இஸ்ரேலில் பிரதமர் நெதன்யாகு பதவி விலக நெருக்கடி – ஆயிரக்கணக்கானோர் திடீர் போராட்டம் ஏன்?

இஸ்ரேல், ஹமாஸ், காஸா, பெஞ்சமின் நெதன்யாகு

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • எழுதியவர்,ஜெரெமி பொவன்
  • பதவி,பிபிசி சர்வதேச ஆசிரியர், ஜெருசலேமிலிருந்து

இஸ்ரேலின் ஆழமான அரசியல் பிளவுகள் மீண்டும் பேசுபொருளாகியுள்ளன.

கடந்த வருடம் அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து அதிர்ச்சியும், அதனால் தேசிய ஒற்றுமையும் ஏற்பட்டதால், இந்த அரசியல் பிளவுகள் கொஞ்சம் கிடப்பில் போடப்பட்டன.

ஆனால் ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஆயிரக்கணக்கான அரசியல் எதிர்ப்பாளர்கள் மீண்டும் இஸ்ரேலின் தெருக்களில் போராடத் துவங்கியுள்ளனர்.

இஸ்ரேல் காஸா மீது போர் நடத்திவருகிறது. இந்தப் பின்னணியில் நீண்டகாலமாக இஸ்ரேல் பிரதமராக இருந்துவரும் பெஞ்சமின் நெதன்யாகுவை பதவி விலகக்கோரி போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை முடுக்கியுள்ளனர்.

இஸ்ரேலின் ஜெருசலேம் நகரின் முக்கிய நெடுஞ்சாலையான பெகின் போலவார்ட் தெருவை மறித்த போராட்டக்காரர்களை அகற்ற போலீசார், துர்நாற்றம் கலந்த தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர்.

நெதன்யாகுவை பதவி விலகவும், தேர்தல்களை முன்கூட்டியே நடத்தவும் கோரும் பழைய முழக்கங்களுடன், காஸாவில் இன்னும் பணயக்கைதிகளாக இருக்கும் 130 இஸ்ரேலியர்களை விடுவிப்பதற்கான உடனடி ஒப்பந்தத்தைக் கோரும் புதிய கோஷங்களையும் போராட்டக்காரர்கள் எழுப்பினர். இந்த 130 பேரில் ஒரு பகுதியினர் இறந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

இஸ்ரேல், ஹமாஸ், காஸா, பெஞ்சமின் நெதன்யாகு

பட மூலாதாரம்,REUTERS

அச்சத்தில் உறவினர்கள், நண்பர்கள்

ஹமாஸ் குழுவினரிடம் பணயக்கைதிகளாக இருக்கும் 130 பேரில் ஒரு பகுதியினர் இறந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

நடந்துவரும் போர் நீடித்தால், பணயக்கைதிகளில் மேலும் பலர் கொல்லப்படலாம் என அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் போராடக்காரர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.

இஸ்ரேல், ஹமாஸ், காஸா, பெஞ்சமின் நெதன்யாகு

பட மூலாதாரம்,OREN ROSENFELD

படக்குறிப்பு,காஸாவில் போரில் ஈடுபட்டுவரும் இஸ்ரேலிய ராணுவ வீரரின் தாயான கட்டியா அமோர்சா

கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) மாலை, ஆயிரக்கணக்கானோர் இஸ்ரேலிய பாராளுமன்றத்தைச் சுற்றிலும் கூடி போராட்டம் நடத்தினர்.

அப்போது காஸாவில் போரில் ஈடுபட்டுவரும் இஸ்ரேலிய ராணுவ வீரரின் தாயான கட்டியா அமோர்சா என்ற பெண், பெஞ்சமின் நெதன்யாகு நாட்டைவிட்டு நிரந்தரமாக வெளியேற விமான டிக்கெட்டை தான் வாங்கித் தரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

“அவரோடு, அவர் சொந்தமாகத் தேர்ந்தெடுத்து அமைச்சரவையில் வைத்திக்கும் அத்தனை மோசமானவர்களையும் உடனழைத்துச் செல்லுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்,” என்றார் அவர்.

இஸ்ரேல், ஹமாஸ், காஸா, பெஞ்சமின் நெதன்யாகு

பட மூலாதாரம்,OREN ROSENFIELD

படக்குறிப்பு,ராபி (யூத மதகுரு) யெஹூதா கிளிக்

நெதன்யாகுவின் ஆதரவாளர்கள் சொல்வது என்ன?

நெதன்யாகுவின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களின் கருத்தை எதிர்க்கிறார்கள்.

போராட்டம் நடந்துகொண்டிருந்த இடத்தில் ஒரு ராபி (யூத மதகுரு) காணப்பட்டார். அவர் பெயர் யெஹூதா கிளிக். இசுலாமியரின் புனிதமான மசூதி என்று கருதப்படும் ஜெருசலேமில் உள்ள அல் அக்ஸா மசூதியின் இடத்தில் இருப்பதாகக் கருதப்படும் ‘டெம்பிள் மவுண்ட்’ என்ற இடத்தில் யூதர்கள் பிரார்த்தனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்பவர் இவர்.

