மாலத்தீவு – லட்சத்தீவு ஒப்பீடு: இரண்டில் சுற்றுலா செல்ல சிறந்தது எது?

மாலத்தீவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் லட்சத்தீவு பயணத்தின் புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து தொடங்கிய விவாதம் தற்போது மாலத்தீவை எட்டியுள்ளது.

பிரதமர் மோதி மற்றும் இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த மாலத்தீவு அமைச்சர்களை அந்நாட்டு அரசு இடைநீக்கம் செய்துள்ளது.

இந்த கருத்துக்கு இந்தியாவை சேர்ந்த பல தலைவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மாலத்தீவு தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துகள் அங்குள்ள சுற்றுலாத் துறைக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

அக்ஷய் குமார், சல்மான் கான், சச்சின் டெண்டுல்கர் போன்ற பிரபலங்கள் பலரும் சுற்றுலாப் பயணத்தின் போது இந்திய கடற்கரைகள் மற்றும் தீவுகளுக்கு முன்னுரிமை கொடுப்பது குறித்து பேசியுள்ளனர்.

இந்த முழு விவாதமும் பிரதமர் மோதியின் லட்சத்தீவு பயணத்தின் போது தொடங்கியது. அந்த பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியான நிலையில், சமூக ஊடகங்களில் ஒரு பிரிவினர் இனி விடுமுறைக்கு மாலத்தீவுக்குப் பதிலாக லட்சத்தீவுக்குச் செல்லுங்கள் என்று சொல்லத் தொடங்கியுள்ளனர்.

மாலத்தீவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

மாலத்தீவு – லட்சத்தீவு ஒப்பீடு

இதுபோன்ற சமூக ஊடக பதிவுகளுக்கு பதில் அளிக்கும் போது, ​​மாலத்தீவு அமைச்சர்கள், லட்சத்தீவுகளுடன் மாலத்தீவுகளை ஒப்பிடுவது சரியல்ல என்று ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தினர்.

மாலத்தீவு மற்றும் லட்சத்தீவுகளை ஒப்பிடும் போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் இருந்து மாலத்தீவை அடைவது எளிதானது. மேலும், குறைந்த நேரத்தில் அங்கு சென்றுவிடலாம்.

இந்தியாவிலிருந்து மாலத்தீவுக்கு செல்ல விசா தேவையில்லை. அதேசமயம், லட்சத்தீவு செல்ல உரிய அனுமதி பெற வேண்டும்.

இந்தியாவில் இருந்து மாலத்தீவுக்கு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் விமானங்கள் உள்ளன. அதேசமயம், லட்சத்தீவுக்கு குறைவான விமானங்களே உள்ளன.

லட்சத்தீவுகளும் மாலத்தீவுகளும் வெவ்வேறான சூழல்களை கொண்டவை. அவற்றை ஒப்பிடுவது சரியா என இக்கட்டுரையில் பார்ப்போம்.

மாலத்தீவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

மாலத்தீவு பற்றி தெரியுமா?

மாலத்தீவில் ‘மால்’ என்ற வார்த்தை ‘மாலா’ என்ற மலையாள வார்த்தையிலிருந்து வந்தது. மாலத்தீவில், ‘மால்’ என்றால் மாலை மற்றும் ’தியு’ என்றால் தீவு.

1965-இல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு இங்கு முடியாட்சி இருந்தது. பின்னர், நவம்பர் 1968-இல் குடியரசாக அறிவிக்கப்பட்டது.

மாலத்தீவு இந்தியாவின் தென்மேற்கில் அமைந்துள்ளது. இந்திய நகரமான கொச்சியில் இருந்து மாலத்தீவுக்கு சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தூரம் உள்ளது.

இது 1,200 தீவுகளைக் கொண்டது. பெரும்பாலான தீவுகள் மக்கள் வசிக்காதவை. மாலத்தீவின் பரப்பளவு 300 சதுர கிலோமீட்டர். அதாவது, டெல்லியை விட இது ஐந்து மடங்கு சிறியது.

மாலத்தீவின் மக்கள் தொகை சுமார் நான்கு லட்சம்.

மாலத்தீவில் திவேஹி மற்றும் ஆங்கிலம் பேசப்படுகிறது.

அங்குள்ள தீவுகள் எதுவும் கடல் மட்டத்திலிருந்து ஆறு அடிக்கு மேல் இல்லை. காலநிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயரும் அபாயத்தில் மாலத்தீவு உள்ளது.

