Breaking

 

தமிழ்நாடு அரசு பஞ்சமி நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்கிறதா? நெல்லை அருகே கொந்தளிக்கும் மக்கள்

நெல்லை பஞ்சமி நிலம் சர்ச்சை

  • எழுதியவர்,தங்கதுரை குமாரபாண்டியன்
  • பதவி,பிபிசி தமிழ்

திருநெல்வேலி அருகே 1,600 ஏக்கர் பரப்பளவில் அமைய இருக்கும் சூரிய மின்சக்தி நிலையம் பஞ்சமி நிலத்தில் அமைவதாக கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த மின்சக்தி நிலையம் அமைந்தால் விவசாயம், கால்நடை மேய்ச்சல் , நீர் ஆதாரம் முற்றிலும் அழிந்துவிடும் என்பதனை முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் மீது அரசு காவல்துறை மூலம் வழக்கு பதிந்து இருக்கிறது.

நெல்லையில் சோலார் திட்டத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதன் பின்னணி என்ன?

பஞ்சமி நிலத்தை கையகப்படுத்தி சூரிய ஒளி மின் சக்தி நிலையம் அமைக்கப்படுகிறதா?

அரசு தரப்பில் பஞ்சமி நிலத்திற்கு அளிக்கும் விளக்கம் என்ன?

அரசு அறிவிப்பும் மக்கள் எதிர்ப்பும்

திருநெல்வேலி மாவட்டம் மாவனூர் வட்டம் அலவந்தான்குளம், மேட்டு பிராஞ்சேரி, கரிசல் குளம், சித்தம்பச்சேரி சித்தார்சத்திரம், பிராஞ்சேரி மற்றும் கங்கைகொண்டான் பகுதி 1 உள்ளிட்ட 13 கிராமங்களில் சிப்காட் நிறுவனத்தின் மூலம் சூரிய மின்சக்தி நிலையம் அமைத்திட 1,664.73 ஏக்கர் பரப்பளவில் நிலம் கையகப்படுத்தி சூரிய மின் சக்தி மையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசால் கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அரசாணை ( அரசாணை எண்-103 தொழில்) வெளியிடப்பட்டது.

இந்தச் சூரிய ஒளி மின் சக்தி மையம் அமைக்கப்பட்டால் அந்தப் பகுதியில் 2,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அரசு கூறியது.

மாவனூர் வட்டத்திற்கு உட்பட்ட அலவந்தான்குளம் கிராமத்தில் 3,000 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அதிக அளவிலான பட்டியல் பிரிவைச் சேர்ந்த மக்கள் வசிக்கிறார்கள். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இக்கிராமத்தில் இருந்து கையக்கப்படுத்தப்பட உள்ள 365 ஏக்கர் பரப்பளவிலான நிலம் பட்டியல் இன மக்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவதற்காக ஆங்கிலேயர்கள் காலத்தில் வழங்கப்பட்ட பஞ்சமி நிலம் என மக்கள் கூறுகின்றனர்.

இதனை அந்தச் சமுதாயத்தை சார்ந்த ஆயிரம் குடும்பங்கள் “64 ஏர் அரிஜன உழவர் சமுதாயம்”, பாத்தியப்பட்ட நிலம்”, என்ற பெயரில் பராமரித்து அதில் ஆயிரக்கணக்கான கால்நடைகளை மெய்ச்சலுக்கு விட்டு அதன் மூலம் வருவாய் ஈட்டி வாழ்ந்து வருகின்றனர்.

இந்தத் திட்டத்தை அரசு வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று கூறி மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ, எம்.பி, சபாநாயகர், முதல்வர் தனி பிரிவு என பல இடங்களில் கிராம மக்களின் சார்பில் மனு அளித்தும் பலன் கிடைக்கவில்லை.

நெல்லை பஞ்சமி நிலம் சர்ச்சை

சூரிய ஒளி மின் சக்தி திட்டத்துக்கு எதிராக வழக்கு

மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ஆனந்தராஜ் என்பவர் திருநெல்வேலியில் பட்டியல் பிரிவு மக்களுக்கு சொந்தமான 365 ஏக்கர் பஞ்சமி நிலத்தை சூரிய மின்சக்தி திட்டத்திற்காக அரசு கையகப்படுத்த கூடாது, இந்தத் திட்டத்தை வேறு பகுதிக்கு மாற்றம் செய்து விவசாயம், இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்று கூறி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பில், “தமிழ்நாடு அரசு சிப்காட் நில எடுப்பு பகுதியில் 64 ஏர் அரிஜன உழவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட நிலங்கள் வெறும் 24.64 ஏக்கர் மட்டுமே உள்ளது. அதனை அரசு இந்தத் திட்டத்திற்காக கையகப்படுத்தவில்லை. அரசின் தரவுகளில்படி அங்கு பஞ்சமி நிலம் ஏதுவும் கிடையாது” என குறிப்பிட்டது.