இஸ்ரேலில் உண்மையான எதிரி ஹமாஸ் தான், பிரதமர் நெதன்யாகு அல்ல என்பதை போராட்டக்காரர்கள் மறந்துவிட்டதாக கிளிக் கூறுகிறார்.

“நெதன்யாகு மிகவும் பிரபலமானவர் என்று நான் நினைக்கிறேன். அதுதான் போராடக்காரர்களுக்கு ஆத்திரமூட்டுகிறது. இவ்வளவு காலமாக இவர்கள் போராட்டம் நடத்தியும், அவர் இன்னும் ஆட்சியில் இருப்பதை இந்தப் போராட்டக்காரர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று நான் நினைக்கிறேன்,” என்றார்.

“அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்யட்டும். அவர்களது கருத்தை சத்தமாக, தெளிவாக பேசட்டும். ஆனால் அவர்கள் ஜனநாயகத்திற்கும் அராஜகத்திற்கும் இடையே உள்ள மிக மெல்லிய கோட்டைக் கடக்காமல் கவனமாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இஸ்ரேல், ஹமாஸ், காஸா, பெஞ்சமின் நெதன்யாகு

பட மூலாதாரம்,EPA-EFE-REX/SHUTTERSTOCK

படக்குறிப்பு,இஸ்ரேல் காஸா மீது போர் நடத்திவருகிறது. இந்தப் பின்னணியில் நீண்டகாலமாக இஸ்ரேல் பிரதமராக இருந்துவரும் பெஞ்சமின் நெதன்யாகுவை பதவி விலகக்கோரி போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை முடுக்கியுள்ளனர்

காஸா மீதான போரை நியாயப்படுத்தும் அமைச்சர்கள்

இஸ்ரேலின் இந்தப் போராட்டக்காரர்களும், இஸ்ரேலின் மற்ற நட்பு நாடுகளில் இருக்கும் நெதன்யாகுவின் எதிர்ப்பாளர்களும், நெதன்யாகுவின் அரசாங்கத்தில்தான் ஜனநாயகத்தின் எதிரிகள் இருப்பதாகக் கூறுகிறார்கள். நெதன்யாகுவின் அரசு தீவிர தேசியவாத யூதக் கட்சிகளின் ஆதரவைச் சார்ந்துள்ளது.

நெதன்யாகுவின் அமைச்சரவையில் இருக்கும் நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் மதவாத சியோனிச கட்சியின் தலைவர். அதன் எம்.பி.க்களில் ஒருவரான ஓஹாட் தால், பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் மீதான ராணுவ அழுத்தத்தைத் தவிர வேறு வழி இல்லை என்று கூறியிருக்கிறார்.

“பணயக் கைதிகளை ஒப்பந்தத்தின் மூலம் எளிதாகத் விடுவித்து, பின்னர் அதற்கு ஈடாக இஸ்ரேல் விடுவிக்கும் அனைத்து பயங்கரவாதிகளையும் நாமே கொல்ல ஹமாஸ் அனுமதிக்கும் என்று நினைக்கிறீர்களா? அது அவ்வளவு எளிதல்ல,” என்றார் அவர்.

“ஒரே ஒரு பொத்தானை அழுத்துவதன்முலம் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவித்து, எல்லாவற்றையும் சரி செய்ய முடியும் என்றால், ஒவ்வொரு இஸ்ரேலியரும் அந்த பொத்தானை அழுத்துவார்கள். ஆனால் நீங்கள் நினைப்பது போல் இது எளிதானது அல்ல,” என்றார்.

பெஞ்சமின் நெதன்யாகு, தான் மட்டுமே இஸ்ரேலை பாதுகாப்பாக வைத்திருக்கக்கூடியவர் என்று கூறி வந்தார். பல இஸ்ரேலியர்கள் அவரை நம்பினர்.

இஸ்ரேல், ஹமாஸ், காஸா, பெஞ்சமின் நெதன்யாகு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஹமாஸ் தாக்குதலுக்கு நெதன்யாகு இதுவரை எந்தப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுவே ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களை ஆத்திரமூட்டுகிறது

பாதுகாப்புக் குறைபாட்டுக்குப் பொறுப்பு

பாலஸ்தீனர்கள் கோரும் அமைதி உடன்படிக்கைக்குப் படியாமல், அவர்கள் கோரிவரும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் யூதர்களைக் குடியமர்த்தலாம் என்றும், பாலத்தீனர்களைச் சமாளித்துக்கொள்ளலாம் என்றும் அவர் கூறி வந்தார்.

ஆனால், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழு எல்லைக் தாண்டி வந்து இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தியபோது எல்லாம் மாறியது.

