சர் தாமஸ் மன்றோ: ஆட்சியர் பதவியை உருவாக்கிய ஆங்கிலேயரை கொண்டாடும் தமிழக மக்கள்

தாமஸ் மன்றோ
படக்குறிப்பு,சர் தாமஸ் மன்றோ சிலை

  • எழுதியவர்,மாயகிருஷ்ணன் க
  • பதவி,பிபிசி தமிழுக்காக

சென்னை மெரினா கடற்கரை தீவுத்திடலைக் கடந்து செல்கையில் வங்கக் கடலைப் பார்த்தபடி கம்பீரமாக குதிரையில் அமர்ந்திருக்கும் தாமஸ் மன்றோ சிலையைப் பார்த்திருக்கலாம். சென்னையின் பரபரப்பான முக்கிய சாலைப் பகுதியில் மிடுக்காக நிற்கும் குதிரையில் அமர்ந்திருப்பார் தாமஸ் மன்றோ.

அவர் யார்? இந்தியா சுதந்திரமடைந்து 80 ஆண்டுகளுக்குப் பிறகும் தாமஸ் மன்றோவை பற்றிப் பேச அப்படி என்ன இருக்கிறது?

காலரா தொற்று 1950ஆம் ஆண்டில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பரவிய நிலையிலும் பாதிக்கப்பட்ட மக்களைத் துணிவுடன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தாமஸ் மன்றோ அதே காலரா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தார்.

தாமஸ் மன்றோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சர் தாமஸ் மன்றோ

இங்கிலாந்தில் இருந்து ராணுவ வீரனாக மதராசுக்கு வந்திறங்கிய மன்றோ

1761ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் பிறந்தார். அவருக்கு நான்கு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள். சிறு வயதிலேயே அம்மை நோய் தாக்கியதன் விளைவாக அவருக்கு செவித்திறன் பறிபோனது.

சிறு வயது முதலே ராணுவத்தில் சேர்வதைக் கனவாகக் கொண்டிருந்த மன்றோ, வறுமை, அப்பாவின் எதிர்ப்பு என அனைத்து தடைகளையும் கடந்து 1779ஆம் ஆண்டு தனது 18வது வயதில், ‘கேடட்’ டாக அதாவது சிப்பாயாக பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்தார். 1780 ஆண்டு ஜனவரி 15ஆம் நாள் மன்றோ கப்பலில் இருந்து மெட்ராஸ் கடற்கரையில் வந்திறங்கினார்.

ஆங்கிலேய படைகளில் பரங்கிமலை, வந்தவாசி, புதுச்சேரி, சிதம்பரம், வேலூர், ஆரணி, தஞ்சாவூர், குண்டூர், ஆம்பூர், பாராமஹால், காவேரிப்பட்டினம் கர்நாடகா எனப் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி என்சைன், லெப்டினென்ட் எனப் பதவி உயர்வு பெற்று தலைமை அதிகாரி நிலைக்கு மன்றோ உயர்ந்ததாக ‘தமிழ்நாட்டில் சர் தாமஸ் மன்றோ’ என்ற நூலின் ஆசிரியரும், எழுத்தாளருமான இடைப்பாடி அமுதன் பிபிசி தமிழிடம் விவரித்தார்.

ராணுவப் பணியில் இருந்து நிர்வாகப் பணிக்கு மாற்றம்

கவர்னர் கார்ன்வாலிஸ் மன்றோவின் திறமையை உணர்ந்து ராணுவத்தில் இருந்து அவரை விடுவித்து குடிமைப் பணிக்கு மாற்றினார்.

அதைத் தொடர்ந்து சேலம், தருமபுரி, ஊத்தங்கரை, திருப்பத்தூர் பகுதிகளை உள்ளடக்கிய பாராமஹால் பிரதேசத்தை நிர்வகிக்கும் பொறுப்பையும் மன்றோவுக்கு வழங்கினார்.

ராணுவப் பணியை மட்டுமே 12 ஆண்டுகளாகப் பார்த்து வந்த மன்றோ 1792ஆம் ஆண்டு முதல் நிர்வாகியாக மாறினார்.

