கடற்கொள்ளையர் விரட்டியடிப்பு – சீனா பக்கம் சாயும் நாடுகளுக்கு இந்தியா உணர்த்துவது என்ன?

இந்தியா vs சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • எழுதியவர்,தீபக் மண்டல்
  • பதவி,பிபிசி நியூஸ்

இந்திய கடற்படையின் எலைட் மரைன் கமாண்டோஸ் வெள்ளிக்கிழமையன்று வெற்றிகரமான நடவடிக்கை ஒன்றின் மூலம் லைபீரிய கொடியுடன் கூடிய கப்பலை கடத்தல்காரர்களிடம் இருந்து காப்பாற்றினர்.

எம்வி லீலா நார்ஃபோக் என்ற இந்த கப்பலில் இருந்த 21 பணியாளர்களில் 15 பேர் இந்தியர்கள்.

அந்த நடவடிக்கையின் போது கடத்தல்காரர்கள் யாரும் அங்கு கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், மரைன் கமாண்டோக்கள் இன்னும் அவர்களைத் தேடி வருகின்றனர்.

அரபிக்கடலில் இந்திய கடற்படையின் இந்த நடவடிக்கை குறித்து பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

அரபிக்கடலில் இந்தியா தனது வியூக ரீதியிலான முக்கியத்துவத்தை ஒரு பெரிய நடவடிக்கை மூலம் முதன் முறையாக உணர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

அரபிக்கடலில் இந்தியாவின் உத்தி ரீதியிலான நடவடிக்கைகளில் சுயாட்சிக்கான பிரகடனமாகவும் இது கருதப்படுகிறது.

அரபிக்கடலில் எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ள இந்தியக் கடற்படையைத் தொடர்ந்து பலப்படுத்தும் முயற்சியாக, மோதி அரசு இதனை முன்வைக்கிறது.

தற்போது செங்கடலில் கப்பல் கடத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், ஹூத்தி கிளர்ச்சியாளர்களை எதிர்த்து அமெரிக்க கடற்படையினர் போராடி வருகின்றனர். அதேநேரம் அரபிக்கடலில் இந்திய கடற்படையின் இந்த நடவடிக்கையின் முக்கியத்துவம் மிகவும் அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் கடல்சார் கொள்கை முன்முயற்சியின் தலைவர் அபிஜீத் சிங், செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸிடம் பேசியபோது, “சமீபத்திய நிகழ்வுகள் கடற்கொள்ளையர் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கடற்படைகளின் கவனத்தை ஏடன் வளைகுடாவிலிருந்து செங்கடலுக்கு மாற்றுவது போல் தெரிகிறது,” என்றார். இதை சாதகமாக பயன்படுத்தி, அரபிக்கடலில் கடற்கொள்ளையர்கள் தங்கள் நடவடிக்கையை அதிகப்படுத்தியுள்ளனர்.

அமெரிக்கா தலைமையிலான செங்கடல் பணிக்குழுவில் இந்தியா ஒரு அங்கமாக இருக்கவில்லை.

இந்தியா ஏதாவது சமிக்ஞை கொடுத்ததா?

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,அரபிக் கடல் சர்வதேச வர்த்தகத்திற்கு முக்கியமான பாதையாகத் திகழ்கிறது.

இந்தியாவிற்கு அரபிக்கடலின் முக்கியத்துவம்

அரபிக் கடல் என்பது இந்தியப் பெருங்கடலின் வடமேற்குப் பகுதி.

இது மேற்கில் அரேபிய தீபகற்பத்திற்கும் கிழக்கில் இந்திய துணைக்கண்டத்திற்கும் இடையில் அமைந்துள்ளது.

இது செங்கடலை ஓமன் வளைகுடாவுடன் இணைக்கிறது.

ஏமன், ஓமன், பாகிஸ்தான், இரான், இந்தியா மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளின் எல்லையாக அரபிக் கடல் உள்ளது.

மேலும் பல முக்கியமான கப்பல் பாதைகளையும் துறைமுகங்களையும் இணைக்கும் கடல் பகுதியாகவும் அரபிக் கடல் விளங்குகிறது.

எனவே இது சர்வதேச வர்த்தகத்திற்கு முக்கியமான பாதையாகத் திகழ்கிறது.