பல இஸ்ரேலியர்கள், இவ்வளவு பெரிய விளைவுகளுடன் கூடிய தாக்குதல் நடக்கக் காரணமாக இருந்த பாதுகாப்பு குறைபாடுகளுக்கு நெதன்யாகுவே பொறுப்பு என்கிறார்கள்.

ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலின் பாதுகாப்புத் தலைவர்களைப் தாம் தவறு செய்ததை ஒப்புக்கொண்டு அறிக்கைகளை வெளியிட்டனர். ஆனால் இதுவரை நெதன்யாகு அதுபோல எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதுவே ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களை ஆத்திரமூட்டுகிறது.

வலதுசாரி ஆதரவு

கடந்த 40 வருடங்களாக பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேல் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

அவர் பாலத்தீன அரசையும், பாலத்தீனத்தின் விடுதலையையும் தொடர்ந்து எதிர்த்து வருகிறார்.

போருக்குப் பிறகு காஸாவில் சுயாட்சி ஏற்படுத்தும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் திட்டங்களை அவர் கடுமையாக நிராகரித்ததால் தான் இஸ்ரேலின் தீவிர வலதுசாரிகளின் தொடர்ச்சியாக அவரை ஆதரிக்கிறார்கள்.

இஸ்ரேல், ஹமாஸ், காஸா, பெஞ்சமின் நெதன்யாகு

பட மூலாதாரம்,OREN ROSENFELD

படக்குறிப்பு,டேவிட் அக்மோன்

‘நெதன்யாகு பலவீனமானவர், பொய் சொல்பவர்’

இஸ்ரேல் பாராளுக்மன்றத்தின்குன் போராட்டம் நடத்தியவர்களில் ஒருவர், இஸ்ரேலிய இராணுவத்தின் ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஜெனரலாக இருந்த டேவிட் அக்மோன். நெதன்யாகு முதன்முதலில் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அக்மோன் பிரதமர் அலுவலகத்தின் நிர்வாகப் பொறுப்பினை எற்று நடத்தினார்.

“1948-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இதுதான் இஸ்ரெலின் மிகப்பெரிய நெருக்கடி. 1996-இல் நான் நெதன்யாகுவின் முதல் தலைமைத் தளபதியாக இருந்தேன். அதனால் எனக்கு அவரை நன்றாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. மூன்றே மாதங்களில் நான் எனது பணியை ராஜினாமா செய்தேன். ஏனென்றால் நெதன்யாகு யார் என்பதை நான் உணர்ந்திகொண்டேன். அவர் இஸ்ரேலுக்கு மிகப்பஎரிய ஆபத்து,” என்றார்.

மேலும், “அவருக்கு முடிவெடுக்கத் தெரியாது. அவர் பயப்படுகிறார். அவருக்குத் தெரிந்தது பேசுவது மட்டுமே. அவர் தன் மனைவியைச் சார்ந்திருப்பதை நான் பார்த்தேன். அவரது பொய்களைப் பார்த்தேன். மூன்று மாதங்களுக்குப் பிறகு நான் அவரிடம் ‘உங்களுக்கு உதவியாளர்கள் தேவையில்லை. உங்களது இடத்திற்கு வேறு ஒரு பிரதமர்தான் தேவை’ என்று சொல்லிவிட்டு நான் கிளம்பி வந்துவிட்டேன்,” என்றார்.

நெதன்யாகுவின் அரசியல் வாழ்க்கைக்கு சிக்கலா?

தனக்கு எதிராகப் போராட்டம் நடந்துகொண்டிருக்கையிலேயே நெதன்யாகு தேர்தலை முன்கூட்டியே நடத்தும் யோசனையை நிராகரித்தார். மேலும் காஸாவின் ரஃபா பகுதியில் ஹமாஸ் படைகளுக்கு எதிராக ஒரு புதிய தாக்குதலை நடத்தப் போவதாக மீண்டும் உறுதி கூறினார்.

நெதன்யாகு ஒரு வலிமையான அரசியல் பிரசாரகர். அவரது எதிரிகள் கோருவதைப்போல முன்கூட்டியே தேர்தல் நடந்தாலும் அவர் வெல்லக்கூடும் என்று அவர்களது ஆதரவாளர்க்ள் நம்புகிறார்கள்.

ஹமாஸ் அழிக்கப்படவேண்டும் என்பதில் இஸ்ரேலியர்களிடையே கருத்துவேறுபாடில்லை. அதற்கு பெரும் ஆதரவு உள்ளது.

ஆனால் போர் நடத்தப்படும் விதம், பணயக்கைதிகளை மீட்பதில் இருக்கும் தாமதம் ஆகியவை பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரும் அளவுக்கு அவர் மீது பெரும் அழுத்ததைச் செலுத்தி வருகின்றன.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்இன்ஸ்டாகிராம்எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

 

 

Author


Hit Counter provided by technology news