மேலும் அந்தப் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தரிசு மற்றும் விவசாயத்திற்கு தகுதி இல்லாத நிலங்களான 342 ஏக்கர் நிலத்தை மட்டுமே சூரிய மின்சக்தி நிலையம் அமைப்பதற்காக எடுத்துக் கொள்வதாகவும் மீதியுள்ள 64.79 ஏக்கர் நிலத்தில் கால்நடை மேய்ச்சலுக்கு போதுமானதாக இருக்கும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.

நெல்லை பஞ்சமி நிலம் சர்ச்சை

கிராம மக்கள் கொந்தளிப்பு – குடியரசு தினத்தன்று கருப்புக்கொடி போராட்டம்

அலவந்தான்குளம் பகுதியில் அமைய இருக்கும் சூரிய மின்சக்தி திட்டத்தை கைவிட கோரி கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று கிராமத்தில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி கிராம மக்கள், தலித் ஆதரவு இயக்கங்கள் போராட்டம் செய்தனர். இந்த சோலார் திட்டத்தை கைவிட்டு கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்தனர்.

கிராம மக்கள் 50 பேர் மீது வழக்குப்பதிவு

குடியரசு தினத்தன்று கருப்பு கொடி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதாக யாகப்பன் உள்ளிட்ட 50 பேர் மீது மாவனூர் காவல்நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் 109,149,143,290 ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

நெல்லை பஞ்சமி நிலம் சர்ச்சை
படக்குறிப்பு,யாகப்பன், அலவந்தான்குளம்

20 ஆயிரம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமா?

100 ஆண்டுகளாக நிலத்தை பராமரித்து வருகிறோம் என்கிறார் யாகப்பன்.

“அலவந்தான்குளம் கிராம மக்களுக்கு சொந்தமான 405 ஏக்கர் நிலத்தை 100 ஆண்டுகளுக்கு மேலாக கிராமத்தின் சார்பில் மக்கள் பராமரித்து வருகின்றனர். இந்த நிலம் குறிப்பிட்ட யாருக்கும் சொந்தம் கிடையாது. எங்கள் கிராமத்தில் வசிக்கும் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்களில் உள்ள அனைவருக்கும் பொதுவானது.

சுற்றுவட்டார கிராமங்களில் இருக்கும் ஆயிரக்கணக்கான கால்நடைகள் அனைத்தும் இந்தப் பகுதிக்கு மெய்ச்சலுக்கு அழைத்து வரப்படுகிறது. இந்த மூலம் தினசரி 5,000 லிட்டருக்கு மேல் பால் உற்பத்தி செய்யப்பட்டு பால் பண்ணைகளுக்கு வழங்கி வருவாய் ஈட்டி எங்களின் வாழ்வாதாரத்தை காத்து கொள்கிறோம்”, என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், ” இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட போது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்பேது அதிகாரிகள் இது தொடர்பாக பேசவில்லை. தற்போது மீண்டும் நிலம் கையகப்படுத்த துவங்கி நீதிமன்றத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதில் மாவட்ட ஆட்சியர் இந்த நிலம் எங்களுக்கு சொந்தம் இல்லை என்று கூறுவதுடன் 64 ஏக்கர் பரப்பளவில் கால்நடை மேய்த்து க்கொள்ளும்படி குறிப்பிட்டுள்ளார். ஆயிரக்கணக்கான கால்நடைகள் குறுகிய பகுதியில் மேச்சலுக்கு கொண்டு செல்வது சாத்தியமில்லை. 405 ஏக்கர் நிலமும் எங்கள் கிராமத்திற்கு பாத்தியப்பட்ட பகுதிதான்”, என்றார்.

நெல்லை பஞ்சமி நிலம் சர்ச்சை

இந்தத் திட்டத்தால் எனது வாழ்க்கையே கேள்விக்குறியாகும் என்கிறார் கிறிஸ்டி.

“நான் அலவந்தான்குளம் கிராமத்தில் வசித்து வருகிறேன். கணவனை இழந்த நான் 20 வெள்ளாடுகள், 10க்கும் மேற்பட்ட மாடுகளை வைத்து இந்தப் பகுதியில் மெய்சலுக்கு அனுப்பி அதன் மூலம் வருவாய் ஈட்டுகிறேன். இந்த திட்டம் அரசால் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டால் அது முழுவதுமே பாதிக்கப்பட்டு எனது வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விடும். மேலும் எங்களது நிலத்தை எங்களுக்கு வழங்க வேண்டும். அதில் அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என்பதே எங்களது நோக்கம்” என்கிறார்.

