விபத்துக்கு பிறகு தப்பி ஓடினால் 10 ஆண்டு சிறை: புதிய சட்டத்தை லாரி ஓட்டுநர்கள் எதிர்ப்பது ஏன்?

லாரி டிரைவர்கள் ஸ்டிரைக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பஞ்சாப், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில், ’ஹிட் அண்ட் ரன்’ (விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடுதல்) சட்டத்தைக் கடுமையாக்குவது தொடர்பாக பல்வேறு வணிக ஓட்டுநர் சங்கங்கள் வேலைநிறுத்தம் உட்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

வணிக வாகனங்களில் லாரிகள், டாக்சிகள், தனியார் பேருந்துகள் மற்றும் சரக்குகளை ஏற்றிச் செல்வதற்குப் பயன்படுத்தப்படும் டிரக்குகள் ஆகியவை அடங்கும்.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக, பல மாநிலங்களில் இருந்து பெட்ரோல் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லாரி உரிமையாளர்கள் தொழிற்சங்கங்களின் கூற்றுப்படி, ஜனவரி 1-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளது. இது வரும் காலங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

புதிய சட்டம் என்ன சொல்கிறது?

லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கோப்புப்படம்

160 ஆண்டுகளுக்கும் மேலான இந்திய தண்டனைச் சட்டத்திற்குப் பதிலாக, மத்திய அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் புதிய சட்டத்தை நிறைவேற்றியது. ‘இந்திய நீதிச் சட்டத்தின்’ புதிய விதியின்படி, வாகன ஓட்டிகளின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டால், விபத்து குறித்து வாகன ஓட்டிகள் காவல் துறையிடமோ அல்லது மாஜிஸ்திரேட்டிடமோ தெரிவிக்காமல் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றால், அவருக்கு அபராதமும் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

ஆனால், இந்த சட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

இந்த விதிக்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் மத்தியில் கோபம் நிலவுகிறது. இதில், குஜராத் மாநிலமும் விதிவிலக்கில்லை.

ஆமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட், பஞ்ச் மஹால் என அனைத்து மாவட்டங்களிலும் லாரி ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினர். ஓட்டுநர்களின் போராட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

சில உள்ளூர் ஊடக செய்திகள், ஓட்டுநர்களின் ஆர்ப்பாட்டம் சில இடங்களில் ‘வன்முறை சம்பவங்களையும்’ ஏற்படுத்தியது என தெரிவிக்கின்றன.

குஜராத் சரக்கு லாரி ஓட்டுநர்கள் சங்கம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், இந்தியாவில் எந்த தேசிய அல்லது உள்ளூர் சங்கமும் இதுதொடர்பாக வேலைநிறுத்தம் அறிவிக்கவில்லை என தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டம் செய்வது ஏன்?

அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் 27, டிசம்பர் 2023 அன்று பிரதமர் நரேந்திர மோதிக்கு இந்த சட்டம் குறித்து கவலை தெரிவித்து கடிதம் எழுதியது.

அந்தத் துறையுடன் தொடர்புடையவர்களுடன் விவாதிக்காமல் இந்தச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விபத்து தொடர்பான விசாரணைகளில் பல குறைகள் இருப்பதாகவும் அதனை இந்த சட்டம் கருத்தில் கொள்ளவில்லை எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்பாக, சிறு வாகனங்களின் உரிமையாளரிடம் தவறு இருக்கும் சூழ்நிலைகளில், வழக்கு விசாரணைகள் எப்படி மேற்கொள்ளப்படும் என்பதில் தெளிவு இருக்க வேண்டும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

பெரும்பாலான சம்பவங்களில் முழு விசாரணை நடத்தப்படாமல் லாரிகள், சரக்கு வாகனங்கள் போன்ற பெரிய வாகனங்களின் ஓட்டுநர்கள் மீது தவறு இருப்பதாக கருதப்படலாம்.

எந்தவொரு சாலை விபத்துக்கும் பெரிய வாகனங்கள் பொறுப்பேற்கும் போக்கு நாடு முழுவதும் இருப்பதாக அச்சங்கம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

விபத்துகளின் போது ஏன் ஓட்டுநர்கள் தப்பிக்கின்றனர்?

