வரிப் பகிர்வில் பாரபட்சமா? தென்மாநிலங்கள் கொந்தளிப்பதன் காரணம் என்ன?

இந்தியா வரி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தென் மாநிலங்களின் பொருளாதார கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க முயல்வதாக கர்நாடகா கூற ஆரம்பித்திருக்கிறது.

  • எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி,பிபிசி தமிழ்

இந்தியாவில் வரி வருவாயைப் பகிர்வதில் குறைவான வரியே பகிரப்படுவதாக தமிழ்நாடு குறிப்பிட்டுவந்த நிலையில், வேறு பல தென் மாநிலங்களும் இந்தக் குரலை எழுப்ப ஆரம்பித்துள்ளன. தென் மாநிலங்களுக்கு இடையில் பொருளாதார கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க முயல்வதாக சொல்கிறது கர்நாடகா. இதன் பின்னணி என்ன?

கடந்த சில நாட்களாக கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் தங்களுடைய வரி வருவாயில் இருந்து மிகக் குறைவான நிதியே தங்களுக்குப் பகிரப்படுவதாக குற்றம்சாட்டிவருகின்றன. தமிழ்நாடு நீண்ட நாட்களாகவே இந்தக் குற்றச்சாட்டை சொல்லிவரும் நிலையில், இதே போன்ற குற்றச்சாட்டுகளை பிற தென் மாநிலங்களும் கூற ஆரம்பித்துள்ளன. இதன் உச்சகட்டமாக தென் மாநிலங்களின் பொருளாதார கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க முயல்வதாக கர்நாடகா கூற ஆரம்பித்திருக்கிறது.

பிப்ரவரி ஒன்றாம் தேதி இந்தியாவின் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அது குறித்து கருத்துத் தெரிவித்த பெங்களூர் ரூரல் தொகுதியின் காங்கிரஸ் கட்சி மக்களவை உறுப்பினரும் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின் தம்பியுமான டி.கே. சுரேஷ், தென் மாநிலங்கள் இதுபோல புறக்கணிக்கப்பட்டால் தனிநாடு கோரிக்கையை எழுப்ப வேண்டியிருக்கும் என்று கூறினார். இது கர்நாடக மாநிலத்தில் மிகப் பெரிய அரசியல் புயலை எழுப்பியது. மேலும், நிதிப் பகிர்வில் கர்நாடக மாநிலம் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி பிப்ரவரி 7ஆம் தேதி தில்லியில் போராட்டம் நடத்தப்போவதாக கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா அறிவித்திருக்கிறார்.

இதேபோல, மாநில நிதி உரிமையை வலியுறுத்தி, பிப்ரவரி 8ஆம் தேதி கேரளாவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், எம்பிக்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான தி.மு.கவும் பிப்ரவரி எட்டாம் தேதியன்று இது போன்ற போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

இந்நிலையில், #SouthTaxMovement என்ற ஹாஷ்டாக் திங்கட்கிழமையன்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டது.

தென்னிந்திய பொருளாதார கூட்டமைப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கர்நாடக மாநிலம் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி பிப்ரவரி 7ஆம் தேதி தில்லியில் போராட்டம் நடத்தப்போவதாக சித்தராமைய்யா அறிவித்திருக்கிறார்.

நிதிப்பகிர்வு தொடர்பான விவாதங்கள்

இந்தியாவின் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையில் நிதிப் பகிர்வு தொடர்பான விவாதங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே நடந்துவருகின்றன. இந்தியாவில் மாநிலங்களில் இருந்து வசூலிக்கப்படும் நிதியானது, மத்திய அரசிடம் சென்ற பிறகு மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் இந்த நிதிப் பகிர்வு நடைபெறுகிறது. இந்த நிதிப் பகிர்வை எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் 280வது பிரிவின்படி ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நிதி ஆணையங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த நிதி ஆணையங்கள் தரும் பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசும் மாநில அரசுகளும் நிதியைப் பகிர்ந்துகொள்கின்றன.

தற்போது பதினைந்தாவது நிதி கமிஷனின் பரிந்துரைகள் அமலில் உள்ளன. இந்தப் பரிந்துரைகள், 2021லிருந்து 2026ஆம் ஆண்டுவரையில் அமலில் இருக்கும். 16வது நிதி கமிஷனுக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.