மாலத்தீவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த நாட்டின் பொருளாதாரம் சுற்றுலாவை நம்பியே உள்ளது. இங்குள்ள தீவுகளின் பொருளாதாரமும் சுற்றுலாவையே சார்ந்துள்ளது. மாலத்தீவின் பொருளாதாரத்தில் தேசிய வருவாயில் கால் பகுதிக்கு மேல் சுற்றுலாத்துறையில் இருந்து வருகிறது.

2019-ஆம் ஆண்டில், ஒவ்வொரு ஆண்டும் மாலத்தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 20 லட்சமாக இருந்தது. ஆனால், கொரோனா காலத்தில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது.

மாலத்தீவுக்குச் செல்பவர்களில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்களே. கடந்தாண்டு இந்தியாவில் இருந்து மாலத்தீவுக்கு சுமார் 2 லட்சம் பேர் சென்றுள்ளனர். 2021-இல் இந்த எண்ணிக்கை சுமார் மூன்று லட்சமாகவும், 2022-இல் இந்த எண்ணிக்கை இரண்டரை லட்சமாகவும் இருந்தது.

மாலத்தீவின் ஊடக அமைப்பான AVAS-ன்படி, மாலத்தீவுக்கு வரும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியர்கள்தான்.

இங்கு நீலக் கடலால் சூழப்பட்ட வெள்ளை மணல் கடற்கரைகளைக் கொண்ட தீவுகள், உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.

மாலத்தீவுக்கு எந்த நாட்டிலிருந்து எத்தனை பேர் வருகிறார்கள்?

 • இந்தியா: 2 லட்சத்து 5 ஆயிரம்
 • ரஷ்யா: 2 லட்சத்து 3 ஆயிரம்
 • சீனா: 1 லட்சத்து 85 ஆயிரம்
 • பிரிட்டன்: 1 லட்சத்து 52 ஆயிரம்
 • ஜெர்மனி: 1 லட்சத்து 32 ஆயிரம்
 • இத்தாலி: 1 லட்சத்து 11 ஆயிரம்
 • அமெரிக்கா: 73 ஆயிரம்
மாலத்தீவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

மாலத்தீவில் என்னென்ன இடங்கள் உள்ளன?

கொச்சியில் இருந்து மாலத்தீவுக்கு ஜனவரி 26-ம் தேதி செல்ல வேண்டும் என்றால், விமான டிக்கெட்டுக்கு சுமார் ரூ.10 ஆயிரம் செலவாகும். மாலத்தீவு செல்ல இரண்டு மணிநேரம் ஆகும்.

மாலத்தீவு சுற்றுலா அமைச்சகத்தின் கூற்றுப்படி, மாலத்தீவில் 175 ஓய்வு விடுதிகள், 14 ஹோட்டல்கள், 865 விருந்தினர் இல்லங்கள், 156 கப்பல்கள், 280 ’டைவ்’ மையங்கள், 763 பயண முகவர் நிலையங்கள் மற்றும் ஐந்து சுற்றுலா வழிகாட்டி நிறுவனங்கள் உள்ளன.

மாலத்தீவில் பார்க்க வேண்டிய இடங்கள்.

 • சூரிய தீவு
 • ஒளிரும் கடற்கரை
 • ஃபிஹாலஹோஹி தீவு
 • மாலே நகரம்
 • மாஃபுஷி
 • செயற்கை கடற்கரை
 • மாமிகிலி

பல பயண வலைத்தளங்களின்படி, மாலத்தீவுக்குச் செல்ல சிறந்த மாதங்கள் ஜனவரி-ஏப்ரல்.

மே முதல் செப்டம்பர் வரை மாலத்தீவில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைவாக இருக்கும்.

ஒருநாளைக்கு மூன்று நட்சத்திர ஹோட்டல்களில் கட்டணம் சுமார் ரூ.5 ஆயிரத்தில் இருந்து தொடங்குகிறது.

நரேந்திர மோதி

பட மூலாதாரம்,ANI

லட்சத்தீவு பற்றி தெரியுமா?

லட்சத்தீவு இந்தியாவின் யூனியன் பிரதேசமாகும்.

மாலத்தீவு லட்சத்தீவில் இருந்து 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கேரளாவின் கொச்சியிலிருந்து 440 கிலோமீட்டர் தொலைவில் லட்சத்தீவு உள்ளது.

