கோகுல்ராஜ் ஆணவக்கொலை: சுவாதியை கோவிலில் சந்தித்தபோது கடத்தப்பட்டதன் பின்னணி

கோகுல்ராஜ்

ஜூன் 23, 2015

இளங்கலைப் படிப்பு முடித்து ஒரு மாதமான நிலையில், தனது சான்றிதழ்களை வாங்கி வருகிறேன் எனக் கிளம்பியுள்ளார், சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த அந்த 21 வயது பட்டியல் சாதி வாலிபர்.

ஆனால், அன்று இரவு வரை அவர் வீடு திரும்பவே இல்லை. மறுநாள் காலை அவர் நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையத்திற்கு அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

அவர்தான் கோகுல்ராஜ். பொறியியல் பட்டதாரியான கோகுல், அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தன்னுடன் படித்த தோழியைத்தான் கடைசியாகப் பார்த்தார். அதன்பிறகு அவர் சடலமாகத்தான் மீட்கப்பட்டார்.

“என் மகனுக்கு ஏற்பட்ட நிலை இனி யாருக்கும் ஏற்படக்கூடாது. அவன் யாரிடமும் எந்தத் தவறான நோக்கத்தோடும் பழகாதவன். இந்நேரம் அவன் இருந்திருந்தால், அவனுக்குத் திருமணமாகி, நல்ல வேலையில் இருந்திருப்பான்,” என பிபிசியிடம் பேசினார் கோகுல்ராஜின் தாயார் சித்ரா.

என்ன நடந்தது?

கல்லூரிக்கு மார்க் ஷீட் வாங்கச் சென்ற கோகுல்ராஜ் மாலை வரை என்ன ஆனார் எனத் தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தபோதுதான் அந்த அழைப்பு வந்தது. கோகுல்ராஜின் அண்ணன் கலைச்செல்வனுக்கு வந்த அந்த அழைப்பில், கோகுல்ராஜ் உடன் படித்த சுவாதி பேசியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரைச் சேர்ந்த சுவாதி, தானும் கோகுல்ராஜூம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் மலை உச்சியில் பேசிக் கொண்டிருக்கையில், அதை அடையாளம் கண்ட சிலர், கோகுல்ராஜை வலுக்கட்டாயமாக மிரட்டி தங்களுடன் அழைத்துச் சென்றதாகக் கூறியுள்ளார். அவர்கள் சுவாதியையும் ‘திரும்ப வீட்டிற்குப் போ’ என மிரட்டிச் சென்றதாக கோகுல்ராஜின் அண்ணன் கலைச் செல்வனிடம் சுவாதி கூறினார்.

கோகுல்ராஜை இழுத்துச் சென்றவர்கள், யுவராஜை சந்திக்க வேண்டும் என அழைத்துச் சென்றதாகவும், கோகுல்ராஜ் இழுத்துச் செல்லப்பட்ட வாகனத்தில் தீரன் சின்னமலை பேரவை என எழுதப்பட்டிருந்ததாகவும் சுவாதி கலைச்செல்வனிடம் கூறியுள்ளார்.

இதில், பதறிப்போன கலைச் செல்வனும், கோகுல்ராஜின் தாயார் சித்ராவும், திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்கள். அதன்பேரில், காணாமல் போனவரை கண்டறிவதற்கான இந்திய தண்டனைச் சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து தேடுகிறார்கள்.

இது தொடர்பாக காவல்துறையினரும் சுவாதியை அழைத்து விசாரித்தனர். விசாரணையில், கலைச்செல்வனிடம் கூறியதையே சுவாதி காவல்நிலையத்திலும் தெரிவித்தார். ஆனால், இந்தத் தகவல்களை வைத்து கோகுல்ராஜை கண்டுபிடிப்பதற்குள் அவர் மறுநாள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

கோகுல்ராஜூம் சுவாதியும் சந்தித்தது ஏன்?

கோகுல்ராஜ் சுவாதி

பட மூலாதாரம்,HANDOUT

கோகுல்ராஜூம் சுவாதியும் ஒரே வகுப்பில் படித்துள்ளனரே தவிர இருவரும் காதலிக்கவில்லை எனக் கூறியிருந்தார் கோகுல்ராஜின் அண்ணன் கலைச்செல்வன்.

“எங்களுடைய அப்பா, அரசுப் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி, பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். என்னையும் கோகுல்ராஜையும் வளர்த்தது எங்கள் அம்மா மட்டும்தான். அதனால், நன்கு படித்து, நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பது மட்டுமே எங்கள் மனதில் இருந்தது. அவனும் அப்படித்தான் இருந்தான்,” எனக் கூறியிருந்தார் கோகுல்ராஜின் அண்ணன் கலைச்செல்வன்.