மாநிலங்களின் பல்வேறு அம்சங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு, நிதி கமிஷன் நிதிப் பகிர்வைச் செய்கிறது. முதலில் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையில் மொத்த வரி வருவாய் பகிரப்படுகிறது. 13வது நிதி ஆணையம் வரை, மொத்த வருவாயில் 32 சதவீதம் மட்டுமே மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. 14வது நிதி ஆணையம் இதனை மாற்றியமைத்தது. மாநிலங்களுக்குப் பகிரப்படும் நிதியின் அளவை, 32லிருந்து 42ஆக உயர்த்தியது.

தென்னிந்திய பொருளாதார கூட்டமைப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தேசிய மக்கள் தொகைக் கொள்கைகுப் பிறகு கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் வேகமாக சரிய ஆரம்பித்தது.

மக்கள்தொகையும் வரிப்பகிர்வும்

இதற்குப் பிறகு இந்த 42 சதவீத நிதியை ஒவ்வொரு மாநிலமும் எப்படிப் பகிர்ந்துகொள்வது என்பதை நிதி ஆணையம் வரையறுக்கும். ஆறு அம்சங்களைக் கணக்கில் கொண்டு இந்தப் பகிர்வு நடைபெறும். மாநிலங்களின் பரப்பு (15%), மாநிலங்களின் மக்கள் தொகை (15%), மிகக் குறைந்த தனிநபர் வருவாயைக் கொண்ட மாநிலத்திற்கு கூடுதல் நிதி (45%), வனம் மற்றும் சுற்றுச்சூழல் (10%), வரி வசூலில் மாநிலங்களின் திறன் (2.5%), மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் மாநிலங்களின் செயல்பாடு (12.5%) ஆகியவைதான் இந்த ஆறு அம்சங்கள்.

70களின் மத்தியில் இந்தியா தனது மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளைத் தீவிரப்படுத்த ஆரம்பித்தது. 1976ல் முதல் தேசிய மக்கள் தொகைக் கொள்கை உருவாக்கப்பட்டது. இதற்குப் பிறகு ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு அளவில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த ஆரம்பித்தன. கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் வேகமாக சரிய ஆரம்பித்தது. ஆனால், வட மாநிலங்களில் அதுபோல நிகழவில்லை. மக்கள் தொகை தொடர்ந்து வேகமாக உயர்ந்து வந்தது.

இதனால், 1976ஆம் ஆண்டுக்குப் பிறகு அமைக்கப்பட்ட நிதி ஆணையங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான விவரங்களுக்கு 1971ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பே அடிப்படையாகக் கொள்ளப்பட்டது.

14வது நிதி ஆணையம் வரை, 1971ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பே ஒரு மாநிலத்தின் மக்கள் தொகையை வரையறுக்கப் பயன்படுத்தப்பட்டது. ஆனால், 15வது நிதி ஆணையம் சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பை பயன்படுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டது. அதன்படி, 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பை அந்த ஆணையம் பயன்படுத்த முடிவுசெய்தது.

தென்னிந்திய பொருளாதார கூட்டமைப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,நிதி கமிஷனின் இந்த அம்சம் தங்களுக்கு பாதகமாக அமையுமென தமிழ்நாடு முதன்முதலில் குரல் எழுப்பியது.

தமிழ்நாட்டிலிருந்து முதல் குரல்

இதற்குப் பல மாநிலங்கள், குறிப்பாக மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் திறம்படச் செயல்பட்ட தென் மாநிலங்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன. இதையடுத்து, ஒவ்வொரு மாநிலமும் மக்கள் தொகை கட்டுப்பாட்டை எப்படி செயல்படுத்தினார்கள் என்பதும் கணக்கில் கொள்ளப்படும் எனப்படும் என 15வது நிதி ஆணையம் வாக்குறுதி அளித்தது.

