கிழியும் திரையுலக முகமூடிகள்! – மலையாளத்தில் மட்டும்தானா?

“நான் முன்னாள் தேசிய தடகள வீராங்கனை. தன்னம்பிக்கை அதிகமாக உள்ளவள். ஆனால், எனக்கு ஒரு பிரச்னை வந்தபோது நாக்கு வறண்டு துயரத்தில் என்னால் பேச முடியவில்லை.

Published:Updated:
ஹேமா கமிட்டி அறிக்கை

ஹேமா கமிட்டி அறிக்கை

16Comments
Share
கிழியும் திரையுலக முகமூடிகள்! - மலையாளத்தில் மட்டும்தானா?

கிழியும் திரையுலக முகமூடிகள்! – மலையாளத்தில் மட்டும்தானா?

Listen to Vikatan stories on our AI-assisted audio player

கலை மற்றும் வணிகரீதியான படைப்புகளால் கேரளாவைத் தாண்டியும் கொண்டாடப்பட்ட மலையாள சினிமாத்துறையில் ஹேமா கமிட்டி அறிக்கை ஏற்படுத்திய தாக்கம் ஒட்டுமொத்த இந்திய சினிமாத்துறையிலும் அதிர்வலைகளை உண்டு பண்ணியிருக்கிறது.

பாலியல் குற்றச்சாட்டு மல்லுவுட்டுக்குப் புதிதல்ல. 2017-ல் பிரபல நடிகை கொச்சியில் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பியபோது காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானார். அந்த நடிகை தைரியமாகக் காவல்துறையை நாட, வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடிகர் திலீப் உள்ளிட்டவர்கள் கைதுசெய்யப்பட்ட அந்த வழக்கு தொடர்ந்து நடந்துவருகிறது. அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மலையாள சினிமாவில் இயங்கும் பெண்கள் இணைந்து WCC (Women in Cinema Collective) என்ற கூட்டமைப்பை உருவாக்கினர். அதன் நோக்கமே, திரையுலகைச் சேர்ந்த பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்வதுடன், தவறு செய்தவர்களுக்கு சட்டரீதியாக தண்டனை வாங்கிக் கொடுக்கப் போராடுவதும்தான்.

WCC அமைப்பினர் அரசிடம் வலியுறுத்தியதன் அடிப்படையில் மலையாள சினிமாவில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான அத்துமீறல்கள் குறித்து ஆய்வுசெய்ய நீதிபதி ஹேமா தலைமையில் மூவர் கமிட்டி 2018-ல் அமைக்கப்பட்டது. ஹேமா கமிட்டி தன் ஆய்வறிக்கையை 2019 டிசம்பர் 31-ம் தேதி அரசிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையை வெளியிட அரசு தயக்கம் காட்டியது. இதை அறிந்த மலையாள ஊடகத்தினர் 5 பேர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஹேமா கமிட்டியின் அறிக்கையைப் பெற்று வெளியிட்டுப் பரபரப்பு ஏற்படுத்தினர். அதில் மலையாள சினிமாவின் இன்னொரு முகம் வெளிப்பட்டுள்ளது.

கேரள முதல்வரிடம் அறிக்கையை வழங்கிய ஹேமா கமிட்டி

கேரள முதல்வரிடம் அறிக்கையை வழங்கிய ஹேமா கமிட்டி

நடிகைகள் வாய்ப்புக்காக `அட்ஜெஸ்ட்மென்ட்’, `காம்பரமைஸ்’ ஆகிய இரண்டு வார்த்தைகளை ஆரம்பத்தில் இருந்தே கேட்கும் சூழல் நிலவுவதாகவும், `Casting couch’ எனப்படும் வாய்ப்புக்காகப் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள வற்புறுத்தும் வழக்கம் அதிகம் இருப்பதாகவும் நடிகைகளின் வாக்குமூலங்கள் மூலம் தெரிந்துள்ளது. வெளிப்புறப் படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் தங்க நேர்ந்தால் குடிபோதையில் சில நடிகர்கள், பெண்கள் தங்கும் அறைக்கதவைத் தட்டும் சம்பவங்களைப் பற்றியும் அதில் விரிவாகப் பேசியுள்ளனர்.