கால்நடை மேய்க்க சமுதாய காடுகள்

அரசு தனியாருக்கு சாதகமாக செயல்படுகிறது என்கிறார் சமூக ஆர்வலர் ஆனந்த் ராஜ்.

“அலவந்தான்குளம் கிராம மக்களுக்கு 1897 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு தர்க்காஸ்து (darkest) ஆணையின் கீழ் ( OS No: 3/1916) விவசாயம் செய்யவும், ஆடு, மாடுகளை பராமரிக்கவும், பிராஞ்சேரி வருவாய் கிராமத்தின் கீழ் நிலம் வழங்கியது. அவ்வாறு கிடைத்த உழவு நிலத்தில் இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் ஒன்றுகூடி விவசாயம் செய்து அந்த நிலத்தை கடந்த 1905 ஆம் ஆண்டு தங்களது சமுதாயத்தின் ( 64 ஏர் அரிஜன உழவர் சமுதாயம்) பெயரில் பதிவு செய்து இருக்கின்றனர். இதே பெயரில்தான் ஆந்திரா மாநிலத்தில் பஞ்சமி நிலம் குறிப்பிடப்படுகிறது என்கிறார்.

இந்தப் பகுதியில் ஆரம்ப காலகட்டத்தில் பின்தங்கி இருந்த பட்டியல் பிரிவைச் சார்ந்த மக்கள் ஆடு, மாடு வளர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டு தற்போதுதான் முன்னேறி இருக்கின்றனர். ஆனால் அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்தால் மீண்டும் அவர்களது வாழ்க்கை பின்னோக்கி செல்லும். இதனை கருத்தில் கொண்டு அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும். இது சட்டப்படியாக அவர்களுக்கு சொந்தமான இடம் ஆனால் அரசு இதனை ஏற்க மறுக்கிறது”, என்றார்.

கேரளா போன்ற மாநிலங்களில் விவசாய நிலங்களில் இதுபோன்ற சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டம் அமைக்கப்படுவது இல்லை. அதற்கு பதிலாக அவர்கள் நீர்நிலை பகுதிகளின் மேற்பரப்பில் அமைக்கின்றனர்.

அலவந்தான்குளம் பகுதியைச் சுற்றிலும் மொத்தமாக ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட கால்நடைகள் இந்த மேய்ச்சல் நிலப் பகுதியில் பயன்படுத்துகின்றன. எனவே இதனை கால்நடைகள் மேய்ப்பதற்கான சமுதாயக்காடாக அறிவித்து அதனை பராமரித்து பாதுகாக்க வேண்டும்”, என்றும் அவர் கூறுகிறார்

நெல்லை பஞ்சமி நிலம் சர்ச்சை

அரசாணை ரத்து செய்யாவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

“64 ஏர் அரிஜன உழவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை கைவிட வேண்டும். மேய்ச்சல் நிலத்தில் தனியார் சோலார் மின் நிலையம் அமைக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் இல்லாவிட்டால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம்” என்று ஊரின் முகப்பில் கிராம மக்கள் பேனரை வைத்து இருக்கின்றனர்.

நெல்லை பஞ்சமி நிலம் சர்ச்சை

பஞ்சமி நிலம் கிடையாது என்று ஆட்சியர் விளக்கம்

ஆனால், சூரிய மின்சக்தி நிலையம் அமையும் இடத்தில் பஞ்சமி நிலம் ஏதும் கிடையாது என்கிறார் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன்.

மேலும் தொடர்ந்த அவர்”கங்கைகொண்டான் சிப்காட் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக 1,600 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள சூரிய மின்சக்தி நிலையத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

கடந்த 6 மாதங்களாக அதிகாரிகள் மூலம் முழுமையான ஆய்வுக்குப் பிறகு விவசாயம் நடைபெறும் 560 ஏக்கர் நிலம் இந்த திட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு திட்டம் செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

சிலர் பஞ்சமி நிலத்தில் இந்தத் திட்டம் அமைவதாக கூறுகின்றனர். ஆனால் அப்படி ஏதுவும் கிடையாது. நிலம் வைத்திருப்பவர்கள் அரசிடம் நிலத்தை வழங்கி அதற்கான தொகையினை பெறுகிறார்கள். சிலர் வேண்டுமென்றே பிரச்சனை செய்கிறார்கள் அவர்களின் நிலத்திற்கான தொகை நீதிமன்றத்தில் செலுத்தப்படும்” என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்இன்ஸ்டாகிராம்எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

 

சிறப்புச் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டது

  1. 1
Author


Hit Counter provided by technology news