Breaking

 

தக்காளி ரூ.700, கேரட் ரூ.800: இலங்கையில் காய்கறிகள் விலை 7 மடங்கு உயர்வு – என்ன காரணம்?

இலங்கை பொருளாதார நெருக்கடி

  • எழுதியவர்,யூ.எல். மப்றூக்
  • பதவி,பிபிசி தமிழுக்காக

இலங்கை மக்கள் தினசரி தேவைகளை குறைந்தபட்சம் நிறைவேற்றுவதற்கே சிரமப்படும் அளவுக்கு பொருளாதார ரீதியாக, கடும் இன்னல்களை எதிர்கொள்கின்றனர். உணவுப் பொருட்களின் விலைகள் மிக அதிகமாக உயர்ந்துள்ளன. அதிலும், காய்கறி, மரக்கறி வகைகள் மற்றும் உப உணவுப் பொருட்களின் விலைகள் முன்பு இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன.

இந்நிலையில், ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ‘வாட்’ (VAT) எனப்படும் மதிப்பு கூட்டு வரியை 15 வீதத்திலிருந்து 18 சதவீதமாக அரசு உயர்த்தியுள்ளது. முன்னர் ’வாட்’ விதிக்கப்படாத பல பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு, தற்போது ‘வாட்’ விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மேலும் சிரமத்தை சந்திக்கின்றனர்.

சில்லறை விலையில் ஒரு கிலோகிராம் பீன்ஸ் 900 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கேரட் ஒரு கிலோ 800 ரூபாய். சாதாரண காலங்களில் ரூ.100-க்கும் குறைந்த விலையில் கிடைத்த ஒரு கிலோகிராம் தக்காளி தற்போது 7 மடங்கிற்கும் மேலாக அதிகரித்து, விலை 700 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

பச்சை மிளகாய் ஒரு கிலோகிராம் 1,500 ரூபாய். இஞ்சி ஒரு கிலோ 3,000 ரூபாய் வரையில் விற்பனையான நிலையில், தற்போது 1,800 ரூயாய்க்குக் கிடைக்கிறது. சாதாரண காலங்களில் ஒரு கிலோகிராம் இஞ்சியின் விலை 200 ரூபாய்க்கும் குறைவாகும்.

இலங்கை பொருளாதார நெருக்கடி
படக்குறிப்பு,உணவுப்பொருட்களின் விலை முன்பில்லாத வகையில் உயர்ந்துள்ளது.

தேங்காய் ஒன்று ரூ.100

ஒரு மாதத்துக்கு முன்னர் ஒரு கிலோகிராம் அதிகபட்சமாக ரூ.150-க்கு சில்லறைக் கடைகளில் விற்கப்பட்ட பெரிய வெங்காயம், தற்போது 600 ரூபாய் வரையில் விலை போகிறது. பெரிய வெங்காயத்தின் ஏற்றுமதியை இந்தியா நிறுத்தியுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

ரூ. 50-க்கும் குறைந்த விலையில் கிடைத்த தேங்காய் ஒன்று தற்போது ரூ.100 வரையில் விற்பனையாகிறது.

இந்த நெருக்கடி நிலை குறித்து ஊடகங்களிடம் பேசிய ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய, “தேங்காய் சம்பலுக்கு கொஞ்சம் வெங்காயத்தை எப்படிச் சேர்ப்பது எனும் போராட்டத்துடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்” என கவலை தெரிவித்துள்ளார்.

”இந்த விலையை வாழ்நாளில் எதிர்கொண்டதில்லை”

இலங்கை பொருளாதார நெருக்கடி
படக்குறிப்பு,இந்த விலை உயர்வை வாழ்நாளில் கண்டதில்லை என்கிறார், ஏ.எம். றிஸ்லி

மரக்கறி வகைகளுக்கு இந்தளவு விலை அதிகரித்ததை தனது வாழ்நாளில் கண்டதில்லை என, கிழக்கு மாகாணம்-அக்கரைப்பற்றில் மரக்கறி மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் ஏ.எம். றிஸ்லி கூறுகிறார்.

30 வருடங்களுக்கும் மேலாக இவர் மரக்கறி வியாபாரம் செய்கிறார். ‘ஆங்கில காய்கறிகள்’ எனப்படும் கேரட், பீன்ஸ், லீக்ஸ் (வெங்காய தாள்), கோவா (முட்டைக்கோஸ்), பீட்ரூட் போன்றவற்றை, அவை உற்பத்தி செய்யப்படும் நுவரெலியா பிரதேசத்திலிருந்து கொள்வனவு செய்துகொண்டு வந்து, அக்கரைப்பற்றில் றிஸ்லி விற்கிறார்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள பல வியாபாரிகள் இவரிடமிருந்து மரக்கறி வகைகளை மொத்தமாகக் கொள்வனவு செய்கின்றனர். சில்லறையாகவும் விற்கிறார்.

