Breaking

 

பாஜகவுடன் கூட்டணியை முறித்துவிட்டு முஸ்லிம்கள் மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட ரகசியம் என்ன?

சிறுபான்மையினர் வாக்குகள் யாருக்கு?

பட மூலாதாரம்,X/@SDPITAMILNADU

  • எழுதியவர்,சாரதா வி
  • பதவி,பிபிசி தமிழ்

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து முறித்துக்கொண்டு அதிர்ச்சி கொடுத்த அதிமுக, இப்போது தனது அடுத்தடுத்த நகர்வுகளின் மூலம் அந்த முடிவை உறுதிப்படுத்தி வருகிறது.

பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகளை விடுதலை செய்த குஜராத் அரசாங்கத்தின் முடிவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அந்த தீர்ப்பினை வரவேற்று அதிமுக அறிக்கை விட்டுள்ளது. அதற்கு முன்பாக எஸ்.டி.பி.ஐ நடத்திய மதச்சார்பின்மை மாநாட்டில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று பேசினார். சில மாதங்கள் முன் கிறிஸ்தவர்கள் மாநாட்டிலும் அவர் பங்கேற்றார்.

இதன் மூலம் பாஜகவின் கொள்கைகளை அதிமுக ஏற்கவில்லை என்ற கருத்தை வெளிப்படுத்துகிறது அதிமுக. பல்வேறு விவகாரங்களில் பாஜகவின் நிலைப்பாட்டை விமர்ச்சிக்கவில்லை, நரேந்திர மோதியை எதிர்த்து பேசுவதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தாலும், அதிமுக பாஜகவிடமிருந்து விலகி நிற்கிறது என்ற செய்தியை மக்களுக்கு, குறிப்பாக சிறுபான்மையினருக்கு கடந்த சில மாதங்களாகவே உணர்த்தி வருகிறது அதிமுக. ஆனால் எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கைகள் தேர்தல் களத்தில் பலன் அளிக்குமா?

சிறுபான்மையினருடன் அதிமுகவின் நெருக்கம்

பில்கிஸ் பானு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள அறிக்கையில், “ 2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த இனக்கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற இஸ்லாமிய சகோதரி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவரது குழந்தை உள்பட குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தண்டிக்கப்பட்ட 11 குற்றவாளிகளை முன்கூட்டியே குஜராத் அரசு விடுவித்ததை எதிர்த்து, பாதிக்கப்பட்ட சகோதரி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அந்த விடுதலையை ரத்து செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வரவேற்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில், மதுரையில்,எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்திய மதச்சார்பின்மை மாநாட்டில் பங்கேற்று எடப்பாடி பழனிசாமி பேசியபோது, “எஸ்.டி.பி.ஐ மாநாட்டின் கூட்டத்தை பார்க்கும்போது அ.தி.மு.க வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது தெரிகிறது. தி.மு.க கூட்டணி மதச்சார்பின்மையை கடைபிடித்து வருவதாக போலி தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள். 30 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டது.” என்று குறிப்பிட்டார். இந்தக் கூட்டத்தில், பாஜகவுடன் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் கண்டிப்பாக கூட்டணி இல்லை என்று எடப்பாடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஏற்கெனவே பாஜகவுடன் கூட்டணியில் இருந்தது சூழல் காரணமாக என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாஜகவிடமிருந்து விலகி இருப்பதை தெரிவிக்க எடப்பாடி எடுத்து வரும் நடவடிக்கைகளில் இரண்டு முக்கியமானதாக கருதப்படுகின்றன.

அதில் ஒன்று, சிறையில் இருக்கும் இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை. இதில் 1998ம் ஆண்டு நடைபெற்ற கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களும் அடக்கம். இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் அக்டோபர் மாதம் எழுப்பினார்.

மற்றொன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜாவை கடந்த ஆகஸ்ட் மாதம் மீண்டும் கட்சியில் இணைத்தது. பாஜகவுடன் கூட்டணியில் இருந்ததால் தான் 2021ம் ஆண்டு தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியது என்று பொதுவெளியில் கூறியதால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். முத்தலாக் விவகாரத்தில் பாஜகவை கடுமையாக எதிர்த்த அவர், கட்சியின் சிறுபான்மையினர் முகமாக இருந்தவர்.

சேலத்தில் இஸ்லாமியர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்வு கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. அதில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே வந்ததை திமுகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இஸ்லாமியர்கள் அதிமுக பக்கம் சாய்ந்துவிடுவார்கள் என்று திமுக பயப்படுகிறது. அதிமுக அனைத்து மதத்தையும் சமமாக பார்க்கிறது எந்த மதத்துக்கும் விரோதம் கிடையாது” என்று பேசினார். நாகூர் தர்காவின் அருகே உள்ள குளக்கரை சீரமைக்கப்பட்டது, ஹஜ் புனித பயணத்துக்கு மத்திய அரசு நிதியை நிறுத்தியபோது மாநில அரசு எட்டுக் கோடி வழங்கியது, ரமலான் பண்டிகையின்போது நோன்பு கஞ்சி சமைப்பதற்காக 5400 டன் அரிசி வழங்கியது ஆகியவற்றை அந்த கூட்டத்தில் நினைவு கூர்ந்தார்.