ஆட்சியர் பதவியை உருவாக்கிய தாமஸ் மன்றோ

தாமஸ் மன்றோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சர் தாமஸ் மன்றோ

மக்களுடன் இனப் பாகுபாடு இன்றி இணக்கத்துடன் பழகிய மன்றோ தனது பயணத்திற்காக குதிரையையே பயன்படுத்தி வந்ததாகக் கூறுகிறார் எழுத்தாளர் அமுதன்.

அவர் கிராமம் கிராமமாகத் தனது குதிரையிலேயே பயணித்தார். நெசவுத் தொழிலாளர்களின் அப்போதைய நிலை குறித்து தெளிவாக அறிந்து அவர்களுக்காக உயர் அதிகாரிகளிடம் பரிந்து பேசியதோடு மட்டுமின்றி இங்கிலாந்து உயர் அதிகாரிகளுக்கு கடிதத்தின் மூலமாகவும் தெரிவித்தார்.

“அக்காலத்தில் பிரிட்டிஷ் அரசு, மக்களிடம் நிலத்தீர்வை வரியை வசூலிக்கும் உரிமையை ஜமீன்தார்களிடமும் நிலச்சுவான்தாரர்களிடமும் வழங்கியிருந்தது. பிரிட்டிஷ் நிர்வாகம் நிர்ணயித்ததைவிட அதிகமாக மக்களிடம் வரியை வாங்கிய இந்த இடைத்தரகர்கள், வசூலான வரியில் பெரும்பகுதியைத் தாங்கள் சுருட்டிக்கொண்டு ஒரு பகுதியை மட்டுமே பிரிட்டிஷ் நிர்வாகத்துக்குத் தந்தார்கள்.

மேலும் அவர்கள் வரி கட்ட முடியாத மக்களின் நிலங்களைப் பறித்து தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டதை ஆய்வின்போது மன்றோ கண்டுபிடித்தார்.

இந்த வரி வசூல் முறையை மாற்றி இனி அரசாங்க அதிகாரிகளே மக்களிடம் நேரடியாக வரி வசூலிப்பார்கள், ஜமீன்தார்களுக்கு இடமில்லை என்று அறிவித்தார். அலெக்ஸாண்டர் ரீடு வரையறை செய்து வழங்கிய ரயத்துவாரி திட்டத்தின் மூலம் விவசாயிகள் நேரடியாக அரசாங்கத்திற்கு வரி செலுத்த முடியும், இதனால் இடைத்தரகர்கள் தவிர்க்கப்படுவர். இதன் மூலம் வரி வசூல் அதிகரித்தது,” என்று அமுதன் விளக்கினார்.

மேலும் வரியை வசூலிக்க ஆட்சியர் என்ற நிர்வாகப் பதவியையும் மன்றோ உருவாக்கினார். அவர் உருவாக்கிய ஆட்சியர் பதவியே தற்போது கூடுதல் பொறுப்புகளுடன் இன்று வரை நடைமுறையில் இருக்கிறது.

ரயத்துவாரி முறை என்றழைக்கப்படும் இந்த வரி வசூல் முறையால் விவசாயிகள் நன்மை அடைந்ததாக மன்றோ உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

ரயத்துவாரி முன்னோடி

தலைமை அதிகாரி அலெக்சாண்டர் ரீடு சேலம் ஜில்லா முழுவதையும் நில அளவையாளர் மூலம் அளவீடு செய்தார். 1793 ஜனவரியில் ஆரம்பித்த இந்தப் பணி 1796இல் முடிவுற்றது.

இதை வைத்து சுற்றறிக்கை வழங்கினார். இதனால் அரசாங்கத்திற்கும் விவசாயிகளுக்கும் நேரடி தொடர்பு உண்டாயிற்று.

ரயத்துவாரி முறை என்று அழைக்கப்பட்ட நிலவரிக் கொள்கையின் முன்னோடி இவர்தான் என்ற கூடுதல் தகவலையும் எழுத்தாளர் அமுதன் கூறினார்.

மக்களின் நம்பிக்கையை மதித்தவர்

தாமஸ் மன்றோ
படக்குறிப்பு,எழுத்தாளர் இடைப்பாடி அமுதன்

மன்றோவின் நிர்வாகப் பகுதியில் இருந்த மந்திராலயம் ஸ்ரீராகவேந்திரர் ஆலயத்துக்கு 17ஆம் நூற்றாண்டில் அரசு கொஞ்சம் நிலங்களை வழங்கியிருந்தது. அந்த நிலங்களை மீட்கும் பொறுப்பை மன்றோவுக்கு பிரிட்டிஷ் நிர்வாகம் வழங்கியது.