`மலையாள சினிமாத்துறையை 15 பேர் கொண்ட ஒரு மாஃபியா கும்பல் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதிகாரம்மிக்க அந்த பவர் குரூப்பைத் தாண்டி யாரும் எதுவும் செய்துவிடமுடியாது. பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட புகார்களைக் கூறினால் சினிமா ஃபீல்டைவிட்டே ஒதுக்கி வைக்கும் அதிகாரம் அந்த பவர் குரூப்புக்கு உள்ளது. சினிமா வேண்டாம் என விலகி இருந்தாலும் அவர்களின் தொல்லை தொடரும்!’ என விரியும் ஹேமா கமிட்டி அறிக்கையால் ஏற்பட்ட அதிர்வலை அடங்குவதற்குள் இயக்குநர்கள், நடிகர்கள், புரொடக்‌ஷன் கண்ட்ரோலர் என பலர்மீதும் நடிகைகள் வெளிப்படையாகவே புகார்களைக்கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். நடிகைகளின் புகாரின் அடிப்படையில் மாநிலம் முழுவதும் காவல்நிலையங்களில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கிழியும் திரையுலக முகமூடிகள்! - மலையாளத்தில் மட்டும்தானா?

நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா, இடைவேள பாபு, மணியன்பிள்ளை ராஜு உள்ளிட்டவர்களுக்கு எதிராக பாலியல் புகார் அளித்துள்ள நடிகை மினு குரியன், “பாலச்சந்திர மேனனின் படத்தில் தலைமைச் செயலாளராக நடிக்கும் வாய்ப்பு 2008-ல் கிடைத்தது. கேரள தலைமைச் செயலகத்தில் வைத்து படப்பிடிப்பு நடந்தது. ஷூட்டிங் தொடங்கி மூன்று நாள்கள் அமைதியாகச் சென்றது. அடுத்தநாள் தனிமையான சூழலில் திடீரென ஒருவர் பின்னால் வந்து கட்டிப்பிடித்தார். திரும்பிப் பார்க்க எத்தனிக்கையில், வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்தார். நான் விலக்கிவிட்டுப் பார்த்தபோதுதான் அது நடிகர் ஜெயசூர்யா எனத் தெரிந்தது. அவரைத் தள்ளிவிட்டு அங்கிருந்து கீழ்த் தளத்துக்குச் சென்றுவிட்டேன். அங்கிருந்த நடிகர் ஜெகதி சேட்டனிடம், இதைச் சொல்லி வருத்தப்பட்டேன். அந்தச் சமயத்தில் என் பின்னால் வந்து நின்ற ஜெயசூர்யா மெதுவாக என்னிடம், ‘எனக்கு திருவனந்தபுரத்தில் ஃப்ளாட் இருக்கிறது. உங்களுக்கு வர விருப்பமா?’ என நேரடியாகவே கேட்டார். நான் `விருப்பம் இல்லை’ என்று சொல்லிவிட்டேன்.

அதே ஸ்பாட்டில் நடிகர் இடைவேள பாபு என்னிடம், ‘உங்களுக்குப் பாடத்தெரியுமா, நடனம் தெரியுமா’ எனக்கேட்டார். `துபாய் கலை நிகழ்ச்சிகளில் உங்களுக்கு வாய்ப்புத் தருகிறேன்!’ என்று சொன்னார். அவரது நோக்கமும் வேறாக இருந்தது. `நான் பேச்சிலர்… நாம் ஒன்றாக இருக்கலாம்’ என எனக்குத் தூண்டில் போட்டார். அதற்கு சம்மதிக்காததால் மலையாள சினிமா கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக என்னைச் சேர்க்க விடாமல் தடுத்தார். பாலியல் ரீதியாக வளைக்க அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன்.