லட்சத்தீவு என்பது 36 சிறிய தீவுகளின் கூட்டமாகும்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இங்கு 96 சதவீதம் பேர் முஸ்லிம்கள். லட்சத்தீவின் மொத்த மக்கள் தொகை சுமார் 64 ஆயிரம்.

லட்சத்தீவின் பரப்பளவு சுமார் 32 சதுர கிலோமீட்டர்கள். அதாவது, மாலத்தீவின் பரப்பளவை விட இது சுமார் 10 மடங்கு குறைவு.

லட்சத்தீவில் உள்ள 10 தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர். கவரட்டி, அகட்டி, அமினி, கத்மட், கிலாடன், செட்லாட், பித்ரா, ஆண்டோ, கல்பானி மற்றும் மினிகாய் ஆகியவை இதில் அடங்கும். பித்ராவில் 271 பேரும், வெறிச்சோடிய பங்காரம் தீவில் 61 பேரும் மட்டுமே வசிக்கின்றனர்.

இங்கு மலையாள மொழி பேசப்படுகிறது. மினிகாயில் மட்டுமே மக்கள் மாஹே பேசுகிறார்கள்.

லட்சத்தீவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

மீன் பிடித்தல் மற்றும் தென்னை சாகுபடி ஆகியவை லட்சத்தீவில் உள்ள மக்களின் முக்கிய வருமான ஆதாரங்கள். லட்சத்தீவில் சுற்றுலாத் துறையும் வேகமாக வளர்ந்து வருகிறது.

கடந்தாண்டு லட்சத்தீவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 25 ஆயிரம் என்று சில ஊடகச் செய்திகள் தெரிவித்தன. அதாவது, மாலத்தீவு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட எட்டு மடங்கு குறைவு.

அகட்டியில் விமான ஓடுதளம் உள்ளது, கொச்சியிலிருந்து அங்கு செல்லலாம். அகட்டியில் இருந்து கவரட்டி மற்றும் கடமட் வரை படகுகள் உள்ளன. அகட்டியில் இருந்து கவரட்டிக்கு ஹெலிகாப்டர் சேவை உள்ளது.

கொச்சியில் இருந்து அகட்டிக்கு விமானத்தில் செல்ல சுமார் ஒன்றரை மணி நேரம் ஆகும்.

கொச்சியில் இருந்து 14 முதல் 18 மணிநேரத்தில் கப்பல் மூலம் லட்சத்தீவு சென்றடையலாம். இங்கு செல்வதற்கு எவ்வளவு பணமும் நேரமும் செலவிடப்படும் என்பது நீங்கள் எந்த தீவுக்குச் செல்கிறீர்கள், எத்தனை நாட்களுக்குச் செல்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.

நரேந்திர மோதி

பட மூலாதாரம்,FACEBOOK/NARENDRA MODI

லட்சத்தீவில் பார்க்க வேண்டிய இடங்கள்:

 • கவரட்டி தீவு
 • கலங்கரை விளக்கம்
 • ஜெட்டி தலம், மசூதி
 • அகட்டி
 • பங்காரம்
 • தின்னகர

மாலத்தீவுகளைப் போலவே லட்சத்தீவுகளிலும் வெள்ளை மணல் கடற்கரைகள் உள்ளன. மே முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டம் இங்கு செல்ல சிறந்த நேரம்.

இங்கு வெப்பநிலை 22 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். டிசம்பர் முதல் பிப்ரவரி வரை இங்கு சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

ஆனால், லட்சத்தீவுக்குச் செல்ல, நீங்கள் நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். மேலும் இங்குள்ள பல தீவுகளுக்குள் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது அல்லது அரசாங்க அனுமதி தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

லட்சத்தீவு என்ற பெயரின் கதையும் சுவாரஸ்யமானது. லட்சத்தீவு என்றால் மலையாளம் மற்றும் சமஸ்கிருதத்தில் ஒரு லட்சம் தீவுகள் என்று பொருள்.

லட்சத்தீவு

பட மூலாதாரம்,LAKSHADWEEP.GOV.IN

லட்சத்தீவு பேசுபொருளானது ஏன்?

சமீபத்தில், பிரதமர் மோதி லட்சத்தீவுக்கு சென்ற போது, ​​பல வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

’இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தியின்படி, பிரதமர் மோதியின் சமீபத்திய பயணமும் பாஜகவின் தேர்தல் வியூகத்துடன் தொடர்புடையது.