மந்திராலயம் சென்ற மன்றோ, அங்கிருந்த சூழலையும் மக்களின் நம்பிக்கையையும் உணர்ந்து, ‘நிலம் மந்திராலய நிர்வாகத்திடம் இருப்பதே சரியானது’ என்று பிரிட்டிஷ் அரசுக்கு அறிக்கையளித்தார். அந்த நிலத்துக்கு வரி வசூலிக்கவும் தேவையில்லை என்று அவர் பிறப்பித்த உத்தரவு மெட்ராஸ் அரசு பதிவேட்டில் பதிவாகியிருக்கிறது.

“பிறரின் மத உணர்வை மதிக்கும் குணம் கொண்டிருந்த மன்றோ திருப்பதி கோவில் மதிய நிவேதனத்திற்கு என சித்தூர் பகுதியின் சில கிராமங்களின் வருவாயை ஒதுக்கித் தந்தார். அவர் காணிக்கையாக வழங்கிய பெரிய கொப்பரையில்தான் திருமலையில் இப்போதும் பொங்கல் வைக்கப்படுகிறது.

‘மன்றோ கங்களம்’ என்று அந்தக் கொப்பரையை அழைக்கிறார்கள். உச்சி காலத்தில் திருப்பதி கடவுளுக்கு நெய்வேத்தியம் மன்றோவின் பெயரால் இன்றும் நடைபெறுகிறது என்று,” அமுதன் கூடுதல் தகவலையும் கூறினார்.

மன்றோ பணியாற்றிய ஆந்திர மாநில பகுதிகளில் அவரை நினைவு கூறும் வகையில் இன்றும் குழந்தைகளுக்கு `மன்றோலய்யா’, ‘மன்றோலம்மா’ எனப் பெயரிடும் வழக்கம் இருக்கிறது. அதிகாரிகள் மட்டுமல்லாது அனைத்துத் தரப்பு மக்களிடமும் இனிமையாகப் பழகியவர் மன்றோ.

இவருக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகள் நன்கு தெரியும். எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குத் தன் குதிரையில் பயணம் செய்து அந்த மக்களின் பிரச்னைகளை அறிந்து தீர்வு தந்தார். பல கிராமங்களுக்கு நிரந்தரமான குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தந்தார்.

இந்தியாவில் 28 ஆண்டுகள் பணியாற்றிய மன்றோ, தன் 46வது வயதில் சொந்த ஊருக்குத் திரும்பினார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மெட்ராஸ் திரும்பிய மன்றோ, மாவட்ட நிர்வாகம், நிதித்துறை ஆகியவற்றைச் சீர்திருத்தும் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

மெட்ராஸ் மாகாண கவர்னர்

தாமஸ் மன்றோ
படக்குறிப்பு,தாமஸ் மன்றோ சிலை

மன்றோவின் நிர்வாகத் திறனை உணர்ந்த ஆங்கிலேய அரசு, 1820ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தின் கவர்னராக அவரை நியமித்தது. காவல் துறையிலும் நீதித் துறையிலும் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.

இந்தியாவின் நவீன கல்விமுறை உருவாகக் காரணமாயிருந்த முன்னோடிகளில் தாமஸ் மன்றோவும் ஒருவர். மெட்ராஸ் மாகாணத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி முறை குறித்த முதல் கணக்கெடுப்பு மன்றோவால் தான் நடத்தப்பட்டது.

ஆசிரியர் பயிற்சிக்கென மெட்ராஸ் பாடநூல் கழகத்தை உருவாக்கியது, பெண் கல்வியை உறுதி செய்தது என மன்றோ செய்த புரட்சிகள் சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்கு விதையாக இருந்தன. அவர் தொடங்கிய ஆசிரியர் பயிற்சிப் பள்ளியே பின்னாளில் மெட்ராஸ் உயர் பள்ளியாக மாறி, மாநிலக் கல்லூரியாக உயர்ந்தது.