நடிகர் முகேஷ், ‘நான் சொல்வதை அனுசரித்துக் கீழ்ப்படிந்தால்தான் சினிமாவில் நீடிக்க முடியும்’ என ஓப்பனாகவே பேசினார். நடிகர் மணியன்பிள்ளை ராஜு ஷூட்டிங் சமயத்தில் எனக்கு மனதளவில் டார்ச்சர் கொடுத்தார். `அறையைத் திறந்து வைத்துத் தூங்கு… நான் இரவு வருவேன்’ எனச் சொல்வார். `நான் முடியாது’ எனச் சொன்னாலும் இரவு அறைக் கதவைத் தட்டுவதும், போன் செய்வதுமாக இருந்தார். நான் கண்டுகொள்ளாமல் இருந்தேன். மறுநாள் லொகேஷனில் வைத்து என்னிடம் கோபமாகப் பேசினார். நான் அவர்களின் இச்சைக்கு இணங்காமல் நழுவிச்சென்றதால் நடிகர் கொல்லம் துளசி எனக்கு ‘விரால் மீன்’ என்றே பெயரிட்டார்’’ என்று சொன்னவர் இப்போது மீடியாக்களிடம் சொல்வதற்கான காரணத்தையும் சொன்னார்.

கேரள WCC குழு

கேரள WCC குழு

“நான் முன்னாள் தேசிய தடகள வீராங்கனை. தன்னம்பிக்கை அதிகமாக உள்ளவள். ஆனால், எனக்கு ஒரு பிரச்னை வந்தபோது நாக்கு வறண்டு துயரத்தில் என்னால் பேச முடியவில்லை. ஹேமா கமிஷன் அறிக்கை வெளியான பிறகு இளம் நடிகை ஒருவர் தன்னை நடிகர் சித்திக் ஒரு அறையில் அடைத்து வைத்துத் தாக்கியதாகக் கூறி அழுததைப் பார்த்தபோது, அழுதுவிட்டேன். நரித்தனமான நடிகர்களின் பொய் முகத்திரையைக் கிழிக்க வேண்டும், வரும் தலைமுறைப் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் எனக்கு ஏற்பட்ட பாதிப்புகளை நான் வெளியே கூறிவருகிறேன்’’ என்றார்.

1997-ல் தன்மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் தாக்குதலில் இருந்து மயிரிழையில் தப்பித்த நடிகை சர்மிளா மீடியா முன் இப்போது பேசியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

“ மலையாளத்தில் 58 படங்களில் ஹீரோயினாக நடித்த எனக்கு மலையாளத்தில் சீனியர் நடிகர்களால் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. சில புது ஆட்கள் வெளிப்படையாகவே அட்ஜெஸ்ட்மென்ட் பற்றிக் கேட்பார்கள். முடியாது என்று சொன்னதால் 28 படங்கள் வரை வாய்ப்பு பறிபோனது. ஆனாலும் அதற்காக வருத்தப்படவில்லை.

கிழியும் திரையுலக முகமூடிகள்! - மலையாளத்தில் மட்டும்தானா?

‘அர்ஜுனாவும் அஞ்சுபுள்ளைகளும்’ படத்தில் நடித்தேன். அவர்களின் சுயரூபத்தை முதல்நாளில் என்னிடம் காட்டவில்லை. அந்தப் படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பில் என்னிடம் தயாரிப்பாளர் மற்றும் சிலர் கூட்டாகச் சேர்ந்துகொண்டு பாலியல் ரீதியாகத் தாக்குதலில் ஈடுபட்டனர். நல்லவேளையாகத் தப்பித்தேன். முன்பே அவர்கள் குணத்தைக் காட்டியிருந்தால், படத்திலிருந்து விலகியிருப்பேன். என் தந்தை பவர்ஃபுல்லாக இருந்ததால் என்னால் பாதுகாப்பாக அதன்பிறகு இருக்க முடிந்தது. போலீஸுக்குப் போய் இதை எதிர்கொள்ளும் மனதைரியம் அன்றைய காலகட்டத்தில் எந்த நடிகைக்கும் இல்லை. அன்று ஹேமா கமிட்டி இருந்திருந்தால் நான் அப்போதே இதைக் கொண்டு வந்திருப்பேன். நல்லவேளையாக இப்போதாவது பாதுகாப்பதற்காக ஒரு அமைப்பு இருக்கிறதே. அதேபோல பர்சனல் பழிவாங்கலுக்காக குற்றச்சாட்டை அபாண்டமாகவும் பெண்கள் யார்மீதும் சொல்லக்கூடாது. அப்படிச் சொன்னால் இதன் நோக்கம் நீர்த்துப்போய்விடும். நல்ல நடிகைகளை சினிமா இழந்துவிடக்கூடாது என்பதுதான் இந்தக் கமிட்டியின் நோக்கம்’’ என்கிறார் அவர்.

