தாராவியின் கதை: தாராவிக்கு தமிழர்கள் வந்த வரலாறும் தாக்கரேவின் அரசியல் தாக்குதலும் | பகுதி 2

மும்பை தாராவியை தமிழர்கள்தான் தங்களது உழைப்பால் உருவாக்கி நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். `தாராவியின் கதை’யை இந்த மினித் தொடரில் காணலாம்..!

Published:Updated:
தாராவியின் கதை

தாராவியின் கதை

2Comments
Share

மும்பை தாராவியில் உள்ள ஆயிரக்கணக்கான குடிசைகளை அகற்றிவிட்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்கள் கட்டும் திட்டம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், அத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை அதானி நிறுவனத்திடம் மாநில அரசு ஒப்படைத்தது. தற்போது அதற்கான பணிகள் அங்கு ஆரம்ப நிலையில் உள்ளது. `மினி இந்தியா’ என்று அழைக்கப்படும் `தாராவியின் கதை’யை இந்த மினித் தொடரில் காணலாம்..!

இந்த மினி தொடரின் முதல் பாகத்தை படிக்க…

Also Read

தாராவியின் கதை: மும்பையில் தமிழர்களால் உருவான `மினி இந்தியா' | பகுதி 1

தாராவியின் கதை: மும்பையில் தமிழர்களால் உருவான `மினி இந்தியா’ | பகுதி 1

கடந்த பாகத்தில், சேறும் சகதியுமாக இருந்த கழிமுகப்பகுதி மிகப் பெரிய குடிசை பகுதியாக மாறியதையும் பின்னர், மினி தமிழ்நாடு, மினி இந்தியா என்று மாறியதையும் பார்த்தோம்…! இனி

மும்பையில் குட்டித் தமிழ்நாடு என்று அனைவராலும் அழைக்கப்பட்ட தாராவிக்கு தமிழர்கள் 1900-ம் ஆண்டுகளின் தொடக்கத்திலே வர ஆரம்பித்து விட்டனர். திருநெல்வேலி மேலப்பாளையம், பத்தமடை, திருவண்ணாமலை பகுதி இஸ்லாமியர்கள் தோல்பதனிடும் தொழிலை தொடங்குவதற்காக வந்தனர். அவர்கள் தாராவி பகுதியில் குடியேறியதற்கு முக்கிய காரணம் தாராவி அருகில் உள்ள பாந்த்ராவில் தான் மும்பை இறைச்சிக்கூடம் இருந்தது. இந்த இறைச்சிக்கூடத்தில் தினமும் நூற்றுக்கணக்கான ஆடு மற்றும் மாடுகள் வெட்டப்படும். எனவே அங்கிருந்து தோல் வாங்கி வருவதற்கு வசதியாக இருந்ததால் தாராவியில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உருவாகின.

தாராவியில் தோல்பதனிடும் தொழிற்சாலைகள் இருந்த இடங்களை `வாடி’ என்று அழைத்தனர். சேட் வாடி, ஆகாஷ்வாடி, கல்யான் வாடி எப்படி ஏராளமான வாடிகள் இன்றைக்கும் இருக்கின்றன. அந்த தோல் வாடிகளில் பணிபுரிவதற்குத்தான் ஆரம்ப காலத்தில் தமிழர்களை முஸ்லிம்கள் மும்பைக்கு அழைத்து வந்தனர்.

தாராவியின் கதை: தாராவிக்கு தமிழர்கள் வந்த வரலாறும் தாக்கரேவின் அரசியல் தாக்குதலும் | பகுதி 2

திருநெல்வேலி மாவட்டத்தில் 1950-களில் பெரிய அளவில் தொழிற்சாலைகள் எதுவும் இல்லாத காரணத்தால், பிழைப்பு தேடி தமிழர்கள் கூட்டம் கூட்டமாக மும்பை நோக்கி வந்தனர். மும்பையில் இருந்து ஒருவர் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு, திரும்பி வரும்போது அவர் தன்னுடன் கணிசமான ஆட்களை மும்பைக்கு அழைத்து வந்தார். தாராவியில் 1950களில் தோல்பதனிடும் தொழிற்சாலையில் மேஸ்திரியாக பணியாற்றி பிறகு சொந்தமாக தோல்பதனிடும் தொழிற்சாலை நடத்தி வந்த வடிவேல் சேட் என்று சொன்னால் யாருக்கும் தெரியாமல் இருக்காது. அவரது தோல்பதனிடும் தொழிற்சாலையில் நூற்றுக்கணக்கானோர் வேலை செய்தனர்.

தாராவி உருவானது எப்படி?