பிரதமர் மோதி தனது சமீபத்திய பயணத்தின் போது, ​​”2020-இல், அடுத்த 1,000 நாட்களில் லட்சத்தீவில் வேகமான இணையம் இருக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளித்தேன்” என்று கூறியிருந்தார். ”இன்று தொடங்கப்பட்டுள்ள ஆப்டிகல் ஃபைபர் திட்டம் 100 மடங்கு வேகமான இணைய வேகத்தை உங்களுக்கு வழங்கும்” என அவர் தெரிவித்தார்.

’இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தியில், நாட்டின் மற்ற பகுதிகளில் வெற்றி பெற்ற பாஜகவால் கேரளாவில் இதுவரை வெற்றி பெற முடியவில்லை, இந்த சூழலில் கேரளாவுக்குள் நுழைய லட்சத்தீவு நுழைவுவாயிலாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

பிரஃபுல் படேல் 2020 முதல் லட்சத்தீவின் நிர்வாகியாக உள்ளார்.

லட்சத்தீவில் மாட்டிறைச்சிக்குத் தடை விதித்தும், சில நேரங்களில் வெள்ளிக்கிழமை விடுமுறையை ஞாயிற்றுக்கிழமையாக மாற்றுவது குறித்தும் சர்ச்சை எழுந்துள்ளது.

லட்சத்தீவில் இந்திய கடலோர காவல்படை செயல்பாட்டில் உள்ளது.

இதுதவிர, ஐஎன்எஸ் த்வீபிரக்ஷக் கடற்படை தளமும் கட்டப்பட்டுள்ளது.

லட்சத்தீவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

ராகுல் காந்தியைத் தவிர, லட்சத்தீவு எம்.பி. முகமது ஃபைசலின் வேட்புமனுவும் கடந்தாண்டு ரத்து செய்யப்பட்டது.

ஜனவரி 11, 2023 அன்று, லட்சத்தீவு நீதிமன்றம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. முகமது ஃபைசலுக்கு கொலை முயற்சி வழக்கில் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவரது உறுப்பினர் பதவியை ரத்து செய்து மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டது. ஜனவரி 25, 2023 அன்று, கேரள உயர் நீதிமன்றம் தண்டனையை பத்து ஆண்டுகள் நிறுத்தி வைத்தது.

மாலத்தீவில் ‘இந்தியாவை வெளியேற்றுவோம்’ (India Out) என்ற முழக்கத்துடன் தேர்தலை சந்தித்த முகமது முய்ஸு, வெற்றி பெற்ற பின், இந்தியா தனது படைகளை திரும்ப பெறுமாறு கூறினார்.

நரேந்திர மோதி

பட மூலாதாரம்,@NARENDRAMODI

என்ன சர்ச்சை?

லட்சத்தீவில் டிசம்பர் 17-ம் தேதி வாராந்திர விடுமுறை வெள்ளிக்கிழமைக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டது. லட்சத்தீவில் வெள்ளிக்கிழமை தோறும் தொழுகையில் ஈடுபடுவதற்காக பல தசாப்தங்களாக அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.

லட்சத்தீவைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் எம்.பி. முகமது ஃபைசல் இந்த முடிவு ஒருதலைபட்சமானது என எதிர்த்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கலந்தாலோசிக்காமல் பிரஃபுல் படேல் ஒருதலைபட்சமான முடிவுகளை எடுப்பதாக அவர் கூறியிருந்தார். இங்கு பள்ளி நேரமும் காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணியாக மாற்றப்பட்டது.

லட்சத்தீவு மற்றும் மாலத்தீவுகள் இரண்டும் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

மாலத்தீவில் இந்தியாவின் இருப்பு வலுவிழந்தால், சீனா மாலத்தீவுக்கு மிக நெருக்கமாகிவிடும். லட்சத்தீவில் பாதுகாப்பு விஷயத்தில் ஏதேனும் குளறுபடிகள் ஏற்பட்டால், தீவிரவாதிகள் ஊடுருவுவதற்கான வாய்ப்பு ஆழமாகிவிடும்.

நவம்பர் 26, 2008 அன்று மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் இருந்து லட்சத்தீவின் நிலைமையை புரிந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. கேரளாவின் கடலோரப் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் லட்சத்தீவு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்இன்ஸ்டாகிராம்எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

 

சிறப்புச் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டது

Author


Hit Counter provided by technology news