கோகுல்ராஜூம் சுவாதியும் சந்தித்ததற்கான காரணத்தையும் சுவாதி காவல்நிலையத்தில் கூறியிருந்தார். இருவரும் ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்ததால் பழக்கம் ஏற்பட்டது. கோகுல்ராஜின் கைபேசி பழுதாகவே, அதைச் சரிசெய்வதற்காக சுவாதியிடம் ஆயிரம் ரூபாய் கடனாகக் கேட்டிருக்கிறார் கோகுல்ராஜ்.

அதற்காகவே இருவரும் சந்தித்ததாக சுவாதி திருச்செங்கோடு காவல்நிலையத்தில் தெரிவித்தார். அவர் கூறியதும், கோவில் அடிவாரம் மற்றும் கோவிலின் கருவறைக்கு அருகில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியானது.

யுவராஜ் தேடுதல் வேட்டை

யுவராஜ்

முதலில் தற்கொலை எனக் கூறப்பட்ட நிலையில், சிறப்பு மருத்துவர் குழுவின் உடற்கூராய்வுக்குப் பிறகு, அது கொலை என்பது உறுதியானது. காணாமல் போனவர்களைக் கண்டறிவதற்கான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்த காவல்துறை, அதைத் தற்கொலை வழக்காக மாற்றி, பின் கொலை வழக்காக மாற்றினர்.

அதில், தீரன் சின்னமலை பேரவையைச் சேர்ந்த யுவராஜ் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். வழக்குப் பதிவு செய்து சில நாட்களிலேயே, யுவராஜை தவிர்த்து, அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

யுவராஜ் வாட்ஸ் அப் வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டே இருந்தார். ஆனால், அவரை காவல்துறையினரால் கைது செய்ய முடியவில்லை. இதற்கிடையில், கோகுல்ராஜ் பேசும் ஒரு வீடியோவும், அவர் எழுதியதாகக் கூறப்பட்ட ஒரு கடிதமும் வெளியானது.

அந்தக் கடிதத்தில், தான் காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொள்வதாக அவர் கூறியிருந்தார். ஆனால், அதை போலீசார் மறுத்தனர்.

“அந்த வீடியோவே கோகுல்ராஜை மிரட்டிப் பேச வைக்கப்பட்டது. மேலும், அந்தக் கடிதமும் அப்படி கட்டாயத்தின் பேரில் பெறப்பட்டதுதான். ஏனெனில், அவரை கடத்திச் செல்லும் காட்சிகள் சிசிடிவியில் தெளிவாக உள்ளது,” என்றார் அப்போது இந்த வழக்கை விசாரித்த அதிகாரிகளில் ஒருவர்.

அவரைக் கைது செய்ய முடியாத நிலையில், அக்டோபர் மாதம் 11ஆம் தேதி சிபிசிஐடி போலீசில் யுவராஜ் சரணடைந்தார். மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்ததாக நம்பி, கோகுல்ராஜ் ஆணவக் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.

தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ் உட்பட 17 பேர்மீது இந்தக் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில் இரண்டு பேர் உயிரிழந்துவிட்ட நிலையில், மற்ற 15 பேர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணை, பின்னர் மதுரை மாவட்ட வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

வழக்கு என்ன ஆனது?

வழக்கறிஞர் மோகன்

பட மூலாதாரம்,MOHAN ADVOCATE/FACEBOOK

யுவராஜ் உள்ளிட்ட அனைத்துக் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்ட பின், நவம்பர் மாதம் கோகுல்ராஜின் அம்மா சித்ரா தரப்பில் இருந்து ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அதில், சுவாதி பேசினார். அவர், தானும் கோகுல்ராஜூம் காதலிக்கவில்லை என்றும், ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்த நண்பர்கள் மட்டுமே என்றும் கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து, ஜனவரி 7, 2016இல், 725 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிசிஐடி போலீஸ். ஆனால், வழக்கு நாமக்கல் நீதிமன்றத்தில் சரியாக நடக்கவில்லை என கோகுல்ராஜின் தாய் சித்ரா நினைத்ததால், இரண்டு முறை முறையிட்டதற்குப் பின், வழக்கு மதுரையில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு 2019இல் மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞருக்குப் பதிலாக சிறப்பு வழக்கறிஞர் வேண்டி கோகுல்ராஜின் தாயார் தாக்கல் செய்திருந்த மனுவின் அடிப்படையில், வழக்கறிஞர் பா.மோகன் சிறப்பு வழக்கறிஞராக உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார். வழக்கைத் தான் கையில் எடுக்கும்போதே 41 சாட்சிகள் விசாரித்து முடிக்கப்பட்டிருந்ததாக் கூறினார் வழக்கறிஞர் பா.மோகன்.