சிறுபான்மையினர் வாக்குகள் யாருக்கு?

“பாஜகவிலிருந்து வெளியேறியதை சிறுபான்மையினர் வரவேற்கின்றனர்”- அதிமுக

அதிமுகவின் இந்த நடவடிக்கைகள் மூலம் சிறுபான்மையினர் தங்கள் பக்கம் நிற்பார்கள் என்று அதிமுக எதிர்ப்பார்க்கிறது. அதிமுக செய்தித் தொடர்பாளர் ஜவஹர் அலி, “கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 3.5% மட்டுமே. பாஜக உடன் கூட்டணியில் இருந்ததன் காரணமாகவே அதிமுக தோல்வியடைந்தது.

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கூறியவுடன், இஸ்லாமிய அமைப்புகள், கிறித்துவ அமைப்புகள் எடப்பாடியை வந்து சந்தித்தனர். மதுரையில் எஸ். டி. பி. ஐ. மாநாட்டிலும், கோவையில் கிறித்துவக் கூட்டத்திலும் அதிமுகவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.” என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

சிறுபான்மையினர் வாக்குகள் யாருக்கு?

பட மூலாதாரம்,ஜவஹர் அலி

“அதிமுக இழந்திருப்பது சிறுபான்மையினர் வாக்குகள் அல்ல, பெண்களின் வாக்குகளை”

ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்புக்கு பிறகு அதிமுக இழந்திருப்பது பெண்களின் வாக்குகளை என்கிறார் மூத்த பத்திரிகையாளர் மாலன்.

“ஜெயலலிதா வெற்றி பெற்றதற்கு காரணம் அவர் கணிசமான பெண்களின் வாக்குகளை பெற்றார். அவர் பெண் என்ற செண்டிமெண்ட், மற்றும் அவர் முன்னெடுத்த சுய உதவிக்குழுக்கள், சானிடரி நாப்கின் வழங்குவது, உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவது போன்ற திட்டங்கள் பெண்கள் வாக்குகளை பெற காரணமாக இருந்தன.”

“இதனை திமுக உணர்ந்ததால் தான், இலவச பேருந்து பயணம், ரூ.1000 உரிமைத் தொகை ஆகியவை அமல்படுத்தப்பட்டன. ஆனால் அதிமுக பெண்களின் பிரச்னைகளுக்காக குரல் கொடுக்கவே இல்லை” என்கிறார் அவர்.

மேலும், “சிறுபான்மையினர் பாரம்பரியமாக திமுகவுக்கு வாக்கு அளிப்பவர்கள். ஜெயலலிதா கரசேவகர்களுக்கு ஆதரவு அளிப்போம் என்று கூறிய போதே, சிறுபான்மையினர் வாக்குகளை அதிமுக இழந்துவிட்டது.” என்கிறார்.

சிறுபான்மையினர் வாக்குகள் யாருக்கு?

பட மூலாதாரம்,FACEBOOK / மாலன்

படக்குறிப்பு,மாலன்

“இஸ்லாமியர்கள் என்றாலே திமுகவுக்கு தான் வாக்கு என்பது பொய்” – அதிமுக

இந்த வாதத்தை மறுக்கும் ஜவஹர் அலி, “இஸ்லாமியர்கள் பாரம்பரியமாக திமுகவுக்கு தான் வாக்களிப்பார்கள் என்று சத்திய பிரமாணம் செய்யவில்லை. 2014 ஆம் ஆண்டு 39 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்ற போது, இஸ்லாமியர்கள் அதிமுகவுக்கு வாக்களித்தனர். 2016 ஆட்சி அமைத்த போதும் இஸ்லாமியர்கள் அதிமுகவுக்கு வாக்களத்தினர். இஸ்லாமியர்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பவர்கள். குடியுரிமை சட்டத்தை ஆதரித்தது போன்ற தவறுகளை செய்து விட்டோம், இனி மேல் செய்ய மாட்டோம் என அதிமுக தற்போது கூறுகிறது. அதனை மக்கள் ஏற்பார்கள்” என்கிறார்.

பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதாக கூறும் ஓ பன்னீர்செல்வம் தரப்பினர், அதிமுக தோல்விக்கு பாஜக காரணம் கிடையாது என்கின்றனர். ஓ.பன்னீசெல்வம் தரப்பினரின் கொள்கை பரப்பு செயலாளர் மருது அழகுராஜ், “பாஜகவுடன் கூட்டணி கொண்டதால் தான் அதிமுக தோற்றது என்றால், உள்ளாட்சித் தேர்தல்களில் எடப்பாடி ஏன் தோற்றார். ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏன் காங்கிரஸிடம் தோற்றார்? எடப்பாடி அதிமுகவை பேரழிவு நோக்கி கொண்டு செல்கிறார். தேர்தல்களில் தொடர்ந்து எட்டு முறை வென்ற எடப்பாடி, ஒன்பதாவது முறையாக தோற்க போகிறார்” என்கிறார்.