இப்படி ஏராளமான புகார்கள். இயக்குநர் ரஞ்சித்மீது போடப்பட்டிருக்கும் மூன்று வழக்குகளால், தான் வகித்துவந்த கேரளா சாளசித்ரா அகாடமியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். நடிகர்கள் மீதுள்ள குற்றச்சாட்டின் விளைவாக AMMA (Association of Malayalam Movie Artists) அமைப்பு நிர்வாகிகள், அதன் தலைவரான மோகன்லால் தலைமையில் ஒட்டுமொத்தமாக விலகியுள்ளனர்.

இந்த ராஜினாமாக்களைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் கேரளாவில் #MeToo இயக்கத்தை ஆகஸ்ட் 19-லிருந்து மிகத்தீவிரமாக முன்னெடுத்து வரும் நடிகை பார்வதி திருவோத்து. இவர் மலையாள சினிமாவில் பணிபுரியும் பெண்களுக்கான WCC (Women in Cinema Collective) அமைப்பின் உறுப்பினரும்கூட.

“ `மலையாள சினிமாவில் பாலியல்ரீதியாக மட்டும்தான் துன்புறுத்தல்கள் இருக்கா’ன்னு கேட்குற எல்லோருமே இந்தக் குற்றத்தைப் பார்க்காதவர்கள் அல்ல. கண்டும் காணாமல் இருந்தவர்கள்தான். என்னவெல்லாம் நடக்கிறது, நடந்தது என நானும் கமிட்டியில் வாக்குமூலமாய் சொல்லியிருக்கிறேன். ஒருவகையில் நான்கரை ஆண்டுகளுக்குப் பின் இந்த அறிக்கை வந்திருந்தாலும் உண்மை வெளிப்பட்டிருக்கிறது. இத்தனை பிரச்னைகளுக்குப் பிறகும் அமைதியாய் இருப்பது என்பது குற்றவாளிகளுக்குத் துணை நிற்பது போலத்தான்.

அதேபோல அவசர அவசரமாக மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கமான அம்மாவைக் கலைப்பது என்பது குற்றத்தை கார்ப்பெட் போட்டு மூடி மறைப்பது போலத்தான். அவர்கள் அப்படி மறைக்க முயற்சி செய்வதால்தான் நிகழ்ந்த குற்றங்களை வெளிக்கொணரப் போராடி வருகிறோம். ஒரு பிரேக்கிங் பாயிண்ட் இந்த விஷயத்தில் தேவைப்பட்டிருக்கிறது. இவ்வளவு நாள்கள் இந்தத் தருணத்துக்காகத்தான் காத்திருந்தோம். இது மற்ற மொழி சினிமா இண்டஸ்ட்ரிகளுக்கும் ஒரு வழிகாட்டுதலாய் அமைந்திருக்கிறது.

கிழியும் திரையுலக முகமூடிகள்! - மலையாளத்தில் மட்டும்தானா?

நான்கரை ஆண்டுகள் ஒரு பெண்ணை ஒதுக்கி வைத்தால் அவள் தன் கரியரை இழந்திருப்பாள் என்பதே நிதர்சனம். அதனால்தான் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் நீதி வேண்டிப் போராடி வருகிறோம். 2017-ல் பாலியல் ரீதியாக நடிகையைத் துன்புறுத்திய ஒருவர் கமிட்டியில் முக்கியப் பொறுப்பில் உள்ளவர். அப்போது இந்த அம்மா அமைப்பு எந்தவொரு தண்டனையையோ குறைந்தபட்சம் மன்னிப்போகூட பெற்றுத் தரவில்லை. சொல்லப்போனால் அந்த நபரைக் காப்பாற்றி, பாதிக்கப்பட்ட பெண்ணைத் தனிமைப்படுத்தி அவர் திரையுலகை விட்டு வெளியே செல்லும் சூழலைத்தான் உண்டுபண்ணியது. அப்போது அவரை சுதந்திரமாக உலாவவிட்டுவிட்டு இப்போது எல்லோரும் ராஜினாமா செய்வது என்பது குற்றங்களை மறைக்கும் செயல்.