”மரக்கறி வியாபாரத்தில் பல்வேறு சவால்கள் உள்ளன. சில மரக்கறி வகைகளை அன்றைய தினமே விற்று முடிக்க வேண்டும். மீதமானால் அவற்றை மறுநாள் விற்பது மிகவும் கடினம். அதேபோன்று, மரக்கறி வியாபாரத்தில் சேதாரம் அதிகம்.

உதாரணமாக, 63 கிலோகிராம் எடை கொண்ட ஒரு மூட்டை கோவாவை கொள்வனவு செய்யும் போது, அதில் 15 கிலோகிராம் சேதாரமாகிவிடும். அதேபோன்று, மரக்கறிகள் எடை குறைவதும் பெரிய சவாலாகும்” என, தனது வியாபாரத்திலுள்ள கஷ்ட நஷ்டங்கள் குறித்து றிஸ்லி பிபிசி தமிழிடம் பேசினார்.

இலங்கை பொருளாதார நெருக்கடி
படக்குறிப்பு,கேரட் ஒரு கிலோ 800 ரூபாய்க்கு விற்பனை

உரங்களின் விலை குறையாததால் நீடிக்கும் சிக்கல்

பச்சை மிளகாய், தக்காளி போன்றவற்றுக்கு இதற்கு முன்னர் இந்தளவு விலை உயர்ந்ததில்லை என்கிறார் றிஸ்லி. தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை, எரிபொருளுக்கான விலையேற்றம் ஆகியவை, மரக்கறி மற்றும் உப உணவுப் பொருட்களுக்கான அதிக விலையேற்றத்துக்கு பிரதான காரணம் என அவர் கூறுகிறார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் பசளைக்கான (உரம்) தட்டுப்பாடு ஏற்பட்டமையினாலும், பின்னர் பசளைக்கான விலைகள் பன்மடங்கு அதிகரித்தமையினாலும், மரக்கறிகளுக்கு அதிகரித்த விலை – இன்னும் சாதாரண நிலைக்குத் திரும்பவில்லை எனவும் றிஸ்லி சுட்டிக்காட்டினார்.

அக்கரைப்பற்றிலிருந்து நுவரெலியா சென்று, அங்கு மரக்கறிகளை கொள்முதல் செய்து, மீண்டும் அக்கரைப்பற்றுக்கு வருவதற்காக சுமார் 450 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு கொண்டு வரும் மரக்கறி வகைகளை, ஒரு கிலோவுக்கு 20 ரூபாய் மட்டுமே லாபம் வைத்து தாம் விற்பனை செய்வதாகவும் றிஸ்லி குறிப்பிடுகின்றார்.

நுவரெலியாவிலிருந்து மரக்கறியைக் கொண்டு வரும் வாகனத்துக்கு டிசம்பர் 31-ஆம் தேதி, ஒரு கிலோ ரூ. 9 எனும் கணக்கில் போக்குவரத்துக் கூலி வழங்கியதாகவும், ஆனால் ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து 12 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை பொருளாதார நெருக்கடி
படக்குறிப்பு,ஒரு கிலோகிராம் பீன்ஸ் 900 ரூபாய்க்கு விற்பனை

பெட்ரோல் விலையும் உயர்வு

நாட்டில் 13 வீதமாக இருந்த ‘வாட்’ வரியை 18 வீதமாக அரசு அதிகரித்துள்ளதோடு, முன்னர் ‘வாட்’ விதிக்கப்படாத பல பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் வாட் வரி விதித்தமையே போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளமைக்குக் காரணமாகும்.

எடுத்துக்காட்டாக எரிபொருள்களுக்கு முன்னர் ‘வாட்’ விதிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், தற்போது 18 வீதம் ‘வாட்’ வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, ஒரு லிட்டர் 346 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒக்டேன்-92 வகை பெட்ரோலின் விலை, தற்போது 366 ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், ஒரு லிட்டர் 329 ரூயாய்க்கு விற்கப்பட்ட டீசல், தற்போது 358 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த எரிபொருள் விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவர் தெரிவிக்கின்றார்.