காவிரியில் முதலை

காவிரியின் அழகை பலமுறை நேரில் சென்று ரசிக்கும் பழக்கமுடைய மன்றோ இது பற்றி அவருடைய தாயாருக்கு 1795இல் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அக்கடிதத்தில் மேட்டூருக்கு காவிரியில் இயல்பாக எவ்வளவு தண்ணீர் வந்து கொண்டிருந்தது என மன்றோ குறிப்பிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, அந்தக் கடிதத்தில் காவிரி ஆற்றில் துள்ளி விளையாடும் மீன்களும், நீந்தி மகிழும் வாத்துகளும் இருப்பதைப் பார்த்தேன், தண்ணீரில் மிதந்து செல்லும் முதலைகளும் இருந்தன என்றும் எழுதியிருந்தார்.

“ஆற்றில் இருந்த முதலைகள் யாருக்கும் தீங்கிழைக்கவில்லை. அருகிலேயே பெரியோர் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு முதலைகளால் ஆபத்து ஏற்படவில்லை” என்றும் அந்தக் கடிதத்தில் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் காவிரி ஆற்றின் மூலம் தடையின்றி மேட்டூருக்கு தண்ணீர் வந்ததைத் தெளிவாக அறிய முடியும்.

இந்தியர்கள் குடி(மது) பிரியர்கள்

தாமஸ் மன்றோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தாமஸ் மன்றோ

இங்கிலாந்து பாராளுமன்ற கமிட்டியின் முன் 1813ஆம் ஆண்டு அவர் அளித்த கருத்துகள் கமிட்டி உறுப்பினர்களை பெரிதும் கவர்ந்தன.

அதில் அவர் இந்தியாவைப் பற்றி கூறும்போது இந்தியா தன்னிறைவு கொண்ட நாடு தமக்குத் தேவையான பொருட்களை இந்தியர்கள் அவர்களே தயாரித்துக் கொள்கின்றனர். ஐரோப்பிய பொருட்களின் தரத்தை விடவும் இந்திய பொருட்கள் மேலானது. பருத்தி, பட்டுத் துணிகள், தோல், காகிதம், பித்தளை பாத்திரங்கள், இரும்பு பொருட்கள், விவசாயக் கருவிகள் எல்லாம் இதில் அடங்கும்.

அதேபோல், “புது பொருட்களை இறக்குமதி செய்யும் நினைப்பு இந்தியர்களிடம் இல்லை. அறியாமையால் சாராயம், போதைப் பொருள்களை நாடுகின்றனர். அவர்களின் தீய பழக்கங்களில் மது குடிப்பது முதன்மையானது என்பதை அவர் பதிவு செய்துள்ளதாக” எழுத்தாளர் அமுதன் தெரிவித்தார்.

பொதுவாக இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய பொருட்களுக்கு வரி அதிகம். ஆனால் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு வரும் பொருட்களுக்கு வரி குறைவு. இதைச் சுட்டிக்காட்டிப் பேசிய மன்றோ இரண்டு தரப்பு பொருட்களுக்கும் ஒரே அளவு வரி விகிதம்தான் இருக்க வேண்டும் என்றும் எடுத்து கூறினார்.

இது இந்தியாவைப் பற்றிய அவரது கரிசனத்தைத் தெளிவாக உணர்த்துவதாகவும் இடைப்பாடி அமுதன் கூறினார்.

பேரிடர் காலத்தில் பணிகளை போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்துதல்

கி.பி.1802-03ஆம் ஆண்டில் கடப்பா ஜில்லாவில் கடும் வளர்ச்சியும் பஞ்சமும் நிலவின. ஆனால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதிக மழை. ஆயிரம் ஏரிகளும், 800 கால்வாயிலும் உடைந்து போயின. அவற்றைச் செப்பனிட ஏழு லட்சம் ரூபாய்க்கு மேல் ஆகும் எனத் தெரிய வந்தது.

சூப்ரின்டெண்ட் ஆகப் பணியாற்றிய மன்றோ இதைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை. மதராஸ் கோட்டையில் இருந்து அனுமதிகூடப் பெறாமல் பாதிக்கப்பட்ட ஏரிகளையும் கால்வாய்களையும் செப்பனிடும் வேலைக்கு பணம் ஒதுக்கி விரைவாக வேலைகளை முடிக்கச் செய்தார். அவருடைய எதிர்பார்ப்பின்படி அடுத்த ஆண்டுகளிலும் தொடர்ந்து மழையும் விளைச்சலும் அதிகரித்தது.