தாராவி உருவானது எப்படி என்பது குறித்து வடிவேல் சேட் மகன் கே.வி.அசோக் குமாரை சந்தித்து பேசிய போது, ”தாராவி வரும் தமிழர்கள் அதிக சம்பளத்திற்காக தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் பணியாற்றினர். மும்பை வரும் தமிழர்கள் சிறிது நாட்களாவது தோல்வாடியில் பணியாற்றிவிட்டுத்தான் மற்ற வேலைக்கு செல்வார்கள். அப்படி வருபவர்கள் சாக்கடை மற்றும் சேறும், சகதியுமாக இருக்கும் இடங்களில் மண் போட்டு நிரப்பி அதில் குடிசைகள் அமைத்து வாழ ஆரம்பித்தனர்.

ஆரம்பத்தில் தாராவி கிராஸ் ரோஸ் பகுதியில் தான் குடிசைகள் தோல்வாடியை சுற்றி உருவானது. அப்போது தாராவி மெயின் ரோடு என்ற ஒன்று இல்லாமல் இருந்தது. இதனால் கடலில் சீற்றம் ஏற்படும் போது கடல் நீர் அப்படியே தோல்வாடிக்குள் புகுந்துவிடும். மக்கள் கயிற்று கட்டில் போட்டு அதில் அமர்ந்திருப்பார்கள். அந்த நேரத்தில் ரயில்வே வேலைக்கு அதிக அளவில் ஆட்கள் எடுத்தார்கள்.

ஆனால் அங்கு ஒரு மாதம் முழுக்க வேலை செய்தால் 80 முதல் 100 ரூபாய் வரை தான் சம்பளம் கிடைத்தது. ஆனால் தாராவி தோல்வாடியில் தினமும் 200 ரூபாய் வரை கிடைத்ததால் அதிகமானோர் தோல்வாடியில் வேலை செய்தனர். அதன் பிறகு ரயில்வே, துறைமுக வேலைக்கு படிப்படியாக தமிழர்கள் செல்ல ஆரம்பித்தனர். 1950களில் தாராவியில் தமிழர்களும், மீனவர்களும் மட்டும்தான் இருந்தனர். அதன் பிறகு படிப்படியாக வேறு மாநில மக்களும் வர ஆரம்பித்தனர்.

கே.வி.அசோக்குமார்

கே.வி.அசோக்குமார்

குறிப்பாக அயோத்தி விவகாரத்தை தொடர்ந்து நடந்த கலவரத்திற்கு பிறகு அதிகப்படியான சிறுபான்மை மக்கள் தாராவியில் குடியேற ஆரம்பித்தனர்” என்று தெரிவித்தார்.

`தாராவி பெயர் உருவான கதை’

தாராவி உருவான கதை குறித்து தாராவியில் 35 ஆண்டுகளாக நெல்லை விலாஸ் என்ற ஹோட்டல் நடத்திவிட்டு இப்போது அதனை வாடகைக்கு விட்டுவிட்டு ஓய்வெடுக்கும் தட்சணாமூர்த்தியிடம் பேசியபோது, ”தாராவியில் ஒரு புறம் தோல்பதனிடும் தொழிற்சாலைகள் இருந்தாலும் மறுபுறம் தாராவியில் தற்போது இருக்கும் பிரதானமான 90 அடி சாலை 1970க்கு முன்பு கிடையாது. ஆனால் அதில் ஒரு சிறிய பாதை இருந்தது. அதன் கரையையொட்டி செடிகளும், சேறும், சகதியுமாக இருக்கும். பாதையில் கூட நடக்க முடியாமல் கரையில் நடந்து செல்லவேண்டிய நிலை இருந்தது. அதன் இருபுறமும் மக்கள் குடிசைகள் அமைத்து வாழ்ந்து வந்தனர். சாராயம் வடித்து விற்பனை செய்வது அவர்களின் பிரதான தொழிலாக கொண்டிருந்தனர்.

ரயில் தண்டவாளத்தையொட்டி இருக்கும் இடத்தில் சாராயத்தை காய்ச்சி 90 அடி சாலையின் இருபுறமும் வைத்து விற்பனை செய்து வந்தனர். அதோடு பாலியல் தொழிலும் இருந்தது. சேறும், சகதியுமாக இருக்கும் இடத்தில் ஆங்காங்கே சாராயம் தயாரித்து மண்ணிற்குள் புதைத்து வைத்திருப்பர். ஆங்காங்கே சாராயம் தயாரிக்கும் அடுப்புகளும் இருக்கும். சாராய அடுப்புகளில் இருந்து வரும் புகை தாராவி முழுக்க சூழ்ந்திருக்கும். எனவே தான் அதனை தாராவி என்றே அழைக்க ஆரம்பித்தனர். தாரு என்றால் இந்தியில் சாராயம் என்று பெயர். சாராய ஆவியைத்தான் தாராவி என்று அழைக்க ஆரம்பித்தனர்” என்றார்.