சிறுபான்மையினர் வாக்குகள் யாருக்கு?

பட மூலாதாரம்,மருது அழகுராஜ்

இந்த தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணியா இந்தியா கூட்டணியா என்று நடைபெறும் போட்டியா என்கிறார் மருது அழகுராஜ் . “நாடாளுமன்ற தேர்தல் மோதி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா இல்லையா என்பதை பற்றியானது. இதில் எடப்பாடி நடுவில் என்ன செய்கிறார்.

ஜூலை மாதம் டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்று, மோதி அருகில் அமர்ந்து, மோதி தான் பிரதமராக வேண்டும் என்று பேசி விட்டு சென்னை வந்து பாஜக கூட்டணி இல்லை என்கிறார். தனக்கான நம்பிக்கைத்தன்மையை கட்சித் தொண்டர்களிடமும், மக்களிடமும் இழந்து விட்டார் எடப்பாடி” என்கிறார்.

மேலும், “ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலுக்கு 72 மணி நேரங்களுக்கு முன்பு எடப்பாடிக்கு சாதகமான நீதிமன்ற தீர்ப்புகள் கிடைத்தன. எங்களை பலவீனப்படுத்திய பாஜகவுக்கு, தற்போது எங்களை பலப்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது.

இந்த தேர்தலில் திமுகவை பாஜக அணி வீழ்த்தி, மோதி பிரதமராக வாக்குகளை பெற்று தருவோம். 1998-ல் அதிமுக, பாஜக, ராஜீவ் காங்கிரஸ், பாமக இணைந்து கூட்டணி அமைத்தனர். அது போன்ற சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. அப்போது பாஜக மிகவும் சிறிய கட்சி. இப்போது அப்படி இல்லை” என்கிறார்.

சிறுபான்மையினர் வாக்குகள் யாருக்கு?

தேர்தல் களம் : பாஜக Vs இந்தியா கூட்டணியா? அதிமுக Vs திமுகவா?

நடைபெறுவது நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும், தேர்தல் களம் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையிலானது தான் என்று, எந்த தேசிய கட்சியுடனும் கூட்டணி சேராத அதிமுக கூறுகிறது.

பாஜகவை அதிமுக எதிர்த்தாலும், பிரதமர் மோதியை எடப்பாடி பழனிசாமி விமர்சிப்பதில்லை என்ற விமர்சனத்துக்கு பதில் கூறும் ஜவஹர் அலி, “மோதியை விமர்சித்து எடப்பாடி பேசுவதில்லை என்று கூறுவது சொத்தையான வாதமாகும். காவிரி விவகாரத்தில் 26 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கவில்லையா? மும்மொழிக் கொள்கையை எதிர்க்கவில்லையா? பொருளாதாரத்தில் நலிந்தோருக்கான 10% இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லையா? அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் தர மறுத்த போது, அதை உதறி தள்ளவில்லையா அதிமுக?

இந்த தேர்தல் களம் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையிலானது. நாங்கள் ஏன் வலிமையற்றவர்களை எதிர்த்து நிற்க வேண்டும். வலிமையானவர்களை எதிர்த்து நிற்போம்” என்றார்.

சிறுபான்மையினர் வாக்குகள் யாருக்கு?

திமுகவுக்கு அதிமுகவுக்கும் கள்ளத் தொடர்பு இருக்கிறது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் விமர்சிக்க, அதிமுகவோ, திமுகவுக்கும் பாஜகவுக்கும் உறவு இருப்பதாக குற்றம் சாட்டுகிறது.

ஓ,பன்னீர்செல்வம் தரப்பின் மருது அழகுராஜ், “திமுகவுக்கு எதிரான வாக்குகளை பிரிக்கிறார் எடப்பாடி. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, எடப்பாடிக்கு எதிரான வழக்குகள் எதுவும் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது” என்கிறார்.

ஆனால், அதிமுகவின் ஜவஹர் அலி, “திமுக தான் பாஜகவுடன் கள்ள உறவு கொள்கிறது. கடலில் பேனா சிலை வைக்கவும், சென்னையில் ஃபார்முலா ஒன் கார் பந்தயம் நடத்தவும் எப்படி அனுமதி கிடைக்கிறது?” என்றார்.

எனினும் எடப்பாடி பழனிசாமி, மோதியை விமர்சிக்காமல் இருப்பதற்கு, தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கலாம் என்று பத்திரிகையாளர் மாலன் கூறுகிறார். “நவீன் பட்நாயக், ஜெகன்மோகன் போல, பாஜகவை எதிர்க்காமல், மறைமுக ஆதரவு அளிக்கவும் அதிமுக முடிவு செய்யக் கூடும்.” என்கிறார் அவர்.

பாஜகவுடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியில் அதிமுக சேர்வதற்கான வாய்ப்புகள் குறித்து கேட்ட போது, ஜவஹர் அலி “திமுக வேண்டுமானால் சேரும்” என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்இன்ஸ்டாகிராம்எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

 

Author


Hit Counter provided by technology news