மேலும் அதில், விபத்து சமயங்களில் விசாரணைகளிலிருந்து தப்பிக்க மட்டுமல்லாமல் உள்ளூர் மக்களின் கோபத்திலிருந்து தனது உயிரைக் காப்பாற்றவும் அந்த இடத்திலிருந்து தப்பிப்பதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் போதிய பாதுகாப்பு இல்லாததால், இவ்வாறு செய்ய வேண்டியுள்ளதாகவும் சில நேரங்களில் வாகன ஓட்டிகள் காவல் நிலையத்தில் சரணடைந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதும் நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை அமல்படுத்துவது நாடு முழுவதும் விநியோக சங்கிலியை சீர்குலைக்கும் எனவும் அதனால் இதனை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

குஜராத் சரக்கு லாரி ஓட்டுநர் சங்கம், சரக்கு வாகன ஓட்டுநர்களுக்கு சுற்றறிக்கையில் சில விளக்கங்களை அளித்துள்ளது.

அதில், “இந்தச் சட்டம் லாரி ஓட்டுநர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து வகையான வாகன ஓட்டிகளுக்கும் பொருந்தும். எனவே, எந்த வகையிலும் விபத்து ஏற்பட்டால் ஓட்டுநர் அருகில் உள்ள காவல் நிலையம், நீதிமன்றம் அல்லது மாஜிஸ்திரேட் முன்பு நேரில் ஆஜராகி விபத்து விவரங்களை கூறி பாதுகாப்பு பெற வேண்டும். அதனால் இந்த சம்பவம் ’ஹிட் அன்ட் ரன்’ வரையறைக்குள் வராது. அதற்கு புதிய விதி பொருந்தாது. இதுதவிர, மேற்கண்ட சட்டம் எந்த இடத்திலும் அபராதத் தொகை குறித்து குறிப்பிடவில்லை. மேலும், செய்திகளில் தெரிவிக்கப்படும் ஐந்து முதல் ஏழு லட்சம் என்ற எண்ணிக்கையும் குறிப்பிடப்படவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ’ஹிந்துஸ்தான் டைம்ஸிடம்’ பேசிய குஜராத் சரக்கு லாரி ஓட்டுநர் சங்கத்தின் செயல் தலைவர் முகேஷ் தவே, “எந்த லாரி ஓட்டுநர்கள் சங்கமும் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து மத்திய அரசிடம் பேசி வருகிறோம்” என்றார்.

“ஓட்டுநர்களிடமும் பேசி, பணிக்குத் திரும்ப வலியுறுத்தி வருகிறோம். இந்தச் சட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்பதும், இந்தப் பிரச்னை சுமுகமாகத் தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் என்பதும் இங்கு முக்கியமாகக் கவனிக்கத்தக்கது” என்றார்.

லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கோப்புப்படம்

வேலைநிறுத்தத்தால் என்ன பாதிப்பு?

163 ஆண்டுகள் பழமையான இந்திய தண்டனைச் சட்டத்திற்கு (IPC) பதிலாக இந்திய குற்றவியல் சட்டத்தை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.

அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதையொட்டி நாடாளுமன்றத்தில் பேசும்போது, ​​”ஹிட் அண்ட் ரன் வழக்குகளில் தண்டனையை பத்து ஆண்டுகளாகக் குறைத்துள்ளனர்” என்று கூறினார்.

புதிய சட்டத்தின்படி, கவனக்குறைவாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், விபத்து குறித்து போலீஸ் அதிகாரி அல்லது மாஜிஸ்திரேட்டுக்கு தெரிவிக்காமல் ஓட்டுநர் தப்பிச் சென்றால், ஓட்டுநருக்கு அபராதம் மற்றும் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

இந்த வேலைநிறுத்தத்தால் குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் காய்கறிகள், பழங்கள், பால் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. மேலும், பெட்ரோல், டீசல் போன்றவற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் என்ன நிலை?

இந்த சட்டத்தை எதிர்த்து தமிழ்நாட்டில் லாரிகள், சரக்கு வாகன ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவில்லை என்கிறார், தமிழ்நாடு லாரி ஓட்டுநர் உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் தன்ராஜ்.

இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதில் எடுக்கப்படும் முடிவுகளை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்இன்ஸ்டாகிராம்எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

 

சிறப்புச் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டது

Author


Hit Counter provided by technology news