Breaking

 

ஆந்திர கஜுராஹோ: முதலிரவுக்கு முன் புதுமண தம்பதிகள் செல்லும் கோவில்

ராதாவேணுகோபால சுவாமி கோவில்

பட மூலாதாரம்,LAKKOJU SRINIVAS

  • எழுதியவர்,லக்கோஜு ஸ்ரீனிவாஸ்
  • பதவி,பிபிசிக்காக

ஆந்திரா – ஒடிசா எல்லையில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள மெலியபுட்டி சந்திப்பில் அமைந்துள்ளது பழமையான ராதாவேணுகோபால சுவாமி கோவில். இந்தக் கோவிலுக்கு சகோதர, சகோதரிகள் ஒன்றாகச் செல்வதில்லை.

ராதா வேணுகோபால சுவாமி கோவில் ஆந்திரா கஜுராஹோ என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோவில், கட்டுமானம் மற்றும் சிற்பக் கலை அழகியலில் பல தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது.

இதன் காரணமாக இக்கோவிலுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. இப்பகுதியில் உள்ள பல புதுமணத் தம்பதிகள் முதலில் இந்தக் கோவிலுக்கு வந்து தங்கள் முதலிரவுக்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்கள்.

இந்த வழக்கம் இங்கு 200 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்தக் கோவில் கட்டப்பட்டதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான வரலாறு உள்ளது.

கலிங்க கட்டடக்கலை பாணியில் 1840இல் கட்டப்பட்ட கோவில்

ராதாவேணுகோபால சுவாமி கோவில்

பட மூலாதாரம்,LAKKOJU SRINIVAS

ராதா வேணுகோபால சுவாமி கோவில் மெலியாபுட்டி பிரதான சந்திப்பில் பிரதான வீதியை நோக்கி அமைந்துள்ளது. சாலையில் இருந்து, இரண்டு வளைவுகளுக்கு இடையில் இருந்து மிகவும் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருந்தது.

அந்த வளைவுகளைக் கடந்து விசாலமான முற்றத்துக்குள் நுழைந்தால், கோவிலின் கருவறைக்குச் செல்லும் கல் படிகளில் தொடங்கி, முற்றம் முழுவதும் சிற்ப அழகுடன் நிரம்பியுள்ளது.

கோவிலின் நான்கு புறங்களிலும் உள்ள சுவர்களில் பல்வேறு கற்சிற்பங்கள் காணப்படுகின்றன. கோவிலின் மேற்கூரையில் செதுக்கப்பட்ட மலர் வடிவங்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும், கூர்ந்து கவனித்தால் அவை முற்றிலும் வேறுபட்டவை என்பது தெரியும்.

பிபிசி குழுவினர் அங்கு சென்றபோது பக்தர்கள் கூட்டம் இல்லை. தரிசனத்திற்குப் பிறகு, கோவிலுக்கு வரும் பக்தர்கள், பெரும்பாலும் கோவில் சுவர்களில் உள்ள சிலைகளைப் பார்க்கின்றனர். சிலர் கோவில் பூசாரியிடம் அங்குள்ள சிலைகள் மற்றும் அவற்றின் அம்சங்கள் குறித்து கேட்டுத் தெரிந்து கொள்கின்றனர்.

கோவிலின் தலைமை பூசாரி கோபிநாத் ரத்தோ பிபிசியிடம் பேசினார். அப்போது அவர், கோவிலின் முழு அமைப்பும் கலிங்க கட்டடக்கலை பாணியில் உள்ளது என்றும், கோவில் 1840இல் கட்டப்பட்டது என்றும் கூறினார்.

மகாராணியின் உத்தரால் உருவான கோவில்

ராதாவேணுகோபால சுவாமி கோவில்

பட மூலாதாரம்,LAKKOJU SRINIVAS

கோவிலின் வரலாறு குறித்து தலைமை அர்ச்சகர் கூறிய விவரங்களின்படி, 1840களில் மெலியபுட்டி பகுதி பர்லாமிகிடி மகாராஜா வீரவீரேந்திர பிரதாப ருத்ர கஜபதி நாராயண தேவ் என்பவரின் நிர்வாகத்தின் கீழ் இருந்தது.

மகாராணி விஷ்ணுபிரியா அங்கு சிற்பத்தின் அழகு செழிக்கும் வகையில் கோவில் கட்டுமாறு மகாராஜாவிடம் கோரிக்கை விடுத்ததாகவும், அவரது விருப்பப்படி கோவில் கட்டப்பட்டதாகவும் கூறினார் பூசாரி கோபிநாத் ரத்தோ.