அரபிக் கடலில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்கள் அதிக அளவில் உள்ளன என்பதுடன் இந்த பிராந்தியம் உலகிற்கு ஒரு முக்கிய ஆற்றல் வளமாகவும் உள்ளது.

இரான், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அரபிக்கடலில் கடற்படை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அவை இங்கு பல கடற்படை தளங்களையும் கொண்டுள்ளன.

எனவே, பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அரபிக் கடல் இந்தியாவிற்கு முக்கியமான கடல் பகுதி என்பதை மறுக்கமுடியாது.

ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இயற்கை வளங்கள் மற்றும் ஆசிய நாடுகளின் தொழிலாளர் சந்தைகள் மற்றும் உற்பத்தித் தொழில்களுக்கு அரபிக்கடலில் ஸ்திரத்தன்மை மிகவும் முக்கியமானது. எனவே உலகப் பொருளாதாரத்தில் அதன் பங்கு மிகப் பெரியது என்றே சொல்லவேண்டும்.

இந்தியா ஏதாவது சமிக்ஞை கொடுத்ததா?
படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

சமீப காலமாக, இந்தியப் பெருங்கடலின் கரையோர நாடுகளின் வலுவான நட்பு நாடாக சீனா உருவெடுத்துள்ளது.

சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்தின் கீழ், கடல்சார் பட்டுப்பாதை அமைக்கும் முயற்சிகள் இந்த நாடுகளுக்கு இடையே பொருளாதார மற்றும் ராணுவ ஒத்துழைப்புக்கு ஒரு முக்கியமான தளத்தை வழங்கியுள்ளன.

இந்த நாடுகளில் சீனாவின் ஊடுருவல் அதிகரித்து வருவது இந்தியாவுக்கு கவலையளிக்கும் விஷயம்.

2017 இல், சீனா தனது முதல் வெளிநாட்டு ராணுவத் தளத்தை இந்தியப் பெருங்கடல் கடற்கரையில் உள்ள ஜிபூட்டியில் திறந்தது.

பிரான்ஸ், ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஏற்கனவே இங்கு கடற்படைத் தளங்களைக் கொண்டுள்ளன.

இங்கு சீனாவின் இருப்பு இந்த நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் சவாலாக மாறியுள்ளது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் சீன ஆய்வு மையத்தின் இணைப் பேராசிரியர் அரவிந்த் யெல்லேரி இது குறித்துக் கூறும்போது, ​​“இந்தியாவும் பலமுறை இங்குள்ள சீன வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளித்துள்ளது. இந்தியாவிற்கு அரபிக் கடல் முக்கிய பிராந்தியமாக இருப்பதால் அதை புறக்கணிப்பது மிகவும் கடினம். அரபிக்கடலில் இந்திய கடற்படைக்கு சவால் விடுவது அவ்வளவு எளிதானது அல்ல,” என்றார்.

இந்தியா ஏதாவது சமிக்ஞை கொடுத்ததா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அரபிக் கடல் பகுதியில் குற்றக் கும்பல்களிடம் இருந்து இந்தியா பாதுகாப்பு அளிக்கும் என்பதற்கான சமிக்ஞை தற்போது வெளிப்பட்டுள்ளது.

கடற்கொள்ளையரை விரட்டியடித்த இந்திய கடற்படை

கடந்த மாதம் அரபிக்கடலில் கடற்கொள்ளையர்களிடம் இருந்து மால்டா கப்பலை பாதுகாக்க இந்திய கடற்படை நடவடிக்கை எடுத்தது.

டிசம்பர் 23 அன்று, லைபீரியக் கொடியுடன் வணிகக் கப்பலான எம்வி கெம் ப்ளூட்டோ (MV Chem Pluto), ட்ரோன் தாக்குதல் நடத்தக் குறிவைக்கப்பட்டது. இந்த கப்பல் இந்தியாவின் மங்களூரு நகருக்கு வந்து கொண்டிருந்தது. அதன் 22 பணியாளர்களில் 21 பேர் இந்தியர்கள்.