இலங்கை பொருளாதார நெருக்கடி
படக்குறிப்பு,குறைவான லாபத்திற்கு விற்பனை செய்யப்படும் காய்கறிகள்

”13 ஆயிரம் கிலோவுக்குப் பதிலாக 600 கிலோ மட்டுமே விளைச்சல்”

இலங்கையில் கேரட், பீன்ஸ் உள்ளிட்ட ஆங்கில மரக்கறிகளை உற்பத்தி செய்யும் பிரதேசங்களில் வெலிமடையும் ஒன்றாகும். அங்கு இம்முறை கேரட் செய்கையில் ஈடுபட்டுள்ளார் சிப்லி அஹமட். ஊடக நிறுவனமொன்றில் பணியாற்றிய இவர், தற்போது ஆசிரியராக கடமையாற்றிக் கொண்டே, தனது சொந்த இடத்தில் கேரட் விவசாயத்திலும் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், மரக்கறிச் செய்கை தற்போது மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சிப்லி அஹமட் கூறுகிறார். தொடர்ச்சியான மழை மற்றும் பசளைக்கான அதிக விலை போன்றவை மரக்கறி செய்கை பாதிக்கப்பட்டுள்ளமைக்கு பிரதான காரணங்கள் என்கிறார்.

”50 கிராம் காரட் விதைகளை பயிரிட்டார், 90 நாட்களில் அவற்றிலிருந்து 600 கிலோகிராம் கேரட் அறுவடை செய்வோம். கேரட் செய்கைக்கு மழையும் வெயிலும் சம அளவில் வேண்டும். ஆனால், செப்டம்பர் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக மழை பெய்துகொண்டிருக்கிறது. இதனால் மரக்கறிப் பயிர்களின் வளர்ச்சி மிகவும் குன்றிவிட்டது.

மழை காலத்தில் நோய்களால் பயிர்கள் அதிகம் பாதிக்கப்படும், ஆனாலும் பூச்சி நாசினிகளை மழைக்காலத்தில் தெளிக்க முடியாது. தெளித்தாலும் பயிர்கள் மருந்தை உறிஞ்சுவதற்கு முன்னர் மழையில் கழுவுண்டு போய்விடும்.

என்னுடைய மாமா ஒருவர் 1,150 கிராம் கேரட் விதை பயிரிட்டார். அதிலிருந்து ஆகக்குறைந்தது 13,000 கிலோகிரம் கேரட் அறுவடையாகக் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், வெறும் 600 கிலோகிராம் மட்டுமே அறுவடையானது. இப்படியான காரணங்களால் மரக்கறிக்கான விலை சடுதியாக அதிகரித்துள்ளது” என்கிறார் சிப்லி அஹமட்.

இலங்கை பொருளாதார நெருக்கடி
படக்குறிப்பு,சீரற்ற காலநிலையும் இதற்கு காரணமாக இருக்கிறது.

இறங்காத அரிசி விலை

இதற்கிடையில், அரிசிக்கான விலையும் அதிகரித்த நிலையிலேயே உள்ளது. சில்லறை விலையில் ஒரு கிலோ சாதாரண அரிசி 220 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த சிறுபோகத்தில் 5,500 ரூபாய்க்கு விற்பனையான 66 கிலோகிராம் எடைகொண்ட ஒரு மூட்டை நெல்லின் விலை, தற்போது 7,000 ரூபாயாக உள்ளது என்கிறார், அம்பாறை மாவட்டத்தில் அரிசி ஆலை நடத்தும் ஏ.எல். பதுறுதீன்.

இதேவேளை, தற்போதைய பெரும்போகத்தில் பெய்துவரும் அதிக மழை மற்றும் வெள்ளம் காரணமாக நெல் விவசாயத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டின் நெல் உற்பத்தியில் 23 சதவீதம் பங்களிப்பு வழங்கும் அம்பாறை மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக, நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் உள்ளடங்கலாக மூன்று மாவட்டங்களைக் கொண்ட கிழக்கு மாகாணத்தில் இம்முறை பெரும்போகத்தில் 131,885.37 ஹெக்டேரில் நெல் விவசாயம் மேற்கொள்ள எதிர்பார்த்திருந்த நிலையில் 1,25,376.62 ஹெக்டேரில் நெல் விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் தெரிவித்தார்.

தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நெல் விவசாயத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் அவை தொடர்பான கணக்கெடுப்பு காலநிலை சீரான பின்னரே மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.

இலங்கை பொருளாதார நெருக்கடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தேயிலை மற்றும் தேங்காய் எண்ணெய்க்கும் ‘வாட்’ வரி

”’வாட்’ மூலம் 1,400 பில்லியன் ரூபாய் வருமானம் பெறத் தீர்மானம்”

நாட்டில் 15 சதவீதமாக இருந்த ‘வாட்’ வரி, 2024-ஆம் ஆண்டிலிருந்து 18 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக, 2024-ஆம் ஆண்டில் ‘வாட்’ வரி மூலமாக 1,400 பில்லியன் ரூபாயை அரச வருமானமாக பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக, ஜனாதிபதி அலுவலக அரச வருமானப் பிரிவின் பணிப்பாளர் கே.கே.ஐ. எரந்த தெரிவித்திருந்தார்.