அதேபோல இந்தக் குற்றங்கள் மலையாள சினிமாவில் மட்டும் நிகழ்த்தப்படுவதில்லை. எல்லா சினிமாத் துறைகளையும் இதுபோன்று கமிட்டிகளால் சுத்தம் செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. சினிமா என்றில்லை, பெண்கள் பாதுகாப்பில்லாமல் இருக்கும் எல்லாத் துறைகளிலும் இதேபோல ஒரு நடவடிக்கை நிச்சயம் இருக்க வேண்டும். இதை தேசியப் பிரச்னையாக நாம் ஒன்றிணைந்து அணுக வேண்டும்’’ என்கிறார் பார்வதி.

சீனியர் நடிகையான ஊர்வசி, “இந்தியாவில் இந்தி உட்பட 14 மொழிகளில் இருக்கும் சினிமா இண்டஸ்ட்ரிகள் பற்றி எனக்கு நல்லாவே தெரியும். மலையாள சினிமா இந்தியாவிலேயே அவ்வளவு சிறப்பு வாய்ந்தது. கலைஞர்களுக்கான மாதம் 5,000 திட்டம், வீடு, 5 லட்சம் வரை மருத்துவச் செலவு என மற்ற இண்டஸ்ட்ரிகளுக்கு முன்மாதிரியாக இருக்கிறது. 35 வருஷ அனுபவத்தில்தான் இதைச் சொல்கிறேன். ஹேமா கமிட்டி மூலம் வெளிச்சத்துக்கு வந்திருக்கும் இந்தப் பிரச்னையை உடனடியாகத் தீர்க்க வேண்டும். பாலியல் சுரண்டல் மட்டுமல்லாமல் உழைப்புச் சுரண்டலும் நடக்காத வண்ணம் இங்கிருக்கும் அமைப்புகள் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கும்னு நம்புறேன். குற்றம் இழைத்தவர்களை சங்கத்திலிருந்து நீக்குவதுடன் தண்டனையும் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லாவற்றிலும் நம்பர் ஒன்னாக இருக்கும் மலையாள சினிமாத்துறை விரைவில் தன்மீதுள்ள அழுக்கை சரிசெய்யும்!’’ என்றார்.

மாநிலங்கள் கடந்து `மீ டூ’ போல தினமும் குவியும் பாலியல் புகார்கள், ஒட்டுமொத்த சினிமாச் சூழலும் பெண்களுக்குப் பாதுகாப்பாக இல்லாத நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. தமிழ் சினிமாவிலும் பாலியல் குற்றச்சாட்டுகள் இருப்பதாக பலர் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்கள். இப்போது மெல்ல இந்த மீடூ நெருப்பு இந்திய சினிமா உலகம் முழுக்க விரிந்து பரவிவருகிறது.

மினு குரியன், முகேஷ், இடைவேள பாபு, மணியன் பிள்ளை ராஜூ, ரஞ்சித்,

மினு குரியன், முகேஷ், இடைவேள பாபு, மணியன் பிள்ளை ராஜூ, ரஞ்சித்,

தெலுங்கு சினிமாத்துறையில் இருக்கும் பாலியல் குற்றவாளிகள் பற்றி 2018-ல் பகீர் குற்றச்சாட்டுகளை வைத்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. முன்னணி ஹீரோக்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் வரை நிறைய பேரைக் குற்றம் சாட்டிப் பரபரப்பு கிளப்பினார். அப்போது இவர் கிளப்பிய ‘மீடூ’ பூதம் பலரின் வயிற்றில் இப்போது புளியைக் கரைத்துள்ளது. காரணம், ‘வாய்ஸ் ஆஃப் உமன்’ என்ற அமைப்பு.

