பாகிஸ்தானில் அரசியல் சக்தியாக உருவெடுக்கப் போராடும் இந்துக்கள் – முழு பின்னணி

பாகிஸ்தான் தேர்தலில் இந்துக்களின் பங்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • எழுதியவர்,ஷுமைலா ஜாஃப்ரி
  • பதவி,பிபிசி செய்திகள், உமர்கோட், சிந்த்

தீர்த் சஜன் மேக்வார் பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தின் உமர்கோட்டில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்திற்கு ஒரு சில ஆதரவாளர்களுடன் வந்தார். தங்களது வேட்பாளரை ஆதரிக்க ஆதவாளர்கள் கோஷங்களை எழுப்பினர்.

அலுவலகத்தில் கட்சியினர் படிவத்தைப் பூர்த்தி செய்து, உள்ளே சென்று அறிவிப்புப் பலகையில் உள்ள பட்டியலில் இருந்து தேர்தல் சின்னத்தைத் தேர்வு செய்தனர். தீர்த் தனக்கான சின்னமாகக் கரும்பலகையைத் தேர்ந்தெடுத்தார்.

தீர்த் இந்து மதத்தைச் சேர்ந்தவர். அவர் பிப்ரவரி 8ஆம் தேதி நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக உமர்கோட்டில் போட்டியிடுகிறார். உமர்கோட், இந்திய எல்லையில் இருந்து 60 கி.மீ. தொலைவில் சிந்த் மாகாணத்தின் கிழக்கில் இருக்கும் சிறிய புழுதி படிந்த சிற்றூர்.

பாகிஸ்தானின் தென் மாநிலமான சிந்த்-இல் தான் அந்நாட்டின் பெரும்பாலான இந்து மக்கள்தொகை இருக்கிறது. இஸ்லாமியர்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்நாட்டில் தீவிரவாதம் தலைதூக்கிய போதிலும், சிந்த் நகரத்தில் இந்துக்களின் சுவடுகளும் பாரம்பரியமும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

உள்ளூர் இந்து அரசரின் பெயரால் இந்நகரம் முன்பு அமர்கோட் என்று அழைக்கப்பட்டது. 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அமர்கோட்டின் கோட்டையில்தான் 1542ஆம் ஆண்டில் முகலாயப் பேரரசர் அக்பர் பிறந்தார்.

இத்தகைய வரலாற்றுச் சிறப்பைத் தவிர, இந்நகரம் வேறொரு காரணத்திற்காக பாகிஸ்தானில் தனித்து நிற்கிறது. பாகிஸ்தானில் இன்னமும் இந்துக்கள் பெரும்பான்மையாக இருப்பது இந்த மாநிலத்தில்தான்.

இந்தியா பாகிஸ்தான் பிரிவின்போது, சிந்த் மாகாணத்தின் மக்கள் தொகையில் 80% இந்துக்கள் வசித்து வந்ததாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். ஆனால், அதிக வசதி கொண்ட உயர் சாதியைச் சேர்ந்த தாக்கூர்கள், அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்படியாக இந்தியாவிற்குக் குடிபெயர்ந்தனர்.

அதே நேரத்தில் இடம்பெயர வழி இல்லாத பட்டியலினத்தவர்கள் மட்டும் இங்கு தங்கினர். இப்போது நகரத்தில் உள்ள இந்து சமூகத்தில் 90 சட்வீதத்திற்கும் அதிகமானோர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

பாகிஸ்தான் தேர்தலில் இந்துக்களின் பங்கு

அவர்களுள் ஒருவர்தான், தீர்த் மேக்வார். பட்டியலினத்தைச் சேர்ந்த இந்துக்கள் இங்கு அதிக எண்ணிக்கையில் இருந்தாலும், அவர்கள் அரசியல் அமைப்பில் உரிய பிரதிநிதித்துவத்தைப் பெறவில்லை என்றும், இந்த ஒழுங்கின்மைக்கு செல்வாக்கு மிக்க உயர் சாதி மக்கள்தான் பொறுப்பு என்றும் தீர்த் கூறுகிறார்.

“அதிகாரத்தால் மட்டுமே இங்கு மாற்றம் கொண்டு வர முடியும். எனவே, சமச்சீரற்ற நிலையைச் சரிசெய்து எனது சமூகத்தை மேம்படுத்துவதற்காகத்தான் இந்தட்ப தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருக்கிறேன். பல ஆண்டுகளாக முக்கிய அரசியல் கட்சிகள், எங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளைச் செல்வாக்குமிக்க நில உரிமையாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் உயர் சாதியைச் சேர்ந்தவர்களுக்கு விற்று, அரசியல் ரீதியாக எங்களை வலுவிழக்கச் செய்து வருகின்றனர். நாம் அவர்களை எதிர்க்க வேண்டும், அதனால் அதே அரசியல் மூலம் சமூக ரீதியாக நம்மை மேம்படுத்த முடியும்,” என்று கூறினார்.

முன்னதாக பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கென தனி வாக்காளர் தொகுதி இருந்தது. முன்னாள் ராணுவ ஆட்சியாளர் பெர்வைஸ் முஷாரஃப் 2000ஆம் ஆண்டில் முக்கிய சிறுபான்மை குழுக்களின் அமைப்பு முறையை மாற்றினார்.