நிதி கமிஷனின் இந்த அம்சம் தங்களுக்கு பாதகமாக அமையுமென தமிழ்நாடு முதன்முதலில் குரல் எழுப்பியது. 15வது நிதி கமிஷன் அமைக்கப்பட்டபோது, அறிக்கை ஒன்றை வெளியிட்ட அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, பஞ்சாப், மேற்கு வங்கம், ஒடிசா, புதுச்சேரி, டெல்லி, தமிழ்நாடு ஆகிய பத்து மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

அந்தக் கடிதத்தில், 1971ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பதிலாக, 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பை ஆய்வு வரம்பாக வைத்துக்கொள்வதற்கும் மக்கள் தொகையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப சிறப்பாக செயல்படும் மாநிலங்களை ஊக்கப்படுத்தும் வகையில் நிதி பங்கீடு பரிந்துரை செய்யலாம் என்ற பரிந்துரையும் ஏற்கனவே மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு பாதகமாக அமையும் எனச் சுட்டிக்காட்டினார்.

மேலும், மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தும் சமூக நலத்திட்டங்களை பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் ஏற்கனவே செயல்படுத்திவிட்டதால், அந்தத் திட்டங்களை இந்த மாநிலங்களில் செயல்படுத்த முடியாது. ஆகவே அதன் மூலம் கிடைக்கும் ஊக்கத்தொகையும் கிடைக்காது என்பதையும் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டினார்.

தென்னிந்திய பொருளாதார கூட்டமைப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,”அதிகமான அளவு வருவாயை கொடுக்கும் மாநிலங்களாக தென் இந்திய மாநிலங்கள் உள்ளது” என்றார் சந்திரபாபு நாயுடு.

தென்மாநிலங்கள் புறக்கணிக்கப்படுகிறதா?

இதே காலகட்டத்தில் ஆந்திர மாநில சட்டப்பேரவையில் பேசிய முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, “மத்திய அரசுக்கு அதிகமான அளவு வருவாயை கொடுக்கும் மாநிலங்களாக தென் இந்திய மாநிலங்கள் உள்ளது, ஆனால் வடமாநிலங்களின் வளர்ச்சிக்கு மட்டுமே அவை பயன்படுத்தப்படுகின்றன” எனக் குற்றம்சாட்டினார்.

15வது நிதி ஆணையம் தனது பரிந்துரையை வெளியிட்டபோது மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்ட மாநிலங்களுக்கு கூடுதல் புள்ளிகள் அளிக்கப்படும் என நிதி ஆணையம் கூறியிருந்த நிலையில், அதற்கான ஆரம்ப வருடமாக 1976ஆம் ஆண்டை வைத்துக்கொள்ளாமல், 2011ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்டிருந்தது. இதனால், மக்கள் தொகையை 70களிலும் 80களிலும் வெகுவாகக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கு பலன் ஏதும் கிடைக்கவில்லை.

இதற்குப் பிறகு இது தொடர்பான விவாதங்களும் கட்டுரைகளும் ஊடகங்களில் வெளிவந்தாலும் அரசியல் ரீதியாக இந்தக் கோரிக்கை எவ்வித முக்கியத்துவத்தையும் பெறவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வரிவசூலைப் பகிர்ந்துகொள்வதில் தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்ற குரல் மீண்டும் எழ ஆரம்பித்தது.

15வது நிதி கமிஷனின் பரிந்துரைகளின்படி, தமிழ்நாட்டிற்கு 2,12,680 கோடி ரூபாய் மத்திய அரசிடம் இருந்து பகிர்ந்தளிக்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்திற்கு 1,92,514 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஆந்திர மாநிலத்திற்கு 2,34,013 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படுகிறது. குஜராத்திற்கு 1,84,154 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஆனால், உத்தரப்பிரதேசத்திற்கு 8,55,000 கோடி ரூபாயும் மத்தியப் பிரதேசத்திற்கு 3,82,010 கோடி ரூபாயும் பிஹார் மாநிலத்திற்கு 4,78,751 கோடி ரூபாயும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

தென்னிந்திய பொருளாதார கூட்டமைப்பு

பட மூலாதாரம்,AMAZON.COM

படக்குறிப்பு,”தமிழ்நாடோ, கர்நாடாகவோ பணம் கொட்டிக்கிடங்கும் மாநிலங்கள் அல்ல” என்கிறார் ஆர்.எஸ். நீலகண்டன்.

மற்ற நாடுகளில் எப்படி இருக்கிறது?