இதற்குப் பிறகு, செங்கடலில் 25 இந்தியர்களை உள்ளடக்கிய எண்ணெய் டேங்கர் வகை கப்பலான எம்.வி. சாய்பாபாவும் ஆளில்லா விமானம் மூலம் தாக்கப்பட்டது.

இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் தற்போது இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாகவும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

எனவே, இந்தியா பெரிய நடவடிக்கைகளை எடுப்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்த சம்பவங்களை கருத்தில் கொண்டு, இந்தியா ஏற்கனவே தனது ஐந்து போர்க்கப்பல்களை அரபிக்கடலில் நிலைநிறுத்தியுள்ளது.

இதனுடன், ரோந்து விமானங்கள், மற்றும் ஆளில்லா விமானங்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அதாவது அரபிக்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதை பொறுத்துக் கொள்ளும் நிலையில் இந்தியா இல்லை.

வெள்ளிக்கிழமை இந்திய கடற்படையின் கமாண்டோ நடவடிக்கை இதை நிரூபித்துள்ளது.

அரவிந்த் யெல்லேரி கூறுகையில், “இந்தியாவின் இந்த நடவடிக்கை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது. முதலாவதாக, இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கும் திறன் தனது கடற்படைக்கு இருப்பதைக் காட்ட இந்தியா விரும்புகிறது. இரண்டாவதாக, இந்தப் பாதையில் வணிகம் செய்யும் சர்வதேச கப்பல் நிறுவனங்களுக்கு இந்தியா தேவை என்ற நிலையில், அதன் பங்கை அவர்கள் புறக்கணிக்கக் கூடாது என்ற நிலையை உருவாக்க இந்தியா முயல்கிறது,” என்றார்.

அரபிக்கடலில் இந்தியாவின் இந்த நடவடிக்கை வணிகக் கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இங்கிருந்து வணிகக் கப்பல்கள் மத்திய தரைக் கடல் நோக்கிச் செல்கின்றன. பின்னர் சூயஸ் கால்வாயை நோக்கிச் செல்கின்றன. மேலும் இந்தப் பாதை உலகளாவிய வர்த்தகத்தின் ஒரு பெரிய வினியோகக் கோடு போல் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளை இணைக்கிறது.

இந்தியா ஏதாவது சமிக்ஞை கொடுத்ததா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அரபிக் கடலில் கடத்தல் காரர்களிடம் இருந்து ஒரு கப்பலுக்கு பாதுகாப்பு கொடுத்ததன் மூலம் அப்பகுதியில் இந்தியா தனது செல்வாக்கை வெளிக்காட்டியுள்ளது.

சீனா பக்கம் சாயும் நாடுகளுக்கு இந்தியா உணர்த்துவது என்ன?

சமீப காலமாக, இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் எல்லையில் உள்ள பல சிறிய நாடுகள் சீனாவின் பக்கம் சாய்ந்து வருகின்றன.

இந்தியாவின் இந்த நடவடிக்கை இந்த நாடுகளுக்கு ஒரு செய்தி என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தொடர்ந்து பேசிய அரவிந்த் யெல்லேரி, “அரபிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் கரையோரங்களில் சீனாவின் பக்கம் சாய்ந்துள்ள – இந்தியா இங்கு தன்னிச்சையாக செயல்படுவதாக கருதும் சிறிய நாடுகளுக்கும் ஒரு செய்தி கொடுக்கப்பட்டுள்ளது.

நீங்கள் என்ன சொன்னாலும் இங்குள்ள கடல் வழிகள் மற்றும் தகவல் தொடர்புகளை இந்தியா கட்டுப்படுத்துகிறது என்று இந்த நடவடிக்கையின் மூலம் இந்தியா தெளிவான செய்தியை கொடுத்துள்ளது. எனவே, தேவைப்பட்டால் இந்தியாவைத் தான் உதவிக்கு அழைக்க வேண்டும். சீனா ஓடிவிடும் என்ற செய்தியை இந்திய தற்போது அளித்துள்ளது.

உண்மையில், அரபிக் கடல் இந்தியாவின் பிராந்திய அல்லது பிரத்யேக மண்டலத்திற்கு அருகில் உள்ளது. சீன கடற்படை இங்கு வரவும் முடியாது- அதை இங்கு நிறுத்தவும் முடியாது. அது இங்கு நீண்ட கால அளவில் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது.