சிறுபான்மையினருக்கு இப்போதும் தேசிய மற்றும் மாநில சட்டசபைகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் மற்ற குடிமக்களைப் போல நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் எந்த இடத்திலும் இருந்து தேர்தலில் போட்டியிடலாம். ஒன்றிணைந்த வாக்காளர் தொகுதிகள்தான், தங்களை வலுவிழக்கச் செய்வதாக உமர்கோட்டில் உள்ள இந்துக்கள் நம்புகிறார்கள்.

பாகிஸ்தான் தேர்தலில் இந்துக்களின் பங்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

தீர்த் போன்ற பட்டியலினத்தைச் சேர்ந்த இந்து ஒருவர் சுயேட்சை வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுவது இது முதல்முறை அல்ல. குறிப்பாக 2013 முதல், பல பட்டியலின வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டாலும் அவர்கள் வெற்றி பெற்றதில்லை.

“இது பணத்தை பற்றியது மட்டுமல்ல, நம்பிக்கையைப் பற்றியது,” என்று சமூக ஆர்வலர் சிவ ராம் ஷத்தர் விளக்குகிறார். சிவ ராம் ஷத்தர் கூறியதன்படி, பெரும்பாலும் பட்டியலின வேட்பாளர்கள் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு தனது ஆதரவாளர்களை ஏமாற்றத்தில் தள்ளி, போட்டியை விட்டு வெளியேறுவர்.

“எனவே இன்னும் உள்ளூர் இந்துக்கள்கூட அவர்கள் மீது நம்பிக்கை வைக்கத் தயாராக இல்லை. இதனால் தங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண அதிக செல்வாக்கு மற்றும் ஆற்றல்மிக்க ஒரு முஸ்லீம் வேட்பாளருக்கு வாக்களிக்க விரும்புகின்றனர்,” என்றார் சிவ ராம்.

உமார்கோட்டில் உள்ள ஏழை இஸ்லாம் மற்றும் இந்து சமூகத்தினருக்கு ஒரே மாதிரியான பிரச்னைகள் இருப்பதாகக் கூறி சிவ ராம், உள்ளூர் சமூகப் பிரச்னைகளை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.

மேலும் அவர், “நமது மத நம்பிக்கைகள் நமக்குப் பலவீனமாக இல்லை, இங்கு ஒருவரின் பொருளாதார நிலைதான் முக்கியமாக இருக்கிறது. நகரத்தில் உள்ள ஏழைகளும் இதுபோன்ற பிரச்னைகளைச் சந்திக்கின்றனர்.

தரமான சுகாதார வசதிகள், கல்வி மற்றும் பிற சமூக வசதிகள் போன்ற வளர்ச்சி வாய்ப்புகள், வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களுக்குக் குறைவாகவே உள்ளன. அவர்கள் இந்துவாக இருந்தாலும் சரி, இஸ்லாமியராக இருந்தாலும் சரி, அதில் எந்த வித்தியாசமும் இல்லை,” என்று கூறினார்.

பாகிஸ்தான் தேர்தலில் இந்துக்களின் பங்கு

பாகிஸ்தானில் அதிகாரப்பூர்வமாக சாதி அமைப்பு இல்லை. எனவே மேல்தட்டு இந்துக்கள் ஒரு சாதிச் சமூகமாகத் தனித்து வாழவில்லை. ஆனால் இந்துக்களுக்குள், சாதி அமைப்பு இன்னும் நடைமுறையில் இருக்கிறது.

வழக்கறிஞர் லால் சந்த், பாகிஸ்தானின் MQM (Muttahida Qaumi Movement) கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார். அக்கட்சியால் நகரத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மூன்று பட்டியலின வேட்பாளர்களில் இவரும் ஒருவர்.

சிந்த் மாகாணத்தில் ஆட்சி புரியும் பாகிஸ்தான் மக்கள் கட்சியினர், நகரத்தின் மக்கள் தொகையில் 52% இந்துக்கள் இருந்தாலும், உமர்கோட்டில் ஒரு இந்து வேட்பாளரைக்கூட பொது வேட்பாளராக தேர்தலில் நிறுத்தியது இல்லை என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

“முக்கிய அரசியல் கட்சிகள் எங்களுக்குரிய பங்கினை எங்களுக்குக் கிடைக்கவிடாமல் செய்து, முதலாளிகள் மற்றும் நில உரிமையாளர்களுக்குச் சாதகமாக இருக்கிறார்கள். எங்கள் சமூகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள MQM பாகிஸ்தானுக்கு நான் மிகவும் நன்றியுடன் இருக்கிறேன்,” என்று லால் சந்த் கூறினார்.

“பீல், கோலி, மேக்வார், மால்ஹி மற்றும் யோகிஸ், ஆகிய சமூகத்தினர் பெரிய நிலத்தில் விவசாயிகளாக வேலை செய்கிறார்கள். எனவே அவர்களது நில உரிமையாளர்கள் கூறும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டியது அவர்களின் கட்டாயம். உயர்சாதி இந்துக்களுக்கு எங்கள் வலி புரியவில்லை. அவர்களும் இந்த சமூகத்தின் ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதி. பெரும்பான்மையினராகிய நாங்கள் அநீதிகளை அனுபவிக்கிறோம்,” என்கிறார் அவர்.

