போது, அது குறைவாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இருக்கிறது.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்படியிருக்கிறது?
படக்குறிப்பு,பேருந்து நிலையத்திற்குள் தனியார் மருத்துவமனையின் இலவச சிகிச்சை மையம் அமைக்கப்பட்டிருக்கிறது

“இங்கே தேநீர் 30 ரூபாய்க்கு விற்கிறார்கள். இது சாதாரண மக்கள் வந்துபோகும் இடம். உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்க வேண்டும். பேருந்து நிலையத்திற்குள் இருக்கைகள் குறைவாக இருக்கின்றன. அவற்றை அதிகரிக்க வேண்டும். ஏடிஎம் போன்ற வசதிகள் இல்லை. அவற்றை ஏற்படுத்த வேண்டும்” என்கிறார் திருவான்மியூரைச் சேர்ந்த கணேசன்.

தற்போது கழிப்பறைகள் சிறப்பாக பராமரிக்கப்படுகின்றன. இது தொடர வேண்டும் என்கிறார் பயணிகள். பேருந்து நிலையத்திற்குள் தனியார் மருத்துவமனையின் இலவச சிகிச்சை மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தனியார் மருத்துவமனை என்பதால் அதனை அணுகுவதில் பயணிகளுக்கு தயக்கம் இருக்கிறது.

தற்போது அரசுப் பேருந்துகள் மட்டும்தான் இங்கிருந்து இயங்குகின்றன. விரைவிலேயே ஆம்னி பேருந்துகள் எனப்படும் தனியார் பேருந்துகளும் இங்கிருந்து இயங்கவிருக்கின்றன. ஆனால், ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கங்கள் இந்த விவகாரம் பற்றி கருத்துச் சொல்ல தயங்குகிறார்கள். புதிய பேருந்து நிலையத்தைச் சென்றடைவதற்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று சொல்வதோடு நிறுத்திக்கொள்கிறார்கள்.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்படியிருக்கிறது?
படக்குறிப்பு,ஊரப்பாக்கத்திற்கும் வண்டலூருக்கும் இடையில் புதிய மின்சார ரயில் நிலையம் அமைக்கப்படும் என அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இந்தப் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் குறிப்பிடும் குறைகள் விரைவில் ஒவ்வொன்றாகத் தீர்க்கப்படும் என்கிறது சிஎம்டிஏ எனப்படும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம். இது குறித்து பிபிசியிடம் பேசிய சிஎம்டிஏவின் உயரதிகாரிகள், விரைவிலேயே மாநகரப் பேருந்துகளில் வருபவர்கள் எளிதில் இந்தப் பேருந்து நிலையத்தை அடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும் என்கிறார்கள்.

மேலும் ஊரப்பாக்கத்திற்கும் வண்டலூருக்கும் இடையில் புதிய மின்சார ரயில் நிலையம் அமைக்கப்படும் என்றும் மெட்ரோ வசதி நீட்டிக்கப்படும் என்றும் பேருந்து நிலையம் தற்போது போலவே எப்போதும் பராமரிக்கப்படும் என்றும் தெரிவிக்கிறார்கள்.

தனியார் மருத்துவமனையைப் பார்த்துத் தயங்க வேண்டியதில்லை என்றும் அங்கே மருத்துவ ஆலோசனை இலவசமாக வழங்கப்படும் என்றும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் இதுபோலவே வேறு ஒரு தனியார் மருத்துவமனைதான் இந்தப் பணியைச் செய்து வருகிறது என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இந்தப் பேருந்து நிலையத்தின் பராமரிப்பு விரைவில் தனியாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. அதற்குப் பிறகு, உள்ளே விற்கும் உணவுப் பொருட்களின் விலைகள் சிஎம்டிஏவால் கண்காணிக்கப்படும் என்றும் பராமரிப்பின் தரம் பன்மடங்கு மேம்படும் என்றும் கூறுகிறார்கள் அதிகாரிகள்.

சென்னையிலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்ல தற்போது கிளாம்பாக்கம், மாதவரம் என இரு பேருந்து நிலையங்கள் இயங்கிவரும் நிலையில், விரைவிலேயே மேற்கு மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்கு என குத்தம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் வரவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்இன்ஸ்டாகிராம்எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

 

சிறப்புச் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டது

Author


Hit Counter provided by technology news