வரி வசூலும் அதிகமானது அதன் பின்னரே மதராஸ் கோட்டைக்கு தான் செய்ததை அறிக்கையாகச் சமர்ப்பித்தார். இந்த நிகழ்வு பேரிடர்க் காலங்களில் தலைமைப் பொறுப்பில் உள்ள அதிகாரி உடனடியாக மக்கள் நலனில் அக்கறை கொண்டு செய்யும் பணிகளுக்குச் சான்று என்றார் அமுதன்.

காலரா பரவிய கடப்பா ஜில்லாவில் மக்களுடன் கவர்னர் மன்றோ

தாமஸ் மன்றோ
படக்குறிப்பு,தாமஸ் மன்றோ குறித்த கல்வெட்டு

தாமஸ் மன்றோவுக்கு 65 வயதான நிலையில் பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என பிரிட்டிஷ் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் மன்றோவின் கோரிக்கையை பிரிட்டிஷ் நிர்வாகம் தள்ளிப் போட்டுக்கொண்டே போனது.

இதனால் மன்றோ, மன மாற்றத்துக்காக பயணம் ஒன்றை மேற்கொள்ள விரும்பினார். பணிக் காலத்தில், தான் மிகவும் நேசித்த ஆந்திராவின் கடப்பா பகுதிக்கு ஜூலை 1827இல் பயணப்பட்டார். அங்கு காலரா நோய் பரவிக் கொண்டிருப்பதால், செல்ல வேண்டாம் என மன்றோவுக்கு ஆலோசனை கூறப்பட்டது.

“ஒரு கொடிய நோயால் மக்கள் தவிக்கும்போது ஓர் அதிகாரி தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பது அழகல்ல” என்று சொன்ன மன்றோ, கடப்பாவுக்கு பயணித்தார். கிராமம் கிராமமாகப் போய் மக்களுக்கு ஆறுதல் கூறினார். மருத்துவர்களை உற்சாகப்படுத்தி சிகிச்சையை விரைவுபடுத்தினார்.

கடப்பாவின் புத்தேகொண்டா என்ற பகுதியில் மன்றோ முகாமிட்டிருந்தபோது மன்றோவையும் காலரா தாக்கியது. சிகிச்சைப் பலனின்றி சர் தாமஸ் மன்றோவின் உயிர், 1827 ஜூலை 6ஆம் தேதி பிரிந்தது. அவரின் உடல், கடப்பாவில் உள்ள கூட்டி என்ற பகுதியின் ஆங்கிலேயர்களின் கல்லறை பகுதியிலேயே அடக்கம் செய்யப்பட்டது. மன்றோ இறந்த மூன்று நாட்களில் அவருடைய பாதுகாப்பிற்குத் தலைமையேற்று வந்த கேப்டன் மக்ளியாட் என்பவரையும் காலரா தாக்கியது.

அவர் தனது இறுதி நேரத்தில் நான் இறந்து விடுவேன், எனது உடலை மன்றோ உடலுக்கு அருகிலேயே அடக்கம் செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்தார். அதன்படி ஜூலை 9ஆம் தேதி இறந்த மக்ளியாட்டின் உடலும் கல்லறைத் தோட்டத்தில் மன்றோவின் கல்லறைக்கு அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டது.

ஜூலை 9ஆம் தேதி மன்றோ இறந்த செய்தி செயின்ட் ஜார்ஜ் கோட்டையை எட்டியதும், கோட்டைக் கொடி சூரிய அஸ்தமனம் வரை அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. இறந்துபோன மன்றோவின் வயதைக் குறிக்கும் வகையில் கோட்டையின் கொத்தளத்திலிருந்து 65 முறை பீரங்கிகள் முழங்கின.

கடந்த 1831இல் திருமதி மன்றோவின் வேண்டுகோள்படி மன்றோ உடல் மெட்ராஸுக்கு கொண்டு வரப்பட்டு கோட்டையிலுள்ள புனித மேரி தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

பிரமாண்ட வெண்கல சிலை

தாமஸ் மன்றோ
படக்குறிப்பு,தாமஸ் மன்றோ சிலை

அவருக்காக சென்னையில் பிரமாண்டமான இரங்கல் கூட்டம் நடந்தது. மக்களை நேசித்த, மக்களால் நேசிக்கப்பட்ட தாமஸ் மன்றோவுக்கு மெட்ராஸில் சிலை வைக்க வேண்டும் என்று அந்த இரங்கல் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. பொதுமக்கள் பங்களிப்புடன் அன்றைய மதிப்பில் சுமார் 8 ஆயிரம் பிரிட்டிஷ் பவுண்டுகள் வசூலாகின.