தயாரிப்பாளர்கள் சுப்ரியா யார்லகடா, ஸ்வப்னா தத், கல்யாண், தாமோதர் பிரசாத், டைரக்டர் நந்தினி ரெட்டி, நடிகை ஜான்சி உள்ளிட்டோர் அடங்கிய இந்த அமைப்பு தெலுங்கு சினிமாவில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புகார் குழு ஒன்றை ஏற்படுத்திட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தது. இதன் அடிப்படையில் துணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர், 2019-லிருந்து 2021 வரை பாதிக்கப்பட்ட தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த பெண்களிடம் விசாரணையில் ஈடுபட்டு தகவல்களைத் திரட்டி முழுமையான அறிக்கையாக 2022 ஜூன் 1-ம் தேதியன்று தெலங்கானா மாநில தலைமைச் செயலாளரிடம் ஒப்படைத்தனர். ஹேமா கமிட்டியின் அறிக்கை உண்டுபண்ணிய பரபரப்பால், `இதுதான் பெண்கள் தைரியமாகப் பேச வேண்டிய நேரம்’ என இப்போது அந்தக்குழுவின் அறிக்கையை வெளியிடுமாறு சொல்லியிருக்கிறார் நடிகை சமந்தா.

`இந்த அறிக்கை வெளியானால் தெலுங்கு சினிமாவில் பாலியல் சுரண்டலில் ஈடுபட்ட பல ஹீரோக்கள் சிக்குவார்கள்’ என்கிறார்கள் டோலிவுட்டை நன்கறிந்த சிலர்.

பெங்காலி சினிமாவிலிருந்தும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக குரல்கள் வலுவாக ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன. நடிகை ரிதாபாரி சக்ரபர்த்தி, ரெய்மா சென், மற்றும் ஸ்ரீலேகா மித்ரா ஆகியோர் மலையாளம், தமிழ், தெலுங்கு சினிமாவைப்போல இங்கும் பாலியல் குற்றங்கள் பெண்களுக்கு எதிராக நடக்கின்றன என்று சொல்லியிருக்கிறார்கள். மலையாள இயக்குநர் ரஞ்சித் மீது ஹேமா கமிட்டியில் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ள பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா, பெங்காலி சினிமா இண்டஸ்ட்ரிட்யைப் பற்றி பகீர் குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்.

சித்திக், பார்வதி, குஷ்பு, ஊர்வசி, சர்மிளா

சித்திக், பார்வதி, குஷ்பு, ஊர்வசி, சர்மிளா

“இங்கு கலைப்படைப்புகள் என்ற பெயரில் பெண்களைப் பாலியல் ரீதியாக அணுகும் போக்கு மற்ற இண்டஸ்ட்ரிகளைவிட அதிகம். இதுபற்றி வெளியே சொன்னால் கலைரீதியாக அணுகினோம் என்று திரித்துப் பேசி தப்பித்துக் கொள்வார்கள். சொல்லப்போனால் எல்லா சினிமா இண்டஸ்ட்ரிகளிலும் பெண்கள் மீது பாலியல் ரீதியான தாக்குதல்கள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. மலையாள சினிமா எல்லா விஷயத்திலும் முன்னோடி. இப்போது நெகட்டிவாக இந்த விஷயத்திலும் எங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது!” என்று சொல்லியிருக்கிறார்.

ஸ்ரீலேகா மித்ராவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பேதும் சொல்லாமல், உடனடியாகச் செயல்பட்டிருக்கிறது Federation of Cine Technicians and Workers of Eastern India (FCTWEI) என்ற பெங்காலி சினிமா கலைஞர்களுக்கான அமைப்பு. `சுரக்‌ஷா பந்து கமிட்டி’ என்ற பெயரில் திரையுலகப் பெண்களின் பாதுகாப்புக்காக ஒரு புது அமைப்பை உருவாக்கியுள்ளது.

