ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோற்று பருக்கையே பதமானது

 

Editorial   / 2024 ஜூலை 19 , மு.ப. 12:14 – 0      – 10

print sharing button
facebook sharing button
twitter sharing button
xing sharing button
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோற்று பருக்கையே பதமானது

கற்பித்தல் மூலம் மாணவர்களுக்கு அறிவு, திறன் அல்லது நல்லொழுக்கத்தைப் பெற உதவுபவர் ஆசிரியர் ஆவார். பாடசாலை பருவத்தில் 13 வருடங்கள் பட்டைத்தீட்டி, சமூகத்தில் ஒவ்வொருவரையும் ஓர் உயரிய அந்தஸ்துக்கு ​கொண்டுவருவதில் தன்னுடைய வாழ்நாளில் அரைவாசிக்கு மேல் செலவழித்துவிடுவார்கள்.

ஆசிரியர்களின் சொல்பேச்சை கேட்டு நல்லொழுக்கத்துடன் நடக்காதவர்கள், உயரிய அந்தஸ்துக்குச் செல்லமாட்டார்கள் எனினும், தனிப்பட்ட திறமையால் தங்களை உயர்த்திக்கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இவற்றுக்கெல்லாம் பிரதான வகிபாகமாக அமைபவர் ஆசிரியர்.

அதனால்தான் என்னவோ, மாதா, பிதாவுக்கு பின்னர் குரு தெய்வம் என்பார்கள் போலும். அதனை மறந்தே பலரும் செயற்படுகின்றனர் என்பது கவலையான விடயமாகும்.

தங்களை வருத்தி கற்பிக்கும் ஆசிரியர்கள் சமூகத்தில் இருக்கும் போது, ஒருசிலர் எதிர்மறையான செயற்பாடுகளிலேயே ஈடுபடுகின்றனர். இது ஆசிரியர் சமூகத்தில் மட்டுமன்றி ஏனைய சமூகத்திலும் இருக்கத்தான் செய்கின்றன. ஒருசிலரின் செயற்பாடுகள் முழு சமூகத்தையும் தலைக்குனிய ​வைத்துவிடுகின்றன.

சம்பள உயர்வை வலியுறுத்தி சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அதிபர், ஆசிரியர்கள், எதிர்வரும் நாட்களில் சட்டப்படி வேலை ​போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். தற்போதையை பொருளாதார நெருக்கடியை அடிப்படையாகக் கொண்டு பார்ப்போமெனில், அதிபர், ஆசிரியர்களின் சம்பளம், கொடுப்பனவுகளை அதிகரிக்கவே வேண்டும்.

வாழ்க்கையை கடனின்றி கொண்டு நடத்துவதற்கான சம்பளம் கிடைக்குமாயின், எவருமே மாற்றுத்தொழிலை, பகுதிநேர தொழிலை நாடமாட்டார்கள். ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள், பிரத்தியேக வகுப்புகளை நடத்துகின்றனர்.

பாடசாலைகளில் கற்பிப்பதை விடவும், பிரத்தியேக வகுப்புகளுக்கு கூடுதலான முன்னுரிமையை கொடுக்கின்றனர். அதில் பெருமளவில் இலாபத்தை ஈட்டியும் கொள்கின்றனர். என்னதான் பாடசாலைக்குச் சென்றாலும் தங்களுடைய பிள்ளைகள், பிரத்தியேக வகுப்புகளுக்குச் சென்றால்தான் சித்தியடைவார்கள் என ஒருசில பெற்றோர்களும் நினைக்கின்றனர்.

அவ்வாறு நினைப்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. ஏனெனில், கல்விப் பொதுத் தராதார சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றிய கீழ்நிலை வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் சிறந்த பெறுபேறுகளை​ பெற்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலான மாணவர்கள், பிர​த்தியேக வகுப்புகளுக்குச் சென்றே சித்தியடைந்துள்ளனர். இதேவேளை, பாடசாலைகளில் மட்டுமே கற்று, சித்தியடைந்த மாணவர்களும் உள்ளனர்.

இந்நிலையில்தான், பாடசாலைக்குச் சென்று, வரவேற்றில் பதிவை இட்டுவிட்டு,  தனியார். வகுப்புகளை நடத்திய ஆசிரியர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன், வடமேல் மாகாணத்தில் கற்பிக்கும் ஏனைய ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் அதிபர்களுக்கு தனியார் வகுப்புகள், கருத்தரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வீட்டுப்பாடங்களைச் செய்ய தவறிய மாணவர்களை, சோற்றை திண்கிறாயா?அல்லது வேறு எதையாவது திண்கிறாயா? என ஆசிரியர்கள் திட்டுவார்கள். அந்த சோறு வேகும். பானையில் சோறு வெந்துவிட்டதா என்று பார்ப்பதற்கு ஒரு சோற்றை எடுத்துப் பார்த்தாலே போதும். ஒரேயொரு சொல் அல்லது செயல் ஒருவரின் முழு குணத்தைக் காட்டப் போதுமானதாக அமைந்துவிடலாம். அதுபோலதான், இந்த ஆசிரியரின் செயல், முழு ஆசிரியர் சமூகத்தையும் தலைகுணிய செய்துவிட்டது.

07.19.2024


 

 

Author