இலங்கைக்கு கூடுதல் நிதி, மாலத்தீவுக்கு 22% நிதி குறைப்பு – இந்தியாவின் முடிவு எதை காட்டுகிறது?

இந்திய பிரதமர் மோதியும், மாலத்தீவு அதிபர் முய்சுவும்

பட மூலாதாரம்,ANI

  • எழுதியவர்,தீபக் மண்டல்
  • பதவி,பிபிசி செய்தியாளர்

பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மோதி அரசின் இடைக்கால பட்ஜெட்டில், மாலத்தீவுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவிகள் குறைக்கப்பட்டுள்ளன.

கடந்த 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மாலத்தீவிற்காக இந்திய அரங்காங்கம் 400 கோடி ரூபாயை ஒதுக்கியிருந்தது. பின்னர், இந்த உதவியானது 770 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.

ஆனால், இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் இந்த உதவி ரூ.600 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது மாலத்தீவுக்கு இந்தியா வழங்கிய வளர்ச்சி உதவித் தொகை 22 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

மாலத்தீவில் உள் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இந்தியா உதவி வருகிறது. ஆனால் தற்போதைய அதிபர் முகமது முய்சு ஆட்சிக்கு வந்தவுடன், இந்தியாவுடனான மாலத்தீவுகளின் உறவு மோசமடைந்தது.

அதிபர் முய்சுவின் கட்சி சீனாவின் பக்கம் சாய்ந்துள்ளதாக நம்பப்படுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தல் பிரசாரத்தின் போது, அவரது கட்சி ‘இந்தியாவே வெளியேறு’ என்ற கோஷத்தை முன்வைத்து பிரசாரம் செய்தது.

இதற்குப் பிறகு, பிரதமர் மோதியின் லட்சத்தீவு பயணத்தாலும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சைகளாலும் இந்தியா-மாலத்தீவு இடையேயான உறவில் பதற்றம் அதிகரித்தது. இந்த பதற்றத்திற்கு மத்தியில், முய்சு சீனாவிற்கு சென்றார்.

அங்கிருந்து திரும்பியதும், தனது நாடு சிறியது, ஆனால் அதை தங்கள் வசதிக்காக பயன்படுத்த யாருக்கும் உரிமை இல்லை என்று கூறியிருந்தார். அவரது இந்த பேச்சு, இந்தியாவை நோக்கி இருந்ததாகக் கருதப்பட்டது.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மாலத்தீவில் இந்திய ராணுவம் இருப்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே பிரச்னை இருந்து வருகிறது. முய்சு ஆட்சிக்கு வந்தவுடன், இந்தியப் படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்பதே அவரது முதல் உத்தரவு.

மார்ச் 15ம் தேதிக்குள் இந்திய வீரர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று கூறியிருந்தார், முய்சு. இந்த விவகாரம் குறித்து இந்தியாவுடன் விவாதிக்க மாலத்தீவுகள் இரண்டாவது முக்கிய குழு கூட்டத்தையும் நடத்த உள்ளது.

தற்போது 77 இந்திய வீரர்கள் மாலத்தீவில் உள்ளனர். இந்திய ராணுவத்தின் இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு விமானம் அங்கு உள்ளன. அவை மாலத்தீவில் இயற்கை பேரழிவுகளின் போது மக்களுக்கு உதவ பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால் மாலத்தீவின் முய்சு அரசோ, அவை அந்நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கருதுகிறது.

என்ன பிரச்னை?

முனைவர் ஃபஸூர் ரஹ்மான் சித்திக்

பட மூலாதாரம்,ICWA

மாலத்தீவுக்கு அளிக்கப்பட்ட ரூ.600 கோடி, இந்தியா எந்த நாட்டிற்கும் வழங்கிய மூன்றாவது பெரிய உதவியாகும்.

இந்திய மற்ற நாடுகளுக்கு வழங்கிய நிதி உதவிகளிலேயே மாலத்தீவுக்கு அளிக்கும் ரூ 600 கோடி நாட்ன மூன்றாவது பெரிய உதவித்தொகையாகும். நடப்பு நிதியாண்டான, 2023-24 இல், மாலத்தீவுக்கு இந்தியா ரூ 770 கோடி வழங்க நிதி ஒதுக்கியிருந்தது இந்தியா.