“கோவில் கட்டுவதற்காக, மகாராஜா, ஒடிசா மாநிலம் புரியில் இருந்து கைவினைஞர்களை வரவழைத்தார். கோவிலுக்கு வருபவர்களுக்கு, 64 கலைகளைப் பற்றி புரியும் வகையில், கோவிலில் சிற்பங்கள் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

எனவே, புரியில் 64 கலைகளை வெளிப்படுத்தும் வகையில் சிற்பங்கள் செதுக்கப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்டது. பின், அவை கோவிலின் நான்கு சுவர்களிலும் வைக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடந்தன,” என்றார் கோபிநாத் ராத்.

இந்தக் கோவிலில் கிருஷ்ணர் ராதா வேணுகோபால சுவாமியாக வணங்கப்படுகிறார்.

“இந்தக் கோவிலின் படிக்கட்டுகள் தொடங்கி சிகரம் வரை ஒவ்வொரு பகுதியும் சில முக்கியத் தகவல்களை வழங்குகிறது. ஒரு அடி நீளமும் ஒரு அடி அகலமும் கொண்ட 64 கலைகள் தொடர்பான சிலைகள் கோவிலின் நான்கு சுவர்களிலும் காணப்படுகின்றன.

தரிசனத்துக்கு வரும் பக்தர்கள், கோவிலைச் சுற்றிலும் உள்ள இந்த சிலைகளை தரிசனம் செய்வதில் அதிக நேரம் செலவிடுகின்றனர்,” என்றார் கோபிநாத்.

கோவிலைச் சுற்றி வந்த பிறகு முதல் இரவு

ராதாவேணுகோபால சுவாமி கோவில்

பட மூலாதாரம்,LAKKOJU SRINIVAS

கோவிலுக்கு வருபவர்களுக்கு வேத சாஸ்திரம் மற்றும் 64 கலைகளின் சாரத்தைத் தெரியப்படுத்த வேண்டும் என்றார் கோபிநாத் ரத்தோ. இந்த சிற்பங்களில், காதல் தொடர்பான சிற்பங்களும் அடங்கும்.

இதுகுறித்து கலை மற்றும் கலாசார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளையின் (INTAC) செய்தித் தொடர்பாளர் வாவிலபள்ளி ஜெகநாதநாயுடு பேசுகையில், “அந்தக் காலத்தில் பாலியல் தொடர்பான விழிப்புணர்வு குறைவாகவே இருந்தது. அது பொது வெளியில் விவாதிக்கப்படவும் இல்லை.

அதனால்தான் அவை கோவில் சுவர்களில் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. கோவிலுக்கு வருபவர்கள் அந்த சிற்பங்கள் மூலம் தெரிந்துகொள்வார்கள் என்பது சிற்பங்களை வடிவமைத்தவர்களின் எண்ணம்,” என்றார்.

கோவிலுக்கு அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகள் முதலில் இந்தக் கோவிலுக்குத்தான் வருகிறார்கள் என்றார் கோபிநாத்.

“கோவிலைச் சுற்றியுள்ள சுமார் 50 கிராமங்களைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகள் இந்தக் கோவிலுக்கு முதலில் வருகிறார்கள். கோவிலைச் சுற்றி மூன்று முறை தரிசனம் செய்கிறார்கள். பாலியன் தொடர்பான சிற்பங்கள் கோவிலைச் சுற்றியும் காணப்படுகின்றன. தம்பதிகள் அவற்றைப் பார்த்த பிறகு, அவர்களின் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது,’’ என்றார் கோபிநாத்.

கோவில் கட்டப்பட்டபோது தொடங்கிய இந்தச் சடங்கு இன்றும் தொடர்வதாகக் கூறிய கோபிநாத், “குழந்தை பெற்ற தம்பதிகளும் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கிறார்கள்,” என்றார்.

‘உடன் பிறந்தவர்கள் ஒன்றாக வருவதில்லை’

ராதாவேணுகோபால சுவாமி கோவில்

பட மூலாதாரம்,LAKKOJU SRINIVAS

உடன் பிறந்தவர்கள், குறிப்பாக, அண்ணன் தங்கைகள் ஏன் இந்தக் கோவிலுக்கு வருவதில்லை என்பதற்கான காரணத்தையும் விளக்கினார் கோபிநாத் ரத்தோ.

“கோவில் சுவர்களில் பாலியல் தோரணையுடன் கூடிய சிற்பங்கள் உள்ளன. அதனால், கோவிலுக்கு வரும் இளைஞர்கள், பெண்கள் சற்று கூச்சம் அடைகின்றனர். அக்கா, தம்பிகள் கோவிலுக்கு வந்து சங்கடப்படுவதும் உண்டு.