2023-ஆம் ஆண்டு ’வாட்’ வரி மூலம் 600 பில்லியன் ரூபாய் வருமானம் எதிர்பார்க்கப்பட்ட போதிலும், 450 பில்லியன் ரூபாய் மட்டுமே கிடைத்தது என்றும் அவர் கூறியிருந்தார்.

கல்விச் சேவை, மின்சாரம், சுகாதாரம், மருத்துவம், பயணிகள் போக்குவரத்து, உணவு, காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்பட சுமார் 90 வகையான பொருட்களுக்கு ‘வாட்’ வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனாலும், முன்னர் ‘வாட்’ விதிக்கப்படாத 97 வகையான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு புதிதாக ‘வாட்’ வரி விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, ரசாயன உரங்களுக்கு ‘வாட்’ வரி விதிக்கப்பட்டுள்ளதோடு, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீனி, தேயிலை மற்றும் தேங்காய் எண்ணெய் போன்றவற்றுக்கும் ‘வாட்’ வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

”ஏழைகளை மேலும் ஏழைகளாக்கி விடும்”

இலங்கை பொருளாதார நெருக்கடி
படக்குறிப்பு,வரி விதிப்பால் மேலும் பாதகம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார், பேராசிரியர் ஏ.எல். ரஊப்

ஆனால், இந்த வரி விதிப்பானது மக்களுக்கு மென்மேலும் பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை தலைமைப் பேராசிரியர் ஏ.எல். ரஊப் கூறுகின்றார்.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தாமல், அல்லது அதற்குரிய திட்டங்களை முன்வைக்காமல், வரி விதிப்பின் மூலம்தான் நாட்டின் வருமானத்தைப் பெறலாம் எனும் யுக்தியை தொடர்ந்து கடைபிடிப்பது, தற்போதைய காலத்துக்குப் பொருத்தமற்றது எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

குறிப்பாக, உள்நாட்டு உற்பத்தியை அபிவிருத்தி செய்வதற்கான எந்தத் திட்டமும் முன்வைக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். எடுத்துக்காட்டாக, விவசாயத்துறை மற்றும் பால் உற்பத்தி துறை போன்றவற்றை மேம்படுத்துவதற்காக எந்தவித திட்டங்களையும் அரசாங்கம் கொண்டு வரவில்லை எனவும் பேராசிரியர் குறிப்பிடுகின்றார்.

”தமது வாழ்க்கைச் செலவை ஈடுசெய்ய முடியாத சிக்கலானதொரு சூழ்நிலையில் மக்கள் உள்ளனர். மக்களின் வருமானத்தில் எந்தவித அதிகரிப்பும் இல்லாத நிலையில், மக்களுக்கு வரி விதித்து, அவர்களின் வாழ்க்கைச் செலவில் திடீரென அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளமை பாரதூரமான விடயம்” எனவும் அவர் கூறினார்.

இலங்கை பொருளாதார நெருக்கடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கல்வி, மருத்துவ செலவுகளை குறைக்கும் மக்கள்

கல்வி, மருத்துவ செலவுகளை குறைக்கும் நிலை

நாளாந்த செலவுகளை நிறைவேற்ற முடியாத மக்களிடம் வரியை அதிகரித்து வசூலிப்பது, எந்த வகையிலும் நியாயமில்லை எனவும் பேராசிரியர் ரஊப் குறிப்படுகின்றார்.

இதனால் மக்கள் தமக்கான கல்வி மற்றும் மருத்துவம் போன்றவற்றுக்குரிய செலவுகளை குறைப்பதற்கு அல்லது கைவிடுவதற்கான நிலை ஏற்படும் எனவும் அவர் கவலை தெரிவித்தார்.

”வரிகள் மூலம் பெறப்படும் வருமானத்தைக் கொண்டு, ஏழை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துதான் அரசாங்கத்தின் கடமையாகும். ஆனால், நாளாந்த வாழ்க்கையை நடத்துவதற்கே பொருளாதார ரீதியாக தடுமாறும் மக்களிடம், வரிக்கு மேல் வரியை அரசாங்கம் அறவிட்க் கொண்டிருக்கிறது” எனக்கூறிய தலைமைப் பேராசிரியர் ரஊப் ”இந்த நிலைமையானது ஏழைகளை இன்னும் ஏழைகளாக்கி விடும்” என்று கவலை தெரிவித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்இன்ஸ்டாகிராம்எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

 

சிறப்புச் செய்திகள்

 

அதிகம் படிக்கப்பட்டது

Author


Hit Counter provided by technology news