இது, முந்தைய நிதியாண்டான, 2022-23 இல் வழங்கப்பட்ட ரூ 183.16 கோடி நிதியைவிட சுமார் 300 சதவீதம் அதிகமாகும். ஆனால், வரும் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில், மாலத்தீவுக்கான உதவியைக் இந்தியா குறைத்துள்ளது. அதேசமயம் இலங்கை, மொரீஷியஸ், சீஷெல்ஸ், ஆப்பிரிக்க ஆகிய நாடுகளுக்கான நிதி உதவிகளை அதிகப்படுத்தியுள்ளது.

உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலின் மூத்த ஆராய்ச்சியாளர் முனைவர் ஃபஸூர் ரஹ்மான் சித்திக் கூறுகையில், “முய்சு அரசு இந்தியாவை எதிர்த்த விதம் இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுபோன்ற கடுமையான அணுகுமுறையை இந்தியா எதிர்பார்க்கவில்லை. முய்சு இந்தியாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். அவர், அதிபரானதும், துருக்கி மற்றும் சீனாவுக்குச் சென்று இந்தியாவுக்கு எதிரான உணர்வுகளை மேலும் தூண்டினார்”

“முய்சு நாட்டிற்குள் இருக்கும் தனது ஆதரவாளர்களை மகிழ்விப்பதற்காக மட்டுமே இதைச் செய்து கொண்டிருந்தார். அதனால் இந்தியா எதிர்வினையாற்றுவது இயற்கையானது. உதவியை குறைப்பதன் மூலம் இந்தியா இதைச் சுட்டிக்காட்டியுள்ளது,”என்றார் அவர்.

மாலத்தீவில் இந்திய எதிர்ப்பு உணர்வுகள் எந்த அளவிற்கு அதிகரித்துள்ளன என்பதை இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோதி இந்தியாவின் சிறிய தீவுக்கூட்டமான லட்சத்தீவுகளின் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததில் இருந்து தெரியும்.

இதைத் தொடர்ந்து, சில இந்தியர்கள் லட்சத்தீவுகளின் படங்களைப் பகிர்ந்து கொண்டனர். அதேபோல, சுற்றுலாப் பயணிகளை மாலத்தீவுக்குப் பதிலாக இங்கு பயணிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் இதற்கு பதிலடியாக மாலத்தீவைச் சேர்ந்த சிலர் பிரதமர் மோதிக்கு எதிரான கருத்துகளைக் கூறி லட்சத்தீவு ஒரு மோசமான இடம் என வர்ணித்துள்ளனர்.

மாலத்தீவு அரசாங்கத்தின் மூன்று இணை அமைச்சர்களும் இப்படியான விமர்சனத்தை செய்துள்ளனர். அவர்கள் அந்தப்பதிவுகளை பின்னர் நீக்கினர். ஆனால் முய்சு கட்சியின் இந்திய எதிர்ப்புப் பிரச்சாரம் அங்கு பரந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இந்தச் சம்பவம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்திய எதிர்ப்பால் மாலத்தீவுக்கு என்ன ஆபத்து?

இந்தியா மாலத்தீவு

பட மூலாதாரம்,@PPM_HULHUMALE

முய்சு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், அங்கிருந்த இந்தியப் படைகளை வாபஸ் பெறுமாறு இந்தியாவிடம் கேட்டுக் கொண்டது.

இதைத் தொடர்ந்து, இந்தப் பிரச்னையை அமைதியான முறையில் தீர்க்க இந்தியா மற்றும் மாலத்தீவுகளுக்கு இடையே ஒரு முக்கிய குழு கூட்டம் நடைபெற்றது. இரண்டாவது கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. கோர் குரூப் கூட்டத்தின் மூலம் இந்தியா என்ன செய்தியை அனுப்ப விரும்புகிறது?

புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சீன ஆய்வு மையத்தின் இணைப் பேராசிரியர் அரவிந்த் யெலேரி கூறுகையில், “இந்திய அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இந்தியாவுடனான உறவில் பாதகமான நடவடிக்கைகளை மாலத்தீவு எடுத்ததாக இந்தியா குறிப்பிட விரும்பவில்லை. மோதி அரசு கொஞ்சம் பொறுத்திருந்துதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால், இடைக்கால பட்ஜெட்டில் மாலத்தீவுக்கான உதவி குறைக்கப்பட்டிருக்கலாம், ஆனால் முழு பட்ஜெட்டில் அதிகரிக்கலாம். அதுவரை உறவுகளில் சில முன்னேற்றம் ஏற்பட்டால், உதவியை அதிகரிக்கலாம்.” என்றார் அவர்.