மேலும் பேசிய அரவிந்த் யெல்லேரி, “இந்தியாவால் மட்டுமே இப்பகுதியில் நீண்ட கால அடிப்படையிலான செயல்பாடுகளை மேற்கொள்ள முடியும். குறிப்பாக கப்பல்களின் சுழற்சி, எரிபொருள் நிரப்புதல், படகுகள் மற்றும் கடலோர காவல்படைகளின் இயக்கம், மாலுமிகளை மாற்றுதல் போன்றவற்றைக் கூறமுடியும். இப்பகுதி இந்தியாவின் உரிமை. சீனா இந்த வேலையை இங்கு செய்ய முடியாது.” என்றார்.

இந்தியா ஏதாவது சமிக்ஞை கொடுத்ததா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மத்திய கிழக்கில் நடைபெறும் உள்நாட்டு மோதல்களின் காரணமாக அரபிக் கடல் பகுதியில் குற்றக் கும்பல்களின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

இந்திய கடற்படையின் பலம்

இந்திய கடற்படையின் வலிமை மற்றும் திறமைக்கு இந்த நடவடிக்கையும் சான்றாகும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

புகழ்பெற்ற மூலோபாய நிபுணரும், கொள்கை ஆய்வு மையத்தின் இயக்குநருமான சி.உதய் பாஸ்கர் கூறுகையில், “அரபிக் கடலின் சோமாலியா கடற்கரை பகுதியில் இந்திய கடற்படை மேற்கொண்ட இந்த நடவடிக்கை இந்திய கடற்படையின் நம்பகத்தன்மையையும் திறனையும் உறுதிப்படுத்தியுள்ளது. இப்போது இல்லையென்றால், இது போன்ற நடவடிக்கையை இந்தியா எப்போது மேற்கொள்ள முடியும்? ஏனெனில் இந்தியா தனது கடற்படையை வலுப்படுத்த பெரும் முதலீடுகளை செய்துள்ளது,” என விளக்கினார்.

கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா கடற்படை மற்றும் கடலோர காவல்படையை பலப்படுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அது இந்த நடவடிக்கை மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அரபிக்கடலில் கடற்கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகரித்தது ஏன்?

முன்பு அரபிக்கடலில் கடற்கொள்ளையர்கள் நடமாட்டம் அதிக அளவில் இருந்தது. ஆனால் அவர்களால் பெரிய அளவில் செயல்பட முடியவில்லை.

ஆனால் மத்திய கிழக்கில் உள்நாட்டு மோதல்கள் காரணமாக கிளர்ச்சியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த கிளர்ச்சியாளர்களுக்கு பணம் தேவை. எனவே, கடலில் இதுபோன்ற செயல்களில் அவர்களின் நாட்டம் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்களை நடத்த, ஒரு சில அதிநவீன ஆயுதங்கள் மட்டுமே போதுமானது.

இது குறித்துப் பேசிய அரவிந்த் யெல்லேரி, “ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்து வரும் உள்நாட்டு மோதல்கள், கடலில் கப்பல்களை கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாலும், தொழில்நுட்பத்தை இந்த குற்றக் கும்பல்கள் பயன்படுத்துவதால் அரபிக்கடலில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இக் குழுக்கள் இவை ஏமன், சூடான் மற்றும் பிற மத்திய கிழக்கு நாடுகளில் நடந்து வரும் உள்நாட்டு போர் மற்றும் தாக்குதல்களுக்கு நிதி சேர்ப்பதற்காக உருவாக்கப்பட்டவர்களைக் கொண்டவை. அவர்களுக்கு பணம் தேவைப்படுகிறது. அதனால்தான் இந்த நடவடிக்கைகள் இங்கு தீவிரமடைந்து வருகின்றன,” என்றார்.

“விநியோகச் சங்கிலிகளை சீர்குலைப்பதன் மூலமும் வர்த்தக வழிகளை கையகப்படுத்துவதன் மூலமும் அவர்கள் எளிதாக பணம் சம்பாதிக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்,” என்கிறார் யெல்லேரி.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்இன்ஸ்டாகிராம்எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

 

Author


Hit Counter provided by technology news