மதுரையில் வழக்கு நடைபெற்று வந்தபோது, வழக்கில் சாட்சியாக ஆஜரான சுவாதி, பிறழ் சாட்சியாக மாறினார். சம்பவம் குறித்து 2015 முதல் சாட்சியாக இருந்த சுவாதி, 2022இல் பிறழ் சாட்சியாக மாறி, தான் கோகுல்ராஜை சந்திக்கவே இல்லை எனக் கூறினார். அவரைத் தவிர, இன்னும் சிலரும் பிறழ் சாட்சியாக மாறினாலும், சம்பவ இடத்தில் இருந்த ஆதாரங்களைக் கொண்டு, இது கொலை வழக்கு என்றும், அதைச் செய்தவர்கள் கோகுல்ராஜ் உள்ளிட்டோர்தான் என்றும் நிரூபிக்கப்பட்டது.

தீரன் சின்னமலை பேரவைத் தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை வன்கொடுமைத் தடுப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத் குமார் தீர்ப்பளித்தார்.

தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ், அவருடைய கார் ஓட்டுநர் அருண் ஆகியோருக்கு மூன்று ஆயுள் தண்டனைகளும், குமார், சதீஷ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு இரண்டு ஆயுள் தண்டனைகளும், பிரபு, கிரிதர் ஆகியோருக்கு தலா ஓர் ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரை விடுதலை செய்தது. இந்தத் தீர்ப்பில் காதலுக்கு சாதி, மதம், இனம் முக்கியமல்ல என நீதிபதி எழுதியிருந்தார்.

“காதலுக்கு சாதி, மதம், இனம் முக்கியமல்ல. ஆதிக்க சாதி என்ற ஆணவத்தால் எதிரிகள் தாழ்த்தப்பட்ட பொறியியல் படித்த ஓர் இளைஞனைத் தங்கள் சாதியைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்துள்ளார் என்ற சந்தேகம் கொண்டு அந்த இளைஞன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்படுவது உணர்வு மற்றும் மனம் சம்மந்தப்பட்ட விஷயம். அதைப் பல சரிதங்களும், இதிகாசங்களும் நமக்கு உணர்த்துகின்றன. காதலுக்கு சாதி, மதம், இனம் போன்றவை முக்கியமல்ல. அவற்றால், காதலைத் தடுக்கவோ அழிக்கவோ முடியாது.

கோகுல்ராஜின் ஆணவக் கொலை ஆதிக்க சாதி வெறியின் மற்றொரு ரத்த சரித்திரம்,” என தீர்ப்பில் நீதிபதி எழுதியிருந்ததாக ‘சாதியின் பெயரால்’ என்னும் நூலில் மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகர் எழுதியிருக்கிறார்.

தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம்

நீதிமன்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தத் தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உட்பட தண்டனை வழங்கப்பட்ட 10 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். அதேபோல, வழக்கிலிருந்து ஐந்து பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜின் தாய் மேல்முறையீடு செய்தார். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், வழக்கின் முக்கிய சாட்சியான கோகுல்ராஜின் தோழியை நீதிமன்றத்துக்கு வரவழைத்து விசாரித்தனர். அப்போதும் அவர் பிறழ் சாட்சியம் அளித்ததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இந்த நிலையில், யுவராஜ் உள்ளிட்டோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகள் உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களைச் சேகரித்ததில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டி, தங்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என வாதிட்டார்.

அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மிகவும் திட்டமிட்டு கோகுல்ராஜ் கொல்லப்பட்டதாக வாதிட்டார். இதற்கிடையே கோகுல்ராஜ் கடைசியாக உயிருடன் காணப்பட்ட திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், கோகுல்ராஜ் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட ரயில் பாதை ஆகியவற்றை நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்தனர். அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

அந்தத் தீர்ப்பில், “கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் மீதான குற்றச்சாட்டு நிரூபணமாகியிருக்கிறது. மேலும், சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் எந்தப் பிழையும் இல்லை என்பதும் உறுதியாகிறது.

இந்த விவகாரத்தில் ஊடகங்கள் பரபரப்பாகச் செயல்படக் கூடாது. பொறுப்புடன் செயல்பட வேண்டும். கருத்துச் சுதந்திரத்தின் கட்டுப்பாடு குறித்து ஊடகங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். யுவராஜ் ஊடகங்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியிருக்கிறார். அவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை எனப் பேட்டியளித்திருக்கிறார்.

குற்றவாளிகளைப் பேட்டி காண்பதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும். இந்த வழக்கில், யுவராஜ் உட்பட 10 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது. யுவராஜ் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் சிறையிலிருக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டனர் நீதிபதிகள்.

அதேபோல வழக்கிலிருந்து ஐந்து பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜின் தாயார் சித்ரா மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்இன்ஸ்டாகிராம்எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

 

சிறப்புச் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டது

Author


Hit Counter provided by technology news