ஆனால், ஒரு நாட்டில் உள்ள முன்னேறிய மாநிலங்கள்தானே, பின்தங்கிய மாநிலங்களுக்கு நிதி அளிக்க வேண்டும்?

“உண்மைதான். அதனை மறுக்க முடியாது. ஏற்றத்தாழ்வு இருக்கும் எல்லா இடங்களிலும் எல்லா இடங்களிலும் அப்படித்தான் நடக்க வேண்டும். ஆனால், இதில் பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. இதுபோல வளர்ந்த மாநிலங்களிடம் இருந்து எடுத்து பின்தங்கிய மாநிலங்களுக்கு அளிப்பது எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பது முதல் அம்சம். இரண்டாவதாக, வளர்ந்த மாநிலங்களில் இருந்து பின்தங்கிய மாநிலங்களுக்கு நிதி மடைமாற்றம் செய்யப்படும்போது, அந்த நிதியை அவர்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதில், நிதி அளிக்கும் மாநிலங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இருப்பதில்லை. எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் பெரிய அளவில் நிதியை பிற மாநிலங்களுக்கு அளிக்க தமிழ்நாடோ, கர்நாடாகவோ பணம் கொட்டிக்கிடங்கும் மாநிலங்கள் அல்ல. இங்கேயும் சாலைகள், பள்ளிக் கட்டங்கள் மோசமாக இருக்கின்றன.”

“தவிர, இன்னொரு அம்சத்தையும் கவனிக்க வேண்டும். அதாவது, இது போல நிதி அளிக்கப்படும்போது, அந்த நிதியைப் பயன்படுத்தி வளராத மாநிலங்கள் வளர வேண்டும். இதன் மூலம் வளர்ந்த மாநிலங்களுக்கும் வளராத மாநிலங்களுக்கும் இடையிலான இடைவெளி குறையவேண்டும். ஆனால், அப்படி நடப்பதில்லை. மாறாக அடுத்த முறை கூடுதல் நிதி ஒதுக்கீடு அளிக்கும் வகையில் விதிமுறைகள் வகுக்கப்படுகின்றன. பழங்காலத்தில் வெற்றிகொண்ட ஒரு அரசுக்கு, வெற்றிகொள்ளப்பட்ட நாடுகள் கப்பம் கட்டுவதைப் போல ஆகிவிட்டது” என்கிறார் South Vs North: India’s Great Divide புத்தகத்தின் ஆசிரியரான ஆர்.எஸ். நீலகண்டன்.

மேலும், இந்தியாவில் கூடுதல் வரி செலுத்தும் தென் மாநிலங்களுக்கு எல்லா விதங்களிலும் மிகக் குறைவான பிரதிநிதித்துவம் கிடைப்பதோடு, கொள்கை வகுப்பது, செலவுசெய்வது போன்றவற்றில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாத சூழல்தான் இருக்கிறது என்கிறார் நீலகண்டன்.

உலகின் பல நாடுகளிலும் வளர்ச்சியடைந்த பகுதிகள், வளர்ச்சியடையாத பகுதிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது நடக்கிறது. அப்படியிருக்கும்போது இந்தியாவில் ஏன் அது பிரச்சனையாகிறது? “உண்மைதான். அமெரிக்காவின் தென் மாகாணங்கள் வடமாகாணங்களைவிட பொருளாதார ரீதியில் பின்தங்கியவை. இதனால் ஃபெடரல் அரசு கூடுதல் நிதியை தென் மாகாணங்களுக்கு அளிக்கிறது. கிழக்கு ஜெர்மனியைவிட மேற்கு ஜெர்மனி வளர்ந்த பகுதிதான். இங்கேயும் அரசு, கூடுதல் நிதியை கிழக்குப் பகுதிக்கு ஒதுக்குகிறது. சீனா உள்ளிட்ட எல்லா நாடுகளிலும் இப்படித்தான் நடக்கிறது.”