தமிழர்களுக்கு எதிரான கலவரம்

தாராவியில் தமிழர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தது, மராத்தியர்கள் சிலருக்கு பிடிக்கவில்லை. மும்பை முழுக்கவே 1960களில் தமிழர்களின் ஆதிக்கம்தான் அதிகமாக இருந்தது. தென்மும்பை பகுதியில் தமிழகத்தை சேர்ந்த ஹாஜி மஸ்தான் கடத்தல் தொழிலில் கொடிகட்டிப்பறந்தார். இதே போன்று தாராவி அருகில் இருந்த சயான் கோலிவாடா பகுதியில் வரதாபாய் ஆதிக்கம் செலுத்தி வந்தார். வரதாபாய் வடக்கு மும்பையில் ஆதிக்கம் செலுத்தினார். இது தவிர ரயில்வே, துறைமுகத்திலும் தமிழர்கள் படிப்படியாக ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது மராத்தியர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் 1966-ம் ஆண்டு சிவசேனாவை தொடங்கிய பால் தாக்கரே தென்னிந்தியர்களுக்கு எதிராக குரல் கொடுத்தார்.

பால் தாக்கரே

பால் தாக்கரே

ஆரம்பத்தில் மும்பையில் உள்ள கர்நாடகா மாநிலத்தவர்கள் நடத்திய உடுப்பி ரெஸ்டாரண்ட்களுக்கு எதிராகதான் பால் தாக்கரே பேசினார். ஆனால் இது தமிழர்களுக்கு எதிராக மாறியது. இக்கலவரம் நடந்த போது மும்பையில் வசித்து வந்த திருநெல்வேலி மாவட்டம் முன்னீர் பள்ளத்தை சேர்ந்த ராமசாமி தேவர் மகன் கிருஷ்ணா சேட்டிடம் இது குறித்தும், தாராவி குறித்தும் பேசியபோது, ”பால் தாக்கரேயின் ஆத்திரமூட்டும் பேச்சுக்களால் தாராவியில் இருந்து தென்மும்பையில் உள்ள மில்களுக்கு வேலைக்கு சென்ற தமிழர்களை மராத்தியர்கள் அடித்து உதைத்தனர். தாராவியிலும் கழிமுகப்பகுதியில் வசித்த மராத்தி மீனவர்கள் தமிழர்களை பிடித்து அடித்து உதைத்தனர். அந்நேரம் பாந்த்ரா – மாகிம் இணைப்பு சாலை பணிகள் நடந்து கொண்டிருந்தது. இந்த சாலை அமைத்த பிறகுதான் தாராவிக்குள் கடல் தண்ணீர் வருவது தடை பட்டது. கலவரத்தின் போது இந்த சாலையில் தமிழர்கள் நின்று கொண்டு மீனவர்களை எதிர்த்து தாக்க ஆரம்பித்தனர்.

கிருஷ்ணா சேட்

கிருஷ்ணா சேட்

ஆனால் தாராவிக்குள் தமிழர்கள் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால் மராத்தியர்கள் யாருக்கும் தாராவிக்குள் வந்து எந்த வித தாக்குதலிலும் ஈடுபடவில்லை. தாராவியில் வெளியில் சென்றவர்களை, குறிப்பாக லுங்கி அணிந்து சென்றவர்களை பிடித்து அடித்தனர். தாராவியில் உள்ள எனது தந்தை உட்பட தமிழ் தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். தாராவியை சேர்ந்த பொன்னையா உட்பட தமிழ் தலைவர்கள் இணைந்து அரணாக நின்று தமிழர்களை காத்தனர். பொன்னையாவின் உடம்பில் வெட்டுக்காயம் கூட ஏற்பட்டது. அதனால்தான் பொன்னையாவை தாராவியின் தந்தை என்றுகூட சிலர் சொல்வதுண்டு” என்றார்.

மறுபக்கம் தென்னிந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு எதிரான கலவரத்தை முன்வைத்து தனது அரசியல் வாழ்க்கையை பால் தாக்கரே உருவாக்கிக்கொண்டார். பல மாதங்கள் நடந்த கலவரம் போலீஸாரின் பல சுற்றுப்பேச்சுவார்த்தைக்கு பிறகு முடிவுக்கு வந்தது. அது அடுத்த பாகத்தில்..!

தொடரும்..!

Also Read

தாராவியின் கதை: மும்பையில் தமிழர்களால் உருவான `மினி இந்தியா' | பகுதி 1

தாராவியின் கதை: மும்பையில் தமிழர்களால் உருவான `மினி இந்தியா’ | பகுதி 1

Author