அந்தச் சிலை 1839 அக்டோபர் 23 அன்று திறக்கப்பட்டது. அன்று மெட்ராஸ் மாகாணத்துக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, அடிமை சின்னமாக இருக்கும் பிரிட்டிஷாரின் சிலைகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுக்க எழுந்தது. சென்னையில் இருந்த பல பிரிட்டிஷாரின் சிலைகள் அகற்றப்பட்டு அருங்காட்சியகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன.

கடந்த 1957இல் சிப்பாய்க் கலக நூற்றாண்டின்போது, மன்றோ சிலை இருக்கும் இடத்துக்கு சில அடிகள் தள்ளியிருந்த வெலிங்டன் பிரபுவின் சிலைகூட அகற்றப்பட்டது. ஆனால், மன்றோ சிலை அகற்றப்படவில்லை. இன்றளவும் குதிரையில் சிலையாக நிற்கிறார்.

இன்றளவும் கொடை மாவட்டங்களில் (கடப்பா, அனந்தபூர், கர்னூல் அடங்கிய ஆந்திர பகுதிகள்) உள்ள பல குடும்பங்கள் மக்கள் சர் தாமஸ் மன்றோவின் நினைவைப் போற்றும் விதமாகத் தங்கள் குழந்தைகளுக்கு மன்றோலப்பா எனப் பெயர் வைத்துள்ளனர். அவரது கதையை நாட்டுப்புற சிந்து பாடலாகப் பாடி வருகின்றனர்.

பேங்க் ஆஃப் மெட்ராஸ் என்ற கிழக்கிந்திய கம்பெனியின் வங்கி மதராஸ் ராஜதானியில் செயல்பட்டு வந்தது. மன்றோவின் பெருமையை உணர்த்திட குதிரையின் மேல் அமர்ந்திருக்கும் அவர் உருவம் பொருந்திய பத்து ரூபாய், 15 ரூபாய், 25 ரூபாய், 100 ரூபாய் நோட்டுகளை பேங்க் ஆஃப் மெட்ராஸ் வெளியிட்டது. அதில் பத்து ரூபாய் என்று தமிழ், உருது, தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழியில் அச்சிடப்பட்டிருந்தது.

தருமபுரியில் நினைவுத்தூண்

தாமஸ் மன்றோ
படக்குறிப்பு,தாமஸ் மன்றோ நினைவுத்தூண்

மன்றோவின் நினைவாக தருமபுரியில் அரசின் சார்பில் நினைவுத்தூண் 1906இல் அமைக்கப்பட்டது. தருமபுரி- திருப்பத்தூர் சாலையில் மன்றோ வாழ்ந்த வீடும், குளமும் அமைந்துள்ள இடங்களுக்கு இடையில் சில மீட்டர் தூரத்தில் அந்த நினைவுத் தூணும் அமைக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர் இடைப்பாடி அமுதனின் கூற்றுப்படி, இந்து நாளிதழ் தனது முதல் நூறாண்டு கால பதிப்பில் ஆண்டிற்கு ஒன்றாகச் சிறந்த 100 தலையங்கங்களைத் தொகுத்து நூலை வெளியிட்டுள்ளது. அதில் மூன்று தலையங்கங்களில் சர் தாமஸ் மன்றோ குறிப்பிடப்படுகிறார்.

தாமஸ் மன்றோ மைசூர் மகாராஜாவிடம் நட்பு கொண்டிருந்தார். அதேபோல் பாராமஹால், கனரா, கடப்பா ஜில்லாக்களில் ஆடு மேய்ப்பவர்கள், விவசாயிகள் எனது நண்பர்கள் எனப் பெயர் குறிப்பிட்டும் தங்கைக்குக் கடிதம் எழுதியுள்ளார். அவர் அனைவரிடமும் இனப் பாகுபாடு இன்றி நட்பாகவே பழகி உள்ளதை இந்தக் கடித ஆதாரம் காட்டுவதாகவும் அமுதன் கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்இன்ஸ்டாகிராம்எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

 

சிறப்புச் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டது

Author


Hit Counter provided by technology news