அதனால், சகோதரர்கள், சகோதரிகள் கோவிலுக்கு ஒன்றாக வரக்கூடாது என ஒரு காலத்தில் சொல்லப்பட்டது. இதனால், பல இளைஞர்கள் மற்றும் பெண்கள் வெளியில் இருந்து சாமியை கும்பிட்டுவிட்டுச் செல்கின்றனர்,” என்றார்.

கோபிநாத் ரத்தோ

பட மூலாதாரம்,LAKKOJU SRINIVAS

”கோவிலில் பாலியல் தொடர்பான சிற்பங்கள் அதிகம் இருந்ததால், உடன் பிறந்தவர்கள் வருவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது அத்தகைய விதிகள் இல்லை.

ஆனால், சிலர் இது காலம் காலமாக இருந்து வரும் வழக்கம் எனக் கருதி இன்றும் பின்பற்றுகின்றனர். ஆண்டுதோறும் நடைபெறும் ஹோலி பண்டிகையின்போது ஏராளமான இளைஞர்கள் இந்தக் கோவிலுக்கு வருவார்கள்,” என்றார் கோபிநாத்.

சிற்பக் கலைக்கு பெயர்பெற்ற கோவில்

ராதாவேணுகோபால சுவாமி கோவில்

பட மூலாதாரம்,LAKKOJU SRINIVAS

ஒரு காலத்தில் இந்தக் கோவிலை ‘ஆந்திர கஜுராஹோ’ என்று அழைத்ததாகக் கூறினார் கோபிநாத்.

கிருஷ்ணரது வாழ்க்கையின் பல தருணங்களை வெளிப்படுத்தும் பாறைகள் இருப்பதாகவும், மெலியபுட்டி ராதா வேணுகோபால சுவாமி கோவிலின் பெயரைக் கூறும்போது சிற்பத்தின் அழகு நினைவுக்கு வருவதாலும், இது ஆந்திராவின் கஜுராஹோ என்று அழைக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

இதுகுறித்து மற்றொரு அர்ச்சகரான சத்தியநாராயண ரத்தோ பேசியபோது, கோவிலுக்கு மற்றொரு சிறப்பு உள்ளதாகக் கூறினார்.

“கோவிலின் கூரையில் 64 கல் மலர்கள் இருக்கின்றன. அவை அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்தாலும், கூர்ந்து கவனித்தால் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை என்பது தெரியும். அவை 64 கலைகளின் சின்னங்கள். இந்தப் பகுதியில் வேறு எந்தக் கோவிலிலும் இந்த மாதிரியான கட்டடக்கலை இல்லை,” என்றார்.

சிதிலமடைந்து வரும் கோவில் சிறபங்கள்

ஜெகநாத் நாயுடு

பட மூலாதாரம்,LAKKOJU SRINIVAS

கல்லால் கட்டப்பட்ட இந்தக் கோவிலுக்கு வர்ணம் பூசப்பட்டதால், கோவிலின் தனித்தன்மை தெரியவில்லை என்றார் கோபிநாத்.

“கோவில் முழுவதும் கல்லால் ஆனது. ஆனால் அவை பல வண்ணப்பூச்சுகளால் வரையப்பட்டுள்ளது,” என்றார்.

சரியான பராமரிப்பு இல்லாததால், கல் தேய்ந்துகொண்டிருப்பதுபோல் தெரிந்தது. அதனால், ஒரு பக்தர் வந்து வண்ணம் தீட்டினார், என்றார் சத்யநாராயண ரத்தோ.

இதுகுறித்து செய்தித் தொடர்பாளர் ஜெகநாத் நாயுடு கூறுகையில், “இந்தக் கோவிலைக் கட்டியதில் அப்போதைய மகாராஜா கஜபதி நாராயணதேவின் முக்கிய நோக்கம், தம்பதிகளுக்கு வேதங்கள், கலைகள் மற்றும் பாலியல் குறித்துக் கற்பிப்பதாகும்.

கோவில் கட்டப்பட்டதில் இருந்து, அரச குடும்பம் அதன் நிர்வாகத்தைக் கவனித்து வருகிறது. ஆனால், சமீபகாலமாக நிதியுதவி செய்வதில்லை. அதனால், வரலாறும் தனித்துவமும் கொண்ட இக்கோவில் பாழடைந்து வருகிறது,” என்றார்.

மேலும், ”இந்தக் கோவிலை பாதுகாக்க, தொல்லியல் துறையோ அல்லது அதுபோன்ற அமைப்புகளோ, அரசோ நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் சிற்பங்களில் ஒளிந்திருக்கும் சிற்பக் கலையின் அறிவையும் அழகையும் வருங்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்வது நமது பொறுப்பு,’’ என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்இன்ஸ்டாகிராம்எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

 

Author


Hit Counter provided by technology news