“ஆனால், அங்கே நடப்பதற்கும் இங்கே நடப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இந்த நாடுகளில் வளர்ந்த பகுதிகளில்தான் மக்கள் அதிகமாக வசிக்கிறார்கள். அதனால், வளர்ந்த, அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாநிலங்கள், குறைவான மக்கள் தொகையைக் கொண்ட மாநிலங்களுக்கு சற்று கூடுதல் நிதியை அளிப்பதில் பிரச்னை வருவதில்லை. ஆனால், இந்தியாவில் ஏழை மாநிலங்களில் மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். வளர்ந்த மாநிலங்களில் மக்கள் தொகை குறைவாக இருக்கிறது. ஆகவே, குறைவான மக்கள் தொகையினர், அதிக மக்கள் தொகையைக் கொண்ட பகுதிகளுக்கு நிதியை மடைமாற்றம் செய்வது பிரச்னையை ஏற்படுத்துகிறது” என்கிறார் ஆர்.எஸ். நீலகண்டன்.

பாஜக என்ன சொல்கிறது?

தென்னிந்திய பொருளாதார கூட்டமைப்பு
படக்குறிப்பு,“காங்கிரஸ் அதிகாரத்தில் இல்லாததால் பிரிவினையை பேச ஆரம்பித்திருக்கிறார்கள்” என்கிறார் நாராயணன் திருப்பதி.

ஆனால், பா.ஜ.கவின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி இதனை வேறு மாதிரி பார்க்கிறார். “கர்நாடகா, தமிழ்நாடு போன்றவை உற்பத்தி அதிகமுள்ள மாநிலங்கள். அதனால், இங்கே வரி வருவாய் அதிகமாகத்தான் இருக்கும். இந்த மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருளை உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் வசிப்பவர்கள் வாங்குவதன் மூலம் அவர்களே வரி செலுத்துகிறார்கள். தமிழ்நாடு கடலோர மாநிலம் என்பதால் இங்கே துறைமுகங்கள் இருக்கின்றன. துறைமுகங்கள் இருக்கும் மாநிலங்களில்தான் தொழிற்சாலைகளை வைக்க முடியும். ஆகவே, நிதியைப் பகிர்ந்துதான் ஆக வேண்டும்.

மற்றொரு பக்கம், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் வரி அதிகம் கிடைக்கக்கூடிய கார் போன்ற பொருட்களை உற்பத்தி செய்கின்றன. உத்தரப்பிரதேசத்தில் விவசாயம் அதிகம் நடக்கிறது. விவசாய உற்பத்திக்கு வரி கிடையாது. ஆகவே இருவிதமான மாநிலங்களையும் ஒப்பிட முடியாது. தவிர, மாநிலங்களுக்கிடையே நிதிப் பகிர்வைச் செய்வது, நிதி ஆணையம்தான். மத்திய அரசுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. சொல்லப்போனால் காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததைவிட கூடுதல் நிதிப் பகிர்வுதான் நடக்கிறது” என்கிறார் அவர்.

இதற்கிடையில், தென்மாநிலங்களின் பொருளாதார கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற குரலும் எழுந்திருக்கிறது. இதுபோன்ற ஒரு யோசனையை கர்நாடக முதல்வரிடம் முன்வைக்கப்போவதாக முதலமைச்சரின் பொருளாதார ஆலோசகர் பசவராஜ் ராயரெட்டி தெரிவித்ததாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. இதுபோன்ற ஒரு யோசனையை 2018ல் கேரள அரசு முன்வைத்தது. 2018ல் 15வது நிதி ஆணையத்திற்கான விதிமுறைகள் வெளியானபோது, இதில் தென் மாநிலங்கள் அதிருப்தியடைந்திருந்த நிலையில் நிதியமைச்சர்களின் கூட்டம் ஒன்றைக் கூட்டலாம் என கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்திருந்தார். ஆனால், அதற்குப் பிறகு அந்த யோசனை செயல்வடிவம் பெறவில்லை.

ஆனால், இது வழக்கம்போல காங்கிரஸின் பிரிவினைவாதப் போக்கையே பிரதிபலிக்கிறது என்கிறது பா.ஜ.க. “காங்கிரஸ் அதிகாரத்தில் இல்லாததால் பிரிவினையை பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அதிகாரத்திற்கு வர அவர்கள் எதையும் செய்வார்கள் என்பதையே இது காட்டுகிறது” என்கிறார் நாராயணன் திருப்பதி.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்இன்ஸ்டாகிராம்எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

 

Author


Hit Counter provided by technology news