பாகிஸ்தான் தேர்தலில் இந்துக்களின் பங்கு

அரசியல் என்பது விலையுயர்ந்த வியாபாரம் என்பதை முக்கிய அரசியல் கட்சிகள் புரிந்து கொண்டிருப்பதாக லால் கூறினார். வெற்றி பெற முடியாத வேட்பாளர்கள் மீது பந்தயம் கட்ட அவர்கள் விரும்பவில்லை. இன்னும் தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள் சட்டமன்ற உறுப்பினராக வருவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

ஒதுக்கீடுகளின் மூலம் பல இந்துக்கள் எம்.பி. ஆனபோதும், அவர்களுக்கு ஆலோசகர்கள் போன்ற உயரிய மூத்த பதவிகளும் வழங்கப்பட்டபோதும், பாகிஸ்தான் மக்கள் கட்சி உமர்கோட்டில் ஒரு தொகுதியில்கூட இந்து வேட்பாளரை நிறுத்தியதில்லை.

பாகிஸ்தான் மக்கள் கட்சி தரப்பில் பாகுபாடு காட்டப்படவில்லை என்ற எண்ணத்தை, பட்டியலின சமூகங்களின் கூட்டணியான பாகிஸ்தான் தாராவர் இத்தேஹாட்டின் நிறுவனத் தலைவர் நிர்மல் குமார் நீக்கினார்.

“இது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் கோட்டை, ஒவ்வொரு தேர்தலிலும் அவர்கள் உமர்கோட்டில் வெற்றி பெறுகிறார்கள். பட்டியலின இந்துக்களும் அவர்களுக்கு வாக்களிக்கின்றனர். அவர்கள் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ‘அனைவரையும் உள்ளடக்கிய’ கொள்கைகளை நம்புகிறார்கள் மற்றும் அதனால் பாதுகாப்பாக உணர்கிறார்கள்.

ஆனால், அதற்கு மாற்று எதுவும் இல்லை. எந்தவொரு கட்சியின் அரசியல் ஆதரவும் இல்லாமல், பட்டியலினத்தைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர்கள் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு எதிராக நிலைத்திருக்க முடியாது. அப்பகுதியில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆதிக்கத்தை எதிர்த்து நிற்க ஒரு வலுவான எதிரி இருந்ததில்லை. எனவே மக்களும் அவர்களுக்கே ஆதரவு அளிக்கின்றனர்,” என்கிறார் அவர்.

பாகிஸ்தான் தேர்தலில் இந்துக்களின் பங்கு

இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI – Pakistan Tehreek-e-Insaf) கட்சி, உமர்கோட்டின் மல்ஹி சமூகத்தைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க இரண்டு இந்து சகோதரர்களை தேசிய மற்றும் மாநில சட்ட சபைகளுக்கு வேட்பாளர்களாக நியமித்தது. சட்ட அடிப்படையில் உச்சநீதிமன்றத்தால் பி.டி.ஐ கட்சி தேர்தலில் இருந்து வெளியேற்றப்பட்டதால், அவர்களும் இப்போது சுயேட்சையாகப் போட்டியிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

பி.டி.ஐ-இன் மற்ற தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களைப் போலவே அவர்களது குடும்பமும் அரசால் வேட்டையாடப்படுகிறது லேக்ராஜ் மல்ஹி பிபிசியிடம் கூறினார்.

“எங்கள் வீடுகள் சூறையாடப்பட்டன. எங்கள் மீது பயங்கரவாத வழக்குகள் சுமத்தப்பட்டுள்ளன. எனது மூத்த சகோதரர் கைது செய்யப்பட்டார். ஆனால் அச்சுறுத்தல்கள் மற்றும் பழிவாங்கல்கள் இருந்தபோதிலும், நாங்கள் இம்ரான் கானின் கொள்கைகளில் உறுதியாக நிற்கிறோம். அவரால் மட்டுமே உமர்கோட்டை பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிடியில் இருந்து விடுவிக்க இயலும்,” என்கிறார் அவர்.

ஆனால் இது நடக்க இன்னும் பலகாலம் ஆகும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பஞ்சாப் மற்றும் வடமேற்கு கைபர் பக்துன்க்வாவை (KP – Khyber Pakhtunkhwa) கைப்பற்றுவதில் கவனம் செலுத்தி வருவதாகவும், சிந்த் பகுதியில் இன்னும் கால்பதிக்க முடியவில்லை என்று அவர்கள் நம்புகிறார்கள்.

இருப்பினும், பல பட்டியலின இந்துக்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுவது மாற்றங்களை உணர்த்துவதாகப் பலர் நம்புகிறார்கள்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்இன்ஸ்டாகிராம்எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

 

சிறப்புச் செய்திகள்

 

அதிகம் படிக்கப்பட்டது

  1. 1
Author


Hit Counter provided by technology news