“தற்போது இந்தியா, தனது நட்பு நாடுகளான இலங்கை, சீஷெல்ஸ், மொரீஷியஸ் போன்ற நாடுகளுக்கு தனது உதவியை அதிகப்படுத்தியுள்ளதால், மாலத்தீவுகள் இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளக் கூடும்” என்றும் அரவிந்த் யெலேரி கூறினார்.

இந்தியாவின் தற்போதைய நிலைப்பாடு என்ன?

மோதி, ஜெய்சங்கர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சீனா சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பிய பிறகு, முய்சுவின் அணுகுமுறை இந்தியாவிடம் மென்மையாகத் தெரியவில்லை. சிறிய நாடு என்பதால் மாலத்தீவை கொடுமைப்படுத்த எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், “இந்தியாவின் அண்டை நாடுகளில் சீனா செல்வாக்கு செலுத்தும், ஆனால் இதுபோன்ற போட்டி அரசியலுக்கு இந்தியா பயப்பட வேண்டாம். அனைத்து அண்டை நாடுகளுக்கும் இடையே பிரச்னைகள் உள்ளன, ஆனால் இறுதியில் அண்டை நாடுகளுக்கு மற்ற அண்டை நாடுகள் தேவை” என்று கூறியிருந்தார்.

ஜெய்சங்கர் கூறுகையில், சீனாவின் செல்வாக்கு தொடர்பாக போட்டி அதிகரித்துள்ளது, ஆனால் அதை இந்திய ராஜ தந்திரத்தின் தோல்வி என்று கூறுவது தவறு.

“சீனாவும் நமது அண்டை நாடு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சீனாவைப் பற்றி நாம் பயப்பட வேண்டாம் என்று நான் நினைக்கிறேன். உலகளாவிய அரசியல் ஒரு போட்டி விளையாட்டு. நீங்கள் உங்களால் முடிந்ததை முயற்சி செய்யுங்கள், நாங்கள் எங்களால் முடிந்ததை முயற்சிப்போம். இன்றைய கால கட்டத்தில் போட்டியைக் கண்டு பயப்பட வேண்டாம். அதை வரவேற்று போட்டியிடும் திறன் நம்மிடம் உள்ளது,”என்றார் ஜெய்சங்கர்.

சீன சார்பு நிலையை கைவிடுவாரா முய்சு?

மாலத்தீவு அதிபர் முய்சு

பட மூலாதாரம்,PROGRESSIVE PARTY OF MALDIVE

மாலத்தீவின் எதிர்க்கட்சியான ஜம்ஹூரி கட்சித் தலைவர் காசிம் இப்ராகிம், இந்தியா மற்றும் பிரதமர் மோதியிடம் முறைப்படி மன்னிப்பு கேட்குமாறு அதிபர் முகமது முய்சுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இருதரப்பு உறவுகளை மேம்படுத்த இராஜ தந்திர நல்லிணக்கத்தை நாடுமாறு முய்சுவிடம் இப்ராஹிம் வேண்டுகோள் விடுத்தார்.

இப்ராஹிமின் அறிக்கை, இந்தியாவை குறிவைத்த முய்சுவின் எதிர்வினையுடன் தொடர்புடையது.

முகமது முய்சுவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு கிளம்பிய போது, இந்திய பிரதமர் மோதியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து இப்ராஹிம் கூறுகையில், “முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் இந்தியா வெளியேற வேண்டும் என்ற பிரசாரத்தை தொடங்கினார், இதன் காரணமாக இந்தியா மற்றும் மாலத்தீவுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்தது,”என்றார்.

சீனாவிலிருந்து திரும்பிய பிறகு, மருந்து விஷயத்தில் இந்தியாவைச் சார்ந்திருப்பதைக் குறைப்பது பற்றி முய்சு பேசினார்.

மாலத்தீவுக்கு இந்தியா மருந்துகளை வழங்கி வருகிறது. மாலத்தீவுக்கு கொரோனா தொற்று பரவிய காலத்தில் இந்தியா தடுப்பூசிகளை வழங்கியது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்இன்ஸ்டாகிராம்எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

 

சிறப்புச் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டது

  1. 1
Author


Hit Counter provided by technology news