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருக்கும் நடிகை குஷ்பு நம்மிடம், “பாலியல் குற்றங்கள் பற்றி பெண்கள் தைரியமாக வெளியே வந்து பேச வேண்டும். வெளியே பேசாதவரை குற்றவாளிகள் தைரியமாகத்தான் நடமாடுவார்கள். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அரசாங்கம் மேலேயும் தப்பு சொல்வேன். ஏன் இவ்வளவு தாமதமாக இந்த அறிக்கை வெளிவர வேண்டும். முன்பே இது அரசாங்கத்தின் மூலம் வெளிப்பட்டிருந்தால் நிச்சயமாக பல பெண்களை நாம் காப்பாற்றியிருக்கலாம் அல்லவா? யாரோ ஒருவரால்தான் நமக்கான நீதி கிடைக்க வேண்டுமா? ஹேமா கமிட்டி அறிக்கையின் விளைவால் இனி தவறு செய்யும் ஆண்களுக்கு பயம் உருவாகும். இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் பெண்கள் பேசுவார்கள் என்று குற்றவாளிகள் இனி பயப்படுவார்கள். தமிழ்நாட்டில் நடிகர்கள் சங்கம், தேசிய மகளிர் ஆணையம் இருக்கின்றன. புகார் கொடுக்க தைரியமாக இங்கும் பெண்கள் முன்வர வேண்டும். நடிகர் சங்கம் மூலம் இங்கு பெண்களுக்கான ஒரு கூட்டமைப்பை உருவாக்க நாங்கள் பேசி வருகிறோம். விரைவில் அதுபற்றி அறிவிப்பை வெளியிடுகிறோம்!’’ என்றார்.

ஷகீலா

திரையுலகைப் பொறுத்தவரை பாலின சமத்துவம் என்பது முன்பிருந்த சூழலுக்கு இப்போது பரவாயில்லை எனலாம். 50 ஆண்கள் இருக்கும் இடத்தில் ஒற்றை நடிகையாக ஒரு பெண் நடிக்கும் சூழல் முன்பிருந்தது. டெக்னீஷியன்களாகவும் ஆண்கள் மட்டுமே இருந்த காலகட்டமாகவும் அது இருந்தது. இப்படி சமநிலையற்ற இடங்களில் யாரோ ஒருவரின் வக்கிரமான பார்வைக்கும் ஆளாகும் சூழல் அன்று இருந்தது.

இன்று லேடி சூப்பர் ஸ்டாரில் ஆரம்பித்து லேடி லைட்-உமன் வரை பெண்கள் உருவாகி நிற்கும் சூழலிலும்… பெண்களுக்கான சினிமாக்களும் பெண்ணியம் பேசும் படைப்புகளும் திரையுலகில் பெருகி வரும் சூழலிலும் பாலியல் சீண்டல்களும் அத்துமீறல்களும் தொடர்ந்தால் சிக்கல் யாரிடம் இருக்கிறது?

தகவல் தொழில்நுட்பமும், சமூக ஊடகங்களும் வளர்ந்த பிறகும் பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் `ஆணாதிக்கமும்’ வக்கிரமும் கொண்ட குற்றவாளிகளை தைரியமாக அடையாளப்படுத்தித் தோலுரித்தால் ஒழிய இந்தக் குற்றங்கள் முற்றிலும் குறையாது.

பாலியல் பிரச்னை… பேன் இந்தியா பிரச்னையா?

தமிழ் சினிமாவில் நடிகர் சங்கத்தின் சார்பாக அதன் தலைவர் விஷால், `விரைவில் ஒரு குழு அமைக்கப்படும்’ என்று சொல்லியிருந்தார். அதையே பலர் விமர்சித்திருக்கும் சூழலில், நடிகை ஷகீலா பேசியிருப்பது கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. “பாலியல் வன்முறை என்பது பேன் இந்தியா பிரச்னை. இங்கிருக்கும் ஒவ்வொரு சினிமா இண்டஸ்ட்ரியிலும் ஹேமா கமிட்டி போல குழு அமைக்கப்பட வேண்டும். பெண்கள் தங்கள்மீது தொடுக்கப்படும் பாலியல் ரீதியான தாக்குதல்கள் பற்றி தைரியமாகப் பேச முன்வர வேண்டும். தப்பு செய்தால் தண்டனை கிடைக்கும் என்ற நிலை உண்டானால் யாரும் தப்பு செய்ய மாட்டார்கள். தமிழ்த் திரையுலகில் அப்படி ஒரு கமிட்டி வரும்போது பலர் இங்கும் சிக்குவார்கள்! ஐ ஆம் வெயிட்டிங்” என்று அதிரடியாகச் சொல்கிறார் ஷகீலா.

Author


Hit Counter provided by technology news